Categories
இந்தியா கட்சிகள் காங்கிரஸ் தலைப்புச் செய்திகள் மோடி

காங்கிரஸ் கட்சியை ஒழித்துக் கட்ட முயலும் மோடி, அமித்ஷாவின் செயல்பாடுகள்: ஜெய்ராம் ரமேஷ்

காங்கிரஸ் கட்சியை ஒழித்துக் கட்ட முயலும் மோடி, அமித்ஷாவின் அராஜகச் செயல்பாடுகளால் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.  எனவே அனைவரும் ஒன்றிணைந்து  மோடி, அமித் ஷா ஆகியோர் கொடுக்கும் சவால்களைச் சந்திக்க வேண்டும் என்று  ஜெய்ராம் ரமேஷ் காங்கிரஸ் தலைவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

வழக்கமான அணுகுமுறை மோடி, ஷா கூட்டணிக்கு எதிராக ஒருபோதும் செல்லுபடியாகாது  என்று ஜெய்ராம் ரமேஷ் எச்சரித்துள்ளார்.

ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. 1996-2004 இடையே அதிகாரத்தில் இல்லாத போது தேர்தலில் வெற்றிபெற வேண்டிய  நெருக்கடியைத்தான் காங்கிரஸ் சந்தித்து வந்தது. எமெர்ஜன்சிக்குப் பிறகான 1977-லும் தேர்தல் நெருக்கடியைத்தான் சந்தித்து வந்தது.

ஆனால் இன்று காங்கிரஸ் சந்தித்து வருவது அது ஒரு கட்சியாக தொடர்வதற்கே விடுக்கப்பட்ட  நெருக்கடி மிகுந்த சவாலாகும். இது தேர்தல் நெருக்கடி அல்ல. கட்சி தொடர்ந்து செயல்படுவதைக் குறித்த ஆழமான நெருக்கடியில் இருக்கிறது.

நாம் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோருக்கு எதிராக நிற்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் வித்தியாசமாக சிந்தித்து, வித்தியாசமாகச் செயல்படுகிறார்கள். எனவே நாமும் நம் அணுகுமுறையை மாற்றாவிட்டால்,  நாம் தொடர்பற்று போய்விடுவோம், அன்னியப்பட்டுப் போய்விடுவோம், இதனை நான் உள்ளபடியே கூறுகிறேன்.

காங்கிரஸ் கட்சி இந்தியா மாறிவிட்டது என்பதை அங்கீகரிக்க வேண்டும். பழைய கோஷங்கள் எடுபடாது, பழைய உத்திகள் செல்லாது. பழைய மந்திரங்கள் ஒன்றுமில்லாமல் போய்விடும். இந்தியா மாறிவிட்டது, காங்கிரஸ் கட்சியும் மாற வேண்டும்.

2017 இறுதியில் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்பார் என்று நினைக்கிறேன். 2019 தேர்தலில் மோடிக்கு வலுவான சவால் அளிக்க வேண்டுமெனில் தனிநபர் மந்திரக்கோல் உதவாது மாறாக கூட்டு பலத்தையே மோடிக்கு எதிராக நம்பவேண்டும். நம்மிடமிருந்து அதிகாரம் போய் விட்டது, ஆனால் இன்னமும் சுல்தான்கள் போல் சிலர் நடந்து கொள்கின்றனர். நாம் சிந்திக்கும் முறையையே மாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது.

காங்கிரஸ் மீது மக்களுக்கு நல்லெண்ணம் உள்ளது, ஆதரவும் உள்ளது ஆனால் மக்கள் புதிய காங்கிரஸைக் காண விரும்புகின்றனர். பழைய மந்திர உச்சாடனங்களை அவர்கள் விரும்பவில்லை. இதனை உண்மையான, மிகப்பெரிய சவாலாக காங்கிரஸ் கருத வேண்டும்.

நிதிஷ் குமார் விவகாரம் குறித்து தனிப்பட்ட முறையில் நான் அதிர்ச்சியடைந்தேன், ஆழமான ஏமாற்றமடைந்தேன். ஆனால் இதைப்பற்றியெல்லாம் யோசிக்க நேரமில்லை, நாம் மேலே முன்னேறிச் செல்ல வேண்டும்.

இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

Share
Categories
இந்தியா கட்சிகள் காங்கிரஸ் தலைப்புச் செய்திகள் பா.ஜனதா ராகுல் காந்தி

ராகுல் காந்தி காரின் மீது தாக்குதல்: பாஜகவைச் சேர்ந்த ஜெயேஷ் தார்ஜி கைது

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி சென்ற காரின் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தையொட்டி, பாஜகவைச் சேர்ந்த ஜெயேஷ் தார்ஜி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்ட பாஜக இளைஞரணி செயலாளர் ஆவார்.

இதுகுறித்து குஜராத் போலிசார் கூறுகையில், “ராகுல் காந்தி கார் மீது கல் வீசிய சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ஜெயேஷ் தார்ஜி கைது செய்யப்பட்டுள்ளார்” என்றனர்.

முன்னதாக, இந்தச் சம்பவத்துக்கு பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களுமே காரணம் என்று ராகுல் காந்தி குற்றச்சாட்டியிருந்தார்.

எனினும், தன்னைத் தாக்கியவர்களைக் கண்டித்து போராட வேண்டாம் என்றும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, காங்கிரஸ் கட்சியினர் சண்டிகர், டெல்லி, மும்பை, குஜராத் உள்ளிட்ட பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்சியினரின் உணர்வை புரிந்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். கற்கள் வீசி தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்ய வலியுறுத்தியதை ஏற்பதாக கூறினார். ஆனால் கட்சியினர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி புரிய தங்கள் ஆற்றலை செலவிடுமாறு ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

மக்களாட்சி மீது மோடி அரசிற்கு நம்பிக்கை இல்லை என்றும், எதிர்க்கட்சிகளே இல்லாத இந்தியாவை பாஜக விரும்புவதாகவும் காங்கிரஸ் தலைவர் கபில் சிபில் குற்றம்சாட்டியுள்ளார். இது ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

Share
Categories
இந்தியா காங்கிரஸ் குஜராத் தலைப்புச் செய்திகள் ராகுல் காந்தி

குஜராத்: ராகுல்காந்தி கார் மீது பா.ஜ.க.வினர் கல்வீசி தாக்குதல்

பா.ஜ.க. ஆளும் மாநிலமான குஜராத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி பயணம் செய்த கார் மீது பா.ஜ.க. -வினர் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் பனஸ்கந்தாவில் நடந்த இத்தாக்குதலினால்,  ராகுல் காந்தியின் கார் கண்ணாடிகள் உடைந்து கல் உள்ளே சென்றுள்ளது. அதிருஷ்டவசமாக ராகுல் காந்தி காயமின்றி தப்பினார்.  குஜராத் ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் வென்றுவிடும் என்ற பாஜகவின்  வெறுப்புணர்வால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

மேலும்,  உச்சபட்ச பாதுகாப்பில் உள்ள ராகுல் காந்தி மீதான இந்த தாக்குதல், குஜராத் மாநில அரசின் பாதுகாப்பு குளறுபடியை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளதுடன் தேசிய அளவில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

 

Share
Categories
இந்தியா கர்நாடகா காங்கிரஸ் குஜராத் தலைப்புச் செய்திகள் பா.ஜனதா

குஜராத் காங். எம்.எல்.ஏ.க்கள் 44 பேர் பெங்களூரில் தஞ்சம், 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா

குஜராத்தில்  காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இரண்டு நாட்களில் ராஜினாமா செய்ததையடுத்து, மீதமுள்ளவர்களை பாதுகாக்க 44 எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு பெங்களூரில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

குஜராத்தில் வருகின்ற ஆகஸ்ட் 8-ம் தேதி 3 மாநிலங்களவை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.  அங்கு பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. இங்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள் கடந்த இரண்டு நாட்களில் அடுத்தடுத்து ராஜினாமா செய்துள்ளனர். அதில் மூன்று பேர் பா.ஜ.க.வி. இணைந்துவிட்டனர். பணத்தையும், அதிகாரத்தையும் வைத்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை மிரட்டுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

இந்த நிலை மேலும் தொடராமல் தடுக்க எஞ்சிய எம்.எல்.ஏ.க்கள் 44 பேரும் இரவோடு இரவாக பெங்களூருவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் சொந்த ஊரில் இருக்கும் பட்சத்தில் பிரதமர் நரேந்திர மோடியோ, பாஜக கட்சியினரோ குதிரைபேரம் நடத்தி அவர்களை மிரட்டி தங்களது பக்கம் வளைத்துவிடுவார் என்பது காங்கிரசாரின் அச்சம்.

மானிலங்களவை வேட்பாளர்களாக பா.ஜ.க. சார்பில் அக்கட்சியின் தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய மந்திரி ஸ்மிரிதி ராணி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் சார்பில் அகமது பட்டேல் களமிறங்குகிறார். பட்டேல் வெற்றி பெற வேண்டுமானால் கண்டிப்பாக 44 எம்.எல்.ஏ.க்களின் ஓட்டுகளும் தேவை. எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் குறைந்தால் கூட அவர்களது வெற்றி கேள்விக்குறி ஆகிவிடும். இதை தடுக்கவே கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்க வைத்தது போலவே, குஜராத்தை விட்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். காங்கிரஸ் ஆட்சி நடத்தும் கர்நாடகாவில் அவர்கள் சில நாட்கள் தங்க வைக்கப்படுவதே பாதுகாப்பு என்று கருதி அந்த கட்சி இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.

Share
Categories
இந்தியா கட்சிகள் காங்கிரஸ் குஜராத் தலைப்புச் செய்திகள்

குஜராத் முன்னாள் முதல்வர் வகேலா காங்கிரசில் இருந்து நீக்கம்

குஜராத் முன்னாள் முதல்வர் ஷங்கர்சிங் வகேலா காங்கிரசில் இருந்து நீக்கப் பட்டார்.

குஜராத் மாநிலத்தின் முதல் மந்திரியாக கடந்த 1996 – 1997-ம் ஆண்டில் பதவி வகித்தவர் ஷங்கர்சின்ஹ் வகேலா. பா.ஜ.க.வை சேர்ந்த இவர் கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். எதிர்வரும் குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் ஷங்கர்சின்ஹ் வகேலா-வை முதல் மந்திரி வேட்பாளராக காங்கிரஸ் மேலிடம் அறிவிக்க வேண்டும் என இவரது ஆதரவாளர்கள் கட்சிக்குள் போர்க்கொடி உயர்த்தி இருந்தனர். ஆனால், இதுதொடர்பாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை இறுதிமுடிவு எதுவும் எடுக்காமல் தாமதப்படுத்தி வருகிறது.

இதற்கிடையில், சமீபத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வகேலாவுக்கு ஆதரவான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் எட்டு பேர் கட்சி மேலிடத்தின் உத்தரவை மதிக்காமல் பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரித்து வாக்களித்திருந்தது கட்சியின் தலைமைக்கு தெரியவந்தது.

இந்நிலையில், வெள்ளியன்று தமது 77-வது பிறந்தநாள் கொண்டாடிய அவர், பிறந்தநாள் உரையில் கட்சிக்கு எதிரான கருத்துக்களை தாம் தெரிவித்துவிடக் கூடும் என்ற எண்ணத்தில், தம்மை காங்கிரஸ் கட்சி 24 மணி நேரத்துக்கு முன்னதாகவே அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கிவிட்டதாகக் கூறியுள்ளார். இருப்பினும், தாம் அரசியலிலிருந்து ஓய்வு பெறும் திட்டமில்லை என்றும் வகேலா தெளிவுபடுத்தினார்.

காங்கிரஸின் குறுகிய எண்ணம், பாஜகவின் அதிர்ஷ்டமும், பாஜகவை ஆட்சிக்கு கொண்டுவந்துவிட்டதாகக் கூறிய அவர், பாஜகவிற்குத் திரும்பச் செல்லும் எண்ணம் இல்லை என்றும் குறிப்பிட்டார். பிரதமர் மோடியை பாஜக செயல்குழுவுக்கு அனுப்பியது, ஆனந்தி பென் பட்டேலை அரசியலில் அறிமுகப்படுத்தியது, தகவலறியும் உரிமைச் சட்டத்துக்கான யோசனையை வழங்கியது என தமது சாதனைகளாக பலவற்றையும் பிறந்தநாள் உரையில் அவர் பட்டியலிட்டார்.

Share
Categories
இந்திய ரிசர்வ் வங்கி இந்தியா உர்ஜிட் படேல் காங்கிரஸ் தலைப்புச் செய்திகள் ப. சிதம்பரம் பண மதிப்பு நீக்கம் ராகுல் காந்தி ரூபாய் நோட்டு

பணமதிப்பு நீக்கம் துவங்கி 8 மாதங்கள் கழித்தும் செல்லாத நோட்டு எண்ணிக்கை தொடருகிறது

பணமதிப்பு நீக்க நடவடிக்கை துவங்கிய 8 மாதங்களுக்குப் பிறகும் செல்லாத நோட்டுகள் எண்ணும் பணி தொடர்கிறது என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது தெரிந்ததே. இத்தகவல் சமூக வலைத்தளங்களிலும் மக்களிடையேயும் பலவிதமாக சரமாரியாக கிண்டல் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

அதுகுறித்து காங்கிரஸ்  துணைத் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில், ரிசர்வ் வங்கிக்கு மட்டுமின்றி, பிரதமர் அலுவலகத்துக்கும் கணக்கு ஆசிரியர்களை  நியமிக்கலாம் என்று கிண்டலாகக் கூறியுள்ளார்.

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் தனது ட்விட்டரில், “பணமதிப்பு நீக்கத்துக்கு 8 மாதங்கள் கழித்து ஆர்பிஐ நோட்டு எண்ணும் இயந்திரம் வாங்கியுள்ளது, குத்தகை என்று ஒன்று இருப்பது ஆர்பிஐ-க்கு தெரியுமா” என்று பதிவிட்டுள்ளார்.

நாடாளுமன்றக் குழுவின் முன்னால் பேசிய ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல், தடைசெய்யப்பட்ட நோட்டுகள் இன்னமும் எண்ணப்பட்டு வருகின்றன, ஆகவே எண்ணிக்கை பற்றி இப்போது கூற முடியாது என்று கூறியதாகத் தெரிகிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு எவ்வளவு தொகை வங்கிகளில் பழைய நோட்டுகள் டெபாசிட் ஆகின என்ற விவரத்தை இன்னமும் கூட மத்திய அரசு வெளியிடவில்லை.

Share
Categories
இந்தியா காங்கிரஸ் தலைப்புச் செய்திகள் ராகுல் காந்தி

சீனத்தூதருடன் சந்திப்பு குறித்து ராகுல் காந்தி காட்டமான பதில்

இந்தியாவுக்கும் சீனவுக்கும் இடையிலான எல்லை தொடர்பான மோதல் நிலவிவரும் சூழலில், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி சீன தூதர் லுயோ ஜாயோஹூ சந்தித்தது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.

இதற்குப் பதிலளிக்கும் விதத்தில் ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ள ராகுல்காந்தி, எல்லையில் ஆயிரம் சீன வீரர்கள் அத்துமீறி இந்தியாவுக்குள் நுழைந்த நிலையில், அந்நாட்டு அதிபரோடு ஊஞ்சலில் அமர்ந்து பேசுபவன் நானல்ல என்று கூறியுள்ளார். அண்மையில் சீனாவில் அதிபர் ஜிங்பிங்குடன் மோடி ஊஞ்சலில் அமர்ந்து பேசிய படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார். சீனத் தூதர் தன்னை சந்தித்தது குறித்து கவலைப்படும் மத்திய அரசு, இருநாடுகள் இடையே பதற்றம் நிலவும் சூழலில் மத்திய அமைச்சர்கள் மூன்று பேர் சீனாவுக்கு பயணம் சென்றதேன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர் “பாஜகவின் பக்த ஊடகங்கள் செய்தி வெளியிடும் முன்னர் உண்மைத்தன்மையை சோதிக்க வேண்டும்” என்று காட்டமாக பதிவுசெய்திருந்தார்.

Share
Categories
இந்தியா காங்கிரஸ் தலைப்புச் செய்திகள் மத்திய பிரதேசம் ராகுல் காந்தி

ம.பி. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த விவசாயிகளை சந்திக்கச் சென்ற ராகுல் கைது

மத்திய பிரதேசம் மாண்ட்சர் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற காங்கிரஸ் துணைதலைவர் ராகுல் காந்தியை போலீசார் தடுப்பு காவலில் கைது செய்துள்ளனர்.

வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் 1-ம் தேதி முதல் போராடி வருகின்றனர்.

மாண்ட்சர் மாவட்டம் பிபாலியமண்டியில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் உருவானது. அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 5 விவசாயிகள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து மாண்ட்சர்  பகுதியில் பதட்டம் நீடிக்கிறது.

இதனிடையே போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற காங்கிரஸ் துணைதலைவர் ராகுல் காந்தி இன்று போபாலில் இருந்து மாண்ட்சர்மாவட்டத்திற்கு பயணம் செய்தார். ஆனால் ராகுலை போலீசார் மாண்ட்சர் மாவட்டத்திற்குள் நுழைய அனுமதிக்க வில்லை .

இதனால் அவர் பைக்கில் எந்த வித பாதுகாப்பு அதிகாரிகளும் இல்லாமல் செல்ல முற்பட்டார். அப்போது போலீசார் அவரை தடுத்து நிறுத்தி தடுப்பு காவலில் கைது செய்துள்ளனர். அசம்பாவித சம்பவம் எதுவும் நடைபெற கூடாது என்பதற்காக ராகுல் காந்தி மாண்ட்சர் மாவட்டத்தில் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதாவதற்கு முன்னதாக நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.  அப்போது ராகுல் கூறியதாவது: ‘மோடியால் பணக்காரர்களுக்கு மட்டும் ரூ.1.50 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்ய முடியும். ஆனால், விவசாயிகளுக்கு செய்ய முடியாது. விளைபொருட்களுக்கு அவரால் சரியான விலை கொடுக்க முடியாது, போனஸ் கொடுக்க முடியாது, இழப்பீடு வழங்க முடியாது. துப்பாக்கி தோட்டாக்களை மட்டுமே வழங்க முடியும். மாண்ட்சர் மாவட்டத்தில் விவசாயிகள் இறந்ததற்கு பிரதமர் மோடியும், மாநில முதல்வர் சிவராஜ் சவுகானும்தான் பொறுப்பாளிகள்.’

இவ்வாறு அவர் கூறினார்.

Share
Categories
இந்தியா கட்சிகள் காங்கிரஸ் பா.ஜனதா வெங்கையா நாயுடு

புத்தக கையேடு பதிவு பற்றி காங்கிரஸ் மீது வெங்கையா பாய்ச்சல்

ஜம்மு மற்றும் காஷ்மீரை இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் என புத்தக கையேட்டில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சி மீது மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.நாட்டின் வரைபடம் அடங்கிய ஒரு புத்தக கையேட்டை காங்கிரஸ் கட்சி நேற்று(ஜூன்3) வெளியிட்டது. ராஷ்டீரிய சுரக்ஷா பர் ஆன்ச் என்ற தலைப்பிலான அந்த புத்தகம் 16 பக்கங்களை கொண்டது. அதில் 12வது பக்கத்தில், ஜம்மு மற்றும் காஷ்மீர் முழுவதனையும் இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் என குறிப்பிட்டுள்ளது.இதுகுறித்து பேசிய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, காஷ்மீரை பாகிஸ்தானுக்கு விட்டு கொடுக்க வேண்டும் என்கிற அர்த்தத்தில், காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ புத்தக கையேட்டில் காஷ்மீரை இந்தியா ஆக்கிரமித்துள்ளது என பதிவிட்டு வெளியிடப்பட்டுள்ளது என கூறினார்.மன்னிப்பே கிடையாதுஇதற்காகவா நமது இறையாண்மை மற்றும் நாட்டின் ஒற்றுமைக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் வீரமிக்க நமது நூற்றுக்கணக்கான வீரர்கள் கடந்த ஆண்டுகளில் தங்களது உயிரை இழந்தனர்? காங்கிரசின் புத்தகத்தில் ஒரு பகுதியாக பதிவாகியுள்ள அவர்களது இந்த எண்ணத்திற்காக அக்கட்சியை மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் என்றார்.

Share
Categories
இந்தியா கட்சிகள் காங்கிரஸ் காங்கிரஸ் தமிழகம் ப.சிதம்பரம்

ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரது வீடுகளில் சிபிஐ சோதனை

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரது வீடுகளில் சிபிஐ சோதனை நடைபெற்றது. ப.சிதம்பரம் வீட்டில் காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை மதியம் 1 மணிக்கு முடிந்தது.

ப.சிதம்பரம் வீட்டில் நடைபெற்ற சோதனை குறித்து சிபிஐ அதிகாரிகள் கூறியதாவது:

”மும்பையைச் சேர்ந்த இந்திராணி முகர்ஜி, அவரது 2-வது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோர்(ஷீனா போரா கொலை வழக்கில் கைதானவர்கள்) ஐஎன்எக்ஸ் மீடியா என்ற பெயரில் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தை தொடங்கினர். இந்த நிறுவனத்தின் முதலீட்டை அதிகரிப்பதற்காக நிறுவன பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய வெளிநாட்டு முதலீடு மேம்பாட்டு வாரியத்துக்கு(எப்ஐபிபி) விண்ணப்பித்தனர். அதைத் தொடர்ந்து ரூ.4 கோடியே 62 லட்சத்து 16 ஆயிரத்துக்கு மட்டும் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய எப்ஐபிபி அனுமதி கொடுத்தது. ஆனால் ஐஎன்எக்ஸ் நிறுவனம் ரூ.305 கோடிக்கு பங்குகளை விற்பனை செய்தது.

இந்த மோசடி நடந்த காலத்தில் நிதி அமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். ஐஎன்எக்ஸ் நிறுவன இயக்குநராக இருந்த இந்திராணி முகர்ஜியுடன் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் பலமுறை போனில் பேசியதற்கான ஆதாரங்கள் உள்ளன. ஐஎன்எக்ஸ் நிறுவனம் தனது பங்குகளை விற்று முடித்த சில நாட்களில் கார்த்தி சிதம்பரம் நடத்தி வரும் செஸ் மேனேஜ்மென்ட் சர்வீஸ் நிறுவனத்துக்கு ரூ.3 கோடியே 50 லட்சம் வந்துள்ளது. முறைகேடாக நிறுவன பங்குகளை விற்க உதவி செய்ததற்காக இந்த தொகை வழங்கப்பட்டு இருக்கலாம்” என்றனர்.

Share