Categories
அ.தி.மு.க. கொடநாடு எஸ்டேட் சசிகலா ஜெயலலிதா டி.டி.வி. தினகரன் தமிழகம்

கொடநாடு கொலை தொடர்பாக தினகரன், சசிகலாவிடம் விசாரணை நடத்த திட்டம்

கடந்த ஏப்ரல் 24-ந் தேதி 11 பேர் கும்பல், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் புகுந்து, காவலாளி ஓம்பகதூரை கொலை செய்ததுடன் மற்றொரு காவலாளியான கிருஷ்ண பகதூரை தாக்கிய செய்தி ஏற்கெனவே தெரிந்ததே. தொடர்ந்து இந்த கும்பல், ஜெயலலிதா, சசிகலா ஆகியோரது அறைக்குள் சென்று 3 சூட்கேஸ்களில் இருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

போலிஸ் விசாரணையில், ஜெயலலிதாவின் கார் டிரைவரான கனகராஜ், அவரது கூட்டாளி சயான் உள்பட 11 பேர் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனிடையே கனகராஜ் சேலத்தில் நடந்த விபத்தில் இறந்து விட்டார். மேலும், சயான் பாலக்காடு அருகே விபத்தில் காயமடைந்து கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த விபத்தில் சயானின் மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் இறந்து விட்டனர்.

இவ்வழக்கில் கேரளாவை சேர்ந்த சாமியாரான மனோஜ் மற்றும் அவன் கூட்டாளிகளான சந்தோஷ், தீபு, சதீ‌ஷன், உதயகுமார், சங்கனாச்சேரியை சேர்ந்த சாமி என்ற மனோஜ் மற்றும் ஜம்சீர் அலி, ஜிதின் ராய் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தலைமறைவாக உள்ள குட்டி என்கிற பிஜினை கைது செய்ய தனிப்படை போலீசார் கேரளாவில் முகாமிட்டு தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

ஜெ.வின் மர்மம் போலவே, கொடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் மர்மமாகவே இருக்கிறது. அந்த பங்களாவில் இருந்த ஜெ.வின் 3 முக்கிய சூட்கேஸ்களில் இருந்து முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக, கொடநாடு எஸ்டேட் பங்களா நிர்வாகம் சார்பாக எந்த புகாரும் கொடுக்கப்படவில்லை.
ஜெ.வின் மறைவிற்கு பின் சசிகலாவும், தினகரனுமே எஸ்டேட் நிர்வாகத்தை கவனித்து வந்தனர். எனவே, இந்த விவகாரம் தொடர்பாக சிறையில் இருக்கும் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரிடம் விசாரணை செய்ய முடிவெடுத்துள்ளதாக போலீசார் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
Share
Categories
அ.தி.மு.க. கொடநாடு எஸ்டேட் ஜெயலலிதா தமிழகம்

கொடநாட்டில் கொலை: ஜெயலலிதா உயில் கொள்ளை போனதா?

நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் உள்ள ஜெயலலிதாவின் சொகுசு பங்களாவில் கடந்த மாதம் 23-ந்தேதி இரவு 11 பேர் கும்பல் புகுந்து கொலை, கொள்ளையில் ஈடுபட்டது.

காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ணபகதூர் படுகாயம் அடைந்தார்.

பங்களாவுக்குள் புகுந்த கும்பல், ஜெயலலிதா தங்கும் அறையை குறி வைத்து உடைத்து பொருட்களை அள்ளிச் சென்று விட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 11 பேரில் தலைவனாக செயல்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் சேலம் அருகே கடந்த 28-ந்தேதி நடந்த விபத்தில் பலியானார். அவரது சாவில் மர்மம் நீடிக்கிறது.

இந்த நிலையில், அதே தினத்தன்று மற்றொரு குற்றவாளியான சயன் என்பவனும் விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான். அவனுக்கு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த இரு குற்றவாளிகளைத் தவிர மற்ற 9 பேரும் போலீசாரிடம் பிடிபட்டு விட்டனர்.

கொடநாடு எஸ்டேட்டில் இந்த 11 பேர் கும்பல் என்னென்ன எடுத்துச் சென்றது என்பதில் தொடர்ந்து மர்மம் நீடித்தபடி உள்ளது. ஜெயலலிதாவின் அறையில் இருந்த 3 சூட்கேசுகள் உடைக்கப்பட்டு, அவற்றுக்குள் வைக்கப்பட்டிருந்த பணம், தங்க – வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அந்த 3 சூட்கேஸ்களில் இருந்த சொத்து ஆவணங்களையும் மர்ம கும்பல் அள்ளிச்சென்று விட்டதாக கூறப்பட்டது.

ஆனால் போலீசார் கூறுகையில், “ஜெயலலிதாவின் 5 கைக்கடிகாரங்கள் மட்டுமே திருட்டு போய் விட்டது” என்றனர். ஆனால் அதையும் போலீசாரால் உறுதிபடுத்த இயலவில்லை.

கொலை – கொள்ளைக்கு கேரளாவைச் சேர்ந்த கூலிப்படை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் கேரளா போலீசாரும் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்கள் வெளியிடும் தகவல்களுக்கும், தமிழக போலீசார் வெளியிடும் தகவல்களுக்கும் மிகுந்த முரண்பாடுகள் உள்ளது. இதனால் கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளையில் உண்மையில் என்ன நடந்தது என்பது மர்மமாக இருக்கிறது.

குற்றவாளிகள் அனைவரும் பிடிபட்டு விட்டதால், கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளையில் அவர்களது பங்கு என்ன என்பது தெரிய வந்துள்ளது. கொள்ளைக்கு திட்டமிட்டது கனகராஜ் ஆவார். அதை அரங்கேற்ற உதவி செய்தது மனோஜ் என்ற சாமியார் தலைமையிலான கூலிப்படையாகும்.

இதில் கனகராஜ் பின்னணியில் இருந்தது யார் என்பதுதான் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. அவர் விபத்தில் மர்மமாக உயிரிழந்து விட்டதால், அந்த ரகசியம் அவரோடு புதைந்து போனது. இதை கண்டுபிடித்தால்தான் கொடநாடு எஸ்டேட்டில் என்னென்ன பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன என்பது முழுமையாக தெரிய வரும்.

என்றாலும் பிடிபட்டுள்ள கூலிப்படையினரிடம் இதுவரை நடத்தப்பட்டுள்ள விசாரணை மூலம், கொட நாடு எஸ்டேட்டில் இருந்து ரூ.200 கோடி வரை கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தங்க, வைர நகைகளும் அள்ளிச் செல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகிறது.

இதுபற்றி நீலகிரி மாவட்ட போலீசார், குற்றவாளிகளில் ஒருவனான சயனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சயன்தான் கனகராஜுக்கு மனோஜ் என்ற சாமியார் தலைமையிலான கூலிப்படையை அறிமுகம் செய்து வைத்தார். அதோடு கொலை, கொள்ளையை ஒருங்கிணைத்து நடத்தியதிலும் முக்கிய பங்கு வகித்தார்.

எனவே இவரது வாக்குமூலம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இவரிடம் போலீசார் ஜெயலலிதா எழுதி வைத்திருந்த “உயில்” பற்றி விசாரணை நடத்தியதாக தெரிய வந்துள்ளது.

Share
Categories
அ.தி.மு.க. கொடநாடு எஸ்டேட் ஜெயலலிதா தமிழகம்

கொடநாடு பங்களா காவலாளி கொலையில் குற்றவாளி சிக்கினார்

கொடநாடு பங்களாவின் காவலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் கேரளாவை சேர்ந்த நபர் சிக்கினார்.
கடந்த 24ம் தேதி(ஏப்.,24) மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், கேரளாவை சேர்ந்த நபர் பிடிபட்டார். அவரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அளக்கரை அருகே சொகுசு பங்களாவில் சதித்திட்டம் தீட்டியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் குற்றவாளிகள் தப்பிப்பதற்கு மொபைல் போன் மூலம் உதவிய ஒருவரை கேரள மாநிலம் குருவாயூர் அருகே உள்ள சாவக்காடு பகுதியில் போலீசார் கைது செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காவலாளி கொலை வழக்கில் இவருக்கும் முக்கிய பங்கு இருக்கலாம் என போலீசார் சந்தேகிப்பதாக தெரிகிறது.

Share