Categories
அமெரிக்கா அமெரிக்கா அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் இந்தியா உலகம் ஐ.டி. தகவல் தொழில்நுட்பம் தலைப்புச் செய்திகள் தொழில் நுட்பம்

நியூயார்க் விசா மீறல் வழக்கில் இன்ஃபோசிஸ் $ 1 மில்லியன் அபராதம் செலுத்த சம்மதம்

நியூயார்க் மாகாண அட்டார்ணி ஜெனரல் எரிக் ஸ்னைடர்மேனுடன் இந்தியாவின் இன்ஃபோசிஸ்,  விசா மீறல் வழக்கில்  $ 1 மில்லியன் அபராதம் செலுத்த சம்மதம் தெரிவித்துள்ளது.

இத்தீர்வு இன்போசிஸ், அவுட்சோர்சிங் சேவைகளை வழங்கும் போக்கில், நியூயார்க் மாகாணத்திற்கு வெளிநாட்டு ஐடி பணியாளர்களை கொண்டுவந்து, தங்கள் விசாக்களின் விதிமுறைகளை மீறி பணியாற்றச் செய்ததாக அம்பலமான கூற்றுக்களை நிவர்த்தி செய்கிறது.

அட்டார்ணி ஜெனரல் மேலும், “இன்போசிஸ் நியூயார்க்கில் உள்ள அவர்களது வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பொதுவாக நடைமுறையில் உள்ள ஊதியம் வழங்காமலும்,  வரி செலுத்தாமலும் இருந்து வந்துள்ளது” என்றும் குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறியதாவது:

நிறுவனங்கள்  நியூயார்க் மாகாணத் தொழிலாளர்களை வஞ்சிப்பதற்காக, எங்கள் சட்டங்களை மீறி நடக்க அனுமதிக்க மாட்டோம்.  தொழிலாளர்  சந்தை  நியாயமானதாகவும், நேர்மையான போட்டித்தன்மை உடையதாகவும், அனைவருக்கும் வெளிப்படையானதாகவும் இருக்கவேண்டும் என்பதை உறுதி செய்வதற்கு எனது அலுவலகம் கடமைப்பட்டுள்ளது.

அறிக்கையில் கூறப்பட்டுள்ல விவரப்படி, இன்போசிஸ் பணியாளர்களுக்கு B-1 விசாக்களைப் பெற்றுள்ளது. இது H-1B வேலை அனுமதிக்கு பதிலாக தற்காலிக பார்வையாளர் விசாக்கள் ஆகும். பார்வையாளர் விசாக்கள் மிகவும் எளிதாகப் பெறலாம்;  H-1B விசாக்களுக்கு  65,000 உச்ச அளவு இருப்பதுபோல B-1 விசாக்களுக்குக் கிடையாது.

 

 

Share
Categories
உலகம் கத்தார் சவுதி அரேபியா தலைப்புச் செய்திகள் பஹ்ரேன் மத்திய கிழக்கு நாடுகள் யூ.ஏ.இ.

கத்தாருக்கு அரபு நாடுகள் நிபந்தனை: அல் ஜசீராவை மூடவும் ஈரானுடன் நட்புறவைத் துண்டிக்கவும் வேண்டும்

கத்தாருடனான் முன்பு போல நட்புறவு தொடர பிற அரபு நாடுகளான சவுதி அரேபியா, யூ.ஏ.இ., பஹ்ரேன் மற்றும் எகிப்து ஆகியவை 13 நிபந்தனைகளை விதித்துள்ளனர். அவற்றில் முக்கிய நிபந்தனைகளான அல் ஜசீரா தொலைக்காட்சியை மூடுவது, ஈரானுடன் நட்புறவைத் துண்டிப்பது ஆகியவையும் அடங்கும்.

சவுதிக்கும் கத்தாருக்கும் இடையிலுள்ள அபு சம்ரா எல்லை வெறிச்சோடிக் கிடக்கிறது.

மேலும், முஸ்லீம் சகோதரத்துவ இயக்கம், ஐ.எஸ். அமைப்பு, அல் கொய்தா மற்றும் லெபனானின் ஈரானிய ஆதரவிலான ஹிஸ்புல்லா இயக்கம் உள்ளிட்ட குழுக்களுடனான உறவுகளை கத்தார் துண்டிக்கும்படி அரபு நாடுகளின் நிபந்தனை கூறுகிறது. கத்தாரிலிருக்கும், தங்கள் அரசுகளின் எதிப்பாளர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நிபந்தனையில் கூறப்பட்டுள்ளது.

“கத்தார் அரசு தற்போது இந்த நிபந்தனைத்தாளைப் படித்து வருகிறது. இதில் உள்ள கோரிக்கைகள் மற்றும் அவற்றின் அடிப்படைகளை புரிந்து கொண்டபின், தக்க  பதிலளிக்கப்படும்”, என்று கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை குறிப்பிடுகிறது.

 

Share
Categories
இந்தியா உலகம் கத்தார் தலைப்புச் செய்திகள்

ஈத் பண்டிகையின் போது கத்தாரிலுள்ள இந்தியர்கள் நாடு திரும்ப சிறப்பு விமானங்கள்

மற்ற வளைகுடா நாடுகளால் பயண மற்றும் வர்த்தக புறக்கணிப்பினால் பாதிக்கப்பட்ட கத்தாரில் வாழும் இந்தியர்கள் ஈத் பண்டிகையின் போது நாடு திரும்புவதற்கு உதவியாக சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என்று இந்தியா அறிவித்தது.

கொச்சி, திருவனந்தபுரம், மும்பை ஆகிய இடங்களிலிருந்து ஏர் இந்தியா மற்றும் தனியார் விமான சேவைகள் தோகாவுக்கு கூடுதலான விமானங்கள் இயக்கப்படும் என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அசோக் கஜபதி ராஜா கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், கத்தார் நாட்டில் இந்தியர்கள் இக்கட்டான நிலையில் விடப்படவில்லையென்றாலும், பல வளைகுடா நாடுகளின் தடை காரணமாக டிக்கெட் பெற முடியாமல் இருக்கலாம் என்றார். கத்தார் நாட்டில் 7 லட்சம் இந்தியர்கள் வாழ்கின்றனர்.

அரசுக்கு சொந்தமான இந்திய விமான நிறுவனமான இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் தனியார் விமான போக்குவரத்து நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் வரும் வியாழக்கிழமை முதல் இந்த கூடுதல் விமானங்களை இயக்க உள்ளதாக அரசின் அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கத்தாரிலிருந்து நாடு திரும்ப டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாத இந்தியர்களை அனுமதிக்கும் வகையில் கூடுதல் விமானங்கள் இயக்கப்படும் என்று சுஷ்மாவிற்கு அவர் உத்தரவாதம் அளித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா விமான நிறுவனம் ஜூன் 25 முதல் ஜூலை 8 ஆம் தேதிவரை தென்னிந்திய நகரமான திருவனந்தபுரத்திலிருந்து தோஹாவிற்கும், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஜூன் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மும்பை – தோஹா – மும்பை இடையிலும் விமானங்களை இயக்கும் என்று அரசின் அறிக்கை கூறுகிறது.

இதனிடையே, இந்த நடவடிக்கை, இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கை இல்லை என்று இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

Share
Categories
உலகம் பிலிப்பைன்ஸ்

பிலிப்பைன்ஸில் பள்ளிக்குள் புகுந்து மாணவர்களை தீவிரவாதிகள் சிறைபிடித்தனர்

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியான மார்வாய் நகரத்தில் ஐ.எஸ் ஆதரவு தீவிரவாதிகள் அரசு ஆதரவு படைகளுடன் சண்டையிட்டனர். அப்போது, அரசு ஆதரவு படைகளை திசை திருப்பும் வகையில் அங்குள்ள பள்ளி ஒன்றிற்குள் புகுந்த 300 க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பள்ளி மாணவர்களை பணையக்கைதிகளாக சிறை பிடித்து வைத்துள்ளதாக ஃபாக்ஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பொதுமக்களின் சிலரும் பணையக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டு இருப்பதாக அந்நாட்டு போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எத்தனை பேர் பணையக்கைதிகளாக பிடிபட்டுள்ளனர் என்பது குறித்தும் அவர்களின் அடையாளம் காணும் பணியும் நடைபெற்று வருவதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார். இந்த சம்பவம் பற்றிய முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை.
Share
Categories
உலகம் சவுதி அரேபியா தலைப்புச் செய்திகள் மத்திய கிழக்கு நாடுகள்

சவூதி அரேபியாவுக்கு புதிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நியமனம்

சவூதி அரேபியாவுக்கு புதிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் பின்னணி வளைகுடாவின் வேகமான மாறி வரும் அரசியல் சூழல் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

புதிய பட்டத்து இளவரசர் முகம்மது, சவூதியின் பிரதேச போட்டியாளரான ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளை பகிரங்கமாக எடுக்கிறார். சமீபத்தில் கத்தார் நாட்டுடனான தூதரக உறவை முறித்துக் கொண்ட விவகாரத்திலும் சல்மானின் பங்கு பெரியது. ஈரானுடனான சவூதியின் போட்டி சன்னி – ஷியா பிரிவுகளுக்கு இடையிலான போட்டி என்பதோடு பிரதேசத்தில் யாருக்கு செல்வாக்கு அதிகம் என்பதை நிலைநாட்டுவதற்குமானது என்கின்றனர் அரசியல் நிபுணர்கள். ஈரான் சவூதியின் மாற்றத்தை “மென்மையான் அரசியல் கவிழ்ப்பு” என்கிறது. சென்ற மாதம் முகம்மது தற்போதைய போர்களம் ஈரானுக்குள் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்றார். இதை ஈரான் முட்டாள்தனமானது என்று கூறியது.

இதனிடையே சென்ற மாதம் சவூதிக்கு வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் இளவரசர் முகம்மதுவுடன் தனியே பேசினார். இப்போதைய மாற்றங்களுக்கு அந்த சந்திப்பு ஒரு முக்கிய சைகையாக இருக்கலாம் எனப்படுகிறது.
இளவரசர் சல்மான் அமெரிக்கா, ரஷ்யா என இரு நாடுகளுடனும் சமூக உறவைப் பேணி வருகிறார். சல்மானின் ஏற்றம் 34 பேர் கொண்ட அரச குடும்பத்தினரைக் கொண்ட விசுவாச சபையில் 31 பேரின் ஒப்புதலோடு நடந்தேறியுள்ளது. இதன் மூலம் அவரின் அதிகாரம் அரச குடும்பத்தினரின் முழு ஆதரவோடு விளங்கும் என்று நம்பப்படுகிறது.
சல்மான் பாதுகாப்பு மட்டுமின்றி பொருளாதாரம் மற்றும் எண்ணெய் வள அமைச்சராகவும் உள்ளார். சவூதி எண்ணெய் நிறுவனமான ஆராம்கோவின் பங்குகளை விற்கும் முடிவை அவரே எடுத்தார். அவருடைய ஏற்றத்தினை ஆதரிப்பது போல பங்குச் சந்தை 5 சதவீதப் புள்ளிகள் ஏற்றம் கண்டுள்ளது. சல்மானின் தந்தை சவூதியின் ஏழாவது மன்னராக 2015 ஆம் ஆண்டில் பதவியேற்கும் வரை அவரை வெளிவுலகிற்கு தெரியாது. இன்றைக்கு அவரது பதவி உயர்வை இதர அரேபிய நாடுகளான, ஓமான், எகிப்து, மொரக்கோ உட்பட பலரும் வரவேற்று வாழ்த்தியுள்ளனர்.

 

Share
Categories
உலகம் தலைப்புச் செய்திகள் பிரஸ்ஸல்ஸ் பெல்ஜியம்

பிரஸ்ஸல்ஸ் ரயில் நிலையத்தில் தாக்குதல்: தற்கொலை குண்டுதாரி கொல்லப்பட்டார்

பெல்ஜியம் நாட்டிலுள்ள பிரஸ்ஸல்ஸ் நகர ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கச்செய்து தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரி, ஆயுதப் படையினரால் கொல்லப்பட்டார். இதன் நிமித்தம் வேறு எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

பிரஸ்ஸல்ஸ் ரயில் நிலையம்
ஜூன் 20-அன்று உள்ளூர் நேரப்படி மாலை 8:49 மணியளவில் வெடிகுண்டு தாக்குதல் நடந்ததாகவும், தாக்குதல் நடந்த ரயில் நிலையத்தில் நெருப்பும், சிறிய அளவிலான வெடிகுண்டு வெடிப்பு நடந்ததையும் நேரில் பார்த்தவர்கள் உறுதிப்படுத்தினர். அதிகாரிகள் இதை தீவிரவாத தாக்குதல் என்றே வர்ணித்துள்ளனர். மேலும் பெல்ட் பாம்ப் ஒன்றை கைப்பற்றி செயலிழக்கச் செய்ததாக தெரிகிறது. முன்னதாக 30 – 35 வயது இளைஞர் ஒருவர் “அல்லாஹூ அக்பர்” என்று கோஷமிட்டவாறு தனது பயணபெட்டியிலிருந்து எதையோ வெடிக்கச் செய்ய முயன்றதாக கூறப்பட்டது.
தற்போது நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்று போலிஸார் தெரிவித்துள்ளனர். ரயில் நிலையங்களும் ரயில்களும் தற்போது இயங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
Share
Categories
அதிபர் டிரம்ப் அமெரிக்கா அமெரிக்கா உலகம் தலைப்புச் செய்திகள் வட கொரியா

வட கொரிய சிறையிலிருந்து கோமா நிலையில் விடுவிக்கப்பட்ட மாணவர் ஓட்டோ மரணம் : வ.கொ. அரசுக்கு டிரம்ப் கண்டனம்

வட கொரிய சிறையிலிருந்து கோமா நிலையில் சென்ற வாரம் விடுவிக்கப்பட்ட 22 வயது மாணவர் ஓட்டோ வார்ம்பியர் சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், வட கொரியாவில் கொடுங்கோலாட்சி நடக்கிறது என்று கண்டனம் தெரிவித்தார்.  இன்று வெள்ளை மாளிகையில் தொழில்நுட்ப தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் நடைபெற்ற சந்திப்பின்போது டிரம்ப் கூறியதாவது :

பல கெட்ட காரியங்கள் நடந்துள்ளன. ஆயினும் நாம் அவரை அவருடைய  பெற்றோருடன் சேர்த்துவைக்கும் அளவாவது முடிந்தது. அது ஒரு மிருகத்தனமான ஆட்சி. ஆயினும் நாம்மால் அதை கையாள முடியும்.

அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ரெக்ஸ் தில்லெர்சன் கூறுகையில், “ஓட்டோ வார்ம்பியர்  அநியாயமாக சிறையில் அடக்கப்பட்டதற்கு  அமெரிக்கா, வட கொரியாவையே பொறுப்பாளியாக்குகிறது” என்று குறிப்பிட்டார்.

 

Share
Categories
இங்கிலாந்து உலகம் தலைப்புச் செய்திகள் லண்டன்

லண்டன் மசூதியினருகில் தாக்குதல் நடத்தியவரின் அடையாளம் தெரிந்தது

லண்டன் மசூதியினருகில் தாக்குதல் நடத்தியவர் பெயர், டெரன் ஆஸ்பர்ன் என்றும், கார்டிஃபைச் சேர்ந்த அவரது வயது 47 என்றும் தெரியவந்துள்ளது.

வடக்கு லண்டனில் உள்ள ஒரு மசூதியின் அருகே கூடியிருந்த இஸ்லாமியர்கள் மீது ஒரு வேன் மோதப்பட்ட சம்பவத்திற்குப் பின்னர் எல்லா வகையான தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தையும் ஒடுக்க தமது அரசு உறுதி பூண்டுள்ளதாக பிரிட்டன் பிரதமர் தெரீசா மே தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தில் ஒரு ஆண் உயிரிழந்தார்.  இது இஸ்லாமியர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்பது தெளிவாகத் தெரிகிறது என்று லண்டன் காவல் துறை தலைவர் கிரெஸ்ஸிடியா டிக் தெரிவித்தார்.

மசூதிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதியாக அதிகரிக்கப்படும் என்று லண்டன் நகர மேயர் சாதிக் கானும் தெரிவித்துள்ளனர்.

 

Share
Categories
உலகம் தலைப்புச் செய்திகள் போர்ச்சுக்கல்

போர்ச்சுக்கல் காட்டுத் தீ : தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டம்

மத்திய போர்ச்சுகல் கோயம்பிராவிற்கு அருகில் காட்டுத்தீயானது கடுமையாக பரவியதால் 61 பேர் இதுவரை இறந்துள்ளனர்; மேலும் பலர்  காயமடைந்துள்ளனர். “இந்த காட்டுத்தீ  சமீபத்திய ஆண்டுகளின் மிகப்பெரிய சோகமான நிகழ்வாகும் ” என அதிகாரிகள் விவரித்துள்ளனர்.

இக்காட்டுத்தீ மின்னலால் தொடங்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.  இந்த காட்டுத் தீயிலிருந்து தப்பிக்க முயலுகையில் பலர் அவர்களது காரிலேயே இறந்துள்ளனர்.

மூன்று நாட்களுக்கு போர்த்துக்கல் அரசாங்கம் துக்கம் அனுசரிக்க உள்ளது.
Share
Categories
இங்கிலாந்து உலகம் தலைப்புச் செய்திகள் லண்டன்

லண்டன் தீ விபத்தில் இதுவரை 58 பேர் பலி

லண்டனிலுள்ள அடுக்குமாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது என்று போலிஸார் கூறினர்.

இந்த எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று போலிஸ் அதிகாரி ஸ்டுவர்ட் கண்டி தெரிவித்தார். பிரிட்டனின் மகாராணி இரண்டாம் எலிசபெத், அவரது பிறந்த நாளைக் குறித்த ஒரு அறிக்கையில் கூறியதாவது :

நாட்டின் மிக துக்கமான மனநிலையை மறப்பதற்குக் கடினமாக உள்ளது. சமீபத்திய மாதங்களில் நமது நாடு பயங்கரமான துயரங்களை தொடர்ந்து கண்டிருக்கிறது.

கடந்த மூன்று மாதங்களுக்குள் லண்டனிலும் மான்செஸ்டரிலும் நடந்த  3 தீவிரவாத தாக்குதல்களின் துக்கம் மறைவதற்குள், சென்ற புதன்கிழமை இந்த 24 மாடிக் கட்டிட தீ விபத்து நிகழ்ந்துள்ளது.

24 தளங்களைக் கொண்ட இந்தக் கட்டிடத்தில் உள்ள 120 குடியிருப்புகளில் சுமார் 600 பேர் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அந்த கட்டிடத்தில் உள்ள 120 பிளாட்டுகளிலும் வசித்த மக்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர். பலர் தீப்பிடித்த பகுதியில் சிக்கிக்கொண்டு வெளியேற முடியாமல் தவித்தனர். உயிரை காப்பாற்றிக்கொள்ள பலர் மாடியில் இருந்து குதித்தனர். இதில் பலத்த காயமடைந்தனர். யார், எங்கே இருக்கிறார்கள் என்பதைக் கூட தெரிந்து கொள்ள முடியாத நிலையில் கரும்புகை சூழ்ந்து கொண்டது.

கடந்த வெள்ளிக்கிழமை மாலைதான் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது என்று போலிஸார் கூறியுள்ளனர்.

Share