Categories
சினிமா தமிழ் சினிமா தலைப்புச் செய்திகள்

தமிழக திரையரங்குகள் இன்று திறப்பு; போராட்டம் வாபஸ்

கடந்த 4 நாள்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தமிழக திரையரங்கு உரிமையாளர்கள், போராட்டத்தை வாபஸ் பெற்று, திரையரங்குகளை இன்று முதல் திறப்பதற்கு ஒப்புதல் அளித்தனர்.

கேளிக்கை வரி பிரச்னை தொடர்பாக பேச 12 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்து உள்ளதையடுத்து,   4 நாட்களாக நீடித்த திரையரங்கு வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
திரைத்துறை மீதும் 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இத்துடன் கேளிக்கை வரி 30 சதவீதம் சேர்த்து வசூலிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 1000 தியேட்டர்கள் மூடப்பட்டன. அமைச்சர்கள் ஜெயக்குமார், வீரமணி, வேலுமணி, கடம்பூர் ராஜு ஆகியோருடன் திரையுலகினர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கேளிக்கை வரி பிரச்னை தொடர்பாக பேசி முடிவு எடுக்க 12 பேர் கொண்ட குழுவை அரசு நியமித்தது.

இதில் அரசு தரப்பில் 6 பேரும் திரையுலகம் தரப்பில் 6 பேரும் இடம் பெறுவர் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 4 நாட்களாக நீடித்த தியேட்டர்கள் ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது.இது குறித்து அபிராமி ராமநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சினிமா தியேட்டர்கள் வேலைநிறுத்தத்துக்கு ஒத்துழைப்பு கொடுத்து, பொறுமையுடன் இருந்த பொதுமக்களுக்கு நன்றி. 4வது நாளாக தினமும் 20 கோடி ரூபாய் அளவில் பேரிழப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் எங்களுடைய சிரமங்களைப் புரிந்துகொண்டனர். வரி வேண்டுமா? வேண்டாமா என்று முடிவெடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. முடிவு எங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்று நம்புகிறோம்.

வெள்ளிக்கிழமை முதல் தியேட்டர்கள் இயங்கும். ஜிஎஸ்டி வரிவிதிப்பின்படி, இன்று முதல் 100 மற்றும் அதற்கு குறைவான டிக்கெட்டுகளுக்கு 18 சதவீத வரியும், 100 ரூபாய்க்கு கூடுதலான டிக்கெட்டுகளுக்கு 28 சதவீத வரியும் வசூலிக்கப்படும், அதன்படி 50 ரூபாய் டிக்கெட் 59 ரூபாயாகவும், 90 ரூபாய் டிக்கெட் 106 ரூபாயாகவும், 100 ரூபாய் டிக்கெட் 118 ரூபாயாகவும், 120 ரூபாய் டிக்கெட் 153 ரூபாயாகவும் இருக்கும். புதுச்சேரியில் நேற்று மாலை முதல் தியேட்டர்கள் திறக்கப்பட்டன.

Share
Categories
சினிமா தமிழ் சினிமா ரஜினிகாந்த்

கேளிக்கை வரி தொடர்பாக தமிழக அரசுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்

சினிமா டிக்கெட்டுகளுக்கு மத்திய அரசு 28 சதவீதம் ஜி.எஸ்.டி வரியும், தமிழக அரசு 30 சதவீதம் கேளிக்கை வரியும் விதித்து இருப்பது தமிழ் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேளிக்கை வரியை ரத்து செய்து திரையுலகை காப்பாற்ற நடிகர் ரஜினிகாந்த் குரல் கொடுக்க வேண்டும் என்று பட உலகினர் பலர் வேண்டுகோள் விடுத்து வந்தனர். சமூக வலைதளங்களிலும் கருத்துகள் பதிவிட்டனர். ரஜினிகாந்த் தற்போது மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். அடுத்த வாரம் அவர் சென்னை திரும்ப திட்டமிட்டு உள்ளார்.

இந்த நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் கேளிக்கை வரி குறித்து அரசுக்கு வேண்டுகோள் விடுத்து ரஜினிகாந்த் கருத்து பதிவிட்டு உள்ளார்.

டுவிட்டரில், “தமிழ் திரையுலகில் லட்சக்கணக்கானோர் பணிபுரிகிறார்கள். அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு எங்கள் கோரிக்கையை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்” என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டு உள்ளார்.

திரைப்படத்துறைக்காக அரசுக்கு கோரிக்கை விடுத்த ரஜினிகாந்துக்கு, கமல்ஹாசன் நன்றி தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், “திரைப்படத்துறைக்காக அக்கறையோடு குரல் கொடுத்த ரஜினிகாந்துக்கு நன்றி. முதலில் அரசுக்கு கோரிக்கை வைப்போம். அதன்பிறகு என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” என்று கமல்ஹாசன் கருத்து பதிவிட்டு இருக்கிறார்.

Share
Categories
சினிமா தமிழகம் தமிழ் சினிமா தலைப்புச் செய்திகள்

இன்று முதல் தமிழகம் முழுவதும் சினிமா காட்சிகள் ரத்து

இன்று முதல் தியேட்டர்கள் காலவரையின்றி மூடப்படுவதால்,  சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்து உள்ளனர்.

சினிமா டிக்கெட்டுக்கு அதிகபட்சமாக 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சினிமா டிக்கெட்டுக்கு 30 சதவீதம் கேளிக்கை வரி வசூலிக்க புதிய சட்டம் கொண்டு வந்து இருக்கிறது. இதனால் மொத்தமாக 58% ஒரு டிக்கெட்டுக்கு வசூலிக்க வேண்டியிருப்பதால், டிக்கெட் விலை வெகுவாக உயரும் நிலை உள்ளது.  இவற்றுடன் தியேட்டரில் விற்கும் உணவுப் பொருள்களின் விலையும் உயரும். இவையெல்லாம் சேர்ந்து, தியேட்டருக்கு சினிமா பார்க்கச் செல்வோரின் எண்ணிக்கை குறைந்து, திருட்டு விடியோ, ஆன்லைன் விடியோ பைரசி ஆகியவை அதிகரிக்கும் நிலை உள்ளது.

மேற்கண்ட காரணங்களால் தியேட்டர் உரிமையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். கேளிக்கை வரி சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் 3-ந் தேதி (இன்று) முதல் தியேட்டர்களை மூடுவோம் என்றும் திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்தனர். இதனால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது. திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவரான விஷால், இப்போராட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரினார்.

இந்த நிலையில், திரையரங்கு உரிமையாளர்களின் அவசர கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது. கூட்டம் முடிந்ததும் நிருபர்களை சந்தித்த அபிராமி ராமநாதன், திட்டமிட்டபடி இன்று (திங்கட்கிழமை) முதல் தமிழகம் முழுவதும் தியேட்டர்களை மூட முடிவு செய்து இருப்பதாக அறிவித்தார். திரைப்படத் தயாரிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்க இயலாது. தமிழகம் முழுவதும் 1,000 திரையரங்குகள் உள்ளன. அனைத்திலும் காலவரையின்றி சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படும் என்று அபிராமி ராமநாதன் கூறினார்.

Share
Categories
இந்திய சினிமா கேரளா சினிமா

நடிகை பாவனா கடத்தல் : நடிகர் திலீப்பிடம் விசாரணை; காவ்யா மாதவன் நிறுவனத்தில் சோதனை

நடிகை பாவனா கடத்தல் வழக்கை போலீசார் மிகவும் தீவிரமாக நடிகர் திலீப், நதிர்ஷா
ஆகியோரிடம்  விசாரித்து வருகின்றனர். இந்த கடத்தலில் முக்கிய குற்றவாளி என கைது செய்யப்பட்டிருக்கும் பல்சர் சுனிலிடம் இருந்து நடிகர் திலீப்பிற்கு கடிதம் வந்ததையடுத்து போலீசார் நடிகரிடம் 13 மணிநேரம் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் காக்கநாட்டில் நடிகர் திலீப்பின் 2வது மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவனுக்கு சொந்தமான ஆன்லைன் ஆடை நிறுவனம் இருப்பது தெரியவந்தது. அதனால் அந்த ஆடை நிறுவனத்தை போலீசார் கடந்த சில நாட்களாக ரகசியமாக கண்காணித்தனர்.

பின்னர், போலீசார் அங்கு சுமார் 3 மணி நேரம் சோதனை நடத்தினர். அப்போது சில ஆவணங்களை போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. நடிகை பாவனா விவகாரத்தில் காவ்யா மாதவன் நிறுவனத்தில் போலீசார் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

Share
Categories
சினிமா தமிழகம் தமிழ் சினிமா ரஜினிகாந்த்

திரையுலகத்துக்கே குரல்தராத ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் குரல் கொடுப்பாரா : டி. ராஜேந்தர்

லட்சிய திராவிட முன்னேற்ற கழக தலைவரும்  டைரக்டருமான டி. ராஜேந்தர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திரையுலகத்துக்கே குரல்தராத ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் குரல் கொடுப்பாரா என வினவியுள்ளார். சினிமா மீதான ஜிஎஸ்டி வரி குறித்து ரஜினி குரல் கொடுக்காதது ஏன்   அரசியல்வாதிகள் சேவை செய்யும் போது எங்களுக்கு ஏன் சேவை வரி என வினவினார். சினிமா டிக்கெட் விலையை அதிகரிக்கும் முடிவில் தான் முரண்படுவதாக கூறியுள்ளார்.

Share
Categories
சினிமா ஜி.எஸ்.டி. தமிழகம் தமிழ் சினிமா தலைப்புச் செய்திகள்

ஜி.எஸ்.டி. வரியால் சினிமா கடுமையாக பாதிக்கப்படும்: நடிகர் விஷால்

ஜி.எஸ்.டி. வரியால் சினிமா தொழில் கடுமையாக பாதிக்கப்படும் என்று நடிகர் விஷால் கூறினார்.

நாடு முழுவதும் ஒரே சீரான சரக்கு சேவை வரிவிதிப்பு (ஜி.எஸ்.டி) முறை இன்று முதல் அமலுக்கு வந்தது. சினிமா துறைக்கு ரூ.28 சதவீத வரி விதிக்கப்பட்டு ஒட்டு மொத்த திரைப்படத்துறையினர் எதிர்ப்பால் 100 ரூபாய்க்கு குறைவான டிக்கெட்டுக்கு 18 சதவீத வரி என்றும் அதற்கும் அதிகமான தொகையை வசூலிக்கும் டிக்கெட்டுகளுக்கு 28 சதவீத வரி என்றும் திருத்தி அமைக்கப்பட்டு உள்ளது.

இதையும் திரையுலகினர் ஏற்காமல் பிராந்திய மொழி படங்களுக்கு சரக்கு சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடைசி முயற்சியாக மத்திய அரசுக்கு கடிதமும் அனுப்பி உள்ளனர். இந்த கடிதத்தில் நடிகர் கமல்ஹாசனும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களின் தயாரிப்பாளர்களும் கையெழுத்திட்டு உள்ளனர்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், பொதுச்செயலாளர் கதிரேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று சென்னையில் உள்ள திரைப்பட தணிக்கை துறை அதிகாரி மதியழகனை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

காலதாமதமின்றி படங்களை தணிக்கை செய்ய வேண்டும் என்றும் ‘ஏ’ சான்றிதழ் பெறும் படங்கள் மறு தணிக்கை செல்வதற்கான வழிமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என்றும், சிறுபட்ஜெட் படங்களை டி.வி.டியில் பார்த்து தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார்கள்.

தணிக்கை அதிகாரியை சந்தித்து விட்டு வெளியே வந்த விஷால் நிருபர்களிடம் கூறும்போது, “திரைப்படங்களுக்கான தணிக்கை சான்றிதழ் பெறுவதை எளிமைப்படுத்த வேண்டும் என்று வற்புறுத்தினோம். ஜி.எஸ்.டி. வரி விதிப்பு காரணமாக தமிழ் திரையுலகம் இக்கட்டான சூழலை சந்தித்து வருகிறது. இது சினிமா தொழிலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்” என்றார்.

 

 

Share
Categories
சினிமா ஜி.எஸ்.டி. தமிழ் சினிமா

ஜி.எஸ்.டி: சினிமா மீது விதிக்கப் படும் வரி விதிப்பை எதிர்த்து கமல் ட்வீட்

வேலை நிறுத்த போராட்டம் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ள செய்தி :

“ஒரே நாடு ஒரு வரி என்ற ரீதியில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் சரக்கு, சேவை வரி விதிப்பை வரவேற்கிறேன். ஆனாலும் தற்போது உள்ள வரி விதிப்பு வித்தியாசங்களில் சில திருத்தங்கள் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும். அது முடியாத பட்சத்தில் தமிழ் சினிமாவுக்கு பெரிய அழுத்தமாகவே இந்த சரக்கு சேவை வரி அமையும். சினிமா மீது விதிக்கப் படும் இந்த வரி விதிப்பை எதிர்த்து நிச்சயம் குரல் கொடுப்பேன்.”

 

Share
Categories
காணொளி சினிமா தமிழ் சினிமா தமிழ்ப்படம்

வெங்கட் பிரபுவின் புதிய படம் “பார்ட்டி”

வெங்கட் பிரபுவின் புதிய படத்துக்கு ‘பார்ட்டி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.  இந்தப் படத்தின் அறிமுக விழா நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் நடிக்கும் நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் படத்தின் மோஷன் போஸ்டரும் வெளியிடப்பட்டது.

இந்தப் படத்தில் நடிகர்கள் சத்யராஜ், ஜெயராம், நாசர், சம்பத், ஜெய், சிவா, சந்திரன், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா காஸண்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.

படத்துக்கு ஒளிப்பதிவு – ராஜேஷ் யாதவ். படத்தொகுப்பு – பிரவீன் கே.எல். இசை – பிரேம்ஜி. தயாரிப்பு – அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா.

Share
Categories
சினிமா தமிழ் சினிமா விஜய்

விஜய் பிறந்த நாளையொட்டி, அவரது 61–வது படத்தின் பெயர் அறிவிப்பு

அட்லி இயக்கும் புதிய படத்தில் விஜய் நடித்து வருகிறார். இதில் கதாநாயகிகளாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் ஆகியோர் நடிக்கின்றனர். சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேல், கோவை சரளா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.

இந்த படத்தை தேனாண்டாள் ஸ்டுடியோ சார்பில் முரளி ராமசாமி தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இது விஜய்யின் 61–வது படம் ஆகும். ஏற்கனவே ‘தெறி’ படத்தில் சேர்ந்து பணியாற்றிய விஜய்யும் அட்லியும் மீண்டும் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.

இதில் விஜய் 3 வேடங்களில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து இறுதி கட்டத்தில் உள்ளது. சென்னையில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. ஐரோப்பா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது.

படத்துக்கு என்ன தலைப்பு வைப்பது என்று படக்குழுவினர் தீவிரமாக பரிசீலித்து வந்தனர். ரசிகர்களும் தலைப்பை அறிய ஆவலாய் இருந்தனர். பலத்த எதிர்பார்ப்புக்கு இடையில் நேற்று படத்துக்கு ‘மெர்சல்’ என்று பெயர் வைக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது. விஜய் இன்று தனது 43–வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளையொட்டி பட தலைப்பை வெளியிட்டு உள்ளனர்.

விஜய்யும் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ‘மெர்சல்’ தலைப்பை வெளியிட்டார். மெர்சல் பெயர் சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்களால் நேற்று ‘டிரெண்டிங்’ ஆனது. ‘மெர்சல்’ படத்தில் விஜய் நடிக்கும் கதாபாத்திரத்தின் முதல் தோற்றமும் நேற்று வெளியிடப்பட்டது.

இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை அடுத்த மாதம் (ஜூலை) நடத்த ஆயத்த வேலைகள் நடக்கின்றன. அக்டோபர் மாதம் படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர்.

Share
Categories
இந்திய சினிமா ஈஸ்வரி ராவ் சினிமா தமிழ் சினிமா

ரஜினிகாந்தின் ‘காலா’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பது இன்ப அதிர்ச்சி: நடிகை ஈஸ்வரி ராவ்

ரஜினிகாந்தின் ‘காலா’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பது தன்னுடைய குழந்தைகளை அதிரவைத்து இருப்பதாக நடிகை ஈஸ்வரி ராவ் தெரிவித்துள்ளார்.

‘கபாலி’ வெற்றிக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு ‘காலா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தில் ரஜினி மும்பையைச் சேர்ந்த தாதாவாக நடிக்கிறார். படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த மாத இறுதியில் மும்பையில் தொடங்கியது.

Tamil Actress Eswari Rao Photos
 இந்தப் படத்தில் பாலிவுட் நடிகைகள் அஞ்சலி பாட்டில், ஹூமா குரோஷி, நானா படேகர், சமுத்திரகனி, பங்கஜ் திரிபாதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தில் நடிகர் தனுஷ் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வரிசையில் தற்போது நடிகை ஈஸ்வரி ராவும் முக்கிய கதாபாத்திரமாக இணைந்துள்ளார். இது குறித்து  நடிகை ஈஸ்வரி ராவ் கூறியதாவது:

ரஜினிகாந்துடன் இணைந்து ‘காலா’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதால் எனது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனது ரோல் குறித்து இப்போது எதுவும் கூற முடியாது. இதில் நடிப்பதற்காக மிகவும் ஆர்வமாக உள்ளேன் என்று கூறினார்.

Share