Categories
இந்தியா தலைப்புச் செய்திகள் பிரதமர் மோடி

இந்தியாவின் 71-ம் சுதந்திர தினம்: பிரதமர் மோடி கொடியேற்றி உரை

இந்திய நாட்டின் 71-வது சுதந்திர தின விழா டெல்லியில் சிறப்பாக நாடு முழுவதும்  கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

“1947, ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தியதி” என்பது ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும், நினைவிலும் நிற்கும் தினமாகக் கருதப்படுகிறது. அந்நாள், “நமது நாட்டின் உதய நாள்” என்றால் சொன்னால் அது மிகையாகாது.

இதனை முன்னிட்டு, தலைநகர் புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றினார். அதன் பின்னர் மோடி ஆற்றிய உரையில் கூறியதாவது :

“வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்வில் பங்கேற்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். உத்தரபிரதேச மருத்துவமனையில் குழந்தைகள் இறந்தது, எல்லைப் பகுதியில் நீடிக்கும் சிக்கல் போன்ற பல பிரச்சனைகளை கடந்து, சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம். கோரக்பூரில் குழந்தைகள் உயிரிழந்ததால் இந்த நாடே மன வேதனையில் உள்ளது.”

மேலும் அவர் கூறுகையில், 2022-க்குள் ஒரு புதிய இந்தியா படைத்திட நாம் ஒன்றிணைந்து உறுதி ஏற்போம் என அவர் கூறினார். நாட்டில் அனைவரும் சமம்; நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்று பிரதமர் மோடி உரையில் கூறியுள்ளார் புதிய இந்தியாவை உருவாக்கும் உறுதியுடன் நாம் அனைவரும் பயணிக்க வேண்டும் என்றும் பிரதமர் கூறியுள்ளார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75 வது ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுகிறோம் என மோடி உரையில் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு செயலையும் தேசபக்தியுடன் செய்தால் நினைக்கும் புதிய இந்தியா உருவாகும் என்று அவர் கூறினார். மக்கள் ஒத்துழைத்தால் அடுத்த 5 ஆண்டுகளில் புதிய இந்தியா பிறக்கும் என்று கூறினார்.

சுதந்திர தின விழாவின்போது அருண் ஜெட்லி, தேவ கவுடா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துகொண்டனர். மத்திய அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் விழாவில் கலந்துகொண்டார்கள்.

 

Share
Categories
இந்தியா கட்சிகள் காங்கிரஸ் தலைப்புச் செய்திகள் மோடி

காங்கிரஸ் கட்சியை ஒழித்துக் கட்ட முயலும் மோடி, அமித்ஷாவின் செயல்பாடுகள்: ஜெய்ராம் ரமேஷ்

காங்கிரஸ் கட்சியை ஒழித்துக் கட்ட முயலும் மோடி, அமித்ஷாவின் அராஜகச் செயல்பாடுகளால் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.  எனவே அனைவரும் ஒன்றிணைந்து  மோடி, அமித் ஷா ஆகியோர் கொடுக்கும் சவால்களைச் சந்திக்க வேண்டும் என்று  ஜெய்ராம் ரமேஷ் காங்கிரஸ் தலைவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

வழக்கமான அணுகுமுறை மோடி, ஷா கூட்டணிக்கு எதிராக ஒருபோதும் செல்லுபடியாகாது  என்று ஜெய்ராம் ரமேஷ் எச்சரித்துள்ளார்.

ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. 1996-2004 இடையே அதிகாரத்தில் இல்லாத போது தேர்தலில் வெற்றிபெற வேண்டிய  நெருக்கடியைத்தான் காங்கிரஸ் சந்தித்து வந்தது. எமெர்ஜன்சிக்குப் பிறகான 1977-லும் தேர்தல் நெருக்கடியைத்தான் சந்தித்து வந்தது.

ஆனால் இன்று காங்கிரஸ் சந்தித்து வருவது அது ஒரு கட்சியாக தொடர்வதற்கே விடுக்கப்பட்ட  நெருக்கடி மிகுந்த சவாலாகும். இது தேர்தல் நெருக்கடி அல்ல. கட்சி தொடர்ந்து செயல்படுவதைக் குறித்த ஆழமான நெருக்கடியில் இருக்கிறது.

நாம் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோருக்கு எதிராக நிற்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் வித்தியாசமாக சிந்தித்து, வித்தியாசமாகச் செயல்படுகிறார்கள். எனவே நாமும் நம் அணுகுமுறையை மாற்றாவிட்டால்,  நாம் தொடர்பற்று போய்விடுவோம், அன்னியப்பட்டுப் போய்விடுவோம், இதனை நான் உள்ளபடியே கூறுகிறேன்.

காங்கிரஸ் கட்சி இந்தியா மாறிவிட்டது என்பதை அங்கீகரிக்க வேண்டும். பழைய கோஷங்கள் எடுபடாது, பழைய உத்திகள் செல்லாது. பழைய மந்திரங்கள் ஒன்றுமில்லாமல் போய்விடும். இந்தியா மாறிவிட்டது, காங்கிரஸ் கட்சியும் மாற வேண்டும்.

2017 இறுதியில் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்பார் என்று நினைக்கிறேன். 2019 தேர்தலில் மோடிக்கு வலுவான சவால் அளிக்க வேண்டுமெனில் தனிநபர் மந்திரக்கோல் உதவாது மாறாக கூட்டு பலத்தையே மோடிக்கு எதிராக நம்பவேண்டும். நம்மிடமிருந்து அதிகாரம் போய் விட்டது, ஆனால் இன்னமும் சுல்தான்கள் போல் சிலர் நடந்து கொள்கின்றனர். நாம் சிந்திக்கும் முறையையே மாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது.

காங்கிரஸ் மீது மக்களுக்கு நல்லெண்ணம் உள்ளது, ஆதரவும் உள்ளது ஆனால் மக்கள் புதிய காங்கிரஸைக் காண விரும்புகின்றனர். பழைய மந்திர உச்சாடனங்களை அவர்கள் விரும்பவில்லை. இதனை உண்மையான, மிகப்பெரிய சவாலாக காங்கிரஸ் கருத வேண்டும்.

நிதிஷ் குமார் விவகாரம் குறித்து தனிப்பட்ட முறையில் நான் அதிர்ச்சியடைந்தேன், ஆழமான ஏமாற்றமடைந்தேன். ஆனால் இதைப்பற்றியெல்லாம் யோசிக்க நேரமில்லை, நாம் மேலே முன்னேறிச் செல்ல வேண்டும்.

இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

Share
Categories
இந்தியா ஜி.எஸ்.டி. தலைப்புச் செய்திகள் பிரதமர் மோடி

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பினால் இந்தியாவில் பெரும் மாற்றமாம்: மோடி சொல்கிறார்

ஜிஎஸ்டி வரி விதிப்பினால் நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டுள்ளது என்றும், சகல பெருட்களின் விலைகளும் வெகுவாக  குறைந்துவிட்டது என்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மான் கி பாத் நிகழ்ச்சியில் இன்று வானொலியில் உரையாற்றிய நரேந்திர மோடி, சிறந்த முன்மாதிரியான திட்டத்துக்கு இது ஒரு உதாரணம் என்றார்.

மேலும் அவர் கூறியதாவது:

நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை கண்காணித்து வருகிறோம். அங்கு மத்திய மாநில அரசுகள் மீட்பு பணிகள் ஈடுபட்டுள்ளன. மீட்பு படையினர் தன்னலமில்லாமல் உழைத்து வருகின்றனர். நிவாரண பணிகளில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. உலக வெப்பமயமாதலால் எதிர்மறை பாதிப்பு ஏற்படுகிறது.

ஜிஎஸ்டி குறித்து நல்ல செய்தி வந்த வண்ணம் உள்ளது. ஜிஎஸ்டி பலன்கள் தெளிவாக உள்ளன. நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியுள்ளது. தொழில் செய்வது எளிதாகியுள்ளது. நாட்டின் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது. தினசரி உபயோகபடுத்தப்படும் பொருட்கள் விலை வெகுவாக குறைந்துள்ளது. அனைவருக்கும் முன்மாதிரியான திட்டத்தை அமல்படுத்தியுள்ளாம். இந்தியாவின் பலத்திற்கு ஜிஎஸ்டி உதாரணம்.

நமது வரலாற்றில் ஆகஸ்ட் மாதத்திற்கு சிறப்பான இடம் உள்ளது. ஆகஸ்ட்டில் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகஸ்ட் மாதம் துவங்கியது. இந்த போராட்டத்தை மகாத்மா காந்தி ஆரம்பித்த போது முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அதற்கு அடுத்த கட்டத்தில் இருந்த தலைவர்கள் இந்த போராட்டத்தை வெற்றிகரமாக செய்து காட்டினர். போராட்டத்தில் மக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கலந்து கொண்டனர்.

நாடு சுதந்திரம் பெற்று 70 வருடங்களாகி விட்டன. நாட்டு மக்கள் அனைவரும் நாட்டின் பிரச்னையை தீர்க்க முயற்சி செய்கின்றனர். வேலைவாய்ப்பை உருவாக்கவும், வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாம் பல சாதனைகள் படைத்துள்ளேம். அதேநேரத்தில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Share
Categories
இந்தியா குடியரசு தலைவர் தலைப்புச் செய்திகள் பிரதமர் மோடி

அப்துல் கலாமின் மணிமண்டபத்தை நரேந்திர மோடி திறந்துவைத்தார்

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 2 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, ராமேஸ்வரத்தை அடுத்து தங்கச்சிமடத்திலுள்ள பேக்கரும்பில் அப்துல் கலாமின் மணிமண்டபத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

கலாம் நினைவிடத்திற்கு வந்திறங்கிய மோடியை  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். எடப்பாடி பழனிச்சாமியுடன் தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிமுக எம்.பிக்கள் சிலரும் உடன் இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, வளாகத்தில் கொடி ஏற்றிவைத்துவிட்டு மணி மண்டபத்தை திறந்து வைத்த பிரதமர், அப்துல்கலாமின் குடும்பத்தாருடன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.

பின்னர், ‘அப்துல் கலாம் – 2020’ என்ற அப்துல் கலாமின் சாதனை பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Share
Categories
G-20 மாநாடு இங்கிலாந்து இந்தியா ஜெர்மனி தலைப்புச் செய்திகள் பிரதமர் மோடி

விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு இங்கிலாந்து பிரதமரிடம் மோடி வேண்டுகோள்

ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் ஜி-20 மாநாட்டில் கலந்துகொண்டபோது, இங்கிலாந்து பிரதமர் தெரசா மேவை சந்தித்த இந்தியப் பிரதமர் மோடி, விஜய் மல்லையாவை நாடு கடத்த ஒத்துழைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

ஜி 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற 2 நாள் மாநாடு ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் நரேந்திர மோடி, மாநாட்டுக்கு இடையே பல்வேறு நாட்டு தலைவர்களையும் சந்தித்து பேசினார். அதன்படி ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே, கனடா பிரதமர் ஜஸ்டின் டிரிடியூ ஆகியோரை நேற்று முன்தினம் சந்தித்தார்.

முன்னதாக அவர் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும்.

மாநாட்டின் நிறைவு நாளான நேற்று மேலும் பல்வேறு நாட்டு தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார். அதன்படி தென் கொரியா அதிபர் மூன் ஜே-இன்னை சந்தித்த பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கு இடையேயான சிறப்பு ஒத்துழைப்பை பலப்படுத்துவதற்கான உறுதியை வெளிப்படுத்தினார். அப்போது, தான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற போது கொரிய மொழியில் மோடி வாழ்த்தியதை மூன் மகிழ்வுடன் நினைவுகூர்ந்தார்.

நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க்குடனான சந்திப்பின் போது, இரு நாட்டு பொருளாதார உறவுகளை பலப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். அப்போது இந்தியாவின் தேசிய முதலீடு மற்றும் கட்டமைப்பு நிதியில் நார்வேயின் ஓய்வூதிய நிதிகள் மூலம் பங்களிக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

மேலும் இத்தாலி பிரதமர் ஜென்டோலினியை சந்தித்த மோடி, நவம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறும் உலக உணவு பதப்படுத்துதல் கண்காட்சியில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார். தங்கள் நாட்டு தொழில் துறையில் இந்தியா செய்துள்ள முதலீடுகளுக்காக மோடிக்கு, ஜென்டோலினி நன்றி தெரிவித்தார்.

இதைப்போல அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மேக்ரி, ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் ஆகியோருடனும் இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமர் பேசினார்.

இந்த சந்திப்புகளின் தொடர்ச்சியாக இங்கிலாந்து பிரதமர் தேரசா மேவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது இந்திய வங்கிகளில் இருந்து கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டுவிட்டு, இங்கிலாந்தில் தலைமறைவாக வசித்து வரும் விஜய் மல்லையா மற்றும் நிதி மோசடி வழக்கில் தேடப்படும் லலித்மோடி ஆகியோரை இந்தியாவுக்கு விரைவில் நாடு கடத்தும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்குமாறு தெரசாவை, மோடி கேட்டுக்கொண்டார்.

Share
Categories
G-20 மாநாடு உலகம் தலைப்புச் செய்திகள் பிரதமர் மோடி

“அரசியலில் சாதனை படைக்க சில நாடுகள் தீவிரவாதத்தை பயன் படுத்துகின்றன”: ஜி-20 மாநாட்டில் மோடி பேச்சு

இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஜி-20 அமைப்பின் 2 நாள் மாநாடு, ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் ஜி 20 நாட்டை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அனைவரும் பயங்கரவாத ஒழிப்பு குறித்து ஆலோசனை நடத்தினர்.  இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற  பிரதமர் மோடி பேசுகையில்,

தெற்கு ஆசியாவில் லஸ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, மத்திய கிழக்கு நாடுகளில் ஐ.எஸ்.ஐ.எஸ், அல் கொய்தா, நைஜீரியாவில் போஹோகாரம் என்று பல்வேறு பெயரில் தீவிரவாத குழுக்கள் செயல்படுகின்றன. இருந்தாலும் தீவிரவாதம் மற்றும் பலரை கொன்று குவிப்பது தான் அவர்களது நோக்கமும் குறிக்கோளும் ஆகும்.

‘‘பாகிஸ்தானில் பெருகி வரும் தீவிரவாதம் குறித்து கடுமையாக தாக்கினார். அப்போது அரசியலில் சாதனை படைக்க சில நாடுகள் தீவிரவாதத்தை பயன் படுத்துகின்றன. அதை ஜி20 அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் தடுத்து நிறுத்த வேண்டும்’’ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தை அமல்படுத்துவதில் பிரிக்க்ஸ் நாடுகளிடையே ஒருமித்த கருத்து தேவை. பயங்கரவாதத்திற்கு புகலிடம் அளிப்பதை நிறுத்த வேண்டும்; பயங்கரவாதத்திற்கு நிதியுதவி கிடைப்பதை தடுக்க வேண்டும்;  உலகளாவிய முறையில் பயங்கரவாதத்தை ஒழிக்கவும், பொருளாதாரத்தை பலப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
Share
Categories
இந்தியா பிரதமர் மோடி

மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிர் தப்பிய இந்திய சிறுவனை சந்தித்து பேசினார் மோடி

2008-ம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதலில் இந்திய சிறுவன் மோஷே ஹெல்ட்பர்க் அவனது பெற்றோரை இழந்தான் தற்போது இஸ்ரேலில் அவரது தாத்தா பாட்டியுடன் வசித்து வருகிறான்.  இந்த நிலையில் அரசுமுறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள  பிரதமர் மோடி சிறுவன் மோஷே ஹெல்ட்பர்கை சந்தித்து பேசினார்.
பிரதமர் மோடியை முதல் முறையாக பார்த்ததும் சிறுவன் ஓடிச்சென்று டியர் திரு.மோடி…. ஐ லவ் யூ என்று கண்ணீர் பெருக்குடன் பிரதமர் மோடியை கட்டி அணைத்து கொண்டான். அப்போது அந்த சிறுவனிடம் இந்தியாவிற்கு வந்தால் என்னை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்று உறுதி அளித்தார். சிறுவனுக்கும் அவனது சார்ந்த குடும்பத்திற்கும் நீண்ட கால விசா வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.
பிரதமர் மோடியை சந்தித்த பின் சிறுவன் மோஷே ஹெல்ட்பர்க்  செய்தியார்களிடம் கூறுகையில்,
பிரதமர் மோடி என்னை இந்தியாவிற்கு வருமாறு அழைத்துள்ளார். நீ என்னுடன் மும்பைக்கு வருவாயா என்று கேள்வி எழுப்பினார்.
இவ்வாறு அந்த சிறுவன் கூறினான்.
2008-ம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதல் நடந்த போது உயிர் தப்பிய அந்த சிறுவனுக்கு 2 வயது தற்போது 11 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Share
Categories
இந்தியா குடியரசு தலைவர் ஜி.எஸ்.டி. தலைப்புச் செய்திகள் பொருளாதாரம் மோடி

புதிய ஜி.எஸ்.டி வரிவிதிப்பு: பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி தொடங்கி வைத்தனர்

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் மோடி இன்று (வெள்ளிக் கிழமை) நள்ளிரவு பாராளுமன்றத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் தொடங்கி வைத்தனர்.

நம் நாட்டில் தற்போது இருக்கும் உற்பத்தி வரி, விற்பனை வரி என்ற பல்வேறு விதமான மறைமுக வரிகளுக்கு மாற்றாக, நாடு முழுவதும் ஒரே சீரான வரியான சரக்கு, சேவை வரி என்ற புதிய ஜி.எஸ்.டி. வரி  மத்திய அரசு முடிவு செய்தபடி, ஜூலை 1-ந் தேதி (இன்று) முதல் நாடு முழுவதும்  அமல்படுத்தப்பட்டது.

பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தின் நடைபெற்ற இந்த விழாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி முன்னிலை வகித்தார். பாராளுமன்றத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு ஜிஎஸ்டி அறிமுக கூட்டம் தொடங்கியது.  முதலில்  மத்திய மந்திரி அருண் ஜெட்லி  ஜி.எஸ்.டி குறித்து உரையாற்றினார். அவரை தொடர்ந்து  பிரதமர் மோடி ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை தொடங்கி வைத்து உரையாற்றினார். இறுதியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் ஜிஎஸ்டி குறித்து சிறப்பு உரையாற்றினார்.

அதனைதொடர்ந்து மணியடித்து ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி இணைந்து தொடங்கி வைத்தனர். நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு முறையான ஜிஎஸ்டி அமலுக்கு வந்தது.

ஜி.எஸ்.டி. தொடர்பாக பிரதமர் மோடி தனது உரையில் கூறியதாவது:

இன்று நள்ளிரவில் நாட்டின் எதிர்கால பாதையை முடிவு செய்ய இருக்கிறோம். இந்திய வரலாற்று நிகழ்விற்கு நாட்டின் 120 கோடி மக்களே சாட்சி. நாட்டின் கூட்டாச்சி தத்துவத்திற்கு இது ஒரு சிறந்த உதாரணமாக உள்ளது. இந்த முடிவு எடுப்பதற்காக பல்வேறு தரப்பினரின் உழைப்பு, அர்பணிப்பு இடம்பெற்று இருக்கிறது. நமது எல்லோரது முயற்சிக்கு கிடைத்த வெற்றி.

முதலில் மாநிலங்களுக்கு நிறைய சந்தேகங்கள் இருந்தது. தொடர்ந்து ஆலோசித்து வந்ததையடுத்து, அது தற்போது நீக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து முயற்சித்தால் எந்த ஒரு பொருளும் கிடைக்காமல் போகாது. சர்தார் வல்லபாய் பட்டேல் 500 பகுதிகளை சேர்த்து ஒரு தேசமாக காட்டினார்.

அதுபோலத்தான் பல்வேறு வரிகள் சேர்ந்து, ஜிஎஸ்டியாக உருவாகி உள்ளது. ஒரு பொருளின் தயாரிப்பு விலை ஒன்றாக இருக்கும், மாநிலத்திற்கு மாநிலம் அது மாறுபட்டு இருக்கும். ஜிஎஸ்டி வரியால்,அந்த நிலை மாறி, தேசம் முழுவதும் ஒரே வரியாக இருக்கும்.

மேலும் அவர் கூறுகையில், ஊழல்,கருப்பு பணத்தை ஒழிக்கவும் , அதிகாரிகள் தொந்தரவு குறையவும், வியாபாரத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நீக்கவும் ஜி.எஸ்.டி. உதவும் என்றார்.

 

Share
Categories
இந்தியா தலைப்புச் செய்திகள் பிரதமர் மோடி

பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களைக் கொல்வதை ஏற்கமுடியாது : மோடி

பசு பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களைக் கொலை செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று குஜராத்தில் பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

குஜராத்திலுள்ள சபர்மதி ஆசிரமத்தில் மகாத்மா காந்திஜியின் குருவான ஷ்ர்மத் ராஜ் சந்திராஜி அவர்களின் 150-வது பிறந்த தினத்தில் கலந்து கொண்டு பேசும் போது,  பசுப் பாதுகாவலர்களுக்கு கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். மேலும் வன்முறையைப் பின்பற்றுவது மகாத்மாவின் கொள்கைகளுக்கு எதிரானது என்றார்.

நாடு முழுவதும் மாட்டுக்கறி உண்பவர்கள் மற்றும் மாடுகளை விற்பனைக்காகக் கொண்டு செல்பவர்களை, பசுக் காவலர்கள் தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் இந்தச் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன.

டெல்லியில் கடந்த இரு தினங்களுக்கு முன், ரயிலில் மாட்டுக்கறி எடுத்துச் சென்றதாக கூறி இஸ்லாமியச் சிறுவர்கள் மீது பசுக் காவலர்கள் கடுமையாக தாக்குதல் நடத்தினர். அதில், ஜுனைத் கான் என்ற 16 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டான். இந்தச் சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி இதுவரை எந்த ஒரு கண்டனத்தையும், கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சனங்கள் எழுப்பி இருந்தன. இந்த நிலையில் குஜராத் மாநிலத்திற்கு இரண்டு நாள் பயணமாக சென்ற பிரதமர் மோடி, காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.

Share
Categories
இந்தியா தலைப்புச் செய்திகள் பிரதமர் மோடி

‘வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்தியாவின் சிறப்பு’: மோடி நெதர்லாந்தில் பெருமிதம்

வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்தியாவின் சிறப்பு என நெதர்லாந்து வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

சமீபத்திய பயணத்தின் ஒருபகுதியாக நெதர்லாந்து சென்ற பிரதமர் மோடி, அங்கு நெதர்லாந்து வாழ் இந்திய மக்கள் முன்னிலையில் உரையாற்றினார். இதில் 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

இங்குள்ளவர்களில் பலர் ஓ.சி.ஐ., கார்டு இல்லாமல் உள்ளனர். 10 சதவீத பேர் மட்டுமே வைத்துள்ளனர். இந்தியாவில் இருந்து இங்கு புலம்பெயர்ந்தவர்கள் அனைவருக்கும் ஓ.சி.ஐ., கார்டு வழங்கப்படும். டச்சு பாஸ்போர்ட் வைத்திருப்போருக்கு இந்தியா வர 5 ஆண்டுக்கான விசா வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும். சிறந்த அரசால் மட்டுமே நாட்டில் நல்லாட்சி அமைத்துவிட முடியாது. அதற்கு மக்களின் பங்களிப்பும் அவசியம். தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் நாட்டில் கழிப்பறைகள் கட்டப்படுகின்றன. இத்திட்டம் வெற்றியடைய மக்களின் பங்களிப்பு தேவை.

வங்கிகள், ஆற்றல் சக்தி, விண்வெளி ஆராய்ச்சி, சுத்தம், சுகாதாரம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவற்றில் எனது தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 21-ம் நூற்றாண்டில் இந்தியா உட்கட்டமைப்பு மற்றும் பிற துறைகளில் உலகத்தரத்தில் விளங்கும். இனம், மொழி, பண்பாடு, கலாசாரம் என பலவற்றால் வேற்றுமையாக இருப்பினும், இந்தியர்களிடம் இருக்கும் ஒற்றுமையே இந்தியாவின் சிறப்பான அடையாளம்.

இவ்வாறு அவர் கூறினார். மேலும் அவர், கிராமங்களுக்கு மின்வசதி வழங்கப்படும் திட்டத்தில்  இதுவரை 14 ஆயிரம் கிராமங்கள் வரை மின்வசதி வழங்கப்பட்டு விட்டது என்றும் தெரிவித்தார்.

 

 

Share