Categories
இந்தியா ஐகோர்ட் தமிழகம் தலைப்புச் செய்திகள்

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை டிசம்பர் 31-க்குள் முடிவு செய்ய கெடு

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பான பொதுநல வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, எந்த இடத்தில் மருத்துவமனை அமைப்பது என்று டிசம்பர் 31-ம் தேதிக்குள் முடிவு செய்யுமாறு மத்திய அரசுக்கு  கெடு விதித்துள்ளது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்றும், அதற்கான இடங்களை தேர்வு செய்து தெரிவிக்கவும் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக அரசை, மத்திய அரசு கேட்டுக்கொண்டது.  தமிழக அரசு சில இடங்களை தேர்வு செய்து, மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியது. ஆனால் அதன் பிறகு  எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான வேறு எந்த அறிவிப்பையும் மத்திய அரசு செய்யவில்லை. எந்த இடத்தில் மருத்துவமனை அமையும் என்றும் முடிவு செய்யவில்லை.

இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைக்கப்படும் என்பது இதுவரை மத்திய அரசால் அறிவிக்கப்படவில்லை. இது பற்றி உரிய அறிவிப்பு வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மதுரை ஐக்கோர்ட் நீதிபதிகள், “தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை டிசம்பர் 31-ம் தேதிக்குள் முடிவு செய்து தெரிவிக்க வேண்டும். இடத்தை ஆய்வு செய்து முடிவு செய்ய 2 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை ஜனவரி 1-ல் அறிவிக்கவேண்டும்” என்று  உத்தரவிட்டுள்ளனர்.

Share
Categories
இந்தியா உயர் கல்வி ஐகோர்ட் தமிழகம் தலைப்புச் செய்திகள் நீட் மருத்துவ தேர்வு மருத்துவம்

மருத்துவப் படிப்பிற்கு 85 சதவீத இடஒதுக்கீடு ரத்து; மேல்முறையீடு செய்யப்படும் – அமைச்சர்

இளங்கலை மருத்துவம், பல் மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் பயின்றவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை கோரிய வழக்கில், இட ஒதுக்கீடை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதனன்று உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

மதுரையைச் சேர்ந்த மாணவர் சிபி உள்ளிட்ட மூவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.   அதில், “இந்தியா முழுவதும் நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவம், பல் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். அதன்படி தமிழகத்தில் நீட் தேர்வு முடிவின் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும்.

இந்நிலையில் தமிழகத்தில் மருத்துவம், பல் மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் பயின்றவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு ஜூன் 22-ஆம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது. எஞ்சிய 15 சதவீத இடங்களில் மட்டுமே மத்திய அரசு பாடத்திட்டம் மற்றும் பிற பாடத்திட்டங்களில் பயின்ற மாணவர்கள் சேர்க்கப்படுவர் என அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இதனால், சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் பயின்று நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பாதிக்கப்படுவர். எனவே, 85% இடஒதுக்கீட்டு அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும்” என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இது குறித்து விசாரணை நடத்திய நீதிபதி கல்யாணசுந்தரம், 85% இட ஒதுக்கீட்டுக்கு தடை விதித்தார்.

இது பற்றி  அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும் போது, “சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை வழக்கறிஞர் மூலம் திறமையாக வாதம் செய்யப்பட்டது. இதை அரசும் கண்காணித்தது.
தற்போது உயர்நீதிமன்றம் இடஒதுக்கீட்டுக்கு தடை விதித்திருப்பதாக தகவல் வந்துள்ளது. இதுகுறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். நமது உரிமை நிலை நாட்டப்படும்.” என்று கூறினார்.

 

Share
Categories
இந்தியா உச்ச நீதிமன்றம் ஐகோர்ட்

மாட்டிறைச்சி விவகாரம்: மத்திய அரசின் உத்தரவுக்கு 4 வார இடைக்கால தடை

மாட்டிறைச்சி தொடர்பாக மத்திய அரசின் உத்தரவுக்கு 4 வார இடைக்கால தடை மதுரை உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு மாட்டிறைச்சிக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதற்கு தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. மத்திய அரசின் இந்த உத்தரவை எதிர்த்து மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் செல்வகோமதி மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அவரது பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது :

கடந்த 26-ந்தேதி மத்திய அரசு இறைச்சிக்காக மாடுகள் விற்க தடை விதித்தது. மேலும் பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. இது சட்டவிரோதம். இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயலாகும். உணவு என்பது தனி மனித விருப்பமாகும். இதில் அரசு தலையிட உரிமை இல்லை. எனவே மாட்டு இறைச்சி மீதான மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.

இன்று பிற்பகலில் நீதிபதிகள் முரளிதரன், கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இம்மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை உத்தரவுக்கு 4 வார இடைக்கால தடை விதித்தனர். மேலும் மத்திய, மாநில அரசுகள் 4 வாரத்தில் இவ்விவகாரம் தொடர்பாக பதில் அளிக்கவும் உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Share
Categories
இந்தியா உயர் கல்வி ஐகோர்ட் தமிழகம் நீட் மருத்துவ தேர்வு மருத்துவம்

“ஸ்டாப் இட்” : நீட் தேர்வு முடிவுகளை வெளியிட ஐகோர்ட் இடைக்கால தடை

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட்  கிளை உத்தரவிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் மே 7 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. 104 நகரங்களில் அமைக்கப்பட்டு இருந்த 1,900–க்கும் அதிகமான மையங்களில் பல்வேறு மொழிகளில்  தேர்வு நடந்தது.

சில மாணவர்களின் மனுக்களின் அடிப்படையில், நீதிபதி எம்.வி. முரளிதரன் இந்த
இடைக்காலத் தடையை பிறப்பித்தார். மேலும் இந்திய மருத்துவ கவுன்சில் (MCI) அதிகாரிகள் மற்றும் மத்திய மேல்நிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) இயக்குனர் ஆகியோர் ஜூன் 7 ம் தேதி தங்கள் வாக்குமூலங்களை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

சீரான கேள்வித்தாள்கள் வழங்கப்படவில்லை எனவும், ஆங்கில மற்றும் தமிழ் கேள்வித் தாள்களுக்கு இடையில் பெரிய வித்தியாசம் இருப்பதாகவும் மனுதாரர்கள் கூறினர்.
மேலும் நீட்
தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் ஒரே சீரான கேள்வித் தாள்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.

நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் ஒரே சீரான பாடத்திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தாலும்  எல்லா இடங்களிலும் ஒரே சீரான முறையில் தேர்வு நடத்தப்படவில்லை என்றும் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு கேள்வித்தாள்கள் பயன்படுத்தப்பட்டதாகவும்  அவர்கள் மனுவில் கூறியுள்ளனர்.

தமிழ்நாட்டில், தமிழ் மொழியில் தேர்வு எழுதியவர்களுக்கு எளிதான வினாத்தாளும் ஆங்கில மொழியில் எழுதியவர்களுக்கு கடினமான வினாத்தாளும் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். “நீட் தேர்வில் இந்தியா முழுவதும் ஒரே வினாத்தாளே பயன்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில் நுண்ணறிவு, இயல்திறன் ஆகியவற்றின் அளவீடுகள் பெருமளவில் வேறுபடும். ஆகவே தற்போதைய நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு, புதிதாக நாடுமுழுவதும் ஒரே கேள்வித்தாளைக் கொண்டு புதிய நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும்” என்றும் மனுதாரர்கள் தெரிவித்திருந்தனர்.

Share
Categories
ஐகோர்ட் தமிழகம் நீட் மருத்துவ தேர்வு

ஐகோர்ட் : நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கு இடைக்கால தடை இல்லை

சென்னை ஐகோர்ட்டின் மதுரைக் கிளை, நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கு இடைக்கால தடை விதிக்க இல்லை என தெரிவித்துள்ளது.

கடந்த மே 7-ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், நீட் தேர்வு மாநில வாரியாக கேள்வித்தாளை வடிவமைக்காமல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான கேள்வித்தாளை பயன்படுத்த வேண்டும் மேலும் நீட் தேர்வு அடிப்படையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.

மதுரையைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவர்கள் 9 பேர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) நீதிபதி சேஷசாயி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது எனத் தெரிவித்தார். இந்த வழக்கு விசாரணயை ஒருவார காலத்துக்கு ஒத்திவைத்தார்.

இருப்பினும் நாடு முழுவதும் ஒரே மாதிரியான நீட் வினாத்தாள் கோரப்பட்டது தொடர்பாக சிபிஎஸ்இ வாரியமும், இந்திய மருத்துவக் கவுன்சிலும் விளக்கமளிக்கமாறு உத்தரவிட்டார்.

Share
Categories
உயர் கல்வி ஐகோர்ட் தனியார் கல்லூரிகள் தமிழகம் மருத்துவம்

மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கு தனியார் கல்லூரிகளில் அரசுக்கு 50% இடஒதுக்கீடு: ஐக்கோர்ட் ஆணை

தமிழகம் முழுவதும் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பட்ட மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் அரசுக்கு 50% இடஒதுக்கீடு செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ பட்டமேற்படிப்பில் இடஒதுக்கீடு தொடர்பாக மாணவர்கள் சாரோன், காமராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்து வந்தார். இந்த வழக்கின வாதவிவாதங்கள் முடிந்த நிலையில் இறுதி உத்தரவை நீதிபதி தள்ளிவைத்திருந்தார்.

இந்நிலையில் இன்று (செவாய்க்கிழமை) உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவில், “தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் பட்ட மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 50% இடங்களை அரசுக்கு ஒதுக்க வேண்டும். இவற்றை கலந்தாய்வு மூலமே ஒதுக்க வேண்டும்” என்றும் உத்தரவிட்டுள்ளது.

அதேவேளையில் சிறுபான்மை மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது எனவும் அரசு தெரிவித்துள்ளது.

மேலும், மருத்துவ மாணவர்கள் பட்ட மேற்படிப்பு மேற்கொள்ள இடஒதுக்கீடு பெற தவறியதற்காக தமிழக அரசும் இந்திய மருத்துவக் கவுன்சிலும் தலா ரூ.1 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share
Categories
ஐகோர்ட் தமிழகம்

தமிழ்நாடு முழுவதும் சீமை கருவேல மரங்களை அகற்ற ஐகோர்ட்டு தடை

தமிழகம் முழுவதும் சீமை கருவேல மரங்களை அகற்றக்கோரி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, கடந்த 2015–ம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதேபோல் மதுரை மாநகராட்சி முன்னாள் மேயர் பட்டுராஜன் உள்ளிட்ட மேலும் சிலரும் மனு தாக்கல் செய்து இருந்தனர்.

அந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் ஏ.செல்வம், பொன்.கலையரசன் ஆகியோர் கடந்த டிசம்பர் மாதம் 20–ந்தேதி பிறப்பித்த உத்தரவில், மதுரை ஐகோர்ட்டுக்கு உட்பட்ட 13 மாவட்ட தலைநகரங்களிலும் சாலை ஓரங்கள், நீர்நிலைகள், காலிமனைகள், தனியார் நிலங்கள் போன்ற பகுதிகளில் இருக்கும் சீமை கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கூறி இருந்தனர்.

அதன்பின்னர் கடந்த ஜனவரி மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழகம் முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும்படி அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் இதுதொடர்பான தனிச்சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.

இந்தநிலையில் சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு எதிராக வி.மேகநாதன் என்ற வக்கீல் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார்.

அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–

சீமை கருவேல மரம் பல்வேறு நாடுகளில் உள்ளது. தமிழகத்தில் இந்த மரம் ஏராளமாக உள்ளது. குறிப்பாக வறட்சிப்பகுதிகளில் இந்த மரம் அதிக அளவில் வளருகிறது. இந்த மரம், எரிபொருளாகவும், நிழல் தரும் மரமாகவும் திகழ்கிறது. மண்ணின் உறுதித்தன்மையை பாதுகாக்கவும், காற்றின் வேகத்தை குறைப்பதற்கும் இந்த மரம் உதவியாக இருக்கிறது. பெரும்பாலான கிராமப்புறங்களில், இந்த மரத்தை விறகாக பயன்படுத்துகின்றனர். இந்த மரத்தை வெட்டி விறகாக விற்பனை செய்பவர்களுக்கு வருமானம் கிடைக்கிறது.

கருவேலம் மரம் வளர்வதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இந்த மரம், வணிக ரீதியாக பயன்படுத்தப்படுகிறது. உலகத்துக்கு ஒரு பசுமை போர்வையாக இருந்து வருகிறது.

மேலும் அந்த மனுவில் கூற்ப்பட்டிருப்பதாவது:  கருவேல மரங்களை வெட்டுவதற்கு ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டு இருப்பது காடுகளை அழிப்பதற்கு சமமானது ஆகும்.

எனவே, தமிழகத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு தடை விதிக்கவேண்டும். அதை அகற்றுவதால் ஏற்படக்கூடிய பாதிப்பை ஆய்வுசெய்ய ஒரு நிபுணர்கள் குழுவை அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–

சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று இரண்டு நீதிபதிகளை கொண்ட அமர்வு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதால், இந்த வழக்கை 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்கும். அதேநேரம், இந்த மனுவுக்கு வருகிற மே 11–ந்தேதிக்குள் ஐ.ஐ.டி. இயக்குனர் பதில் அளிக்க வேண்டும். அதுவரை சீமை கருவேல மரங்களை அகற்ற எந்த ஒரு நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கக்கூடாது.

இந்த வழக்கு விசாரணையை வருகிற மே 11–ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.  இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர்.

Share