Categories
இந்தியா குஜராத் தலைப்புச் செய்திகள் மாநிலங்கள்

குஜராத் ராஜ்யசபா தேர்தலில் அகமது பட்டேல், அமித் ஷா, ஸ்மிருதி இரானி வெற்றி

குஜராத்தில் இருந்து ராஜ்யசபாவில் காலியாக உள்ள 3 இடங்களுக்கு  தேர்தல் நடைபெற்றது. பா.ஜ.க. சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி மற்றும் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்த பல்வந்த்சிங் ராஜ்புத்  ஆகியோரும் போட்டியிட்டனர். காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமது பட்டேல் போட்டியிட்டார். இருந்த 3 இடங்களுக்கு 4 வேட்பாளர்கள் களத்தில் இருந்ததால், தேர்தலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காங்கிரஸின் அகமது பட்டேல் வெற்றிக்கு தேவையான 44 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். பா.ஜ.க., காங்கிரஸ் இடையேயான கவுரவ யுத்தத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அகமது படேலின் வெற்றியை காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். வெற்றி பெற்ற அகமது பட்டேல், “வாய்மையே வெல்லும்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் இருவர் பா.ஜ.க.வுக்கு ஓட்டளித்தனர். இதனையடுத்து இரு ஓட்டுகளை செல்லாததாக அறிவிக்கக்கோரி காங்கிரஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. தேர்தல் கமிஷன் இந்த இரண்டு ஓட்டுக்களையும் நிராகரித்தபின் அகமது பட்டேல் ஜெயித்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, தேர்தல் ஆணையத்தின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், வரும் நாட்களில் தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து சட்டப்படி போராடுவோம் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

Share
Categories
இந்தியா காங்கிரஸ் குஜராத் தலைப்புச் செய்திகள் ராகுல் காந்தி

குஜராத்: ராகுல்காந்தி கார் மீது பா.ஜ.க.வினர் கல்வீசி தாக்குதல்

பா.ஜ.க. ஆளும் மாநிலமான குஜராத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி பயணம் செய்த கார் மீது பா.ஜ.க. -வினர் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் பனஸ்கந்தாவில் நடந்த இத்தாக்குதலினால்,  ராகுல் காந்தியின் கார் கண்ணாடிகள் உடைந்து கல் உள்ளே சென்றுள்ளது. அதிருஷ்டவசமாக ராகுல் காந்தி காயமின்றி தப்பினார்.  குஜராத் ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் வென்றுவிடும் என்ற பாஜகவின்  வெறுப்புணர்வால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

மேலும்,  உச்சபட்ச பாதுகாப்பில் உள்ள ராகுல் காந்தி மீதான இந்த தாக்குதல், குஜராத் மாநில அரசின் பாதுகாப்பு குளறுபடியை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளதுடன் தேசிய அளவில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

 

Share
Categories
இந்தியா கர்நாடகா காங்கிரஸ் குஜராத் தலைப்புச் செய்திகள் பா.ஜனதா

குஜராத் காங். எம்.எல்.ஏ.க்கள் 44 பேர் பெங்களூரில் தஞ்சம், 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா

குஜராத்தில்  காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இரண்டு நாட்களில் ராஜினாமா செய்ததையடுத்து, மீதமுள்ளவர்களை பாதுகாக்க 44 எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு பெங்களூரில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

குஜராத்தில் வருகின்ற ஆகஸ்ட் 8-ம் தேதி 3 மாநிலங்களவை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.  அங்கு பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. இங்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள் கடந்த இரண்டு நாட்களில் அடுத்தடுத்து ராஜினாமா செய்துள்ளனர். அதில் மூன்று பேர் பா.ஜ.க.வி. இணைந்துவிட்டனர். பணத்தையும், அதிகாரத்தையும் வைத்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை மிரட்டுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

இந்த நிலை மேலும் தொடராமல் தடுக்க எஞ்சிய எம்.எல்.ஏ.க்கள் 44 பேரும் இரவோடு இரவாக பெங்களூருவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் சொந்த ஊரில் இருக்கும் பட்சத்தில் பிரதமர் நரேந்திர மோடியோ, பாஜக கட்சியினரோ குதிரைபேரம் நடத்தி அவர்களை மிரட்டி தங்களது பக்கம் வளைத்துவிடுவார் என்பது காங்கிரசாரின் அச்சம்.

மானிலங்களவை வேட்பாளர்களாக பா.ஜ.க. சார்பில் அக்கட்சியின் தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய மந்திரி ஸ்மிரிதி ராணி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் சார்பில் அகமது பட்டேல் களமிறங்குகிறார். பட்டேல் வெற்றி பெற வேண்டுமானால் கண்டிப்பாக 44 எம்.எல்.ஏ.க்களின் ஓட்டுகளும் தேவை. எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் குறைந்தால் கூட அவர்களது வெற்றி கேள்விக்குறி ஆகிவிடும். இதை தடுக்கவே கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்க வைத்தது போலவே, குஜராத்தை விட்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். காங்கிரஸ் ஆட்சி நடத்தும் கர்நாடகாவில் அவர்கள் சில நாட்கள் தங்க வைக்கப்படுவதே பாதுகாப்பு என்று கருதி அந்த கட்சி இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.

Share
Categories
இந்தியா கட்சிகள் காங்கிரஸ் குஜராத் தலைப்புச் செய்திகள்

குஜராத் முன்னாள் முதல்வர் வகேலா காங்கிரசில் இருந்து நீக்கம்

குஜராத் முன்னாள் முதல்வர் ஷங்கர்சிங் வகேலா காங்கிரசில் இருந்து நீக்கப் பட்டார்.

குஜராத் மாநிலத்தின் முதல் மந்திரியாக கடந்த 1996 – 1997-ம் ஆண்டில் பதவி வகித்தவர் ஷங்கர்சின்ஹ் வகேலா. பா.ஜ.க.வை சேர்ந்த இவர் கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். எதிர்வரும் குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் ஷங்கர்சின்ஹ் வகேலா-வை முதல் மந்திரி வேட்பாளராக காங்கிரஸ் மேலிடம் அறிவிக்க வேண்டும் என இவரது ஆதரவாளர்கள் கட்சிக்குள் போர்க்கொடி உயர்த்தி இருந்தனர். ஆனால், இதுதொடர்பாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை இறுதிமுடிவு எதுவும் எடுக்காமல் தாமதப்படுத்தி வருகிறது.

இதற்கிடையில், சமீபத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வகேலாவுக்கு ஆதரவான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் எட்டு பேர் கட்சி மேலிடத்தின் உத்தரவை மதிக்காமல் பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரித்து வாக்களித்திருந்தது கட்சியின் தலைமைக்கு தெரியவந்தது.

இந்நிலையில், வெள்ளியன்று தமது 77-வது பிறந்தநாள் கொண்டாடிய அவர், பிறந்தநாள் உரையில் கட்சிக்கு எதிரான கருத்துக்களை தாம் தெரிவித்துவிடக் கூடும் என்ற எண்ணத்தில், தம்மை காங்கிரஸ் கட்சி 24 மணி நேரத்துக்கு முன்னதாகவே அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கிவிட்டதாகக் கூறியுள்ளார். இருப்பினும், தாம் அரசியலிலிருந்து ஓய்வு பெறும் திட்டமில்லை என்றும் வகேலா தெளிவுபடுத்தினார்.

காங்கிரஸின் குறுகிய எண்ணம், பாஜகவின் அதிர்ஷ்டமும், பாஜகவை ஆட்சிக்கு கொண்டுவந்துவிட்டதாகக் கூறிய அவர், பாஜகவிற்குத் திரும்பச் செல்லும் எண்ணம் இல்லை என்றும் குறிப்பிட்டார். பிரதமர் மோடியை பாஜக செயல்குழுவுக்கு அனுப்பியது, ஆனந்தி பென் பட்டேலை அரசியலில் அறிமுகப்படுத்தியது, தகவலறியும் உரிமைச் சட்டத்துக்கான யோசனையை வழங்கியது என தமது சாதனைகளாக பலவற்றையும் பிறந்தநாள் உரையில் அவர் பட்டியலிட்டார்.

Share