Categories
இந்தியா குஜராத் தலைப்புச் செய்திகள் மாநிலங்கள்

குஜராத் ராஜ்யசபா தேர்தலில் அகமது பட்டேல், அமித் ஷா, ஸ்மிருதி இரானி வெற்றி

குஜராத்தில் இருந்து ராஜ்யசபாவில் காலியாக உள்ள 3 இடங்களுக்கு  தேர்தல் நடைபெற்றது. பா.ஜ.க. சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி மற்றும் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்த பல்வந்த்சிங் ராஜ்புத்  ஆகியோரும் போட்டியிட்டனர். காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமது பட்டேல் போட்டியிட்டார். இருந்த 3 இடங்களுக்கு 4 வேட்பாளர்கள் களத்தில் இருந்ததால், தேர்தலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காங்கிரஸின் அகமது பட்டேல் வெற்றிக்கு தேவையான 44 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். பா.ஜ.க., காங்கிரஸ் இடையேயான கவுரவ யுத்தத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அகமது படேலின் வெற்றியை காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். வெற்றி பெற்ற அகமது பட்டேல், “வாய்மையே வெல்லும்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் இருவர் பா.ஜ.க.வுக்கு ஓட்டளித்தனர். இதனையடுத்து இரு ஓட்டுகளை செல்லாததாக அறிவிக்கக்கோரி காங்கிரஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. தேர்தல் கமிஷன் இந்த இரண்டு ஓட்டுக்களையும் நிராகரித்தபின் அகமது பட்டேல் ஜெயித்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, தேர்தல் ஆணையத்தின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், வரும் நாட்களில் தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து சட்டப்படி போராடுவோம் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

Share
Categories
இந்தியா தலைப்புச் செய்திகள்

பாஜக-வுக்கு தனி 500 ரூபாய் நோட்டா ? காங்கிரஸ் புகார்

இன்று ராஜ்யசபாவில் இரண்டு வெவ்வேறு விதமாக ரூபாய் நோட்டுக்கள் பிரிண்டிங் செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் உறுப்பினர் சரத்யாதவ் இதுதொடர்பான ரூபாய் நோட்டுகளின் மாதிரிகளை காட்டினார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தெரிக் ஒ’பிரையன் உள்பட சில உறுப்பினர்களும் 500 ரூபாய் நோட்டுகளை காட்டினர்.
காங்கிரஸ் கட்சியின் கபில் சிபல் பேசியதாவது: மத்திய அரசு ஏன் ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தை எடுத்தது ஏன் என இப்போது தான் எங்களுக்கு தெரியவருகிறது. ரிசர்வ் வங்கி இரண்டு விதமான ரூ.500 நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளது. இதன் வடிவம் மற்றும் அமைப்பு வெவ்வேறாக உள்ளது. இது எப்படி சாத்தியம் என்றார். அது குறித்து மாதிரி படத்தை காட்டினர்.
ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவரான காங்கிரஸின் குலாம் நபி ஆசாத், இது நாட்டின் மிகப்பெரிய ஊழல் என்று குற்றம் சாட்டினார்.
அருண் ஜெட்லி பேசுகையில் விதிமுறைகளில் எந்தஒரு ஷரத்தும் கிடையாது எந்தஒரு பேப்பரையும் காட்டுவதற்கு என்றார். இப்போது நடந்துக் கொண்டு இருக்கும் பூஜ்ஜிய நேரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்றார் அருண் ஜெட்லி.
மாநிலங்களவை தேர்தலில் நோட்டா கொண்டுவரப்பட்டது தொடர்பாக அவர்கள் முதலில் பேசினார்கள், பின்னர் அவர்கள் ஆட்சியின் போதுதான் இந்த விதிமுறையானது கொண்டுவரப்பட்டது என்பதை தெரிந்துக் கொண்டார்கள் என்பதை ஜெட்லி சுட்டிக் காட்டினார்.
சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத், பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி இவ்விவகாரத்தில் ஆசாத்திற்கு எதிர்ப்பை பதிவு செய்தனர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உடன் வாதம் நீடித்த நிலையில், இந்த ரூபாய் நோட்டுக்களை எங்கிருந்து பெற்றீர்கள் என ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சிகள் இதுதொடர்பாக நோட்டீஸ் கொடுக்க சபாநாயகர் கேட்டுக் கொண்டார். இவ்விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட அமளி காரணமாக அவை அடுத்தடுத்து ஒத்திவைக்க நேரிட்டது.
Share
Categories
இந்தியா கட்சிகள் காங்கிரஸ் தலைப்புச் செய்திகள் மோடி

காங்கிரஸ் கட்சியை ஒழித்துக் கட்ட முயலும் மோடி, அமித்ஷாவின் செயல்பாடுகள்: ஜெய்ராம் ரமேஷ்

காங்கிரஸ் கட்சியை ஒழித்துக் கட்ட முயலும் மோடி, அமித்ஷாவின் அராஜகச் செயல்பாடுகளால் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.  எனவே அனைவரும் ஒன்றிணைந்து  மோடி, அமித் ஷா ஆகியோர் கொடுக்கும் சவால்களைச் சந்திக்க வேண்டும் என்று  ஜெய்ராம் ரமேஷ் காங்கிரஸ் தலைவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

வழக்கமான அணுகுமுறை மோடி, ஷா கூட்டணிக்கு எதிராக ஒருபோதும் செல்லுபடியாகாது  என்று ஜெய்ராம் ரமேஷ் எச்சரித்துள்ளார்.

ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. 1996-2004 இடையே அதிகாரத்தில் இல்லாத போது தேர்தலில் வெற்றிபெற வேண்டிய  நெருக்கடியைத்தான் காங்கிரஸ் சந்தித்து வந்தது. எமெர்ஜன்சிக்குப் பிறகான 1977-லும் தேர்தல் நெருக்கடியைத்தான் சந்தித்து வந்தது.

ஆனால் இன்று காங்கிரஸ் சந்தித்து வருவது அது ஒரு கட்சியாக தொடர்வதற்கே விடுக்கப்பட்ட  நெருக்கடி மிகுந்த சவாலாகும். இது தேர்தல் நெருக்கடி அல்ல. கட்சி தொடர்ந்து செயல்படுவதைக் குறித்த ஆழமான நெருக்கடியில் இருக்கிறது.

நாம் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோருக்கு எதிராக நிற்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் வித்தியாசமாக சிந்தித்து, வித்தியாசமாகச் செயல்படுகிறார்கள். எனவே நாமும் நம் அணுகுமுறையை மாற்றாவிட்டால்,  நாம் தொடர்பற்று போய்விடுவோம், அன்னியப்பட்டுப் போய்விடுவோம், இதனை நான் உள்ளபடியே கூறுகிறேன்.

காங்கிரஸ் கட்சி இந்தியா மாறிவிட்டது என்பதை அங்கீகரிக்க வேண்டும். பழைய கோஷங்கள் எடுபடாது, பழைய உத்திகள் செல்லாது. பழைய மந்திரங்கள் ஒன்றுமில்லாமல் போய்விடும். இந்தியா மாறிவிட்டது, காங்கிரஸ் கட்சியும் மாற வேண்டும்.

2017 இறுதியில் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்பார் என்று நினைக்கிறேன். 2019 தேர்தலில் மோடிக்கு வலுவான சவால் அளிக்க வேண்டுமெனில் தனிநபர் மந்திரக்கோல் உதவாது மாறாக கூட்டு பலத்தையே மோடிக்கு எதிராக நம்பவேண்டும். நம்மிடமிருந்து அதிகாரம் போய் விட்டது, ஆனால் இன்னமும் சுல்தான்கள் போல் சிலர் நடந்து கொள்கின்றனர். நாம் சிந்திக்கும் முறையையே மாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது.

காங்கிரஸ் மீது மக்களுக்கு நல்லெண்ணம் உள்ளது, ஆதரவும் உள்ளது ஆனால் மக்கள் புதிய காங்கிரஸைக் காண விரும்புகின்றனர். பழைய மந்திர உச்சாடனங்களை அவர்கள் விரும்பவில்லை. இதனை உண்மையான, மிகப்பெரிய சவாலாக காங்கிரஸ் கருத வேண்டும்.

நிதிஷ் குமார் விவகாரம் குறித்து தனிப்பட்ட முறையில் நான் அதிர்ச்சியடைந்தேன், ஆழமான ஏமாற்றமடைந்தேன். ஆனால் இதைப்பற்றியெல்லாம் யோசிக்க நேரமில்லை, நாம் மேலே முன்னேறிச் செல்ல வேண்டும்.

இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

Share
Categories
பலவகைச் செய்திகள் மகாராஷ்ட்ரா மும்பை

வெளிநாட்டில் இருந்து மகன் திரும்பியபோது எலும்புக்கூடாக தாய்

மும்பையின் அந்தேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 63 வயதான ஆஷா சஹானி தனியாக வசித்து வந்துள்ளார். இவர் அந்த கட்டிடத்திலுள்ள 10 – வது மாடியிலுள்ள இரண்டு அபார்ட்மெண்ட்களில் ஒன்றில் வசித்து வந்தார். அந்த தளத்திலுள்ள இரண்டு அபார்ட்மெண்ட்களும் சஹானி குடும்பத்தினருக்குச் சொந்தமானதால் பக்கத்து வீட்டுக்காரர்கள் அங்கு அடிக்கடி செல்வதில்லை எனத் தெரிகிறது.

ஆஷாவின் மகன் ரிதுராஜ் சஹானி, அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர், தனது தாயை பார்ப்பதற்காக நேற்று மும்பை வந்துள்ளார். வீட்டிற்கு வந்த இவர் வீட்டின் கதவினை தட்டியுள்ளார், ஆனால் வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை.

இதனைத்தொடர்ந்து, பூட்டு சரி செய்பவரை அழைத்து வந்து பலமணி நேர போராட்டத்திற்கு பின்னர் கதவினை திறந்து உள்ளே சென்றபோது மக்கிப்போன நிலையில் எலும்புக்கூடொன்று கிடந்துள்ளது.

இதனை பார்த்து கதறி அழுதுள்ளார், தாய் ஆஷா எப்போது எப்படி இறந்தார் என்ற தகவல் தெரியவரவில்லை, இது இயற்கை மரணமா, தற்கொலையா, கொலையா என்பதும் தெரியவில்லை.

ரிதுராஜ் தனது தாயாருடன் கடைசியாக ஏப்ரல் 2017 பேசியுள்ளார். கடைசியாக பேசுகையில், அவரது தாயார், தான் உடல் நலம் இல்லாமல் இருப்பதாகவும், வீட்டில் தனிமையாக இருப்பதால் வயதானவர்களுக்கான காப்பகத்தில் சேர்க்க வேண்டும் என்றும் கூறியதாகத் தெரிகிறது.

விரைவில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், மரணம் குறித்து அருகில் வசிப்பவர்களிடம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share
Categories
இந்தியா கேரளா தமிழகம் தலைப்புச் செய்திகள்

கேரள மருத்துவமனைகளால் அவசர சிகிச்சை கொடுக்கப்படாமல் அலைகழிக்கப்பட்ட தமிழர் மரணம்

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் முருகன். ஞாயிற்றுக் கிழமை இரவு 11 மணியளவில் மோட்டார் சைக்களில் சென்ற போது விபத்து ஏற்பட்டது. இதையடுத்து இவர் ஆம்புலன்சில் கொல்லம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால், அங்கு செயற்கை சுவாசம் அளிக்கும் சிகிச்சை வசதி இல்லாததால், முருகனை மருத்துவமனையில் அனுமதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 50 கி.மீ., தொலைவில் உள்ள திருவனந்தபுரம் மருத்து கல்லூரி மருத்துவமனைக்கு அவர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு இரண்டு மணி நேரம் காக்க வைக்கப்பட்ட பிறகு, அவசர சிகிச்சை பிரிவில் அறை வசதி இல்லை என்று கூறி, முருகனை மருத்துவமனையில் சேர்க்க அனுமதி மறுக்கப்பட்டது என ஆம்புலன்ஸ் டிரைவர் கூறினார். இதன் பிறகு மீண்டும் கொல்லம் நகருக்கு ஆம்புலன்ஸ் மூலம் முருகன் கொண்டு வரப்பட்டார். வரும் வழியில்இருந்த அனைத்து மருத்துவமனைகளும் அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்தன. இதையடுத்து, இன்று (ஆக.,8) காலை, 6 மணிக்கு ஆம்புலன்சில்இருந்தபடி முருகன் உயிர் துறந்தார்.

இதையடுத்து ஆம்புலன்ஸ் ஓட்டுனர் கொடுத்த புகாரை கொல்லம் காவல்துறை ஆணையர் பெற்றுக் கொண்டார். தற்போது, சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவமனைகள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

Share
Categories
அமெரிக்கா ஆசியன் உலகம் தலைப்புச் செய்திகள் வட கொரியா

கடுமையான பதிலடி தரப்படும் : வட கொரியா மிரட்டல்; ஆசியன் மாநாட்டில் வ.கொ.விற்கு அதிக அழுத்தம் கொடுக்க பிற நாடுகள் வலியுறுத்தல்

ஐ.நா.வினால் ஒப்புதலளிக்கப்பட்ட வட கொரியாவிற்கான தடைகள் குறித்தான தீர்மானத்திற்கு “ஆயிரம் மடங்கு” அதிகமாக கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று வட கொரியா தெரிவித்துள்ளது.

இவ்வறிவிப்பு, ஐ.நா.வினால் வட கொரியாவின் மீது விதிக்கப்பட்ட, 1 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள அதன் ஏற்றுமதி பொருள்களான நிலக்கரி, இரும்பு, இரும்புத்தாது, காரீயம், கடலுணவு பொன்றவற்றின் மீதான தடைத் தீர்மானம் நிறைவேறிய இரண்டு நாட்களுக்குப் பின்னர் வெளியாகியுள்ளது. மேற்படி தடைகள் மூலம் வட கொரியாவின் மூன்றில் ஒருபங்கு ஏற்றுமதி வருவாய் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

வட கொரிய அரசு ஊடகத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், தமது நாட்டை “தனிமைப்படுத்தி, தடுத்து நிறுத்துவதற்கு” உருவாக்கப்பட்ட அமெரிக்க சதித்திட்டம் “அதன் இறையாண்மையின் வன்முறை மீறல்” ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் பொருளாதாரத் தடைகள், வட கொரியாவின்  அணுசக்தி திட்டத்தைக் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவோ அல்லது  அதன் அணுசக்தி திறனை வலுப்படுத்த முற்படுவதை தடுக்கவோ செய்யாது என்று அதில் கூறுப்பட்டுள்ளது. வட கொரியா விரைவில் ” ஒரு நீதி நடவடிக்கை எடுக்கும்” என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் என்ன நடவடிக்கை என்பதன் விபரம் தெரிவிக்கப்படவில்லை.

ஆசியன் மாநாட்டில் வட கொரியாவிற்கு அதிக அழுத்தம் கொடுக்கப்பட வலியுறுத்தல்

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற ஆசியன் மாநாட்டில் பங்குபெற்ற அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை மந்திரிகள்,  வடகொரியாவிற்கு அனைத்து உலக நாடுகளும் அதிக நெருக்கடி கொடுக்க வேண்டுமென  கூட்டாக அறிவித்தனர்.

அந்த அறிக்கையில், “வடகொரியா தற்போது கையாண்டுவரும் அச்சுறுத்தும் மற்றும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை உடனடியாக கைவிட அனைத்து நாடுகளும் அந்நாட்டிற்கு அதிக நெருக்கடி கொடுக்க வேண்டும். தொடர்ந்து அணுஆயுத சோதனைகளை நடத்திவரும் வடகொரியா மீது கூடுதல் இராஜதந்திர மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அந்நாட்டிற்கு எதிராக ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தடைகளை கண்டிப்பாக செயல்படுத்தப்பட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

Share
Categories
உடல்நலம் மூலிகைகள்

நலம் தரும் மூலிகைகள் : 4 – டி மர எண்ணெய் & சென் ஜான்ஸ் வர்ட்

டி மர எண்ணெய் (Tea Tree Oil)

ஆஸ்திரேலியாவில் வளரும் டி (Melaleuca alternifolia) மரத்தின் கிளைகளிலிருந்தும் இலைகளிலிருந்தும் எடுக்கப்படும் டி மர எண்ணெய், அத்தியாவசிய எண்ணெய்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

இது ஒரு சக்தி வாய்ந்த ஆண்டிசெப்டிக் ஆகும். மேலும், காயங்களை சுத்தம் செய்வதற்கும் இதனைப் பயன்படுத்தலாம். இந்த எண்ணெய் வைரஸ், பாக்டீரியா மற்றும் ஒட்டுண்ணிகளை எதிர்க்கும்  பண்புகளைக் கொண்டுள்ளது.

டி மர எண்ணெயால் படர்தாமரை நோயையும் , சொறி, முகப்பரு, தோல் அழற்சி போன்ற தோல் வியாதிகளையும் குணமாக்க முடியும்.

இதனை வாயில் விழுங்கினால் விஷமாகும். ஆகவே, வெளி உபயோகத்திற்கு மட்டும் இந்த எண்ணெய் பயன்படுகிறது.

 

 

சென் ஜான்ஸ் வர்ட் (St John’s wort)

சென் ஜான்ஸ் வர்ட் பொதுவாக ஐரோப்பாவின் காட்டுப்புற வெளிகளில் சாதாரணமாக வளரும் தாவரமாகும்.  இது மன அழுத்தம், பதட்டம் மற்றும் நரம்பு வலி ஆகியவற்றுக்கு நிவாரணியாகப்  பயன்படுகிறது.

மேலும், இதிலிருந்து எடுக்கப்பட்ட சிவப்பு நிற எண்ணெய் புண்களைக் குணமாக்கும்  என்றும் கூறப்படுகிறது. ஆன்டிபயோட்டிக் குணங்களும் இதில் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.

புற்று நோய் எதிர்ப்பு மருந்து, சைக்ளோபாஸ்பாமைடு உள்ளிட்ட பிற மருந்துகளின் செயல்பாட்டில்  சென் ஜான்ஸ் வர்ட் குறுக்கிடும் வாய்ப்பு இருப்பதால், இதனை எடுத்துக்கொள்வதற்கு முன்பு,  உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.

ஒரு மாதத்திற்கும் மேலாக அதைப் பயன்படுத்தினால், விலகல் அறிகுறிகளை இந்த மூலிகை ஏற்படுத்தும். ஆகவே நோய் ஒரு மாதத்திற்கும் அதிகமாக தொடர்ந்தால், மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.

 

Share
Categories
உலகம் தலைப்புச் செய்திகள் பாக்கிஸ்தான்

பாகிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் அமைச்சராக நியமனம்

பாகிஸ்தானின் புதிய பிரதமரான ஷாகித் ககான் அப்பாஸியின் 47 பேர் கொண்ட அமைச்சரவையில்  65 வயதான தர்ஷன் லால் என்பவர் அமைச்சராக இடம்பெற்றுள்ளார்.  இவர் இந்து மதத்தை சேர்ந்தவர். 20 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் ஒரு இந்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிந்து மாகாணத்தில் மிர்புர் மாதெல்லோ எனும் மாவட்டத்தைச் சேர்ந்தவர்  தர்ஷன் லால். இவர்  மருத்துவராக பணியாற்றியவர். 2013 ஆம் ஆண்டில் சிறுபான்மையிருக்காக ஒதுக்கப்பட்ட தொகுதியிலிருந்து பாகிஸ்தானின் தேசிய சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவர் நவாஸ் ஷெரீஃப் கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கின் சார்பாக போட்டியிட்டார். இப்போது அவருக்கு மாகாணங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு அமைச்சகத்தின் காபினட் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் ராணா சந்தேர் சிங் எனும் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் (பெனாசிர் பூட்டோவின் கட்சி) காபினட் அந்தஸ்தில் அமைச்சர் பதவி வகித்திருந்தார். அவர் உமேர்கோட் எனும் தொகுதியிலிருந்து 1977 முதல் 1999 வரை ஏழுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

 

Share
Categories
அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் தலைப்புச் செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் ஓ.பி.எஸ்.-ஐ தாக்க முயற்சி

தமிழக முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா அணியின் பொருளாளருமான ஓ.பன்னீர் செல்வத்தை கத்தியால் குத்த ஒருவர் முயற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தினகரன் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகிய 3 பேரும் இன்று 11 மணி ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் சென்னையில் இருந்து திருச்சிக்கு வந்தனர்.  அவர்களை வரவேற்க 3 பேரின் ஆதரவாளர்களும் விமான நிலையத்தில் திரண்டிருந்தனர். ஓ.பன்னீர் செல்வம் இன்று மாலை சிவகாசியில் நடைபெறும் எம். ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்றார்.
ஓ.பன்னீர்செல்வம் விமான நிலையத்தில் வி.ஐ.பி.க்கள் செல்லும் வழியாக வெளியே வந்தார். அப்போது அவரை சூழ்ந்து கொண்டு அவரது ஆதரவாளர்களும் சென்றனர். விமான நிலைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு அளித்து சென்றனர்.
அப்போது ஆதரவாளர்களில் ஒருவர் ஓ.பன்னீர் செல்வத்துடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கூறினார். இதற்கு பாதுகாப்பு படையினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கிடையே கூட்ட நெரிசலில் சிக்கிய அந்த நபரின் வேட்டி அவிழ்ந்தது. அப்போது அந்த நபரின் இடுப்பில் இருந்து கத்தி ஒன்று கீழே விழுந்தது. அவர் ஓ.பன்னீர்செல்வத்தை கத்தியால் குத்த முயன்றதாகவும் தெரிகிறது. இதையடுத்து அந்த நபரை ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் மடக்கி பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.

அவரை போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் திருச்சி டி.வி. எஸ். டோல்கேட் வில்வ நகரை சேர்ந்த சோழராஜன்  என்பது தெரிய வந்தது.

சந்தேகத்திற்குரிய நபர் தெரிவித்ததாவது :
 நான் ஓ.பி.எஸ்.ஆதரவாளராக இருந்து வருகிறேன். இன்று திருச்சி விமான நிலையத்திற்கு வந்த ஓ.பன்னீர் செல்வத்தை வரவேற்பதற்காக விமான நிலையத்திற்கு சென்றேன். அப்போது அங்குள்ள ஆவின் பாலகம் அருகே கீ.செயினுடன் இணைந்த சிறிய கத்தி ஒன்று கிடந்தது. அதை எடுத்து எனது இடுப்பில் சொருகி கொண்டேன். பின்னர் ஓ.பி.எஸ். வரவேற்பதற்காக சென்றேன்.
அப்போது இடுப்பில் வைத்திருந்த கத்தி கீழே விழுந்தது இதைப் பார்த்தவர்கள் நான் ஓ.பி.எஸ்.சை தாக்கத்தான் வருகிறேன் என்று தவறாக புரிந்து கொண்டு என்னை அடித்து உதைத்து விட்டனர்.
நான் அவரின் தீவிர ஆதரவாளன். அவரை வரவேற்கத்தான் சென்றேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சம்பவம் பற்றி ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:

என்னை தாக்க வந்ததாக கூறப்படும் சம்பவம் தற்செயலாக நிகழ்ந்தது. தமிழக மக்களுக்கு அடிப்படை தேவையான குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். எங்களது கோரிக்கைகளை நிறைவேறும் வரை தர்மயுத்தம் தொடரும்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

Share
Categories
அமெரிக்கா நம்பினால் நம்புங்கள் பலவகைச் செய்திகள்

நாசா-வின் கோள் பாதுகாப்பு அதிகாரி பதவிக்கு விண்ணப்பித்த 9 வயது சிறுவன்

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா (NASA) சமீபத்தில் கோள் பாதுகாப்பு அதிகாரி (Planetary Protection Officer) என்ற வேலைக்கு ஆள் தேவை என விளம்பரம் செய்திருந்தது.  அமெரிக்காவின் நியூ ஜெர்சியைச் சேர்ந்த  9 வயது சிறுவன் ஒருவன், தன்னை ஒரு விண்மீன் மண்டல பாதுகாவலர் (Guardian of the Galaxy) என்று கருதிக்கொண்டதால் இப்பதவிக்கு விண்ணப்பித்திருந்தார்.

மேலோட்டமாக இப்பதவியின் பெயர் “மென் இன் பிளாக்” (Men In Black) படத்தில் வரும் கதாநாயகர்களைப் போல பூமியை ஏலியன்களிடமிருந்து காப்பாற்றும் பதவி மாதிரி தோன்றினாலும், நிஜத்தில் நாசாவுக்குத் தேவைப்படுவது வேறு. அவர்களுக்குத் தேவையானவர், பூமியிலிருந்து செவ்வாய், சனி போன்ற பிற கோள்களுக்கு நாம் அனுப்பும் ராக்கெட் மற்றும் ரோபோ ஆய்வுக்கலங்களால் நமது நுண்ணுயிரிகள் அங்கே நோய்த் தொற்று ஏற்படுத்தாமல் இருக்கவும், மற்ற கோள்களிலிருந்து சேகரிக்கப்பட்டு பூமிக்குக் கொண்டு வரப்படும் மாதிரிகளில் இருந்து நுண்ணுயிரிகள் ஏதும் இங்கே தொற்றிவிடாமலும் இருக்கத் தேவையான ஆயத்தங்களைச் செய்யும் ஒருவர். இப்பதவிக்கு கிட்டத்தட்ட ரூ.7.5 லட்சத்திலிருந்து 10 லட்சம் வரை மாத சம்பளம் வழங்கப்படும் என நாசா விளம்பரம் கூறுகிறது.

நியூ ஜெர்சியில் நான்காவது வகுப்பு படிக்கும் ஜேக் டேவிஸ், மேற்படி பதவிக்கு அனுப்பிய விண்ணப்பத்தில் “ஜேக் டேவிஸ், விண்மீன் மண்டல பாதுகாவலர்” என்று கையொப்பமிட்டிருந்தார். இப்பதவி தனக்கு ஏன் சரியானதாக இருக்கும் எனச் சில விளக்கங்களையும் கொடுத்திருந்தார். அவற்றுள், விண்வெளி மற்றும் ஏலியன் சம்பந்தமாக பார்க்கமுடிந்த அனைத்துத் திரைப்படங்களையும் தான் பார்த்துவிட்டதாகவும், நன்றாக வீடியோ கேம்கள் விளையாடத் தெரியும் எனவும் கூறியிருந்தார். குறிப்பாக, தான் சிறுவயதினராக இருப்பதால், ஏலியன்கள் எப்படி சிந்திப்பார்கள் என்பதைக் கற்றுக்கொள்ள முடியும் என்று அவர் கூறியிருந்தது பலரையும் கவர்ந்துள்ளது.

இக்கடிதம் நாசா அலுவலர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. நாசாவின் கோள் ஆராய்ச்சி இயக்குனர் ஜோனத்தன் ரால், ஜேக்குடன் தொலைபேசியில் பேசியுள்ளார். ஆனால், நாசாவின் கோள்கள் சேவைப் பிரிவின் இயக்குனரான ஜேம்ஸ் எல். கிரீன் அனுப்பியுள்ள பதில் கடிதமே, ஜேக்கிற்கு அதிக நம்பிக்கை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. ஜேம்ஸின் கடிதத்தில், “நாங்கள் புத்திசாலித்தனமான அறிவியல் அறிஞர்களிடம் இருந்தும், பொறியியலாளர்களிடம் இருந்தும்  வருங்காலத்தில் எங்களுக்கு உதவிகளை  எதிர்பார்க்கிறோம். ஆகவே, நீர் உமது பள்ளி, கல்லூரிப் படிப்பினை சிறப்பாக முடித்து, நாசாவில் எங்களுடன் சேருவீர் என எதிர்பார்க்கிறோம்” என்று எழுதியுள்ளார்.

 

Share