Categories
உலகம் கத்தார் தலைப்புச் செய்திகள்

கத்தாருக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய 80 நாட்டினருக்கு அனுமதி

இந்தியா உள்ளிட்ட 80 நாட்டினருக்கு விசா இல்லாமல் நாட்டினுள் நுழையும் திட்டம் தொடர்பான அறிவிப்பை கத்தார் வெளியிட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டில் கால்பந்தாட்ட உலகக் கோப்பையை நடத்த இருக்கின்ற, எரி வாயு அதிகமாக உற்பத்தி செய்யும், கத்தார் நாட்டிற்கு  ஐரோப்பா, மற்றும் பிற நாடுகளான இந்தியா, லெபனான், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வருபவர்கள்,  இங்கு வந்து சேர்ந்ததும் சுற்றுலா விசாக்களைப் பெறுவார்கள்.

இந்த விசா விலக்கு திட்டம் கத்தார் நாட்டை அப்பிராந்தியத்தின் மிகவும் திறந்த வெளிநாடாகச்  செய்யும்  என்று கத்தார் சுற்றுலா ஆணையத்தின் தலைமை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரியான சான் அல்-இப்ராஹிம், டோஹாவில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

 

Share
Categories
உலகம் கத்தார் தலைப்புச் செய்திகள் மத்திய கிழக்கு நாடுகள்

கத்தாரின் மீது புதிய தடைகள் இல்லை : எகிப்து

கத்தாரின் பதில் எதிர்மறையானது என்றாலும்  புதிய தடைகள் எதுவும் இல்லை என்று எகிப்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கூறினார்.
எகிப்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சமே ஷௌக்ரி கூறும் போது, ” எங்களுக்கு உருப்படியான பதில் கிடைக்கவில்லை; ஒட்டுமொத்தமாக பதில் எதிர்மறையாகவுள்ளது. இப்பதில்கள் கத்தார் தனது கொள்கைகளிலிருந்து பின்வாங்கும் என்ற கருத்திற்கு இடம் தரவில்லை” என்றார்.
இதனிடையே சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்டுகள், எகிப்து மற்றும் பஹ்ரைன் ஆகிய அரபு நாடுகள் ஒன்று கூடி தங்களின் கெடு முடிந்தப் பிறகு கத்தார் அளித்துள்ள பதில்களைப்பற்றி விவாதித்தன. அவை கத்தாரிடம் 13 கோரிக்கைகளை எழுப்பியிருந்தன.
“கத்தாருக்கு எதிரான அரசியல், பொருளாதார தடைகள் அது தனது கொள்கைகளை நல்ல முறையில் மாற்றிக்கொள்ளும் வரை தொடரும்” என்றார் சவூதி வெளியுறவு அமைச்சர் ஜூபேர்.
Share
Categories
உலகம் கத்தார் சவுதி அரேபியா தலைப்புச் செய்திகள் பஹ்ரேன் மத்திய கிழக்கு நாடுகள் யூ.ஏ.இ.

கத்தாருக்கு அரபு நாடுகள் நிபந்தனை: அல் ஜசீராவை மூடவும் ஈரானுடன் நட்புறவைத் துண்டிக்கவும் வேண்டும்

கத்தாருடனான் முன்பு போல நட்புறவு தொடர பிற அரபு நாடுகளான சவுதி அரேபியா, யூ.ஏ.இ., பஹ்ரேன் மற்றும் எகிப்து ஆகியவை 13 நிபந்தனைகளை விதித்துள்ளனர். அவற்றில் முக்கிய நிபந்தனைகளான அல் ஜசீரா தொலைக்காட்சியை மூடுவது, ஈரானுடன் நட்புறவைத் துண்டிப்பது ஆகியவையும் அடங்கும்.

சவுதிக்கும் கத்தாருக்கும் இடையிலுள்ள அபு சம்ரா எல்லை வெறிச்சோடிக் கிடக்கிறது.

மேலும், முஸ்லீம் சகோதரத்துவ இயக்கம், ஐ.எஸ். அமைப்பு, அல் கொய்தா மற்றும் லெபனானின் ஈரானிய ஆதரவிலான ஹிஸ்புல்லா இயக்கம் உள்ளிட்ட குழுக்களுடனான உறவுகளை கத்தார் துண்டிக்கும்படி அரபு நாடுகளின் நிபந்தனை கூறுகிறது. கத்தாரிலிருக்கும், தங்கள் அரசுகளின் எதிப்பாளர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நிபந்தனையில் கூறப்பட்டுள்ளது.

“கத்தார் அரசு தற்போது இந்த நிபந்தனைத்தாளைப் படித்து வருகிறது. இதில் உள்ள கோரிக்கைகள் மற்றும் அவற்றின் அடிப்படைகளை புரிந்து கொண்டபின், தக்க  பதிலளிக்கப்படும்”, என்று கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை குறிப்பிடுகிறது.

 

Share
Categories
இந்தியா உலகம் கத்தார் தலைப்புச் செய்திகள்

ஈத் பண்டிகையின் போது கத்தாரிலுள்ள இந்தியர்கள் நாடு திரும்ப சிறப்பு விமானங்கள்

மற்ற வளைகுடா நாடுகளால் பயண மற்றும் வர்த்தக புறக்கணிப்பினால் பாதிக்கப்பட்ட கத்தாரில் வாழும் இந்தியர்கள் ஈத் பண்டிகையின் போது நாடு திரும்புவதற்கு உதவியாக சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என்று இந்தியா அறிவித்தது.

கொச்சி, திருவனந்தபுரம், மும்பை ஆகிய இடங்களிலிருந்து ஏர் இந்தியா மற்றும் தனியார் விமான சேவைகள் தோகாவுக்கு கூடுதலான விமானங்கள் இயக்கப்படும் என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அசோக் கஜபதி ராஜா கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், கத்தார் நாட்டில் இந்தியர்கள் இக்கட்டான நிலையில் விடப்படவில்லையென்றாலும், பல வளைகுடா நாடுகளின் தடை காரணமாக டிக்கெட் பெற முடியாமல் இருக்கலாம் என்றார். கத்தார் நாட்டில் 7 லட்சம் இந்தியர்கள் வாழ்கின்றனர்.

அரசுக்கு சொந்தமான இந்திய விமான நிறுவனமான இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் தனியார் விமான போக்குவரத்து நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் வரும் வியாழக்கிழமை முதல் இந்த கூடுதல் விமானங்களை இயக்க உள்ளதாக அரசின் அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கத்தாரிலிருந்து நாடு திரும்ப டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாத இந்தியர்களை அனுமதிக்கும் வகையில் கூடுதல் விமானங்கள் இயக்கப்படும் என்று சுஷ்மாவிற்கு அவர் உத்தரவாதம் அளித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா விமான நிறுவனம் ஜூன் 25 முதல் ஜூலை 8 ஆம் தேதிவரை தென்னிந்திய நகரமான திருவனந்தபுரத்திலிருந்து தோஹாவிற்கும், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஜூன் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மும்பை – தோஹா – மும்பை இடையிலும் விமானங்களை இயக்கும் என்று அரசின் அறிக்கை கூறுகிறது.

இதனிடையே, இந்த நடவடிக்கை, இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கை இல்லை என்று இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

Share
Categories
உலகம் கத்தார் தலைப்புச் செய்திகள் மத்திய கிழக்கு நாடுகள்

கத்தார் குறித்த டிரம்பின் கருத்துகளுக்கு, தடை விதித்த அரபு நாடுகள் வரவேற்பு

கத்தார் மீது பிற அரபு நாடுகள் தடை விதித்தபோது, அது குறித்த டிரம்பின் கருத்துகளுக்கு, தடை விதித்த அந்நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

இதனிடையே அமெரிக்க வெளியுறவுச் செயலர் டில்லெர்சன், கத்தார் மீது விதிக்கப்பட்ட தடைகளை தளர்த்துமாறு கோரியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு எமிரேட்டுகள் டிரம்ப் இவ்விஷயத்தில் காட்டிய ”தலைமைத்துவத்தை” பாராட்டியிருக்கிறது.

கத்தார் ”மற்றவர்களைக் கொல்ல மக்களுக்கு பயிற்சி தருவதை நிறுத்த வேண்டும்” என்று டிரம்ப் வெள்ளிக்கிழமை கூறியிருந்தார்.

கத்தார் ”மற்ற ஒற்றுமையான நாடுகளின் மத்தியில்” மீண்டும் வரவேண்டும் என்று டிரம்ப் தெரிவித்தார்.

எண்ணெய் மற்றும் எரிவாயு வளமிக்க, சின்னஞ்சிறிய நாடான, கத்தார், தான் இஸ்லாமியவாத தீவிரவாதிகளை ஆதரிப்பதாகக் கூறப்படுவதை பலமாக மறுக்கிறது.

கத்தாரின் வெளியுறவு அமைச்சர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல்-தானி கத்தாருக்கு ஆதரவு திரட்ட ஐரோப்பா சென்றிருக்கிறார்.

தனது நாடு ” வெற்றிகரமானதாகவும், முற்போக்கானதாகவும்” இருப்பதால் அது தனிமைப்படுத்தப்படுவதாகவும், தனது நாடு ” ஒரு அமைதிக்கான அரங்கம், பயங்கரவாதத்துக்கானது அல்ல ” என்று கத்தாரின் ஷேக் மொஹமது கூறுகிறார்.

 

 

Share
Categories
அதிபர் டிரம்ப் அமெரிக்கா உலகம் கத்தார் தலைப்புச் செய்திகள் மத்திய கிழக்கு நாடுகள்

கத்தார் விவகாரம் குறித்த டிரம்பின் ட்வீட் : ‘தீவிரவாதத்துக்கான முடிவின் தொடக்கம்’

‘கத்தாருக்கு எதிராக ஐக்கிய அரபு நாடுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள், தீவிரவாதத்துக்கான முடிவின் தொடக்கம்’ என்று ட்விட்டர் மூலம் கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

கத்தார் நாடு தீவிரவாதத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறி சவுதி அரேபியா, ஐக்கிய அரேபிய நாடுகள், எகிப்து மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள், தூதரகத் தொடர்புகள் உள்பட கத்தாருடனான அத்தனை தொடர்புகளையும் துண்டிப்பதாக அறிவித்துள்ளன. கத்தார் நாட்டின் விமானங்கள், கப்பல்கள் அனைத்தும் இன்னும் இரண்டு வார காலத்தில் வெளியேற வேண்டும் என பஹ்ரைன் உத்தரவிட்டுள்ளது.

மேலும் எமிரேட்ஸ், எத்திஹாட் ஏர்வேஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் கத்தாருக்கான அனைத்து விமான சேவைகளையும் நிறுத்தவுள்ளதாக அறிவித்துவிட்டன.

இந்த நிலையில்தான் ட்ரம்ப், ‘நான் சமீபத்தில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்றேன். அப்போது, தீவிரவாத சிந்தனை கொண்டவர்களுக்கு இனிமேலும் நிதி வழங்கப்படக் கூடாது என்று வலியுறுத்தினேன். இதை நான் கூறியபோது, தலைவர்கள் கத்தாரை நோக்கி கையைக் காட்டினர். தீவிரவாதத்துக்கு ஆதரவாக செயல்படுவோர் மீது நாங்கள் கண்டிப்பாக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று உறுதி அளித்தனர். கத்தாரின் நிலைமையை இப்போது பாருங்கள். இதுவே தீவிரவாதத்தின் முடிவின் தொடக்கமாக இருக்கலாம்.’ என்று கூறியுள்ளார்.

Share