Categories
இந்தியா கேரளா தமிழகம் தலைப்புச் செய்திகள்

கேரள மருத்துவமனைகளால் அவசர சிகிச்சை கொடுக்கப்படாமல் அலைகழிக்கப்பட்ட தமிழர் மரணம்

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் முருகன். ஞாயிற்றுக் கிழமை இரவு 11 மணியளவில் மோட்டார் சைக்களில் சென்ற போது விபத்து ஏற்பட்டது. இதையடுத்து இவர் ஆம்புலன்சில் கொல்லம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால், அங்கு செயற்கை சுவாசம் அளிக்கும் சிகிச்சை வசதி இல்லாததால், முருகனை மருத்துவமனையில் அனுமதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 50 கி.மீ., தொலைவில் உள்ள திருவனந்தபுரம் மருத்து கல்லூரி மருத்துவமனைக்கு அவர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு இரண்டு மணி நேரம் காக்க வைக்கப்பட்ட பிறகு, அவசர சிகிச்சை பிரிவில் அறை வசதி இல்லை என்று கூறி, முருகனை மருத்துவமனையில் சேர்க்க அனுமதி மறுக்கப்பட்டது என ஆம்புலன்ஸ் டிரைவர் கூறினார். இதன் பிறகு மீண்டும் கொல்லம் நகருக்கு ஆம்புலன்ஸ் மூலம் முருகன் கொண்டு வரப்பட்டார். வரும் வழியில்இருந்த அனைத்து மருத்துவமனைகளும் அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்தன. இதையடுத்து, இன்று (ஆக.,8) காலை, 6 மணிக்கு ஆம்புலன்சில்இருந்தபடி முருகன் உயிர் துறந்தார்.

இதையடுத்து ஆம்புலன்ஸ் ஓட்டுனர் கொடுத்த புகாரை கொல்லம் காவல்துறை ஆணையர் பெற்றுக் கொண்டார். தற்போது, சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவமனைகள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

Share
Categories
கன்யாகுமரி குளச்சல் கேரளா தமிழகம் தல வரலாறு பலவகைச் செய்திகள் மாவட்டம் வரலாறு ஹாலந்து

குளச்சல் போரின் வரலாற்றை தமிழக பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க கோரிக்கை

குளச்சல் போரில் திருவிதாங்கூர் படைகள் 1741-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி வெற்றி பெற்றதன் நினைவு தினம் வருகிற 31-ந் தேதி கொண்டாடப்படுகிறது.  இப்போரின் வரலாற்றை கேரளாவை போல், தமிழகத்திலும் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவிதாங்கூர் அரசின் பதிவு செய்யப்பட்ட வரலாற்றின் படி, பதினெட்டாம் நூற்றாண்டில், கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கூர் அரசின் கீழ் இருந்தது. அக்காலத்தைய தெற்கு கேரளமும் கன்னியாகுமரி மாவட்டப் பகுதிகளும், சிறு சிறு சமஸ்தானங்களாக சிற்றரசர்களின் ஆட்சியின்கீழ் இருந்தன.  வேணாட்டின் அரசரான மார்த்தாண்ட வர்மா அண்மையிலுள்ள சிறு சமஸ்தானங்களுடன் போரிட்டு தனது அரசுடன் இணைத்துக் கொண்டிருந்தார். இதன் முன்னதாக மிளகு வியாபாரத் தலங்களை டச்சுக்காரர்கள் ஏற்படுத்தியிருந்தனர்.

 

மார்த்தாண்ட வர்மாவின் ராச்சிய இணைப்பு நடவடிக்கைகளில் ஒன்றான இளைஇடத்து சொரூப (கொட்டாரக்கரை) இணைப்பு முயற்சியின் போது, கொட்டாரக்கரை ராணியார், டச்சுக்காரர்களின் உதவியை நாடினார். இருப்பினும், மார்த்தாண்ட வர்மாவின் படைகள் இளைஇடத்து சொரூபத்தை போரிட்டு கைப்பற்றினர். இது டச்சுக்காரர்களின் மிளகு வியாபாரத்திற்கு பேரிடியாக அமைந்தது. மேலும் மார்த்தாண்ட வர்மா, ஏனைய ஐரோப்பிய வணிகர்களான கிழக்கிந்திய கம்பெனி மற்றும் ஃப்ரென்சு கம்பெனிகளுடன் வியாபாரம் செய்வதற்கு முன்னுரிமை கொடுத்தார். இவற்றால், டச்சுக் காரர்களுக்குத் தேவையான வணிகப் பொருட்கள் கிடைக்காமல் போனது.

நிலைமையைச் சரியாக்கும் நோக்கில், கொழும்பிலிருந்து டச்சு கவர்னர் வான் இம்ஹாஃப் (Van Imhoff) பேச்சு வார்த்தைக்காக ராஜா மார்த்தாண்ட வெர்மாவைச் சந்திதார். இருப்பினும் பேச்சுவார்த்தையால் தேவையான பயன்கள் எதுவும் விளையவில்லை.

திருவிதாங்கூர்ப் படைகள் பின்னர் காயங்குளத்தின் அரசினைக் கைப்பற்றுவதற்காக வடக்கு நோக்கி அனுப்பப் பட்டனர். இன்னிலையில், டச்சுக் கடற்படை, தென்பகுதியில் கடியப்பட்டணம், மிடாலம், தேங்காப்பட்டணம் ஆகிய இடங்களைக் கைப்பற்றியது. குளச்சலிலிருந்து கோட்டார் வரை டச்சுப்படைகளின் பிடியில் வந்தது. திருவிதாங்கூர் படைகள் காயங்குளம் சென்ற சமயத்தில், நாட்டுக்குள் புகுந்த டச்சுப் படையைத் தடுக்க  யாரும் இல்லாத்தால், அவர்கள் குடிமக்களுக்கு பல்வேறு அட்டூழியங்களையும் செய்தவாறு பத்மனாபபுரம் கோட்டையைப் பிடிக்கச் சென்றனர்.

இதனைக் கேள்விப்பட்ட மார்த்தாண்ட வர்மா, காயங்குளத்திலிருந்த அவரது படையை திரும்பி வரத் தகவல் அனுப்பினார். மேலும் உள்ளூர் நாயர், நாடார் மற்றும் மீனவர்களின் துணையுடன் புதிய படையொன்றை உருவாக்கினார். இப்புதிய படையுடன், காயங்குளத்திலிருந்து திரும்பிய திருவிதாங்கூர்ப் படைகளும் சேர்ந்து, டச்சுப் படைகளுடன் போரிட்டனர். போரில் டச்சுப்படைகள் தோல்வியடைந்தபின் தப்பியோடியவர்கள் குளச்சல் துறைமுகத்தில் நிறுத்தி வக்கப்பட்ட தங்கள் கப்பல்களில் ஏறி கொச்சி நோக்கிச் சென்று விட்டனர். திருவிதாங்கூர்ப் படை 24 டச்சு வீரர்களை சிறைபிடித்ததுடன் குளச்சலில் இருந்த டச்சுப் படைத்தளத்திலிருந்து பீரங்கிகளையும் வாள்கள் மற்றும் சில இதர போர் ஆயுதங்களையும் கைப்பற்றினர். இப்போரில் ராமன் ஐயன் தளவாய், அனந்த பத்மனாபன் தளவாய் போன்றோர், மார்த்தாண்ட வர்மாவுக்கு பேருதவியாக இருந்தனர்.

இப்போரின் பின் டச்சுக்காரர்களின் இந்திய வணிகம் பெருமளவில் கட்டுப்படுத்தப் பட்டது. 1741-ம் ஆண்டு ஜூலை 31-ந் தேதி  நிகழ்ந்த போரின் வெற்றியின் நினைவாக குளச்சல் கடற்கரையில் “விக்டரி பில்லர்” என்ற வெற்றித்தூண் நிறுவப்பட்டது.

 

Share
Categories
இந்திய சினிமா கேரளா சினிமா

நடிகை பாவனா கடத்தல் : நடிகர் திலீப்பிடம் விசாரணை; காவ்யா மாதவன் நிறுவனத்தில் சோதனை

நடிகை பாவனா கடத்தல் வழக்கை போலீசார் மிகவும் தீவிரமாக நடிகர் திலீப், நதிர்ஷா
ஆகியோரிடம்  விசாரித்து வருகின்றனர். இந்த கடத்தலில் முக்கிய குற்றவாளி என கைது செய்யப்பட்டிருக்கும் பல்சர் சுனிலிடம் இருந்து நடிகர் திலீப்பிற்கு கடிதம் வந்ததையடுத்து போலீசார் நடிகரிடம் 13 மணிநேரம் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் காக்கநாட்டில் நடிகர் திலீப்பின் 2வது மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவனுக்கு சொந்தமான ஆன்லைன் ஆடை நிறுவனம் இருப்பது தெரியவந்தது. அதனால் அந்த ஆடை நிறுவனத்தை போலீசார் கடந்த சில நாட்களாக ரகசியமாக கண்காணித்தனர்.

பின்னர், போலீசார் அங்கு சுமார் 3 மணி நேரம் சோதனை நடத்தினர். அப்போது சில ஆவணங்களை போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. நடிகை பாவனா விவகாரத்தில் காவ்யா மாதவன் நிறுவனத்தில் போலீசார் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

Share
Categories
இந்தியா கேரளா மாநிலங்கள்

மோடியின் மாடு விற்பனை தடையை எதிர்த்து கேரளாவின் பல இடங்களில் மாட்டுக்கறி சாப்பிடும் போராட்டம்

மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து, கேரளா முழுவதும் பல்வேறு இடங்களில் மாட்டுக்கறி சாப்பிடும் போராட்டம் நடைபெற்றது.

முஸ்லீம் மக்கள் மட்டுமின்றி, நாட்டின் பெருமளவு மக்களால், மாட்டுக்கறி உண்ணப்படுகிறது. விலை மலிவு என்பதோடு, அதிக சத்தானபொருள் என்பதால், இதனை அடித்தட்டு மக்கள் மட்டுமின்றி, நடுத்தர மக்களும் உண்பது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் திடீரென மாடுகளை இறைச்சிக்காக விற்கவும், கொல்லவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. மத்திய அரசின் இந்த செயலுக்கு, நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

குறிப்பாக, கேரளாவில் இந்த தடை உத்தரவை ஒருபோதும் செயல்படுத்த முடியாது என்றும், இதனை வாபஸ் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதற்கிடையே, கேரளாவின் பல்வேறு இடங்களிலும் மாட்டுக்கறி சாப்பிடும் போராட்டங்களை, எஸ்எஃப்ஐ மாணவர் அமைப்பினர் நடத்திவருகின்றனர். நேற்று, திருவனந்தபுரம் பல்கலைக்கழக வளாகத்தில் கூடிய ஏராளமான மாணவர்கள், மாட்டுக்கறி சமைத்து, உண்டு, ஆரவாரம் செய்தனர்.

இதேபோன்ற போராட்டங்கள், கேரளாவில் மற்ற கல்வி நிறுவனங்களிலும் நடைபெற்றன. மக்களின் உணவில் கை வைக்கும் உரிமை மத்திய அரசுக்கு கிடையாது என்று, அப்போது மாணவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர்.

Share
Categories
இந்தியா குற்றம் கேரளா மாநிலங்கள்

பாலியல் கொடுமை தாங்க முடியாமல் சாமியாரின் ஆணுறுப்பை வெட்டிய இளம்பெண்

இந்தியாவின் கேரள மாநிலத்தில், பல ஆண்டுகளாக இந்துமத சாமியார் ஒருவர் தன்னை பாலியல் வல்லுறவு செய்ததாகக் கூறி, அவரது ஆணுறுப்பை வெட்டினார் ஆத்திரமடைந்த 23 வயது இளம் பெண்.

பாதிப்புக்குள்ளான பெண்ணின் நடவடிக்கையைப் பாராட்டியுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆணுறுப்பை வெட்டியது என்பது ஓர் அசாத்தியமான மற்றும் தைரியமான செயல் என்று கூறியுள்ளார்.

குற்றச்சாட்டுகளுக்கு ஆளான சந்தேக நபரின் பெயர் கங்கேஷானந்தா தீர்த்தபடா என்றும், அவர் உடல்நலமின்றி அவதிப்பட்டு வரும் அப்பெண்ணின் தந்தைக்கு பிரார்த்தனை சடங்குகளை செய்ய அடிக்கடி வீட்டிற்கு வருவார் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

குடும்பத்தில் ஏற்பட்டுள்ள துயரங்களிலிருந்து தன்னுடைய பூஜையின் மூலம் இந்த புனித மனிதர் தங்களை காப்பாற்றுவார் என்று அப்பெண்ணின் தாயார் நம்பியிருந்தார்.

ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு, இளம்பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த தீர்த்தபடா முயற்சித்த போது அப்பெண் கத்தி ஒன்றை எடுத்து தாக்கியுள்ளார். அதன்பின், போலீஸாருக்கும் அவரே தகவல் கொடுத்துவிட்டார்.

பாலியல் வல்லுறவுக்கு முயற்சித்ததாக கூறப்படும் நபர் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் அவசர அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

 

Share
Categories
இந்தியா உயர் கல்வி கேரளா மருத்துவம் மாநிலங்கள்

நீட் தேர்வில் உள்ளாடையை அகற்றச் சொன்னது ஒருசிலரின் தனிப்பட்ட ஆர்வமிகுதியாலாம்

கேரளாவின் கன்னூர் பள்ளி ஒன்றில், நீட் தேர்வு எழுத வந்த மாணவி ஒருவரின் உள்ளாடையை அகற்றச் சொன்னதாக, கண்காணிப்பாளர்கள்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவ்வாறு உத்தரவிட்டது யாரோ சில கண்காணிப்பாளர்களின் தனிப்பட்ட ஆர்வமிகுதியின் விளைவு என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. அச்சம்பவத்தில் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர்கள் நான்கு பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும், மே 7ஆம் தேதியன்று நடைபெற்ற மருத்துவப் படிப்பில் சேருவதற்கான, நீட் எனப்படும், தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு எழுத வந்த மாணவ, மாணவியர் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதால் அவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இதுபற்றி கேரளத்தைச் சேர்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் பி.கே. ஸ்ரீமதி, “மாணவியின் மேல் உள்ளாடையை அகற்றுமாறு கூறியது, மனிதாபிமானமற்ற, வெட்கக்கேடான செயல்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

“உள்ளாடையில், மெட்டல் கொக்கி இருந்த காரணத்தால், அதை அகற்றுமாறு கோரப்பட்டிருக்கிறார். அதனால், ஒரு நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு உணர்வுடன் அவரால் தேர்வை எழுதியிருக்க முடியாது. இது அந்தப் பெண்ணின் மனித உரிமையை மீறும் செயல்” என்று கூறிய ஸ்ரீமதி, ஆடை கட்டுப்பாட்டு விதிமுறைகளை மறு ஆய்வு செய்யுமாறு தேர்வை நடத்தும் சிபிஎஸ்இ நிர்வாகத்தைக் கேட்டுக் கொள்ளப் போவதாகத் தெரிவித்தார்.

 

 

Share