Categories
அதிமுக ஜெயலலிதா தமிழகம் தலைப்புச் செய்திகள்

ஜெயலலிதா மரணம் குறித்த எந்த விசாரணைக்கும் தயார்: அப்பல்லோ பிரதாப் ரெட்டி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த எந்த விசாரணையையும் சந்திக்க தான் தயார் என்று அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி.ரெட்டி கூறியுள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில்  75 நாட்கள் சிகிச்சை பெற்று, பின்னர்  டிசம்பர் 5-ம் தேதி மரணமடைந்தார். இதனையடுத்து, பல்வேறு தரப்புகளிலிருந்தும் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வந்தது.

அதிமுகவின் ஒரு கோஷ்டியான, ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான, அதிமுக புரட்சி தலைவி அம்மா  அணியும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகிறது. அதோடு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதா மரணம் பற்றி நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். இந்த விவகாரத்தில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் தங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அணி தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைத்தால், அதனை தாம் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி.ரெட்டி கூறியுள்ளார். தேனாம்பேட்டையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்  பிரதாப் சி.ரெட்டி செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தபோது இவ்வாறு கூறினார். ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்கும்போது யாருடைய தலையீடும் இல்லை என்று கூறிய அவர், சிகிச்சை அளித்ததில் எந்த தவறும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மிகவும் வெளிப்படையாகத் தான் அவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்.

Share
Categories
அ.தி.மு.க. தமிழகம் தலைப்புச் செய்திகள் திமுக ஸ்டாலின்

நீட் தேர்வு குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் : மு.க.ஸ்டாலின்

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காமல் தமிழக அரசு மாணவர்களுக்கு துரோகம் இழைத்து விட்டதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நீட் தேர்வு தொடர்பாக நிறைவேற்றப்பட்ட மசோதா ஜனாதிபதியின் ஒப்புதல் பெறாமல் உள்ளதை பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் சுட்டிக்காட்டினார்.இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய கவனம் செலுத்தவில்லை என்று குறிப்பிட்ட அவர், இதற்குப் பொறுப்பேற்று தமிழக அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, நீட் தேர்வுக் குறித்து தொடர்ந்து சட்டசபையில் பேச திமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனைக் கண்டித்து அமளியில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். நீட் தேர்வு விவகாரத்தை பேச அனுமதிக்க வலியுறுத்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும், பின்னர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Share
Categories
அ.தி.மு.க. இந்தியா கர்நாடகா சசிகலா தலைப்புச் செய்திகள்

மூத்த சிறைத்துறை அதிகாரிகளுக்கு எதிராக புகாரளித்த டி.ஐ.ஜி.ரூபா வேறு துறைக்கு மாற்றம்

திங்கள்கிழமையன்று கர்நாடக அரசு சிறைத்துறை டி.ஐ.ஜி.யான ரூபா டி மூட்கிலை வேறு துறைக்கு மாற்றியது. அண்மையில் அவர், அ.இ.அ.தி.மு.க. (அம்மா) பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா  ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததன் மூலம் பெங்களூரு மத்திய சிறைச்சாலையில் தனிச் சலுகைகள் பெற்றார் என்று கூறியிருந்தார்.

ரூபா மூட்கில் தற்போது பெங்களூருவின் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு  பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் மற்றும் கமிஷனர் பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ரூபா அளித்திருந்த அறிக்கையில்,  சிறையில் உள்ள கைதிகளிடம் லஞ்சம் பெற்று கொண்டு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் வினியோகம் செய்யப்படுவதாகவும், சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு தனி சமையல் அறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டுவது அடிப்படையற்றது என டிஜிபி சத்தியநாராயணராவ் மறுப்பு தெரிவித்திருந்தார்.

டி.ஐ.ஜி. சத்தியநாராயணராவ் மாத இறுதியில் ஓய்வு பெறப்போவதால் தற்போது நிர்வாகப் பொறுப்பு எதுவும் இல்லாத நிலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதன்முன்பு  ஊழல் தடுப்பு ஆணையராக இருந்த என்.எஸ். மேகரிக் தற்போது கூடுதல் சிறைத்துறை இயக்குனர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Share
Categories
அ.தி.மு.க. டி.டி.வி. தினகரன் தமிழகம் தலைப்புச் செய்திகள்

இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் டில்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த குற்றப்பத்திரிகையில் சுகேஷ் சந்திரசேகரின் பெயர் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிரான ஆதாரங்கள், சாட்சியங்கள் ஆகியவை வலுவாக இருப்பதால், அவரை வழக்கு விசாரணைக்கு உள்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

அதே சமயம், குற்றப்பத்திரிகையில் அதிமுக  (அம்மா) துணைப்பொதுச் செயலாளர் தினகரன், மல்லிகார்ஜுனா, நாது சிங், லலித் ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்படவில்லை. இதற்கான விளக்கமும் காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் உள்ளது.

இதுகுறித்து டெல்லி குற்றப்பிரிவு உதவி ஆணையர் சஞ்சய் செராவத் கூறுகையில், தற்போது சுகேஷ் நீதிமன்ற காவலில் உள்ளதால் அவர் மீதான குற்றப்பத்திரிகையை இன்று தாக்கல் செய்ய உள்ளதாக கூறியுள்ளார்.

ஜாமீனில் இருக்க கூடிய தினகரன் உள்ளிட்ட எஞ்சிய குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டி உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே அந்த விசாரணை முடிந்து விரைவில் தினகரன் உள்ளிட்டோர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் சஞ்சய் செராவத் கூறியுள்ளார்.

 

Share
Categories
அ.தி.மு.க. சசிகலா தமிழகம் தலைப்புச் செய்திகள்

சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் என புகார்; டிஜிபி மறுப்பு

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அ.தி.மு.க. (அம்மா) அணி பொதுச்செயலாளர் சசிகலா  பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.  சசிகலாவுக்கு சிறையில் சட்டவிரோதமாக சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகின.  சிறைத்துறை அதிகாரிகள் இதனை  மறுத்துள்ளனர்.

கர்நாடக சிறைத்துறையின் முதல் பெண் அதிகாரியாக பதவியேற்ற டி.ஐ.ஜி. ரூபா பரப்பனஅக்ரஹாரா சிறையில் திடீர் சோதனை நடத்தினார். ரூபா அளித்து உள்ள அறிக்கையில், சோதனையின் போது சிறையில் உள்ள கைதிகளிடம் லஞ்சம் பெற்று கொண்டு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் வினியோகம் செய்யப்படுவதாகவும்,  சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள  சசிகலாவுக்கு தனி சமையல் அறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூபாவின் அறிக்கை சமர்பித்த நிலையிலும் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டுவது அடிப்படையற்றது என டிஜிபி சத்தியநாராயணராவ் மறுப்பு தெரிவித்தார்.
இதனையடுத்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரூபா, தன்னுடைய நிலைப்பாட்டில் எந்தஒரு மாற்றமும் கிடையாது, விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.
Share
Categories
இலங்கை எடப்பாடி பழனிசாமி தமிழகம் தலைப்புச் செய்திகள்

தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கும் இலங்கை சட்டத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கும் இலங்கை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், எல்லை தாண்டும் மீனவர்களுக்கு 2 ஆண்டு சிறையும் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கும் வகையில், இலங்கை நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்துள்ளதாகக் கூறப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை அரசின் இந்த நடவடிக்கை, மீனவர் பிரச்சனைக்கு சுமுகமாக தீர்வு காணும் முயற்சிக்குப் பின்னடைவு ஏற்படுத்தும் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார். பாரம்பரியமாக பாக்ஜலசந்தியில் மீன்பிடித்துவந்த தமிழக மீனவர்களை இலங்கையின் புதிய சட்டம் வெகுவாக பாதிக்கும் எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மீனவர் எல்லை தாண்டுவதாக கூறப்படும் பிரச்சனைக்கு தொழில்நுட்ப மேம்பாட்டின் மூலம் நிரந்தரத் தீர்வு காணலாம் என்று கூறியுள்ள முதலமைச்சர், மாறாக அபராதம், சிறை தண்டனை போன்ற வாழ்வாதாரத்தையே வெகுவாக பாதிக்கும் சட்டத்தை நிறைவேற்ற இலங்கையை அனுமதிக்கக்கூடாது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளார்.

Share
Categories
இந்தியா எடப்பாடி பழனிசாமி தமிழகம்

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் தமிழகத்தில் ஆதரவு சேகரித்தார்

பாரதீய ஜனதா கட்சியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளவர் ராம்நாத் கோவிந்த்.  இவர் தேர்தலில் தனக்கு ஆதரவு தர கோரி சென்னை வந்துள்ளார். விமான நிலையத்தில் இருந்து கிண்டியில் உள்ள ஐ.டி.சி. சோழா நட்சத்திர ஓட்டலுக்கு ராம்நாத் கோவிந்த் சென்றார்.

அங்கு தன்னை சந்தித்த புதுவை என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி மற்றும் அவரது கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.யிடம் ஆதரவு திரட்டினார்.

அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், அவர்களை தனித்தனியாக சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அவர், முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு கோரினார்.  அதன்பின்னர், சென்னை கலைவாணர் அரங்கில் உள்ள மறைந்த தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இன்று பிற்பகல் ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் வைத்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பு எம்.பி., எம்.எல்.ஏ.க்களை சந்தித்தார். அப்போது, ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சி முடிந்ததும் ஓ. பன்னீர் செல்வம் நிருபர்களீடம்  கூறியதாவது:-

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க ஒருமனதாக உறுதி அளித்துள்ளோம். குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றிபெறுவது உறுதி. ஜெயலலிதா இருந்திருந்தால் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்தைதான் ஆதரித்திருப்பார். குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக, என்னிடம் ஆதரவு கேட்டது ஜெயலலிதாவின் தொண்டனுக்கு கிடைத்த மரியாதையாக நினைக்கிறேன்  என கூறினார்.

இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அம்மா அணியின் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பங்கேற்றுள்ளனர்.  மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா, பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.

Share
Categories
அ.தி.மு.க. தமிழகம் தலைப்புச் செய்திகள்

அதிமுக உள்கட்சி விவகாரங்கள் : எடப்பாடி – தினகரன் கோஷ்டிகளிடையே பனிபோர்

அதிமுகவில் உள்கட்சி மோதல்கள் வலுத்து வருகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் ஆகியோரின் கோஷ்டிகளிடையே பனிபோர் உச்சநிலையை அடைந்து உள்ளது.

தமிழகத்தில் ஜெயலலிதாவின் மரணத்தைத் தொடர்ந்து, சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். ஆளும் கட்சியான, அ.தி.மு.க., பிளவுபட்டு, இரு அணிகளாக செயல்படுகிறது. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பக்கமும் தொண்டர்கள் திரளாக உள்ளனர். சசிகலா ஆசியுடன் பழனிசாமி முதல்வரானபின், சசிகலாவின் உறவினரான டி.டி.வி. தினகரன் ஆர்.கே. நகர் தேர்தலில் இரட்டைஇலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் சிறையில் அடைக்கப்பட்டுப் பின்னர் ஜாமீனில் விடுதலையானார்.

சிறையில் இருந்து சென்னை திரும்பிய டி.டி.வி. தினகரன், கட்சி பணிகளை மேற்கொள்ளப்போவதாக அறிவித்தார். அவருக்கு அ.தி.மு.க. (அம்மா) அணியைச் சேர்ந்த 34 எம்.எல்.ஏ.க்களும், அமைச்சர்கள் சிலரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அவரது வருகையை விரும்பவில்லை. இதனால் அ.தி.மு.க. (அம்மா) அணிக்குள்ளேயே புகைச்சலும், எதிர்ப்பும் உருவானது.

கட்சி யார் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும் என்பதில்  தினகரன்-எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இடையே மெல்ல, மெல்ல பனிப்போர் ஏற்பட்டது. இந்த பனிப்போர் வலுத்து இரு தரப்பு எம்.எல்.ஏ.க்களும் தற்போது மாறி மாறி வெறுப்பு கருத்துகளை வெளியிட தொடங்கி உள்ளனர்.

‘சசிகலா குடும்பத்துக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் வேகப்படுத்த முதல்வர் விரும்பவில்லை. ‘அந்தக் குடும்பத்துடன் இணக்கம் காட்டினால், நமக்குத்தான் இழப்பு’ என்பதில் உறுதியாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி’ என்று எடப்பாடி கோஷ்டியினர் கூறுகின்றனர். நேற்று பேசிய எம்.பி கோ.அரி, ‘சசிகலா ஆதரவுடன் பா.ஜ.க வேட்பாளருக்கு ஆதரவு கொடுத்தோம் என தம்பிதுரை கூறுவதை ஏற்க முடியாது. அது அவருடைய சொந்தக் கருத்து. தமிழகத்தில் கட்சியையும் ஆட்சியையும் எடப்பாடி பழனிசாமிதான் வழிநடத்தி வருகிறார்’ என்றார். இதற்குப் பதிலடியாக எம்.எல்.ஏ. வெற்றிவேல், ‘இன்னும் எத்தனை காலம், எடப்பாடி பழனிசாமி மௌனமாக இருக்கப் போகிறார் எனத் தெரியவில்லை. நரசிம்மராவ் அமைதியாக இருந்ததால்தான், காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. மீண்டும் இந்திரா காந்தி குடும்பம் வந்துதான், கட்சியைக் காப்பாற்றியது. அதைப்போன்ற நிலை அ.தி.மு.கவுக்கு ஏற்படாமல் தடுக்க வேண்டுமென்றால், தான்தோன்றித்தனமாக பேசுகின்றவர்களை முதல்வர் தடுக்க வேண்டும். இப்போதும் சசிகலாவின் கட்டுப்பாட்டில்தான் கட்சி உள்ளது’ என்றார்.

இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், இந்நாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், “அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் இணைவதற்கான வாய்ப்புகள் இல்லை.”, என்றவாறு தனித்தனி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

 

 

Share
Categories
அ.தி.மு.க. தமிழகம் தலைப்புச் செய்திகள்

மூன்று அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மீண்டும் ஸ்டாலினுடன் சந்திப்பு

கருணாஸ், தனியரசு, தமீமுன் அன்சாரி ஆகிய மூன்று அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் திமுக செயல் தலைவர் ஸ்டாலினுடன் சந்தித்துப் பேசியுள்ளனர். பேரறிவாளன் விடுதலை தொடர்பான பிரச்சினையை, சட்டசபையில் ஸ்டாலின் கிளப்பியதற்கு நேரில் பார்த்து நன்றி தெரிவிக்க வந்ததாக மூவரும் கூறினர்.

இதற்கு முன்னரும் இம்மூவரும் ஜனாதிபதித் தேர்தலில் அதிமுகவின் இரு கோஷ்டிகள், பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்ததை எதிர்த்ததுடன், அதுபற்றிப் பேசுவதற்காக ஸ்டாலினை சந்தித்திருந்தனர். மேலும், மாட்டிறைச்சி தடைச் சட்டம் தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து கண்டனம் தெரிவித்து திமுக சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தபோது, அவர்களுடன் சேர்ந்து இம்மூவரும் வெளிநடப்பு செய்தனர்.

இச்செயல்களால், ஆளும் அதிமுக எடப்பாடி கோஷ்டி அதிர்ச்சியடந்துள்ளது.

Share
Categories
அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி குடியரசு தலைவர் டி.டி.வி. தினகரன் தமிழகம் தலைப்புச் செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் எடப்பாடி முடிவுக்கு கட்டுப்பட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மறுப்பு

நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ள முடிவுக்கு கட்டுப்பட மாட்டோம் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 17-ம் தேதி நடக்கவிருக்கிறது. பாரதீய ஜனதா வேட்பாளராக ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் உட்பட பிற எதிர்கட்சிகளின் வேட்பாளராக மீரா குமாரும் போட்டியிடுகின்றனர். முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், மற்றொரு அதிமுக கோஷ்டி தலைவரான முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், பா.ஜ. க.வின் வேட்பாளரான ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 34 பேரும் ஏற்றுக் கொள்வார்களா என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது. கடந்த சில தினங்களாக எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தியில் இருக்கும் அவர்கள், ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதை எங்கள் பொதுச் செயலாளர் சசிகலாதான் அறிவிப்பார் என்று கூறி வந்தனர்.  அ.தி.மு.க. கட்சி நிகழ்ச்சிகளான இப்தார் விருந்தை எடப்பாடி தலைமை ஏற்று நடத்தியதையும் அவர்கள் விரும்பவில்லை. எனவே அவர்கள் நேற்று மாலை அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்தார் விருந்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.

டி.டி.வி. தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களில் முக்கியமானவர்களான தங்க தமிழ்ச்செல்வனும், வெற்றிவேலும் இன்று இது தொடர்பாக கூறுகையில், “எடப்பாடி முடிவுக்கு கட்டுப்பட மாட்டோம்” என்றனர். கட்சியில் டி.டி.வி. தினகரனுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தியபடி உள்ளனர்.

Share