Categories
இந்திய வம்சாவளி உலகத் தமிழர் உலகம் சிங்கப்பூர் தலைப்புச் செய்திகள் மலேசியா

இந்திய வம்சாவளி இளைஞருக்கு சிங்கபூரில் மரண தண்டனை நிறைவேற்றம்

மலேசியாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் பிரபாகரன் ஸ்ரீவிஜயன்(வயது 27). இவர் பெட்ரோல் நிலையத்தில் வேலை பார்த்து வந்தார்.   கடந்த 2012 ம் ஆண்டு சிங்கப்பூர் குடி நுழைவு மையத்தில், இவர் ஓட்டி வந்த காரில் இருந்து 22.24 கிராம் போதைப் பொருளை சிங்கப்பூர் போலிஸ் அதிகாரிகள் கைப்பற்றியிருந்தனர்.

எனினும், அந்தக் கார் தன்னுடையது இல்லை என்றும், நாதன் என்பவரிடம் இருந்தே அந்த  காரை பெற்றதாகவும், அதில் போதைப்பொருள் இருப்பது தனக்குத் தெரியாது என்றும் பிரபாகரன் தொடர்ந்து முறையிட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 2014ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி மருந்துகளை தவறாக பயன்படுத்தும் சட்டத்தின் கீழ் சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் பிரபாகரனுக்கு மரண தண்டனை விதித்திருந்தது. கோலாலம்பூரின் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் பிரபாகரனின் வழக்கு விசாரணை நடைபெற விருந்த நிலையில் பிரபாகரனின் மரண தண்டனையை ஒத்திவைக்க அவரது வழக்கறிஞர் கடந்த செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் நேற்று நிராகரித்ததுடன், பிரபாகரனின் தண்டனையை அவ்வாறு நிறுத்த முயல்வது முறையற்றது என்றும் கண்டித்திருந்தனர்.

இந்த நிலையில்   பிரபாகரன் ஸ்ரீவிஜயனுக்கு சாங்கி சிறைச்சாலையில் இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

Share
Categories
தமிழகம் தலைப்புச் செய்திகள் ம.தி.மு.க. மலேசியா

மலேசியாவிற்குள் நுழைய வைகோவுக்கு அனுமதி மறுப்பு

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் இல்லத் திருமண நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்றார். ஆனால் மலேசியாவில் நுழைய அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. அந்நாட்டிற்கு ஆபத்தானவர்களின் பெயர்கள் பட்டியலில் வைகோவின் பெயர் உள்ளதாக கூறி, நடவடிக்கை எடுத்துள்ளது.

கோலாலம்பூர் விமான நிலையத்தில் உள்ள குடிவரவுத் துறை அதிகாரிகள், நீங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்று கூறி புலிகள் தொடர்பாக பல்வேறு கேள்விகளைக் கேட்டதாகவும் இலங்கையில் அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும் குற்றம்சாட்டியதாக ம.தி.மு.க. தெரிவிக்கிறது.

வைகோ, தான் இந்தியக் குடிமகன் என்று கூறி கடவுச் சீட்டைக் காட்டியபோதும் “மலேசியாவுக்கு ஆபத்தானவர்” என்ற பட்டியலில் வைகோவின் பெயர் இருப்பதால் அவர் நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு, அவருடைய கடவுச் சீட்டை வாங்கி வைத்துக்கொண்டதாகவும் அக்கட்சியின் அறிக்கை கூறுகிறது.

பினாங்கு மாநில முதல்வர் லிங் குவான் யங், துணை முதல்வர் ராமசாமி ஆகியோர் பரிந்துரைத்தும் அவர் உள்ளே நுழைய அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் சென்னை திரும்பிய வைகோ, செய்தியாளர்களிடம் பேசினார். மலேசியாவில் தன்னை ஒரு கைதி போல் நடத்தியதாகவும், உணவு கூட கொடுக்க அனுமதிக்கவில்லை என்று கூறினார்.

இதன் பின்னணியில் இலங்கை அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டினார். ஈழத்தமிழர் படுகொலை பற்றி சர்வதேச அளவில் பேச விடக்கூடாது என்பதற்காக இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படுவதாக குறிப்பிட்டார்.

Share