Categories
அமெரிக்கா ஆந்திர பிரதேசம் இந்தியா தலைப்புச் செய்திகள்

அமெரிக்கா: விமான விபத்தில் ஆந்திர டாக்டர் தம்பதி பலி

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள லோகன்ஸ் போர்ட் நகரில் வசித்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த மனோநல மருத்துவர்-தம்பதி உமாமகேஸ்வர் ராவ் காலாபடபு (வயது 63), சீதாகீதா (வயது 61). இவர்கள் பயணம் செய்த பைப்பர் ஆர்ச்சர் பி.ஏ.28 விமானம் விபத்துக்குள்ளானதில் இருவரும் இறந்தனர்.

இவர்கள் இருவரும் இணைந்து லோகன்ஸ்போர்ட் நகரில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ‘ராஜ் கிளினிக்’ என்ற பெயரில் மனநல மருத்துவமனை நடத்தி வந்தனர். இண்டியானா மாகாணத்தின் பல்வேறு நகரங்களில் இதன் கிளை மருத்துவமனைகள் உள்ளன. கடந்த 8-ந் தேதி இவர்கள் இருவரும் தங்களுக்கு சொந்தமான சிறிய விமானத்தில் லோகன்ஸ்போர்ட் நகரில் இருந்து புறப்பட்டனர். விமானத்தை உமாமகேஸ்வர் இயக்கினார். இந்த விமானம் ஓகியோ மாகாணத்தின் தெற்கு பகுதியில் பெவர்லி என்ற கிராமத்துக்கு அருகே பறந்து கொண்டிருந்த போது திடீரென தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த கோரவிபத்தில் உமாமகேஸ்வர், சீதாகீதா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

உமாமகேஸ்வர் சிறந்த புகைப்பட கலைஞர் ஆவார். தனது புகைப்பட கலைக்காக பல்வேறு மாநில மற்றும் தேசிய விருதுகளை பெற்று உள்ளார். அதே போல் சீதாகீதா சிறந்த இசைக்கலைஞர் ஆவார்.

Share
Categories
ஆந்திர பிரதேசம் இந்தியா

இனி ஆதார் இருந்தால் தான் திருப்பதி லட்டு : தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி கோவிலில் லட்டு பெறுவதற்கு ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் கூறியுள்ளது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆண்டு முழுவதும், இந்த கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும்.

ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டு செல்லும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. ஏழுமலையான தரிசிக்க எப்படி வரிசையில் நிற்கின்றனரோ அதே போல லட்டு பிரசாதம் வாங்கவும் வரிசையில் காத்திருந்துதான் வாங்கவேண்டும்.

இந்நிலையில் ஆதார் அட்டை இருந்தால் தான் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு வழங்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. குளறுபடிகள் இல்லாமல், பக்தர்களுக்கு வெளிப்படையான சேவைகளை வழங்குவதற்காக தரிசன டிக்கெட், பிரசாதங்கள் உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் ஆதார் அட்டையை கட்டாயமாக்கும் நடவடிக்கைகளை தேவஸ்தானம் எடுத்து வருகிறது.

இந்த நடைமுறை சில மாதங்களுக்கு பிறகே அமலுக்கு வரும் என்றாலும், மக்களிடையே ஆதார் கட்டாயம் குறித்த விழிப்புணர்வை முன்கூட்டியே ஏற்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. மூத்தகுடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மட்டும் சிறப்பு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Share