Categories
இந்தியா ஐஐடி தலைப்புச் செய்திகள்

ஐ.ஐ.டி.யில் மாணவர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

இந்தியா முழுவதும் உள்ள ஐ.ஐ.டி.யில் மாணவர் சேர்க்கை, கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 2017-ம் ஆண்டு சிறப்பு ஜெ.இ.இ. (JEE ADVANCED) நுழைவுத்தேர்வை சுமார் 2 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். ஆங்கிலத்தில் ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வு எழுதியவர்களுக்கு 2 கேள்விகள் தவறாக இருந்த காரணத்தினால், கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.

கருணை மதிப்பெண் வழங்கியதற்க்கு எதிராக தமிழகத்தைச் சேர்ந்த பல்ராம், விஷ்ணு ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கில் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஐ.ஐ.டி.யில் மாணவர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வு நடத்த இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் கீழ் நீதிமன்றங்கள் ஐஐடி நுழைவுத்தேர்வு, கலந்தாய்வு தொடர்பான வழக்குகளை விசாரிக்க வேண்டாம் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். வழக்கில் குளறுபடிகள் இருப்பதாக கூறி, விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share
Categories
இந்தியா ஐஐடி

ஐஐடி மாணவர் மீது தாக்குதல்: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்

சென்னை ஐஐடியில் நடந்த மாட்டிறைச்சி விருந்தில் கலந்துகொண்ட மாணவர் ஒருவர், வலதுசாரி ஆதரவு மாணவரால் தாக்கப்பட்டிருக்கிறார். கேரள முதல்வர் பினராயி விஜயன் இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கு கடும் விதிமுறைகளை விதித்து கடந்த மே 25ஆம் தேதியன்று உத்தரவிட்டது. இந்நிலையில், சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) அன்று இரவு சில மாணவர்கள் மாட்டு இறைச்சி விருந்து ஒன்றை நடத்தினர். இதில் சுமார் 60 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த விருந்தில் கலந்துகொண்ட சூரஜ் ராஜகோபாலன் என்ற மாணவர் இன்று பிற்பகலில் ஐஐடி வளாகத்திலேயே தாக்கப்பட்டார்.

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சூரஜ் (36) ஐஐடியில் ஏரோஸ்பேஸ் பொறியியலில் ஆராய்ச்சி மாணவராக இருந்துவருகிறார். அவர் இன்று மதியம் ஐஐடி வளாகத்தில் உள்ள ‘ஜெயின் மெஸ்ஸில்’ தனது நண்பருடன் சாப்பிடுவதற்காக அமர்ந்திருந்தபோது, அருகில் அமர்ந்திருந்த பிஹாரைச் சேர்ந்த கடல்சார் பொறியியல் படிக்கும் மணீஷ் என்ற மாணவர் சூரஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

“மாட்டு இறைச்சியைச் சாப்பிட்டுவிட்டுவந்து, எப்படி சைவ உணவை மட்டும் சாப்பிடும் இந்த ஜெயின் மெஸ்ஸில் நீ சாப்பிடலாம் என்று கேட்டார் அவர். பிறகு, பின்னந்தலையில் அவரை அடித்தார். முகத்தில் குத்தினார்கள். இதில் அவரது வலதுகண் கடுமையாக பாதிக்கப்பட்டது” என சூரஜின் நண்பரான மனோஜ் பிபிசியிடம் தெரிவித்தார்.

சூரஜைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்படும் மாணவர் வலதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர் என மனோஜ் கூறினார்.

இந்த தாக்குதல் சம்பவம் பல தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘’மாணவர் சூரஜ் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் எதிர்பாராத ஒன்று. இதனை கண்டிக்கிறேன். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி தமிழக முதல்வரை வலியுறுத்துகிறேன்,’’ எனக் கூறியுள்ளார்.

 

Share