Categories
அதிபர் டிரம்ப் அமெரிக்கா உலகம் சீனா தலைப்புச் செய்திகள் ரஷ்யா வட கொரியா

வடகொரிய ஏவுகணைச் சோதனைகளை ஊக்குவிப்பவர்கள் சீனாவும், ரஷ்யாவுமே : அமெரிக்கா

வடகொரிய ஏவுகணைச் சோதனைகளை பொருளாதார ரீதியாக  சீனாவும், ரஷ்யாவுமே ஊக்குவிக்கின்றன என அமெரிக்க வெளியுறவு செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் கூறியுள்ளார்.

நேற்று டில்லர்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவும் ரஷ்யாவும் வட கொரியாவில் இருந்து வளர்ந்துவரும் அணுசக்தி அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று  அழைப்பு விடுத்தார்.

வெள்ளிக்கிழமை வடகொரியா  நடத்திய ஹுவாசாங்-14 ஏவுகணையை சோதித்தது. இந்த ஏவுகணை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ போன்ற பெரிய நகரங்களை தாக்க வல்லது என்று வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமீபத்திய வடகொரியாவின் ஏவுகணை சோதனைகள் குறித்து கூறுகையில்,  “வடகொரியாவின் இந்த நடவடிக்கை பொறுப்பற்றது, ஆபத்தானது. உலக நாடுகளைத் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் வடகொரியாவின் இந்த ஏவுகணை நடவடிக்கைகள் அந்நாட்டை தனிமைப்படுத்தும், அதன் பொருளாதாரத்தை வலுவிழக்கச் செய்யும்” என்று கூறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்க செனட் சபை வடகொரியா மீதான பொருளாதார தடைகளை  நிறைவேற்றிய சில மணி நேரங்களில் வடகொரியா இந்த புதிய ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
Categories
அதிபர் டிரம்ப் அமெரிக்கா குடியரசு கட்சி தலைப்புச் செய்திகள்

வெள்ளை மாளிகையின் தலைமை அலுவலரான ரெயின்ஸ் ப்ரீபஸுக்கு பதிலாக ஜான் கெல்லி நியமனம்

வியாழனன்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்,   வெள்ளை மாளிகையின் தலைமை அலுவலராக இருந்த ரெயின்ஸ் ப்ரீபஸுக்கு பதிலாக  உள்நாட்டு பாதுகாப்பு மந்திரி ஜான் கெல்லியை நியமித்துள்ளார். ஓய்வு பெற்ற ஜெனரலும் அரசினால் கௌரவப்படுத்தப் பட்டவருமான ஜான் கெல்லி குடிவரவு  அமலாக்கத்தினை தனது நிர்வாகம்  நடைமுறைப்படுத்த வழிவகுத்தவர்.

இந்த அதிர்ச்சிகரமான மாற்றம் ப்ரீபஸுக்கும்  புதிய வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குனர் அந்தோனி ஸ்காரமுக்கிக்கும் இடையே, வெஸ்ட் விங்ஙில் இந்த வாரம் வெளிப்படையாக நிகழ்ந்த மோதல்கள் எல்லவற்றுக்கும் முத்தாய்ப்பாக நிகழ்ந்துள்ளது.

அந்தோனி ஸ்காரமுக்கி வெள்ளை மாளிகையின் பதவியில் நியமிக்கப் பட்டபின், ஊடகச் செயலாளர்  ஷான் ஸ்பைசர் அதனை ஆட்சேபித்து, ஒரு வாரத்திற்கு முன்னர் பதவி விலகினார். அதனை தொடர்ந்து ரெயின்ஸ் ப்ரீபஸ்  அடுத்ததாக பதவி விலகக் கூடும் என்ற ஊகம் பரவலாக எழுந்திருந்தது.

குடியரசுக் கட்சியின் முன்னாள் தலைவரான ப்ரீபஸ், வியாழனன்று ரகசியமாக ராஜினாமா செய்தார் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

ப்ரீபஸ் வெளியிட்ட ஒரு அறிக்கையில், “இந்த ஜனாதிபதிக்கும், நமது நாட்டிற்கும் சேவை செய்வது எனது வாழ்க்கையின் மிகப்பெரிய கௌரவமாக கருதுகிறேன்.  இந்த மிக சிறந்த வாய்ப்பை வழங்கியதற்காக  ஜனாதிபதிக்கு நன்றி கூற விரும்புகிறேன். ஜனாதிபதியின் செயல் மற்றும் கொள்கைகளின் வலுவான ஆதரவாளராக தொடர்ந்து பணியாற்றுவேன். எனது பணியைத் தொடர ஜான் கெல்லியைக் காட்டிலும் சிறப்பானவர் யாரும் இல்லை. கடவுளின் ஆசீர் அவருடன் இருக்கவும், பெரும் வெற்றி அவருக்கு கிடைக்கவும் வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

Share
Categories
அதிபர் டிரம்ப் அமெரிக்கா தலைப்புச் செய்திகள்

ரஷியா, ஈரான், வடகொரியா நாடுகளின் மீதான பொருளாதார தடை: அமெரிக்க செனட் சபை ஆதரவு

ரஷியா, வடகொரியா, ஈரான் ஆகிய நாடுகளின் மீது  பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்க செனட் சபை ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்த வார தொடக்கத்தில் பிரதிநிதிகள் சபை இச்சட்டத்திற்கு பெருவாரியான உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒப்புதல் தெரிவித்திருந்தது. அமெரிக்க நியமப்படி, பிரதி நிதிகள் சபையில் ஒப்புதல் பெற்றாலும் அதற்கு செனட் சபையிலும் அனுமதி பெற வேண்டும். ஆகவே செனட் சபைக்கு இந்த விவகாரம் கொண்டு வரப்பட்டது. அங்கு நடந்த விவாதத்துக்கு பிறகு செனட் சபையில் ஓட்டெடுப்பு நடந்தது. அதில் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 98 பேரும், எதிராக 2 பேரும் ஓட்டு போட்டனர். இதனால் தீர்மானம் நிறைவேறியது.

இரு சபைகளிலும் சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதனை அமல்படுத்த அதிபரின் கையொப்பத்திற்காக அனுப்பப்படும்.

ஆனால், இந்த நாடுகளுக்கு எதிரான தடை சட்டத்திற்கு அரசியல் ஆதரவு உள்ள போதிலும் அதன் அமலாக்கத்தை தடுக்க அதிபர் டிரம்பின் வீட்டோ அதிகாரத்தால் முடியும்.

Share
Categories
அமெரிக்கா டெக்ஸாஸ் தலைப்புச் செய்திகள் மாநிலங்கள்

சான் ஆண்டோனியோ வால்மார்ட்டில் நின்ற லாரியில் 9 பேர் இறந்த நிலையில் மீட்பு

அமெரிக்காவின் சான் ஆண்டோனியோ நகரத்திலுள்ள வால்மார்ட் சூப்பர்மார்க்கெட் வாகன நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த லாரியில் இருந்து ஞாயிறு காலை நிலவரப்படி 9 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

வால்மார்ட் வாகன நிறுத்தத்தில் இருந்த கன்டெய்னர் லாரியிலிருந்து உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. கன்டெய்னர் லாரியில் 2 பள்ளிக் குழந்தைகள் உட்பட 38 பேர் இருந்துள்ளனர். கன்டெய்னருக்குள் இருந்தவர்கள் வால்மார்ட் ஊழியரிடம் தண்ணீர் கேட்டுள்ளனர். சரக்கு ஏற்றும் கன்டெய்னரில் மனிதர்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து கன்டெய்னரில் இருந்த 38 பேரில் 8 பேர் உயிரிழப்பு, 20 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். கன்டெய்னரில் அடைத்து மனிதர்களை கடத்தி வந்திருக்கலாம் என்று காவல் துறையினர் கூறியுள்ளனர்.

இச்சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து மெக்ஸிகோ எல்லை 130 மைல் தொலைவில் உள்ளது. இதில் சம்பந்தப்பட்ட லாரியானது அயோவா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், அந்த லாரி எங்கிருந்து வால்மார்ட் வாகன நிறுத்தத்திற்கு வந்தது என்றோ, எவ்வளவு நேரமாக அங்கு நின்று கொண்டிருந்தது என்றோ இன்னும் தெளிவாகவில்லை. காவல்துறை ஆய்வாளர்கள் இன்னும் இதனைக் குறித்து விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Share
Categories
அமெரிக்கா உலகம் தலைப்புச் செய்திகள் பாக்கிஸ்தான்

பாகிஸ்தானுக்கு கடும் நிபந்தனைகளுடனேயே அமெரிக்க நிதி வழங்கப்படும்

பாகிஸ்தானுக்கு கடும் நிபந்தனைகளுடனேயே அமெரிக்க நிதி வழங்கப்படும் என்று அமெரிக்க பாராளுமன்ற குழு ஓட்டெடுப்பு நடத்தி முடிவு செய்துள்ளது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காக அமெரிக்கா நிதி உதவி அளித்து வருகிறது. இந்த நிலையில், இது தொடர்பாக முடிவு எடுப்பதற்காக அமெரிக்க பாராளுமன்றத்தின், ஒதுக்கீட்டுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.

இந்த கூட்டத்தில், 2018-ம் ஆண்டுக்கான மாகாணம் மற்றும் வெளிநாட்டு நடவடிக்கைகள் ஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஓட்டெடுப்பு நடத்தி ஒப்புதல் வழங்கப்பட்டது. இம்மசோதவின்படி அவர் பாகிஸ்தானுக்கு நிதி உதவி வழங்க வேண்டுமானால், அங்கு இயங்கி வருகிற அனைத்து விதமான பயங்கரவாத குழுக்கள் மீதும் பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கவும் வழி வகுத்துத்தந்துள்ளது.

இனி இந்த மசோதா அமெரிக்க பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

இந்த மசோதாவின்படி அமெரிக்கா வழக்கமான சீர்திருத்த மற்றும் வெளிநாட்டு தற்செயல் நடவடிக்கைகள் நிதியாக 47 பில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ.3 லட்சத்து 5 ஆயிரத்து 500 கோடி) உலக நாடுகளுக்கு வழங்க முடியும். இந்தத் தொகை, 2017-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10 பில்லியன் டாலர் (சுமார் ரூ.65 ஆயிரம் கோடி) குறைவு ஆகும்.

 

Share
Categories
அமெரிக்கா தலைப்புச் செய்திகள்

அமெரிக்கா: H-2B விசா அனுமதி எண்ணிக்‍கை மேலும் 15 ஆயிரம் உயர்த்தப்பட்டது

இந்த நிதியாண்டின் எஞ்சிய காலத்திற்கான, குறைந்த ஊதியங்கள் மற்றும் குறுகிய காலப் பணிகளுக்‍கான வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்‍கு வழங்கப்படும் H-2B விசாக்‍களின் எண்ணிக்‍கையை மேலும் 15 ஆயிரமாக அதிகரித்து அமெரிக்‍க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  கடல் உணவு, சுற்றுலா மற்றும் பிற தொழில்துறைகளில் இந்த விசாவின் கீழ் பணியாற்ற முடியும். அமெரிக்‍காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இருப்பினும் இந்திய தகவல் தொழில் நுட்ப பணியாளர்கள் அதிகமாக பயன்படுத்தும் H1B விசாவைக் குறித்து புதிய அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த காலக்கட்டத்தில் வழக்‍கமாக H-2B விசாக்‍களின் எண்ணிக்‍கையைவிட 45 சதவீதம் அதிகம் என்று அமெரிக்‍க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைக்‍கான அதிகாரிகள், நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.  ஆனால் பண்ணைத் தொழிலாளர்களாக பணியாற்ற முடியாது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Share
Categories
அமெரிக்கா தலைப்புச் செய்திகள்

அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் ஆண்டுதோறும் பதிவு செய்வது பற்றி பரிசீலனை

வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் தங்கியிருந்து படிப்பதற்கு, நாட்டின் புதிய குடியேற்ற கொள்கையின் அடிப்படையில் உள்நாட்டு பாதுகாப்பு, ஒருமைப்பாடு ஆகியவற்றை உறுதி செய்யும் விதமாக புதிய நிபந்தனை ஒன்றை விதிக்க டிரம்ப் நிர்வாகம் தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது.

தற்போது அமெரிக்காவில் தங்கி படிக்கும் வெளிநாட்டு மாணவ-மாணவிகள் தாங்கள் அமெரிக்க கல்வித் திட்டத்தின் கீழ் படிப்பதற்கு பதிவு செய்தது முதல் அந்த படிப்பை முடிக்கும் காலம் வரை ஒரு முறை விண்ணப்பித்தால் மட்டும் போதுமானது. இவர்களுக்கு தங்கியிருந்து படிக்கும் காலம் வரை எப்-1 விசா வழங்கப்படுகிறது.

புதிய விதிமுறையின்படி அமெரிக்காவில் தங்கியிருந்து படிக்கும் மாணவர்கள் பல் கலைக்கழங்களில் படிப்பை மேற்கொள்ள பதிவு செய்த நாளில் இருந்து அங்கு தங்கி படிக்கும் காலம் வரை ஆண்டுதோறும் தங்களுடைய படிப்புக்கான பதிவை மறு விண்ணப்பம் செய்து புதுப்பிக்கவேண்டும். அதனால், தற்போதுள்ள ஒரு முறை மட்டுமே பதிவு செய்யும் முறை தானாக ரத்தாகிவிடும். இதற்கான கட்டுப்பாட்டு விதிகள் 18 மாதங்களில் கொண்டு வரப்பட்டு விடும் என்று பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுபற்றி, வாஷிங்டன் நகரை சேர்ந்த குடியேற்றத்துறை அட்டார்னி அபர்ணா தவே கூறுகையில், புதிய பரிந்துரையின்படி மாணவர்கள் ஆண்டுதோறும்  200 அமெரிக்க டாலர்கள் செலவு செய்ய வேண்டியிருப்பதால், இந்திய மாணவர்களுக்கு அமெரிக்காவில் படிக்கும் ஆர்வம் குறைந்துவிடும் என்றார். ராகுல்சவுதா என்பவர், சர்வதேச மாணவர்கள் மீதான ஆய்வு குறித்து தவறான தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது, என்று கவலை தெரிவித்தார்.

Share
Categories
அமெரிக்கா ஆந்திர பிரதேசம் இந்தியா தலைப்புச் செய்திகள்

அமெரிக்கா: விமான விபத்தில் ஆந்திர டாக்டர் தம்பதி பலி

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள லோகன்ஸ் போர்ட் நகரில் வசித்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த மனோநல மருத்துவர்-தம்பதி உமாமகேஸ்வர் ராவ் காலாபடபு (வயது 63), சீதாகீதா (வயது 61). இவர்கள் பயணம் செய்த பைப்பர் ஆர்ச்சர் பி.ஏ.28 விமானம் விபத்துக்குள்ளானதில் இருவரும் இறந்தனர்.

இவர்கள் இருவரும் இணைந்து லோகன்ஸ்போர்ட் நகரில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ‘ராஜ் கிளினிக்’ என்ற பெயரில் மனநல மருத்துவமனை நடத்தி வந்தனர். இண்டியானா மாகாணத்தின் பல்வேறு நகரங்களில் இதன் கிளை மருத்துவமனைகள் உள்ளன. கடந்த 8-ந் தேதி இவர்கள் இருவரும் தங்களுக்கு சொந்தமான சிறிய விமானத்தில் லோகன்ஸ்போர்ட் நகரில் இருந்து புறப்பட்டனர். விமானத்தை உமாமகேஸ்வர் இயக்கினார். இந்த விமானம் ஓகியோ மாகாணத்தின் தெற்கு பகுதியில் பெவர்லி என்ற கிராமத்துக்கு அருகே பறந்து கொண்டிருந்த போது திடீரென தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த கோரவிபத்தில் உமாமகேஸ்வர், சீதாகீதா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

உமாமகேஸ்வர் சிறந்த புகைப்பட கலைஞர் ஆவார். தனது புகைப்பட கலைக்காக பல்வேறு மாநில மற்றும் தேசிய விருதுகளை பெற்று உள்ளார். அதே போல் சீதாகீதா சிறந்த இசைக்கலைஞர் ஆவார்.

Share
Categories
அமெரிக்கா உலகம் தலைப்புச் செய்திகள் வட கொரியா

அமெரிக்க இராணுவம் பொறுப்பற்ற முறையில் கோபமூட்டுவதாக வடகொரியா குற்றச்சாட்டு

ஞாயிறன்று வடகொரிய அரசு ஊடகங்கள் அமெரிக்காவின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. அமெரிக்க இராணுவம் பொறுப்பற்ற முறையில் தம்மை கோபமூட்டுவதாக வடகொரிய அரசு ஊடகங்கள்  குற்றம் சாட்டின. கொரிய தீபகற்பம் பகுதியை அணு ஆயுத போர் முனையமாக மாற்றிவிட வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளன.

இதுதொடர்பாக, வட கொரிய அரசுக்கு சொந்தமான ‘ரோடாங் சின்முன்’ நாளிதழில் ’வெடி மருந்து பீப்பாய்க்கு அருகே நெருப்போடு விளையாட வேண்டாம்’ என்ற தலைப்பில் இன்று வெளியாகியுள்ள சிறப்பு கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:

உலகிலேயே எளிதில் தீப்பற்றக் கூடிய வகையில் உள்ள வட கொரியா பகுதியில் அமெரிக்க ராணுவம் நிகழ்த்தியுள்ள ஆபத்தான அத்துமீறல் கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுத போர் முனையமாக மாற்றும் நிலைக்கு தள்ளிவிடும். போர்வெறி கொண்டவர்களால் கூட்டுப் பயிற்சி என்ற பெயரில் நமது நாட்டுக்கு எதிராக தற்போது நடத்தப்பட்டுள்ள இதுபோன்ற அபாயகரமான தந்திரங்களை இந்த தீபகற்பத்தில் அணு ஆயுதப் போரை தூண்டிவிடும் முயற்சியாகவே கருத வேண்டியுள்ளது.

ஒரு தவறான கணிப்பு அல்லது சிறிய பிழை நேர்ந்தாலும் அதன் விளைவு அணு ஆயுதப் போரின் துவக்கமாகவும் இன்னொரு உலகப் போரின் துவக்கமாகவும் அமைந்து விடும்.

இவ்வாறு அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டு B-1 குண்டுவீச்சு விமானங்கள் குவாமில் உள்ள ஆண்டர்சன் விமானப்படை தளத்திலிருந்து 2,000 மைல்கள் பறந்து தென் கொரிய போர் விமானங்களுடன் ஒரு துல்லியமான தாக்குதல் பயிற்சியை நடத்தின. இவர்களுடன் ஜப்பானிய வீரர்களும் இணைந்து விமான பயிற்சியில் ஈடுபட்டனர்.

அமெரிக்க விமானப் படை, ஒரு அறிக்கையில், “எங்கள் நட்பு நாடுகளுக்கு இரும்புக் கவசப் பாதுகாப்பு அளிப்பதில்  அமெரிக்காவின் உறுதிப்பாட்டின் ஒரு நிரூபணம்” என்று கூறியது.

84 பில்லியன் பவுண்டு குண்டுகளை சுமந்து செல்லும் வசதியுள்ள குண்டுவீச்சு விமானங்கள், பிலுங்ங் ரேஞ்சில் மந்தநிலை ஆயுதங்களை வெளியிட்டன. இந்த பயிற்சி முடிய 10 மணி நேரம் எடுத்துக் கொண்டது.

பசிஃபிக் விமானப்படை கமாண்டரான ஜென். டெரென்ஸ் ஓ. சாக்னெஸ்ஸி இதுபற்றிக் கூறும்போது, “வட கொரியாவின் நடவடிக்கைகள் நம்முடைய கூட்டாளிகளுக்கும், பங்காளிகளுக்கும், நம் நாட்டுக்கும் அச்சுறுத்தலாக இருக்கின்றன. தேவைப்பட்டால், எங்களது கூட்டு விமானப்படைகளின் முழுத் திறனையும் உபயோகிப்போம்; அதற்கான தகுந்த பயிற்சியையும் ஆயுதங்களையும் நாம் பெற்றுள்ளோம்”, என்றார்.

 

Share
Categories
அமெரிக்கா தலைப்புச் செய்திகள் தொழில் நுட்பம் மைக்ரோசாஃப்ட்

ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலையில் இருந்து நீக்க மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முடிவு

மைரோசாஃப்ட் நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களை நீக்க மைக்ரோசாஃப்ட் நிறுவனம் திட்டம் தீட்டி வருவதாக பல நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்தன .

இது குறித்த எமது முந்தைய செய்தியை இங்கே பார்க்கலாம் :

மைக்ரோசாஃப்ட்: ‘க்ளௌட்’ சேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் போவதால், ஆயிரக்கணக்கானோரை வேலையிலிருந்து தூக்குகிறது

இந்த நிலையில், இதனை தனியார் செய்தி நிறுவனம் ஒன்று உறுதி படுத்தி உள்ளது.

 

இது தொடர்பாக மைக்ரோசாஃப்ட் நிறுவன செய்தித்தொடர்பாளர் கூறியிருப்பதாவது:

 

சுமார் 4000 ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்ய மைக்ரோசாஃப்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.  பிற நிறுவனங்களில் நடப்பதை போன்று தான் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திலும் மாற்றங்கள் நடந்து வருகிறது.

மைக்ரோசா ஃப்ட் நிறுவனத்தில் அமெரிக்காவை தவிர்த்து பிற நாடுகளில்  121,000 பேர் வேலை செய்கிறார்கள்.  அமெரிக்காவில் சுமார் 71000 பேர் வேலை  செய்கிறார்கள்.  இதில் அமெரிக்காவுக்கு வெளியே உள்ள ஊழியர்களைத்தான் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் குறி வைத்துள்ளது.

ஹெச்-1பி விசா மூலம் அதிக பணியாளர்களை அமெரிக்கா வரவழைக்கும் நிறுவனங்களில் மைக்ரோசாஃப்ட் இந்த ஆண்டு முதல் இடத்தில் உள்ளது. எனவே வெளிநாட்டு ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இந்த முடிவால் அதில் பணியாற்றும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Share