Categories
தமிழகம் தலைப்புச் செய்திகள் திமுக ஸ்டாலின்

முரசொலி பவளவிழா : மீண்டும் செப். 5-ம் தேதி நடைபெறும்

மழை பெய்ததால் ஒத்திவைக்கப்பட்ட முரசொலி பவளவிழா, மீண்டும் செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறும் என்று, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முரசொலி பத்திரிகை துவங்கி 75 ஆண்டுகள் நிறைவடைவதை அடுத்து,  சென்னையில் விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. ஆகஸ்டு 10 (வியாழன்) அன்று நிகழ்ந்த பவள விழா வாழ்த்து அரங்கம் நிகழ்ச்சி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு தி.மு.க. செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு பத்திரிகைகளின் ஆசிரியர்களும், ஊடகவியல் பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

பின்னர் ஆகஸ்டு 11 – வெள்ளிக்கிழமை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடந்த பவள விழாவின் போது ஏராளமான தொண்டர்கள் திரண்டிருந்த வேளையில், மேகம் இருண்டு விழா தொடங்குவதற்கு முன்பே மழை கொட்ட தொடங்கியது. சிறிது நேரத்தில் ஓய்ந்து விடும் என்று தொண்டர்களும் நனைந்தபடியே இருந்தனர்.

இருந்தாலும் மழையில் நனைந்தபடியே விழாவை தொடங்கினார்கள். துரைமுருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. வரவேற்றார். மழையில் நனைந்தவாறே தலைவர்கள் ஓரிரு வார்த்தைகள் பேசினார்கள். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசும்போது,  திராவிட இயக்கத்தின் எழுச்சிக்கு அடையாளமாக இந்த விழா நடைபெறுகிறது என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து கனமழை கொட்டி கொண்டிருந்ததால் கூட்டத்தை நடத்த முடியாத நிலை உருவானது. இதையடுத்து மு.க. ஸ்டாலின் பேசும்போது, மழையின் காரணமாக பவளவிழா பொதுக்கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது என்றார்.

இதனைத் தொடர்ந்து, இன்று மு.க.ஸ்டாலின், “மழையால் ஒத்திவைக்கப்பட்ட முரசொலி பவளவிழா கூட்டம் செப்டம்பர் மாதம் 5-ந்தேதி நடைபெறும்”, என்று அறிவித்தார்.

Share
Categories
எடப்பாடி பழனிசாமி தமிழகம் தலைப்புச் செய்திகள் திமுக ஸ்டாலின்

நீட் தேர்வு: திமுக போராட்டம் நடத்த ஐக்கோர்ட் அனுமதி; தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம்

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு முழு விலக்கு அளிக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் இன்று நடத்தப்பட்டது. இதனிடையில் தி.மு.க. மனித சங்கிலி போராட்டத்துக்கு அனுமதி வழங்க மறுத்து சேலம் போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னையில்  22 இடங்களில் போலீஸ் தடையை மீறி தி.மு.க.வினர் மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர். மனிதசங்கிலி போராட்டம் நடத்திய தி.மு.க.வினர் மீது 10 போலீஸ் நிலையங்களில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. தடையை மீறி சட்டவிரோதமாக கூடி பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக 2 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்குட்பட்ட கட்சராயன்பாளையம் ஏரியை பார்வையிட மு.க.ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தடையை மீறி கோவையில் இருந்து கார் மூலம் செல்ல முயன்ற ஸ்டாலினை போலீஸார் கைது செய்தனர்.
இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், ”

மனித சங்கிலி போராட்டத்துக்கு அனுமதி இல்லை என்று கூறி, மு.க.ஸ்டாலினை சேலம் மாவட்டத்துக்குள் நுழையவிடாமல் தடுத்து கைது செய்துள்ளனர். ஆனால், அவர் தூர்வாரப்பட்ட ஏரியை முதலில் பார்வையிட இருந்தார். பின்னர் மாலை 4 மணிக்கு மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்க இருந்தார். அமைதியான முறையில் மனித சங்கிலி போராட்டம் நடத்த போலீசார் ஏன் அனுமதி வழங்க மறுக்கின்றனர்? என்பது எங்களுக்கு தெரியவில்லை. கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனே விடுவிக்க உத்தரவிட வேண்டும். தி.மு.க.வின் மனித சங்கிலி போராட்டத்துக்கு அனுமதி வழங்க மறுத்து சேலம் போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இம்மனுவின் மீதான விசாரணையை அடுத்து, நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், மனித சங்கிலி போராட்டத்துக்கு அனுமதி வழங்க மறுத்து சேலம் போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவுக்கு ஆகஸ்டு 17-ந்தேதி வரை இடைக்கால தடை விதிப்பதாக உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை ஆகஸ்டு 17-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

 

 

Share
Categories
எடப்பாடி பழனிசாமி தமிழகம் தலைப்புச் செய்திகள் திமுக ஸ்டாலின்

நீட் தேர்வில் தமிழகத்திற்கு நிரந்தரத் தீர்வே தேவை : மு.க.ஸ்டாலின்

நீட் தேர்விலிருந்து இந்த ஓராண்டிற்கு மட்டும் விலக்கு அளிக்க, மத்திய அரசிடம் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையிலான அதிமுக அரசு மண்டியிட்டுக் கொண்டிருக்கிறது; ஆனால் நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கே தமிழகத்திற்குத் தேவை  என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியுள்ளதாவது:

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னெடுப்பில் தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கங்கள் மற்றும் மாணவர் சமூகம் ‘நீட்’ எனும் அநீதிக்கு எதிராகத் தொடர்ந்து தங்களது கொந்தளிப்பை வெளிப்படுத்தி வருவதை தாமதமாக உணர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தற்போது கடைசிநேரத்தில் விழித்துக்கொண்டு, எதையாவது செய்து நெருக்கடியில் இருந்து மீள்வற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறது.

இந்த ஓராண்டுக்கு மட்டுமாவது நீட் தேர்வில் இருந்து விலக்குபெறுவதற்காக, தங்கள் எஜமானர்களிடம் தமிழக அமைச்சர்கள் மண்டியிட்டு ஒரு தற்காலிக தீர்வை காணுவதற்கு முயற்சி மேற்கொண்டிருக்கிறார்கள். இது தமிழக சட்டப்பேரவையில் நிரந்தர தீர்வு காண நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவு வெளிப்படுத்தும் உணர்வுக்கு எதிரானது ஆகும். தமிழ்நாடு கோருவது, மாநில உரிமை. நமது மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களை, நமது மாநிலத்தின் நிதி ஆதாரத்தில் நடத்தும் மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க மத்திய அரசு ஏன் தேர்வு நடத்த வேண்டும்? இதுதான் நாம் எழுப்பும் அடிப்படை கேள்வி. மாநில உரிமை பறிப்புக்கு எதிராகக் கொந்தளித்து எழ வேண்டிய அரசு, டெல்லி ஆட்சியாளர்களிடம் கை கட்டி, வாய் பொத்தி, கெஞ்சிக் கொண்டு இருக்கிறது. நெருக்கடியில் இருந்து தப்பித்துக் கொள்ளும் இதுபோன்ற தந்திரங்களை கைவிட்டு, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்க உரத்துக் குரல் கொடுக்க வேண்டும்.

“இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு வேண்டுமானால், நீ்ட்டில் இருந்து விதிவிலக்கு பெறலாம், நிரந்தரமான விலக்கு கேட்கக்கூடாது” என்று தமிழக பாஜக தலைவர் சகோதரி டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருக்கிறார். “நீட் தேர்வால் பாதிப்பு வராது, தரம் உயரும். நீட் தமிழகத்திற்கு தேவை”, என்றெல்லாம் மனம்போன போக்கில் பேசிவந்த பாஜகவினர், தமிழ்நாட்டில் கிராமப்புற மற்றும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த, முதல் தலைமுறையாக கல்லூரிகளில் அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்களுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை இப்போதேனும் உணரத் தொடங்கியுள்ளனர் என்பது சற்றே ஆறுதல் அளிக்கிறது. இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கலாம் என்ற பா.ஜ.க.வின் கருத்து ஏற்கத்தக்கது அல்ல. நீட் தேர்வே கூடாது என்பதுதான் எங்கள் உறுதியான நிலைப்பாடு.

‘தவணை கேட்பதற்கும்’, ‘தள்ளிப்போடுங்கள் என்று கெஞ்சுவதற்கும்’, இது ஒன்றும் மத்திய அரசு தனது விருப்பம்போல் தரும் மானியம் அல்ல. நீட்டைத் திணிக்காதீர்கள் என்று நாம் கேட்பது நம் மாநில உரிமை. அடிப்படையில், நுழைவுத் தேர்வுகள் கிராமப்புற, ஏழை, ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்குப் பாதகமானவை என்ற கோணத்தில், சமூக நீதி மற்றும் மாநில உரிமை என்ற இரு ஜீவாதார அடிப்படையில்தான் திராவிட முன்னேற்றக் கழகம் நீட் தேர்வை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. எனவே, தற்காலிக தீர்வு காண்பதற்கு மட்டுமே அடி பணிந்து மாநில உரிமைகளை முழுவதுமாக அடகு வைக்க எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நிச்சயம் முயற்சிக்கக்கூடாது. அப்படிச் செய்வது, தமிழ்நாடு மாணவர்களுக்குச் செய்கிற நிரந்தர துரோகமாக அமைந்துவிடும். சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றிய சட்ட மசோதாக்களை நீர்த்துப் போகச் செய்து, சமூகநீதிக்கு சவக்குழி தோண்டுவதாக ஆகிவிடும்.

“நீட் தேர்வில் குளறுபடிகளே நடைபெறவில்லை”, என்று மத்திய அரசும் அதன் விசுவாசிகளும் வாதாடி வந்தார்கள். இப்போது, நாடு முழுவதும் ஒரே கேள்வித்தாள் தரப்படவில்லை என்பதை மத்திய மனிதவளத்துறை அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் வெளிப்படையாக ஒப்புக் கொண்டு, அடுத்த ஆண்டு முதல் இந்த குறைபாடுகள் இருக்காது என்று உறுதி அளித்துள்ளார். கடந்த ஆண்டில், ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு விதமான கேள்வித்தாள் தந்ததால் மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு யார் பொறுப்பேற்கப் போகிறார்கள்? பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு என்னவிதமான இழப்பீட்டை தரப் போகிறார்கள்? ‘நாடு முழுவதும் ஒரே தேர்வு’, என்று அறிவித்துவிட்டு, ஒரே மாதிரியான கேள்வித்தாளை வழங்காத நிலையில் தேர்வை ஒட்டுமொத்தமாக ரத்து செய்வதுதானே நியாயம்?

ஜிப்மருக்கு ஏன் விதிவிலக்கு?

‘நாடு முழுவதும் ஒரே தேர்வு’, என்று கிளிப்பிள்ளை போல சொல்லிக் கொண்டிருப்பவர்கள், டெல்லி மற்றும் பல்வேறு மாநிலங்களில் மத்திய அரசின் நிதியில் நடத்தப்படுகின்ற, எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகள், புதுச்சேரி ஜிப்மர், பிஜிஐ (சண்டிகர்) உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு ‘நீட்’ தேர்வில் இருந்து விதிவிலக்குத் தந்துள்ளது ஏன்? அந்த மருத்துவக் கல்லூரிகளை விட, சென்னை ராஜீவ் காந்தி பொதுமருத்துவமனை மற்றும் சென்னை மருத்துக் கல்லூரி எந்த வகையில் தரம் குறைந்தது?

மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, ஒற்றைச் சிந்தனையைத் திணிக்கிற கொடுங்கோன்மைக்கு எதிராகத் தமிழ்நாட்டின் எல்லா கட்சிகளும் இயக்கங்களும் குரல் கொடுத்து வருகின்றன. அரசியல் மாறுபாடுகளைக் கடந்து, சட்டமன்றத்தில் மாநில உரிமை காப்புக்காக ஒன்றுபட்டு நிற்கிறோம். ஆனால், அதிமுக அரசோ குறுகிய மனப்பான்மையோடு, அற்பமான அரசியல் செய்து வருகிறது. தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சோதனையை எதிர்கொள்ள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறாமல் மத்திய அரசுக்கு அடி பணிந்து கிடக்கிறது. மத்தியில் உள்ள ஆட்சியாளர்களிடம் வலியுறுத்தி மாநில உரிமையை நிலை நாட்டத் தவறி வருகிறது. நீட் விஷயத்தில் எடப்பாடி அரசின் இந்த அற்பமான போக்கு தமிழ்நாட்டின் நலனுக்கு ஊறு விளைப்பது ஆகும்.

“தமிழ்நாட்டின் கல்வித்தரம் சரியல்ல”, என்ற சாரமற்ற வாதத்தை, பாஜகவினரும் அதன் அடிவருடிகளும் கூசாமல் சொல்லி வருகின்றனர். கல்வித்தரம் பற்றி பேசுவது, மாநில உரிமை பறிப்பை மறைப்பதற்குச் செய்கிற தந்திரமே தவிர வேறல்ல. இதே பாடத்திட்டத்தில் பயில்கிற மாணவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற போட்டித் தேர்வுகளில் அகில இந்திய அளவில் நூற்றுக்கணக்கில் வெற்றி பெறுகிறார்கள். உலகம் முழுவதும் மருத்துவர்களாகவும், மென்பொருள் வல்லுநர்களாகவும் பல்லாயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். தரமில்லாத கல்வியாக இருந்திருந்தால், இந்த வாய்ப்புகள் அவர்களுக்கு வசப்பட்டிருக்குமா? எந்தவிதமான ஆதாரமும் இன்றி, ‘வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ’, என்று தமிழ்நாட்டின் கல்வித் தரம் குறைபாடு கொண்டது என்று சொத்தை வாதத்தை முன்வைத்து தமிழக மாணவர்களின் அறிவுத்திறனை கொச்சைப்படுத்தும் போக்கை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் அரசின் சார்பில் பல்கலைக்கழகங்கள், மருத்துவ, பொறியியல் கல்லூரிகள் நிறுவப்பட்ட அளவுக்கு வேறெந்த மாநிலத்திலாவது ஏற்படுத்தப்பட்டுள்ளனவா என்பதை, எங்களை விமர்சிப்போர் மனசாட்சியோடு சிந்திக்க வேண்டும். கல்வி வாய்ப்புகளை உருவாக்குவதிலும், மேம்படுத்துவதிலும் தமிழ்நாடு காட்டிய முனைப்பை வேறெந்த மாநிலம் செய்திருக்கிறது என்பதை அவர்கள் பட்டியல் இட்டு சொல்லட்டும். நீட் தேர்வு என்பது, கல்வித் தரத்தை ஒருபோதும் மேம்படுத்தப் போவது இல்லை. மாறாக, மாணவர் சேர்க்கையில் குளறுபடியையும் சமூக நீதிக்கு அநீதியையும்தான் ஏற்படுத்தப்போகிறது.

புற்றீசல் போல நீட் பயற்சி மையங்கள் இப்போதே உருவாகத் தொடங்கிவிட்டன. ஆயிரக்கணக்கில் பணம் செலுத்தும் வசதி படைத்தவர்கள்தான் அதில் பயில முடியும். ஏழ்மையில் வாடும் கிராமப்புற, ஒடுக்கப்பட்ட மாணவர்கள் இதுபோன்ற சிறப்புப் பயிற்சியைப் பெற முடியாத நிலையில் பாதிப்புக்கு ஆளாவார்கள். மேலும், நீட் தேர்வை ஒரு மாணவர் 3 முறை எழுதலாம். ஓராண்டில் போதிய மதிப்பெண் பெறாவிடில், அடுத்த ஆண்டு சிறப்புப் பயிற்சி பெற்று மீண்டும் எழுதலாம். இது, மறைமுகமாக – சமமற்ற தன்மையை ஏற்படுத்தும். அரசு பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பைப் படித்துவிட்டு முதல் முறையாக நீட் தேர்வு எழுதுவோரும், நீட் தேர்வுக்காகவே இரண்டு, மூன்று ஆண்டுகள் படித்து தேர்வு எழுதுவோரும் – தேர்வுகளை எழுதும்போது அது சமனற்ற நிலையை ஏற்படுத்தும். வசதியானவர்களுக்கு சாதகமான சூழல், ஏழைகள் மற்றும் கிராமப்புற மாணவர்களின் வாய்ப்புகளைப் பறிப்பதாக அமைந்துவிடும்.

தமிழ்நாட்டின் மருத்துவக் கல்வி முறையைப் பாதுகாக்கவும், சமூக நீதி பறிபோகும் ஆபத்தை முறியடிக்கவும், ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் எதிர்காலக் கனவு சிதைந்துபோகாமல் தடுக்கப்படவும் எல்லோரும் ஓர் அணியில் திரள வேண்டும். ஜனநாயகம், சமூக நீதியில் நம்பிக்கை கொண்டோர், மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் எண்ணம் கொண்டோர் என யாவரையும் கட்சி பேதமின்றி, நீட் எதிர்ப்பு முழக்கமிட அழைக்கிறேன். திமுகழகம் அறைகூவல் விடுத்து, எதிர்வரும் வியாழக்கிழமை நடக்க இருக்கின்ற மனித சங்கிலிப் போராட்டத்தில் கரம் கோர்த்து, ‘உரிமை முழக்கம் இட வாருங்கள்! வாருங்கள்!’, என அழைக்கிறேன். தமிழ்நாட்டில் நாம் கோர்க்கும் கரங்களும், விண்ணதிர ஒலிக்கும் முழக்கங்களும் ‘நீட்’ என்னும் வல்லாதிக்கத்தை முறியடிக்கும்.

இவ்வாறு மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

Share
Categories
அதிமுக கமல்ஹாசன் தமிழகம் தலைப்புச் செய்திகள்

நடிகர் கமல்ஹாசனை மிரட்டுவது அரசுக்கு நல்லதல்ல: ஓ.பி.எஸ்.

அமைச்சர்களின் ஊழல் குறித்துப் பேசுவதால், நடிகர் கமல் ஹாசனை மிரட்டி, அவரை பணிய வைக்க முயற்சிப்பது தமிழக  அரசுக்கு நல்லதல்ல என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

நேற்று காஞ்சிபுரத்தில் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “ஊழல் குறித்து பேச நடிகர் கமல் ஹாசனுக்கு உரிமை உள்ளது. கமலை மிரட்டுவது, அவரை பணிய வைப்பது என்பது அரசுக்கு நல்லதல்ல. கமல் ஹாசனுக்கு எதிராக அமைச்சர்கள் கருத்துக் கூறுவது அழகல்ல.  அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறுபவர்களை மிரட்டுவது சரியான நடைமுறை ஆகாது. ஊழல் குற்றச்சாட்டு சுமத்தினால் அதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.” என்று கூறினார்.

மேலும் அவர், “நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் மருத்துவ கல்லூரிக்குள் நுழைய முடியாத சூழல் நிலவுகிறது. இந்தப் பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்படாததால் தமிழக அரசுக்கு கெட்டப் பெயர் ஏற்பட்டுள்ளது. மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக்கு தயார் என அப்போலோ தெரிவித்த பின்னும் விசாரணை நடத்த அரசு உத்தரவிடாதது ஏன்?” என கேள்வி எழுப்பினார்.

Share
Categories
தமிழகம் தலைப்புச் செய்திகள் தேமுதிக விஜய்காந்த்

கதிராமங்கலம் போராட்டத்திற்கு தேமுதிக துணை நிற்கும்: விஜய்காந்த்

கதிராமங்கலம் போராட்டத்திற்கு தேமுதிக துணை நிற்கும் என்று விஜய்காந்த் கூறினார்.

கும்பகோணம் அருகே கதிராமங்கலம் கிராமத்தில் ஓஎன்ஜிசி குழாயில் இருந்து கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டதால் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராகப் போராடி வரும் பொதுமக்களைச் சந்தித்த தேமுதிக தலைவர் விஜய்காந்த் போராட்டக் காரர்களுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசும்போது, ”கதிராமங்கலத்தில் மக்களுக்குத் தெரியாமலே இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கின்றனர். கைது செய்யப்பட்ட 10 பேரையும் விடுவிக்க அரசு நடவடிக்கை வேண்டும்.கதிராமங்கலத்துக்கு ஓஎன்ஜிசியைக் கொண்டு வந்ததில் திமுக, அதிமுகவுக்கு பங்கு இருக்கிறது. இங்கு பிரச்சினையைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதற்காக நான் வரவில்லை. மக்களுக்காகப் போராடவே வந்திருக்கிறேன்” என்றார்.

பின்னர்  பிரேமலதா விஜயகாந்த் பேசும்போது, மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை உணர்வாக பதியவைக்கவே போராட்டம் நடத்துவதாகவும், மக்களின் ஆதரவு இல்லையெனில் திட்டத்தை தூக்கியெறிய வேண்டியது அரசின் கடமை என்றும்கூறினார். வெளிநாடுகளில் மக்கள் வாழாத இடங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்று கூறிய அவர், சுதந்திரம் வாங்கியும் வரிகளை செலுத்தி வலியுடன் மக்கள் வாழ்ந்து வருவதாக கூறினார். மேலும் திமுக – காங்கிரஸ் கூட்டணியே ஒஎன்ஜிசி நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியது என்றும் மக்கள் விரும்பாத திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

 

Share
Categories
அன்புமணி ராமதாஸ் இந்தியா தமிழகம் தலைப்புச் செய்திகள் நீட் மருத்துவ தேர்வு பா.ம.க.

நீட் தேர்வை ரத்து செய்யும் அவசரச் சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி ராஜ்நாத்சிங்கிடம் மனு

நீட் தேர்வை ரத்து செய்யும் அவசரச் சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று கோரி டாக்டர். அன்புமணி ராமதாஸ் இன்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் மனு அளித்தார்.

பின்னர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஜல்லிக்கட்டு மசோதா 6 நாட்களில் சட்டமாக்கப்பட்டது. ஆனால் நீட் தேர்வு தொடர்பான மசோதா 6 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்துறை மந்திரி கூறினார். இது தொடர்பாக பேச பிரதமரிடமும், ஜனாதிபதியிடமும் நேரம் கோரி இருக்கிறேன்.

நீட் தேர்வு தொடர்பான அவசர சட்டத்துக்கு ஒப்புதல், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தால் தான் ஜனாதிபதி தேர்தலில் வாக்குகளை பதிவு செய்வோம் என்று தமிழக அரசு கூறியிருந்தால் தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த கட்சிகள் தங்கள் சுயநலத்தை பார்ப்பதால் அருமையான வாய்ப்பை தமிழகம் தவற விட்டு விட்டது.

மத்திய சுகாதாரத்துறை மந்திரியாக நான் இருந்தபோது நீட் தேர்வை கொண்டு வர முயற்சித்தார்கள். ஆனால் நான் அனுமதிக்கவில்லை. சென்னை சேப்பாக்கத்தில் நாளை  நீட் தேர்வு தொடர்பாக உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்ள போகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Share
Categories
அ.தி.மு.க. கமல்ஹாசன் தமிழகம் தலைப்புச் செய்திகள்

இந்தி திணிப்பு போராட்டத்தில் பங்கேற்றதன் மூலம் நான் என்றோ அரசியலுக்கு வந்து விட்டேன்: கமல்ஹாசன்

நேற்று கவிதை மூலம் மறைமுகமாக அரசியலில் வரப்போவதாக தெரிவித்த நடிகர் கமல்ஹாசன், இன்று ட்விட்டரில் தனது முதலாவது அரசியல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஆயிரக்கணக்கில் ரீட்வீட் செய்யப்பட்ட அந்த அறிக்கையில், முன்பு தன்னைத் தாக்கிப் பேசிய அமைச்சர்களையும் அரசியல்வாதிகளையும் கிண்டல் செய்துள்ளார்.

கிண்டல் பெயர்  யாரைக் குறிக்கிறது   ஏன்
தம்பி அமைச்சர் ஜெயக்குமார் ஜெயக்குமார் கமலை அரசியலுக்கு முடிந்தால் வந்து பார் என்றார். ஆகவே, உன்னைவிட எனக்கு அரசியல் அனுபவம் அதிகம் என்பதற்காக “தம்பி”யானார் ஜெயக்குமார்
எலும்பு வல்லுனர் எச். ராஜா கமலை எச்.ராஜா முதுகெலும்பில்லாதவர் என்று சொன்னதால், “எச். ராஜா பெரிய எலும்பு வல்லுனரோ?” என்று நக்கல் செய்துள்ளார்
கல்லுளிமங்கர் என்ற ஊழலார் தமிழக மற்றும் மத்திய அமைச்சர்கள் ஊழலை எல்லோருக்கும் தெரியுமாறு பல ஆதாரங்களுடன் ஊடகங்களில் வெளியான பின்பும் ஆதாரம் இல்லை என கல்லுளிமங்கர்கள் போல அமைச்சர்கள் சொல்வதால் இப்பெயர் அவர்களுக்கு கொடுத்துள்ளார்.

கமல் ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையின் படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

Share
Categories
அதிமுக ஜெயலலிதா தமிழகம் தலைப்புச் செய்திகள்

ஜெயலலிதா மரணம் குறித்த எந்த விசாரணைக்கும் தயார்: அப்பல்லோ பிரதாப் ரெட்டி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த எந்த விசாரணையையும் சந்திக்க தான் தயார் என்று அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி.ரெட்டி கூறியுள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில்  75 நாட்கள் சிகிச்சை பெற்று, பின்னர்  டிசம்பர் 5-ம் தேதி மரணமடைந்தார். இதனையடுத்து, பல்வேறு தரப்புகளிலிருந்தும் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வந்தது.

அதிமுகவின் ஒரு கோஷ்டியான, ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான, அதிமுக புரட்சி தலைவி அம்மா  அணியும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகிறது. அதோடு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதா மரணம் பற்றி நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். இந்த விவகாரத்தில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் தங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அணி தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைத்தால், அதனை தாம் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி.ரெட்டி கூறியுள்ளார். தேனாம்பேட்டையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்  பிரதாப் சி.ரெட்டி செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தபோது இவ்வாறு கூறினார். ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்கும்போது யாருடைய தலையீடும் இல்லை என்று கூறிய அவர், சிகிச்சை அளித்ததில் எந்த தவறும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மிகவும் வெளிப்படையாகத் தான் அவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்.

Share
Categories
அ.தி.மு.க. தமிழகம் தலைப்புச் செய்திகள் திமுக ஸ்டாலின்

நீட் தேர்வு குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் : மு.க.ஸ்டாலின்

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காமல் தமிழக அரசு மாணவர்களுக்கு துரோகம் இழைத்து விட்டதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நீட் தேர்வு தொடர்பாக நிறைவேற்றப்பட்ட மசோதா ஜனாதிபதியின் ஒப்புதல் பெறாமல் உள்ளதை பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் சுட்டிக்காட்டினார்.இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய கவனம் செலுத்தவில்லை என்று குறிப்பிட்ட அவர், இதற்குப் பொறுப்பேற்று தமிழக அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, நீட் தேர்வுக் குறித்து தொடர்ந்து சட்டசபையில் பேச திமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனைக் கண்டித்து அமளியில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். நீட் தேர்வு விவகாரத்தை பேச அனுமதிக்க வலியுறுத்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும், பின்னர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Share
Categories
தமிழகம் பா.ம.க.

‘ஸ்மார்ட் கார்டு’ வழங்குவது குறித்து தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் யோசனை

‘ஸ்மார்ட் கார்டு’ வழங்குவது குறித்து தமிழக அரசுக்கு யோசனையாக பா.ம.க. இளைஞரணித் தலைவரான டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஒரு அறிவிப்பில் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டில் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் நியாயவிலைப் பொருட்களைப் பெறுவதற்கான ஸ்மார்ட் அட்டைகளை வழங்குவதில் அடுத்தடுத்து கேலிக்கூத்துக்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. சரியான திட்டமிடாமல் அதிகாரிகள் செய்யும் குளறுபடிகளால், தகவல் தொழில்நுட்பம் குறித்த புரிதலோ, கணினி அறிவோ இல்லாத அப்பாவி பாமர மக்கள் மிகக்கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.


மாநிலம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 1 கோடியே 95 கோடி லட்சம் குடும்ப அட்டைகள் உள்ள நிலையில், இதுவரை ஒரு கோடியே 2 லட்சம் பேருக்கு மட்டுமே ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. சென்னையில் 20 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ள நிலையில் 7 லட்சம் குடும்பங்களுக்கு மட்டுமே ஸ்மார்ட் அட்டைகள் வினியோகிக்கப்பட்டிருக்கின்றன.

ஸ்மார்ட் அட்டை வழங்குவதற்கான காலக்கெடு முடிவடைந்த பிறகும், மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு மட்டுமே ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்பது படுதோல்வி ஆகும்.

ஸ்மார்ட் அட்டை வழங்குவதில் ஏற்பட்ட குழப்பங்கள் அனைத்துக்கும் காரணம் அதிகாரிகளின் திட்டமிடாத போக்கு தான். அவர்களின் தவறுக்காக அப்பாவி மக்களை அவதிக்குள்ளாக்குவதை ஒருபோதும் மன்னிக்க முடியாது. அப்பாவி மக்களை இனியும் அலையவிடாமல், ஒவ்வொரு நியாயவிலைக் கடைகளிலும் ஒரு நாளைக்கு 100 பேர் மட்டும் பங்கேற்கும் வகையில் சிறப்பு முகாம்களை நடத்தி அவர்களுக்கு உடனடியாக ஸ்மார்ட் அட்டை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Share