Categories
இந்தியா கட்சிகள் காங்கிரஸ் காங்கிரஸ் தமிழகம் ப.சிதம்பரம்

ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரது வீடுகளில் சிபிஐ சோதனை

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரது வீடுகளில் சிபிஐ சோதனை நடைபெற்றது. ப.சிதம்பரம் வீட்டில் காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை மதியம் 1 மணிக்கு முடிந்தது.

ப.சிதம்பரம் வீட்டில் நடைபெற்ற சோதனை குறித்து சிபிஐ அதிகாரிகள் கூறியதாவது:

”மும்பையைச் சேர்ந்த இந்திராணி முகர்ஜி, அவரது 2-வது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோர்(ஷீனா போரா கொலை வழக்கில் கைதானவர்கள்) ஐஎன்எக்ஸ் மீடியா என்ற பெயரில் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தை தொடங்கினர். இந்த நிறுவனத்தின் முதலீட்டை அதிகரிப்பதற்காக நிறுவன பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய வெளிநாட்டு முதலீடு மேம்பாட்டு வாரியத்துக்கு(எப்ஐபிபி) விண்ணப்பித்தனர். அதைத் தொடர்ந்து ரூ.4 கோடியே 62 லட்சத்து 16 ஆயிரத்துக்கு மட்டும் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய எப்ஐபிபி அனுமதி கொடுத்தது. ஆனால் ஐஎன்எக்ஸ் நிறுவனம் ரூ.305 கோடிக்கு பங்குகளை விற்பனை செய்தது.

இந்த மோசடி நடந்த காலத்தில் நிதி அமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். ஐஎன்எக்ஸ் நிறுவன இயக்குநராக இருந்த இந்திராணி முகர்ஜியுடன் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் பலமுறை போனில் பேசியதற்கான ஆதாரங்கள் உள்ளன. ஐஎன்எக்ஸ் நிறுவனம் தனது பங்குகளை விற்று முடித்த சில நாட்களில் கார்த்தி சிதம்பரம் நடத்தி வரும் செஸ் மேனேஜ்மென்ட் சர்வீஸ் நிறுவனத்துக்கு ரூ.3 கோடியே 50 லட்சம் வந்துள்ளது. முறைகேடாக நிறுவன பங்குகளை விற்க உதவி செய்ததற்காக இந்த தொகை வழங்கப்பட்டு இருக்கலாம்” என்றனர்.

Share
Categories
இந்தியா காங்கிரஸ்

காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்கிற்கு தெலுங்கானா அரசு எச்சரிக்கை

(தினபூமி)

தெலுங்கானா போலீசார் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் விமர்சனம் செய்திருப்பதற்கு அந்த மாநில அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் கட்சியின் அரசியல் விவகாரங்களை கவனிக்கும் திக்விஜய் சிங் தெலுங்கானா அரசு மீது புகார் கூறியுள்ளார். முஸ்லீம் இளைஞர்கள் தீவிரவாதிகளாக்கும் வகையில்  தெலுங்கானா மாநில போலீசார் போலி ஐஎஸ்ஐஎஸ். வெப்சைட்டை உருவாக்கியுள்ளனர் என்று கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார். இதற்கு அந்த மாநில அரசு கடுமையான கண்டனத்தை தெரிவித்திருப்பதோடு திக்விஜய் சிங் அவ்வாறு கூறியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். அல்லது புகாரை நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

தெலுங்கானா மாநில போலீசாரின் திறமையான செயல்பாட்டுக்காக பாராட்டுப்பட்டு வருகிறது. இந்தநிலையில் போலீசார் மீது இந்த மாதிரியான குற்றச்சாட்டை திக்விஜய் சிங் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டை திக்விஜய் நிரூபிக்க வேண்டும் என்று மாநில உள்துறை அமைச்சர் நயானி நரசிம்ம ரெட்டி நேற்று ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். திக்விஜய் சிங் தனது குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும். முடியாவிட்டால் அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது மாநில போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அமைச்சர் ரெட்டி கூறினார். மாநில அரசும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்.  ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. கோபிநாத் ஏற்கனவே திக்விஜய் மீது போலீசில் புகார் செய்துள்ளார்.தீவிரவாதத்தில் சேரும்படி இளைஞர்களை போலீஸார் தூண்டிவிடுவார்களா ?என்றும் ரெட்டி கேள்வி எழுப்பினார். மத்தியப்பிரதேச மாநில முதல்வராக இருந்தவரும் தெலுங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களின் காங்கிரஸ் அரசியல் விவகாரங்களை கவனிக்கும் திக்விஜய் சிங், இவ்வாறு பொறுப்பில்லாமல் கூறியிருப்பது துரதிர்ஷ்டவசமானது என்றும் அமைச்சர் ரெட்டி மேலும் கூறினார்.

Share
Categories
இந்தியா கட்சிகள் காங்கிரஸ்

விவசாயிகள் போராட்டத்தில் நானும் பங்கேற்க உள்ளேன்: நக்மா பேட்டி

மதுரை விமான நிலையத்தில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மகளிர் அணி பொறுப்பாளரும் நடிகையுமான நக்மா நிருபர்களிடம் கூறியதாவது:

மத்தியில் உள்ள பாரதிய ஜனதா அரசு விவசாயிகளின் குறைகளை கேட்பதில்லை. டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தியும் நடவடிக்கை இல்லை.

விவசாயிகள் போராட்டத்தில் நானும் பங்கேற்க உள்ளேன். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசை மத்தியில் உள்ள பா.ஜனதா அரசு இயக்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மகளிரணி செயலாளர் ஷோபா ஆஷா கூறியதாவது :

பாரதிய ஜனதா அரசு விவசாயிகளின் பிரச்சனைகளில் அக்கறை செலுத்தவில்லை. இதனால் நாடெங்கும் விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். தமிழக விவசாயிகள் போராட்டத்திற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Share