Categories
இந்தியா உச்ச நீதிமன்றம் உயர் கல்வி தமிழகம் தலைப்புச் செய்திகள் நீட் மருத்துவ தேர்வு மருத்துவம்

நீட் தேர்வு: தமிழக பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களின் எதிர்காலம் சுப்ரீம் கோர்ட்டின் கையில் உள்ளது

மருத்துவ படிப்பிற்கான, நீட் தேர்வு தொடர்பான பல வழக்குகளில் தமிழக அரசு பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு தொடர்ந்து பல பின்னடைவுகள் ஏற்பட்டுள்ள நிலையில்,  85%  இட ஒதுக்கீடு குறித்தான வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் நாளை நடைபெற உள்ளது.

முன்னதாக, இந்த ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வில் ஆங்கிலம், இந்தி ஆகிய மொழி வினாக்களுக்கும் தமிழகம் உள்ளிட்ட பிற மாநில மொழி வினாக்களுக்கும் வேறுபாடு இருந்ததாக மாணவர்கள் தரப்பில் புகார் கூறப்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள்  மதுரை ஐக்கோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

மாணவர்களின் மனுவை விசாரித்த மதுரை ஐக்கோர்ட் கிளை, நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடை காலத் தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.எஸ்.இ. (CBSE) மேல்முறையீடு செய்தது. பின்னர் சுப்ரீம் கோர்ட்  விசாரணையின் போது நீட் தேர்வு முடிவுகளை வெளியிட அனுமதி அளிக்கப்பட்டு அதன் பின்னர் முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று நடைபெற்ற அடுத்த கட்ட விசாரணையின் போது,  நீட் தேர்வு முடிவுகளை தற்போது ரத்து செய்ய முடியாது; நடப்பாண்டில் நீட் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது; சுமார் 11 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதி, 6.11 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பேர் தேர்ச்சி பெற்று கவுன்சிலிங்கும் துவங்கி விட்டது; இந்நிலையில் நீட் தேர்வு முடிவிற்கு தடை விதிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் கூறிவிட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் மிகவும்  அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதைத்தவிர தமிழகத்தின் 85% ஒதுக்கீடு குறித்த வழக்கும் நாளை விசாரணைக்கு வருகிறது. தமிழக அரசு, மாநில பாடத் திட்டத்தின் கீழ் படித்தவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கிக் கடந்த ஜூன் 22ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் சிலர், சென்னை ஐக்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இதனை விசாரித்த நீதிபதி, 85 சதவீத உள்ஒதுக்கீடு என்பது மாணவர்களிடையே பாரபட்சத்தை ஏற்படுத்துவதாகக் கூறி, அந்த அரசாணையை ரத்து செய்து ஜூலை 14ம் தேதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழக அரசும், மாநில பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் சிலரும், சென்னை ஐக்கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின் பின்னர், ஐக்கோர்ட் நீதிபதிகள் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து ஜூலை 31ம் தேதி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்தத் தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்நிலையில், மருத்துவ கலந்தாய்வு தாமதம் ஆவதால் மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனத் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து, தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கினை, நாளை அவசர வழக்காக சுப்ரீம் கோர்ட் விசாரிக்க உள்ளது.

 

Share
Categories
இந்தியா உயர் கல்வி ஐகோர்ட் தமிழகம் தலைப்புச் செய்திகள் நீட் மருத்துவ தேர்வு மருத்துவம்

மருத்துவப் படிப்பிற்கு 85 சதவீத இடஒதுக்கீடு ரத்து; மேல்முறையீடு செய்யப்படும் – அமைச்சர்

இளங்கலை மருத்துவம், பல் மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் பயின்றவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை கோரிய வழக்கில், இட ஒதுக்கீடை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதனன்று உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

மதுரையைச் சேர்ந்த மாணவர் சிபி உள்ளிட்ட மூவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.   அதில், “இந்தியா முழுவதும் நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவம், பல் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். அதன்படி தமிழகத்தில் நீட் தேர்வு முடிவின் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும்.

இந்நிலையில் தமிழகத்தில் மருத்துவம், பல் மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் பயின்றவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு ஜூன் 22-ஆம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது. எஞ்சிய 15 சதவீத இடங்களில் மட்டுமே மத்திய அரசு பாடத்திட்டம் மற்றும் பிற பாடத்திட்டங்களில் பயின்ற மாணவர்கள் சேர்க்கப்படுவர் என அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இதனால், சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் பயின்று நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பாதிக்கப்படுவர். எனவே, 85% இடஒதுக்கீட்டு அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும்” என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இது குறித்து விசாரணை நடத்திய நீதிபதி கல்யாணசுந்தரம், 85% இட ஒதுக்கீட்டுக்கு தடை விதித்தார்.

இது பற்றி  அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும் போது, “சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை வழக்கறிஞர் மூலம் திறமையாக வாதம் செய்யப்பட்டது. இதை அரசும் கண்காணித்தது.
தற்போது உயர்நீதிமன்றம் இடஒதுக்கீட்டுக்கு தடை விதித்திருப்பதாக தகவல் வந்துள்ளது. இதுகுறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். நமது உரிமை நிலை நாட்டப்படும்.” என்று கூறினார்.

 

Share
Categories
உயர் கல்வி தமிழகம் தலைப்புச் செய்திகள் நீட் மருத்துவ தேர்வு மருத்துவம்

நீட் தேர்வு முடிவுகள்: தமிழக மாணவர்களுக்குப் பெரும் பின்னடைவு

நீட் தேர்வு முடிவுகளை இன்று சி.பி.எஸ்.இ. வெளியிட்டது. முதல் 25 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த மணவர்கள் ஒருவர்கூட இடம் பெறமுடியவில்லை.

கடந்த மே 7-ம் தேதி நாடு முழுவதும் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புக்களில் சேருவதற்கான நீட் (NEET) தேர்வு நடத்தப்பட்டது.  இத்தேர்வு, தமிழக மானில கல்வித்துறையின் பாடத்திட்டத்திற்கும், மத்திய சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கும் அதிக வித்தியாசம் இருப்பதால், தமிழகத்தில் நடத்தப்பட மாட்டாது என்று மானில அரசு, உறுதியளித்திருந்த போதும், மத்திய அரசின் கோரிக்கையின் மீதான உச்சநீதிமன்ற ஆணையால் தமிழக மாணவர்களின் மீது திணிக்கப்பட்டது. மாணவர்களும் வேறுவழியின்றி நீட் தேர்வை சந்தித்தனர்.

ஜெயலலிதா இறந்தபின் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டிருந்த அதிமுக கோஷ்டிகளும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்ற ஒரே கொள்கையக் கொண்டுள்ள தமிழக அரசும், தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்லூரிக் கனவுகளைப் பற்றி எதுவும் கவலைப் படாமல், மத்திய அரசின் தலையாட்டிப் பொம்மையாக இருந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவுகள் கானல் நீராகப் போகும் நிலைமையே தற்போது ஏற்பட்டிருக்கிறது. ஜெயலலிதா இப்போது உயிருடன் இருந்திருந்தால் தமிழக மாணவர்களுக்கு இப்படியொரு நிலை ஏற்பட நிச்சயம் அனுமதித்திருக்க மாட்டார் என்பதை மட்டும் நாம் உறுதியாகக் கூறமுடியும்.

 

Share
Categories
இந்தியா உயர் கல்வி ஐகோர்ட் தமிழகம் நீட் மருத்துவ தேர்வு மருத்துவம்

“ஸ்டாப் இட்” : நீட் தேர்வு முடிவுகளை வெளியிட ஐகோர்ட் இடைக்கால தடை

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட்  கிளை உத்தரவிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் மே 7 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. 104 நகரங்களில் அமைக்கப்பட்டு இருந்த 1,900–க்கும் அதிகமான மையங்களில் பல்வேறு மொழிகளில்  தேர்வு நடந்தது.

சில மாணவர்களின் மனுக்களின் அடிப்படையில், நீதிபதி எம்.வி. முரளிதரன் இந்த
இடைக்காலத் தடையை பிறப்பித்தார். மேலும் இந்திய மருத்துவ கவுன்சில் (MCI) அதிகாரிகள் மற்றும் மத்திய மேல்நிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) இயக்குனர் ஆகியோர் ஜூன் 7 ம் தேதி தங்கள் வாக்குமூலங்களை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

சீரான கேள்வித்தாள்கள் வழங்கப்படவில்லை எனவும், ஆங்கில மற்றும் தமிழ் கேள்வித் தாள்களுக்கு இடையில் பெரிய வித்தியாசம் இருப்பதாகவும் மனுதாரர்கள் கூறினர்.
மேலும் நீட்
தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் ஒரே சீரான கேள்வித் தாள்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.

நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் ஒரே சீரான பாடத்திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தாலும்  எல்லா இடங்களிலும் ஒரே சீரான முறையில் தேர்வு நடத்தப்படவில்லை என்றும் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு கேள்வித்தாள்கள் பயன்படுத்தப்பட்டதாகவும்  அவர்கள் மனுவில் கூறியுள்ளனர்.

தமிழ்நாட்டில், தமிழ் மொழியில் தேர்வு எழுதியவர்களுக்கு எளிதான வினாத்தாளும் ஆங்கில மொழியில் எழுதியவர்களுக்கு கடினமான வினாத்தாளும் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். “நீட் தேர்வில் இந்தியா முழுவதும் ஒரே வினாத்தாளே பயன்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில் நுண்ணறிவு, இயல்திறன் ஆகியவற்றின் அளவீடுகள் பெருமளவில் வேறுபடும். ஆகவே தற்போதைய நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு, புதிதாக நாடுமுழுவதும் ஒரே கேள்வித்தாளைக் கொண்டு புதிய நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும்” என்றும் மனுதாரர்கள் தெரிவித்திருந்தனர்.

Share
Categories
இந்தியா உயர் கல்வி நீட் மருத்துவ தேர்வு மருத்துவம்

நீட் தேர்வில் முறைகேடுகள்: மருத்துவர்கள் சங்கம் தகவல்

நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரவீந்திரநாத், ”இளநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் சென்ற ஞாயிறு அன்று நடத்தப்பட்டது. இந்தி, ஆங்கிலம், தமிழ், வங்கமொழி உள்ளிட்ட  10 மொழிகளில் நடத்தப்பட்டது. இதில் 180 வினாக்கள் இடம் பெற்றன. நாடு முழுவதும் ஒரே தேர்வு. அத்தேர்வின் அடிப்படையில் அகில இந்திய அளவில் தரப்பட்டியல் தயாரிக்கப்படும். அவ்வாறு இருக்கும் பொழுது வெவ்வேறு மொழிகளில், வெவ்வேறு வினாக்கள் இடம் பெற்றுள்ளன. இது பாரபட்சப் போக்கை ஏற்படுத்தியுள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

குஜராத்தி மொழியில் நடைபெற்ற தேர்வில் கேள்விகள் எளிமையாக இருந்ததாகவும், வங்க மொழியில் கேள்வித்தாள் கடினமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் ஆங்கில மொழி கேள்வித்தாளைவிட தமிழ் மொழியில் அமைந்த கேள்வித்தாள் எளிமையாக இருந்தாக கூறப்படுகிறது. எனவே, இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

மீண்டும் நாடுமுழுவதும் ஒரே மாதிரி கேள்வித்தாளை தயாரித்து அனைத்து மொழிகளிலும் தேர்வை நடத்த வேண்டும். மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இளநிலை, முதுநிலை, உயர்சிறப்பு மருத்துவ இடங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்” என்று டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் தெரிவித்தார்.

Share
Categories
இந்தியா உயர் கல்வி கேரளா மருத்துவம் மாநிலங்கள்

நீட் தேர்வில் உள்ளாடையை அகற்றச் சொன்னது ஒருசிலரின் தனிப்பட்ட ஆர்வமிகுதியாலாம்

கேரளாவின் கன்னூர் பள்ளி ஒன்றில், நீட் தேர்வு எழுத வந்த மாணவி ஒருவரின் உள்ளாடையை அகற்றச் சொன்னதாக, கண்காணிப்பாளர்கள்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவ்வாறு உத்தரவிட்டது யாரோ சில கண்காணிப்பாளர்களின் தனிப்பட்ட ஆர்வமிகுதியின் விளைவு என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. அச்சம்பவத்தில் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர்கள் நான்கு பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும், மே 7ஆம் தேதியன்று நடைபெற்ற மருத்துவப் படிப்பில் சேருவதற்கான, நீட் எனப்படும், தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு எழுத வந்த மாணவ, மாணவியர் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதால் அவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இதுபற்றி கேரளத்தைச் சேர்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் பி.கே. ஸ்ரீமதி, “மாணவியின் மேல் உள்ளாடையை அகற்றுமாறு கூறியது, மனிதாபிமானமற்ற, வெட்கக்கேடான செயல்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

“உள்ளாடையில், மெட்டல் கொக்கி இருந்த காரணத்தால், அதை அகற்றுமாறு கோரப்பட்டிருக்கிறார். அதனால், ஒரு நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு உணர்வுடன் அவரால் தேர்வை எழுதியிருக்க முடியாது. இது அந்தப் பெண்ணின் மனித உரிமையை மீறும் செயல்” என்று கூறிய ஸ்ரீமதி, ஆடை கட்டுப்பாட்டு விதிமுறைகளை மறு ஆய்வு செய்யுமாறு தேர்வை நடத்தும் சிபிஎஸ்இ நிர்வாகத்தைக் கேட்டுக் கொள்ளப் போவதாகத் தெரிவித்தார்.

 

 

Share
Categories
தமிழகம் போராட்டம் போராட்டம்

50% இடஒதுக்கீடு ரத்து தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது: மருத்துவ மாணவர்கள் அறிவிப்பு

கிராமப்புறங்களில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு முதுகலை மருத்துவப் படிப்புகளில் வழங்கப்பட்டுவந்த 50 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு ஏமாற்றத்தை அளிப்பதாக கடந்த 18 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவர்களும், மாணவர்களும் தெரிவித்துள்ளனர்.

மாநில அரசின் உரிமையை பறிக்கும் 50 சதவீத இடஒதுக்கீட்டு முறையை குறைந்தபட்சம் இந்த ஆண்டாவது விலக்கு பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள போராட்ட மாணவர்கள், எதிர்காலத்திலும் மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் பழைய நடைமுறைகளையே பின்பற்ற சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று அரசிடம் நேரில் வலியுறுத்தப்படும் என்று தமிழ்நாடு மருத்துவர்கள் நலச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அடுத்த கட்ட நிகழ்வுகள் குறித்து பொதுக்குழு கூடி முடிவு செய்யும் என்றும் கூறியுள்ளனர்.

 

Share
Categories
உயர் கல்வி ஐகோர்ட் தனியார் கல்லூரிகள் தமிழகம் மருத்துவம்

மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கு தனியார் கல்லூரிகளில் அரசுக்கு 50% இடஒதுக்கீடு: ஐக்கோர்ட் ஆணை

தமிழகம் முழுவதும் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பட்ட மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் அரசுக்கு 50% இடஒதுக்கீடு செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ பட்டமேற்படிப்பில் இடஒதுக்கீடு தொடர்பாக மாணவர்கள் சாரோன், காமராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்து வந்தார். இந்த வழக்கின வாதவிவாதங்கள் முடிந்த நிலையில் இறுதி உத்தரவை நீதிபதி தள்ளிவைத்திருந்தார்.

இந்நிலையில் இன்று (செவாய்க்கிழமை) உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவில், “தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் பட்ட மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 50% இடங்களை அரசுக்கு ஒதுக்க வேண்டும். இவற்றை கலந்தாய்வு மூலமே ஒதுக்க வேண்டும்” என்றும் உத்தரவிட்டுள்ளது.

அதேவேளையில் சிறுபான்மை மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது எனவும் அரசு தெரிவித்துள்ளது.

மேலும், மருத்துவ மாணவர்கள் பட்ட மேற்படிப்பு மேற்கொள்ள இடஒதுக்கீடு பெற தவறியதற்காக தமிழக அரசும் இந்திய மருத்துவக் கவுன்சிலும் தலா ரூ.1 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share