Categories
அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா தமிழகம்

ஜெயலலிதாவின் உருவப்படத்தை சட்டசபையில் திறந்து வைக்க மோடிக்கு முதல்வர் அழைப்பு

பிரதமர் மோடியிடம் சட்டசபையில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை திறந்து வைக்க வேண்டி அழைப்பு விடுத்ததாக  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

தமிழக முதல்வராக எடப்பாடி கே பழனிச்சாமி பதவியேற்று மூன்றாவது முறையாக பிரதமர் மோதியை புதுதில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார்.

பிரதமர் சந்திப்பு குறித்து தில்லியில் உள்ள தமிழக இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி, மாணவர்களின் நலன் கருதி தமிழகத்தில் இயங்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு இடங்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க மறு பரிசீலனை செய்யுமாறும், தமிழகத்தில் புதிய எயிம்ஸ் மருத்துவமனை அமைக்க விரைவில் ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்ததாக கூறினார்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகையை வழங்க மத்திய நிதியமைச்சகத்தின் மூலம் அதற்குண்டான உத்தரவுகளை காப்பீட்டு நிறுவனங்களுக்கு பிறப்பிக்க கோரிக்கை விடுத்ததாக கூறியுள்ள முதல்வர் பழனிச்சாமி, காவிரி படுகை பாசனத்தை மேம்படுத்தும் நோக்கில் சுமார் 14,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு திட்டங்களை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதற்கு ஒப்புதல் அளித்து அதனை தேசிய திட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகவும் முதல்வர் கூறினார்.

மேலும், பவானி ஆற்றின் குறுக்கே அணைகளையும், தடுப்பணைகளையும் கட்டிவரும் கேரள அரசின் நடவடிக்கை தடுக்கக்கோரியும், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை விரைவில் அமைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இறுதியாக, மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்க வேண்டிய சுமார் 17,000 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்க கோரிக்கை விடுத்ததாக தெரிவித்த முதல்வர், இலங்கையில் அரசு வசமிடமுள்ள 135 படகுகளையும், சிறையில் அடைபட்டுள்ள 13 மீனவர்களையும் விடுவிக்கக்கோரி கோரிக்கை விடுத்துள்ளதாக கூறினார்.

Share
Categories
அ.தி.மு.க. அதிமுக எடப்பாடி பழனிசாமி கட்சிகள் தமிழகம்

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்ட 8 எம்எல்ஏக்கள் கோரிக்கை

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று திங்கள்கிழமை நேரில் சந்தித்த அதிமுக (அம்மா) அணியை சேர்ந்த 8 சட்டமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.

முதல் – அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசுக்கு 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது.இது ஆட்சி நடத்துவதற்கு தேவையான பெரும்பான்மை பலத்தை விட கூடுதலாக 5 எம்.எல்.ஏ.க்களையே கொண்டதாக இருக்கிறது.

இந்த நிலையில், அ.தி.மு.க. அம்மா அணியை சேர்ந்த ஒரு சில எம்.எல்.ஏ.க்கள் திடீரென போர்க்கொடி தூக்கினார்கள். தங்கள் தொகுதி பிரச்சினையை தீர்க்க அரசு முன்வரவில்லை என்று குற்றம்சாட்டினார்கள். இதனால், அ.தி.மு.க. அம்மா அணியிலும் பிளவு ஏற்படுமோ? என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதியில், முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தலைமையில், முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன் உள்பட மொத்தம் 11 எம்.எல்.ஏ.க்கள் ரகசிய ஆலோசனை நடத்தினார்கள். இது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் இன்று அவர்கள் 3 பேரும் தலைமை செயலகத்துக்கு வந்தனர். அவர்களுடன் மேலும் 5 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வந்திருந்தனர். அவர்கள்  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர்.

அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை உடனடியாக கூட்டவெண்டும் என  முதல்-அமைச்சர் எடபாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்து உள்ளனர்.என தகவல் வெளியாகி உள்ளது. கோரிக்கையை மனுவாக எழுதி கொடுத்து கையெழுத்திட்டு உள்ளனர்.

Share
Categories
எடப்பாடி பழனிசாமி தமிழகம் தலைமையகம்

தமிழக தலைமைச் செயலகத்தில் மத்திய மந்திரிக்கு என்ன வேலை ?

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடனிருக்க, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்ததார். இதற்கு பல்வேறு அரசியல் தமிழக அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு பகுதியைத் துவக்கி வைப்பதற்காக இங்கு வந்த மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் நகர்ப்புற வீட்டு வசதி, வறுமை ஒழிப்புத் துறை அமைச்சர் மாநிலத் தலைமைச் செயலகத்தில் தன் துறையின் கீழ் நடக்கும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில் அமைச்சர் வெங்கய்ய நாயுடுவுடன் மாநில முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தமிழக தலைமைச் செயலாளர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டம் தமிழக தலைமைச் செயலகத்தில் உள்ள மாநாட்டு அரங்கில் நடைபெற்றது.

பொதுவாக இந்த அரங்கில் முதலமைச்சர் தலைமையில் நடக்கும் கூட்டங்கள் மட்டுமே நடக்கும்.

அது தவிர, தமிழக நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கு முன்பாக, வர்த்தக பிரதிநிதிகளின் கருத்துக்களைக் கேட்கும் கூட்டம் நடக்கும்.

முதல் முறையாக மத்திய அமைச்சரின் ஆய்வுக்கூட்டம் இந்த அரங்கில் நடைபெற்றது.

மெட்ரோ ரயில் துவக்கவிழா நடக்கும் ரயில் நிலையத்திற்குச் செல்லும் பாதை நெடுக அ.தி.மு.க. கட்சி கொடிகளுடன் பாரதீய ஜனதாக் கட்சிக் கொடிகள் கட்டப்பட்டிருந்ததும் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், மாநில முதலமைச்சரை அருகில் வைத்துக்கொண்டு வெங்கய்ய நாயுடு இந்தக் கூட்டத்தை நடத்தியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

“மாநில சுயாட்சிக்கு விரோதமான செயல் இது. இதிலிருந்து, இந்த ஆட்சி மத்திய அரசுக்கு எவ்வாறு அஞ்சி செயல்படுகிறது என்பது தெரிகின்றது. தமிழகத்தையே மத்திய அரசிடம் அடகு வைத்திருப்பது தெளிவாக தெரிகின்றது.” என தி.மு.கவின் செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார்.

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசரும் இதற்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

Share
Categories
அ.தி.மு.க. டி.டி.வி. தினகரன் தமிழகம்

டிடிவி தினகரனுக்கு நீதிமன்றக் காவல் நீடிப்பு

தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கைது செய்யப்பட்ட அதிமுக துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரனுக்கு இந்த மாதம் 29-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீடிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக, இரட்டை இலை சின்னம், சசிகலா அணிக்கா அல்லது முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அணிக்கா என்ற சர்ச்சை எழுந்தது.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, அந்தச் சின்னம், முடக்கப்பட்டு, இரு அணிகளுக்கும் வெவ்வேறு சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா புகார் காரணமாக, இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இந் நிலையில், இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காக, தேர்தல் ஆணைய அதிகாரிக்கு இடைத்தரகர் மூலம் லஞ்சம் கொடுக்க முயன்றதாக, டிடிவி தினகரனும், இடைத் தரகர் சுகேஷ் சந்திரசேகரும் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர். முதலில் சுகேஷ் சந்திரசேகரும், அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தினகரனும் கைது செய்யப்பட்டனர். மேலும், தினகரன் கொடுத்தாகக் கூறப்படும் 10 கோடி ரூபாய் முன்பணத்தில் 1.30 கோடியை பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

தினகரனுடன் அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவும் கடந்த மாதம் 25-ஆம் தேதி டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

Share
Categories
அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி தமிழகம்

திருப்பதியில் முதல்வர் எடப்பாடி தரிசனம்

தமிழக அரசு கடுமையான நெருக்கடியில் இருக்கும் நிலையில், திருப்பதியில் முதல்வர் எடப்பாடி தரிசனம் செய்ய குடும்பத்தினருடன் சென்றார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து அதிமுகவில் கடும் நெருக்கடி நிலவி வருகிறது. கட்சி இரண்டாக உடைந்தது; கூவத்தூரில் எம்எல்ஏக்களை அடைத்து வைத்திருந்தது; சசிகலா சிறைவாசம்; அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை; ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ரூ.89 கோடி பட்டுவாடா செய்ததற்கான ஆதாரம் சிக்கியது; இரட்டை இலை முடக்கம்; தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் டிடிவி தினகரனுக்கு சிறைவாசம் என அதிமுக அம்மா அணி அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும், அதிமுக இரு அணிகளின் இணைப்பு இழுபறி நிலையில் இருந்து இல்லாமலே போய்விட்டது. புதிய டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு, நீட் தேர்வை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்காததால் அரசு மீது மக்களுக்கு வெறுப்பு என தமிழக அரசு மீதான அதிருப்தி மக்களுக்கு அதிகமாகிக் கொண்டே வருகிறது. மேலும், மத்திய அரசும், பாஜவும் தமிழக அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நேற்று இரவு வந்தார். அவருடன் மனைவி ராதா, மகன் மிதுன் ஆகியோரும் வந்தனர்.இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை கோயிலில் நடந்த வாராந்திர சேவையான அஷ்டதள பத்மாராதனையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது குடும்பத்தினருடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர்உண்டியலில் காணிக்கை செலுத்தினார். இதைத்தொடர்ந்து கோயிலுக்கு எதிரே உள்ள அகிலாண்டத்தில் தேங்காய் உடைத்தும், பேடி ஆஞ்சநேயர் கோயிலிலும் தரிசனம் செய்தனர். பின்னர் வெளியே வந்த முதல்வரிடம் நிருபர்கள் தமிழக அரசியல் நிலவரம் குறித்து கேட்டனர். அதற்கு அவர், ‘தனிப்பட்ட முறையில் நான் குடும்பத்துடன் ஏழுமலையானை தரிசிக்க வந்தேன். அரசியல் பற்றி பேச விரும்பவில்லை’ என்று கூறிவிட்டு சென்றார்.

Share
Categories
அ.தி.மு.க. தமிழகம்

அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் நாமக்கல் சுப்பிரமணியன் மர்ம மரணம்

தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரி சோதனை நடந்த போது, நாமக்கலில் உள்ள கட்டட ஒப்பந்ததாரர் சுப்ரமணியன் வீட்டிலும் சோதனை நடந்தது. இவர், அமைச்சர் விஜயபாஸ்கரின் நெருங்கிய நண்பர். இவர், இன்று தனது தோட்டத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் வருமான வரித் துறை விசாரணை என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை இறுக்கிய பிடிகள் தற்போது விலக வாய்ப்புகள் உள்ளன.

Share
Categories
அ.தி.மு.க. அதிமுக கட்சிகள் தமிழகம் திமுக பா.ஜ. பா.ம.க.

தமிழக சட்டசபை தேர்தல் எப்போது வரும் ?

தமிழகத்தில் ஜெயலலிதாவின் மரணத்தைத் தொடர்ந்து, சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். ஆளும் கட்சியான, அ.தி.மு.க., பிளவுபட்டு, இரு அணிகளாக செயல்படுகிறது.  முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பக்கமும் தொண்டர்கள் திரளாக உள்ளனர். சசிகலா ஆசியுடன் பழனிசாமி முதல்வரானபின், சசிகலாவின் உறவினரான டி.டி.வி. தினகரன் ஆர்.கே. நகர் தேர்தலில் இரட்டைஇலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பழனிசாமியின் அமைச்சரவையில் உள்ளவர்களே, பல்வேறு விசாரணை வளையங்களில் சிக்கி தவிக்கும் நிலை உருவாகி உள்ளது. இன்னிலையில் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் டில் கொலையும், கொள்ளையும் நடந் துள்ளது. அதன் பின்னணி மர்மங்கள் முழுமையாக வெளிவராத நிலையில், அதில் சம்பந்தப் பட்டவர்களின் மரணங்களும் தொடர்கின்றன.

 

இதுபோன்ற பலசிக்கல்கள்சூழ்ந்துள்ள நிலையில், தமிழக சட்டசபைக்கு தேர்தல் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்ற கருத்து எழுந்துள்ளது.
தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின், சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘உள்ளாட்சி தேர்தலுக்கு முன், சட்டசபைக்கு தேர்தல் வரும்’ என்றார். அதிமுக இரண்டாவது அணித்தலைவரான பன்னீர் செல்வம் சமீபத்தில் தமிழக தேர்தல் என்னேரமும் வரலாம் என்றார். அதுபோலவே தமிழக பா.ஜ. தலைவர் கள் தமிழிசை சவுந்தர ராஜன், எச்.ராஜா போன்றவர்களும் பா.ம.க. கட்சியினரும் ‘விரைவில் ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை அறிவிக்க வேண்டும்’ என்று தெரிவித்து வருகின்றனர்.

 

மறுப்பு

இதற்கிடையே, நிதியமைச்சர், ஜெயக்குமார் ‘விரைவில் சட்டசபை தேர்தல் வரும் என, பன்னீர்செல்வம் கூறியிருப்பது விஷமத்தன மானது’ என்றும் கூறியுள்ளார். ஆட்சியில் உள்ள ஒரு அமைச்சரிடம் இருந்து இப்படிப்பட்ட கருத்தையே நாம் எதிர்பார்க்க முடியும். தற்போதைய நிலைமையை உன்னிப்பாக கவனித்தால், முன்பு ஆர். கே. நகர் தேர்தலை ரத்து செய்வோம் என்று பா.ஜ. தலைவர்கள் அறிவித்துவிட்டு அதை நடத்திக் காட்டியது போலவே, இப்போதும் “தமிழகத்திற்கு விரைவில் தேர்தல்’ என முன்னறிவிப்பு செய்கிறார்களோ என்று மனதிற்குள் தோன்றுகிறது.

 

Share
Categories
அ.தி.மு.க. கொடநாடு எஸ்டேட் சசிகலா ஜெயலலிதா டி.டி.வி. தினகரன் தமிழகம்

கொடநாடு கொலை தொடர்பாக தினகரன், சசிகலாவிடம் விசாரணை நடத்த திட்டம்

கடந்த ஏப்ரல் 24-ந் தேதி 11 பேர் கும்பல், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் புகுந்து, காவலாளி ஓம்பகதூரை கொலை செய்ததுடன் மற்றொரு காவலாளியான கிருஷ்ண பகதூரை தாக்கிய செய்தி ஏற்கெனவே தெரிந்ததே. தொடர்ந்து இந்த கும்பல், ஜெயலலிதா, சசிகலா ஆகியோரது அறைக்குள் சென்று 3 சூட்கேஸ்களில் இருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

போலிஸ் விசாரணையில், ஜெயலலிதாவின் கார் டிரைவரான கனகராஜ், அவரது கூட்டாளி சயான் உள்பட 11 பேர் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனிடையே கனகராஜ் சேலத்தில் நடந்த விபத்தில் இறந்து விட்டார். மேலும், சயான் பாலக்காடு அருகே விபத்தில் காயமடைந்து கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த விபத்தில் சயானின் மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் இறந்து விட்டனர்.

இவ்வழக்கில் கேரளாவை சேர்ந்த சாமியாரான மனோஜ் மற்றும் அவன் கூட்டாளிகளான சந்தோஷ், தீபு, சதீ‌ஷன், உதயகுமார், சங்கனாச்சேரியை சேர்ந்த சாமி என்ற மனோஜ் மற்றும் ஜம்சீர் அலி, ஜிதின் ராய் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தலைமறைவாக உள்ள குட்டி என்கிற பிஜினை கைது செய்ய தனிப்படை போலீசார் கேரளாவில் முகாமிட்டு தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

ஜெ.வின் மர்மம் போலவே, கொடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் மர்மமாகவே இருக்கிறது. அந்த பங்களாவில் இருந்த ஜெ.வின் 3 முக்கிய சூட்கேஸ்களில் இருந்து முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக, கொடநாடு எஸ்டேட் பங்களா நிர்வாகம் சார்பாக எந்த புகாரும் கொடுக்கப்படவில்லை.
ஜெ.வின் மறைவிற்கு பின் சசிகலாவும், தினகரனுமே எஸ்டேட் நிர்வாகத்தை கவனித்து வந்தனர். எனவே, இந்த விவகாரம் தொடர்பாக சிறையில் இருக்கும் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரிடம் விசாரணை செய்ய முடிவெடுத்துள்ளதாக போலீசார் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
Share
Categories
அ.தி.மு.க. சசிகலா தமிழகம்

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா மறுஆய்வு மனு

(தினத்தந்தி)

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தங்களை சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.

சொத்து குவிப்பு வழக்கு

வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 66 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் மறைந்த தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறை தண்டனையுடன் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், மற்ற 3 பேருக்கும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து அவர்கள் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ததில், அந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி 4 பேரின் தண்டனையையும் முழுவதுமாக தள்ளுபடி செய்தார்.

சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

இதை எதிர்த்து கர்நாடக அரசு மற்றும் தி.மு.க. செயலாளர் அன்பழகன் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் கீழ்க்கோர்ட்டு விதித்த தண்டனையை உறுதிசெய்து தீர்ப்பு வழங்கினார்கள்.

முதல்–அமைச்சர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து இந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

மறுஆய்வு மனு

இந்நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில் சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட 4 பேரில் ஜெயலலிதா மட்டுமே அரசு பதவி வகித்து வந்தார். அவரை மட்டுமே ஊழல் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் தண்டிக்க முடியும்.

அவருடைய மரணத்தை தொடர்ந்து அவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரை தண்டிப்பது முறையானது அல்ல. ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதால் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றவர்களும் விடுவிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தீர்ப்பு விவரங்கள்

இது சம்பந்தமாக ஏற்கனவே இதேபோன்ற வழக்குகளில் பிறப்பிக்கப்பட்ட சில தீர்ப்புகள் குறித்த விவரங்களும் மனுவில் சேர்க்கப்பட்டுள்ளன.

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில் இந்த வழக்கில் மேல்முறையீட்டு மனுக்கள் அனுமதிக்கப்படும் என்று குறிப்பிட்டு இருந்தனர். அதன் அடிப்படையில் இந்த மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Share
Categories
அ.தி.மு.க. கொடநாடு எஸ்டேட் ஜெயலலிதா தமிழகம்

கொடநாட்டில் கொலை: ஜெயலலிதா உயில் கொள்ளை போனதா?

நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் உள்ள ஜெயலலிதாவின் சொகுசு பங்களாவில் கடந்த மாதம் 23-ந்தேதி இரவு 11 பேர் கும்பல் புகுந்து கொலை, கொள்ளையில் ஈடுபட்டது.

காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ணபகதூர் படுகாயம் அடைந்தார்.

பங்களாவுக்குள் புகுந்த கும்பல், ஜெயலலிதா தங்கும் அறையை குறி வைத்து உடைத்து பொருட்களை அள்ளிச் சென்று விட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 11 பேரில் தலைவனாக செயல்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் சேலம் அருகே கடந்த 28-ந்தேதி நடந்த விபத்தில் பலியானார். அவரது சாவில் மர்மம் நீடிக்கிறது.

இந்த நிலையில், அதே தினத்தன்று மற்றொரு குற்றவாளியான சயன் என்பவனும் விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான். அவனுக்கு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த இரு குற்றவாளிகளைத் தவிர மற்ற 9 பேரும் போலீசாரிடம் பிடிபட்டு விட்டனர்.

கொடநாடு எஸ்டேட்டில் இந்த 11 பேர் கும்பல் என்னென்ன எடுத்துச் சென்றது என்பதில் தொடர்ந்து மர்மம் நீடித்தபடி உள்ளது. ஜெயலலிதாவின் அறையில் இருந்த 3 சூட்கேசுகள் உடைக்கப்பட்டு, அவற்றுக்குள் வைக்கப்பட்டிருந்த பணம், தங்க – வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அந்த 3 சூட்கேஸ்களில் இருந்த சொத்து ஆவணங்களையும் மர்ம கும்பல் அள்ளிச்சென்று விட்டதாக கூறப்பட்டது.

ஆனால் போலீசார் கூறுகையில், “ஜெயலலிதாவின் 5 கைக்கடிகாரங்கள் மட்டுமே திருட்டு போய் விட்டது” என்றனர். ஆனால் அதையும் போலீசாரால் உறுதிபடுத்த இயலவில்லை.

கொலை – கொள்ளைக்கு கேரளாவைச் சேர்ந்த கூலிப்படை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் கேரளா போலீசாரும் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்கள் வெளியிடும் தகவல்களுக்கும், தமிழக போலீசார் வெளியிடும் தகவல்களுக்கும் மிகுந்த முரண்பாடுகள் உள்ளது. இதனால் கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளையில் உண்மையில் என்ன நடந்தது என்பது மர்மமாக இருக்கிறது.

குற்றவாளிகள் அனைவரும் பிடிபட்டு விட்டதால், கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளையில் அவர்களது பங்கு என்ன என்பது தெரிய வந்துள்ளது. கொள்ளைக்கு திட்டமிட்டது கனகராஜ் ஆவார். அதை அரங்கேற்ற உதவி செய்தது மனோஜ் என்ற சாமியார் தலைமையிலான கூலிப்படையாகும்.

இதில் கனகராஜ் பின்னணியில் இருந்தது யார் என்பதுதான் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. அவர் விபத்தில் மர்மமாக உயிரிழந்து விட்டதால், அந்த ரகசியம் அவரோடு புதைந்து போனது. இதை கண்டுபிடித்தால்தான் கொடநாடு எஸ்டேட்டில் என்னென்ன பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன என்பது முழுமையாக தெரிய வரும்.

என்றாலும் பிடிபட்டுள்ள கூலிப்படையினரிடம் இதுவரை நடத்தப்பட்டுள்ள விசாரணை மூலம், கொட நாடு எஸ்டேட்டில் இருந்து ரூ.200 கோடி வரை கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தங்க, வைர நகைகளும் அள்ளிச் செல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகிறது.

இதுபற்றி நீலகிரி மாவட்ட போலீசார், குற்றவாளிகளில் ஒருவனான சயனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சயன்தான் கனகராஜுக்கு மனோஜ் என்ற சாமியார் தலைமையிலான கூலிப்படையை அறிமுகம் செய்து வைத்தார். அதோடு கொலை, கொள்ளையை ஒருங்கிணைத்து நடத்தியதிலும் முக்கிய பங்கு வகித்தார்.

எனவே இவரது வாக்குமூலம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இவரிடம் போலீசார் ஜெயலலிதா எழுதி வைத்திருந்த “உயில்” பற்றி விசாரணை நடத்தியதாக தெரிய வந்துள்ளது.

Share