Categories
தமிழகம் தலைப்புச் செய்திகள் நீட் மருத்துவ தேர்வு

நீட் தேர்வு: ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசர சட்ட வரைவு மசோதா ஏற்பு

தமிழக மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேருவதற்கு   நீட் தேர்வு அவசியம் என்ற விதியிலிருந்து ஓராண்டுக்கு விலக்கு கோரும் தமிழகத்தின் அவசர சட்ட வரைவு உள்துறை அமைச்சகத்தால் ஏற்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரிகளில்  மாணவர் சேர்க்கைக்கு நீட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.  பின்னர் இது சம்பந்தமான பல வழக்குகளின் பின்னர், தமிழக மருத்துவக்  கல்லூரிகளில் மாணவர் சேருவதற்கு   நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் அமையும் என்ற நிலை எழுந்தது. இதனைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் தலைவர்களும் தமிழக அரசிற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், ஓராண்டு விலக்கு பெற, அவசர சட்டம் இயற்றிக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து சுகாதாரத் துறை செயலர் ராதா கிருஷ்ணன், நீட் தேர்விற்கான அவசர சட்ட வரைவை டெல்லியில் உள்துறை அமைச்சகத்திடம் இன்று காலை ஒப்படைத்தார்.

பின்னர், நீட் தேர்விற்கான அவசர சட்ட வரைவை ஏற்றுக் கொண்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்ததைத் தொடர்ந்து சுகாதாரத் துறை, மனிதவள மேம்பாட்டுத் துறை, சட்டத் துறை ஆகிய அமைச்சகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இதனால் இந்த ஆண்டு கடந்த ஆண்டை போல் பிளஸ்-2 மார்க் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இதன் காரணமாக பிளஸ்-2 தேர்வில் அதிக மார்க் எடுத்தும் நீட் தேர்வில் போதிய மார்க் இல்லாததால் பலருக்கு மருத்துவ இடம் கிடைக்கவில்லை. இப்போது அவசர சட்டம் வருவதால் அவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கும். இதனால் அவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அதே நேரத்தில் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் பலர் சீட்டுகளை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சி.பி.எஸ்.இ. மூலம் படித்த மாணவர்கள் நீட் தேர்வில் அதிக மார்க் எடுத்து மருத்துவ படிப்புக்கு தேர்வு பெற்றுள்ளனர். அவர்கள் இந்த இடத்தை இழக்க வேண்டி உள்ளது.

ஆயினும் தற்போதைய அவசரச் சட்டம் இவ்வருடத்திற்கு மட்டுமே பொருந்துமாதலால், அரசியல் தலைவர்களில் பலர், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு தேவை என வலியுறுத்தியுள்ளனர்.

Share
Categories
உடல்நலம் சிறப்புச்செய்தி மருத்துவ ஆய்வு மூலிகைகள்

புற்றுநோயைக் குணமாக்க உதவும் தாவரங்கள் : 1

சில தாவரங்களில் இருந்து புற்று நோயைக் குணமாக்கும் மருந்துகள் எடுக்கப்படுகின்றன என்பது பலரும் அறிந்த விஷயம்தான். ஆனால், ஒரு தாவரத்திலிருந்து மருந்து எடுக்கப்படும் செயல்முறையை உருவாக்கவும், பல நிலைகளில் சோதனை செய்து இறுதியில் அதனை மருந்தாக விற்கவும் எடுத்துக் கொள்ளப்படும் காலம் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகும், என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

புற்றுநோய் என்பது என்ன ?

உடலிலுள்ள உயிரணுக்கள்ளான செல்களில் துவங்கும் பல ஒன்றுக்கொன்று சம்பந்தமுடைய நோய்களின் தொகுப்பே புற்று நோய் ஆகும். உடலானது பல வகையான செல்களால் உருவாக்கப்பெற்றது. இயல்பாகவே உடலில் உள்ள செல்கள் வளர்ந்து பிரிந்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தேவையான அளவுக்கு பல செல்களை உருவாக்குகிறது. சில வேளைகளில், உடலுக்குத் தேவையற்ற பல புதிய செல்கள் தோன்றுகின்றன. உடலில் உள்ள பழைய வயதடைந்த செல்கள், இறக்க வேண்டிய நேரத்தில் இறந்து வெளியேறாமல் உடலிலேயே மிகுபடுகின்றன. இவ்வாறான அதிகப்படியான செல்கள், வளர்ச்சி (growth) அல்லது கழலை (Tumor) எனப்படும் திசுக்களின் கூட்டை ஏற்படுத்துகிறது.

கழலைகள் தீங்கில்லா கழலைகள் (benign tumours) மற்றும் கேடுவிளைவிக்கும் கழலைகள் (malignant tumours) என இருவகைப்படும்.

தீங்கில்லா கழலைகள் புற்றுநோய் அல்ல. அவற்றை பொதுவாக உடலிலிருந்து நீக்கி விடலாம். பெரும்பாலான நிகழ்வுகளில் அவற்றை நீக்கிய பின்பு, மீண்டும் தோன்றுவது இல்லை. தீங்கில்லா கழலைகளில் உள்ள செல்கள் மற்ற உடல் பகுதிகளுக்கு பரவுவதில்லை.

கேடு விளைவிக்கும் கழலைகள் என்பவை புற்று நோயாகும். கேடு விளைவிக்கும் கழலையில் உள்ள செல்கள் இயல்புக்கு மாறாகவும் எந்த கட்டுப்பாடுமின்றியும் பிரிவுற்று பெருகும். இப்படி ஏற்பட்ட புற்றுநோய் செல்கள் இதனை சுற்றியுள்ள திசுக்களுக்குள் சென்று அவற்றை அழித்துவிடும். புற்றுநோய் செல்கள் கேடு விளைவிக்கும் கழலைகளை உடைத்துக் கொண்டு அங்கிருந்து இரத்த ஓட்டம் அல்லது நிணநீர் மண்டலத்துக்குள் நுழைந்துவிடும்.

செல்கள் எதனால் இயல்புக்கு மாறாக கட்டுப்பாடின்றி பிரியத் துவங்குகிறது என்பது இதுவரைத் துலக்கமாக கண்டறியப்படவில்லை. ஆனால் மரபியல், சுற்றுச்சூழல் அசுத்தங்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்புகள் ஆகியன முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன.

புற்று நோய்க்கு சிகிச்சையளிப்பது எப்படி?

அறுவைசிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சைமுறை (ரேடியேஷன் தெரப்பி), வேதி மருத்துவம் (கீமோதெரப்பி), ஹார்மோன் மருத்துவம் மற்றும் உயிரியல் மருத்துவம் போன்றவை புற்றுநோய் சிகிச்சைகளில் அடங்கும். புற்றுநோயின் வகை, பாதிப்படைந்த இடம், நோயின் பரவும் தன்மை, நோயாளியின் வயது மற்றும் பொது உடல் நலம் மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து மேற்கூறிய ஒன்று அல்லது பல மருத்துவமுறைகளை பயன்படுத்தி மருத்துவர் சிகிச்சை அளிப்பர்.

பசுமை கீமோதெரப்பி

இவற்றுள், கீமோதெரப்பியில் தாவரங்களிலிருந்து பெறப்படும் மருந்துகள் பயன்படுத்தப் படுகின்றன.

இந்த சக்திவாய்ந்த கலவைகள் பொதுவாக விரைவாக பிரியும் செல்களைத் தாக்குகின்றன. இந்த டாக்ஸின்கள் பொதுவாக புற்றுநோய் கழலைகளை இலக்காகக் கொண்டிருந்தாலும்,  சிலசமயம் முடியை உருவாக்கும் சுரப்பிகளைப் போன்ற நல்ல செல்களையும் தாக்குகின்றன, இதனால் தற்காலிக முடி இழப்பு ஏற்படுகிறது.

பசிபிக் யூ (Pacific yew) என்ற தாவரத்தில் இருந்து எடுக்கப்படும் பக்ளிடேக்ஸெல் (Paclitaxel – Taxol) என்ற  கருப்பை புற்றுநோயைக் குணப்படுத்தப்  பயன்படுத்தப்படும் மருந்து உருவாக்கப்படுகிறது. இம்மருந்து புற்றுநோய் செல்களின் விகிதங்களை வெகுவாக குறைக்கிறது.  வட அமெரிக்காவில் கிடைக்கும், அமெரிக்கன் யூ-வும் (taxus canadensis) பக்லிடாக்சல் மருந்து உருவாக்க பயன்படுத்தப்படுகிறது.

 

ரோசி பெரிவிங்கிள் (rosy periwinkle) என்ற தாவரத்திலிருந்து எடுக்கப்படுக் வின்கிரிஸ்டைன் (Vincristine)   மற்றும் வின்பிளஸ்டைன் (vinblastine) மருந்துகள்  குழந்தை பருவ லுகேமியா (leukemia) சிகிச்சையில் வெற்றிகரமாக பயன்படுத்தப்படுகின்றன.

 

 

 

சீனாவில் வளரும் “ஹேப்பி ட்ரீ” (கேம்ப்டொத்கா அகுமினாட்டா), என்ற மரத்திலிருந்து எடுக்கப்படும்  காம்ப்டோடைசின் (Camptothecin) என்ற மருந்து சீனாவில் இரைப்பை குடல் புற்றுநோயைப் பயன்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

 

 

 

மேலும் மேயாப்பிள்(mayapple) என்றழைக்கப்படும் ஒரு உள்ளூர் காட்டு மலர் விரைவில் நுரையீரல் மற்றும் விரைப் புற்றுநோய்களுக்கான, தற்போது சோதனையிலுள்ள  எடோபாஸைடு (etoposide) என்ற மருந்துக்குத் தேவையான பாடோபிளைலோடாக்சினை (podophyllotoxin) உருவாக்க பயன்படுகிறது.

தொடரும்

 

Share
Categories
தமிழகம் தலைப்புச் செய்திகள் திமுக ஸ்டாலின்

முரசொலி பவளவிழா : மீண்டும் செப். 5-ம் தேதி நடைபெறும்

மழை பெய்ததால் ஒத்திவைக்கப்பட்ட முரசொலி பவளவிழா, மீண்டும் செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறும் என்று, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முரசொலி பத்திரிகை துவங்கி 75 ஆண்டுகள் நிறைவடைவதை அடுத்து,  சென்னையில் விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. ஆகஸ்டு 10 (வியாழன்) அன்று நிகழ்ந்த பவள விழா வாழ்த்து அரங்கம் நிகழ்ச்சி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு தி.மு.க. செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு பத்திரிகைகளின் ஆசிரியர்களும், ஊடகவியல் பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

பின்னர் ஆகஸ்டு 11 – வெள்ளிக்கிழமை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடந்த பவள விழாவின் போது ஏராளமான தொண்டர்கள் திரண்டிருந்த வேளையில், மேகம் இருண்டு விழா தொடங்குவதற்கு முன்பே மழை கொட்ட தொடங்கியது. சிறிது நேரத்தில் ஓய்ந்து விடும் என்று தொண்டர்களும் நனைந்தபடியே இருந்தனர்.

இருந்தாலும் மழையில் நனைந்தபடியே விழாவை தொடங்கினார்கள். துரைமுருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. வரவேற்றார். மழையில் நனைந்தவாறே தலைவர்கள் ஓரிரு வார்த்தைகள் பேசினார்கள். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசும்போது,  திராவிட இயக்கத்தின் எழுச்சிக்கு அடையாளமாக இந்த விழா நடைபெறுகிறது என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து கனமழை கொட்டி கொண்டிருந்ததால் கூட்டத்தை நடத்த முடியாத நிலை உருவானது. இதையடுத்து மு.க. ஸ்டாலின் பேசும்போது, மழையின் காரணமாக பவளவிழா பொதுக்கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது என்றார்.

இதனைத் தொடர்ந்து, இன்று மு.க.ஸ்டாலின், “மழையால் ஒத்திவைக்கப்பட்ட முரசொலி பவளவிழா கூட்டம் செப்டம்பர் மாதம் 5-ந்தேதி நடைபெறும்”, என்று அறிவித்தார்.

Share
Categories
இந்தியா உத்தர பிரதேசம் தலைப்புச் செய்திகள்

உ.பி. மருத்துவமனையில் 63 குழந்தைகள் பலி: யோகி அரசின் அலட்சியமே காரணம் ?

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரிலுள்ள பி.ஆர்.டி. அரசு மருத்துவமனையில் கடந்த சில தினங்களாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 63 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இம்மருத்துவமனையில் பிராண வாயு விநியோகிக்கும் நிறுவனத்துக்கு ரூ.69 லட்சத்தை அரசு வழங்காமல் நிலுவை வைத்ததன் நிமித்தம், அந்நிறுவனம் ஆக்ஸிஜன் வழங்கியதை நிறுத்தியதால்தான் குழந்தைகள் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பிஆர்டி மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் 100வது வார்டில் என்சிபாலிட்டிஸ் எனப்படும் மூளை வீக்கத்தால் துன்பப்படுவோருக்கு சிகிச்சை அளிக்கப் படுகிறது. இந்த 100வது வார்டு ஆண்டுதோறும் குறிப்பாக மழை காலத்தில் செய்திகளில் அடிபடும் ஒன்றாக விளங்குகிறது.

இந்த மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தீர்ந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இது தெரிந்த பின்னரும் மருத்துவமனை அதிகாரிகள் கூடுதலான ஆக்ஸிஜனை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த மருத்துவமனையில் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 30 என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், உள்ளூர் செய்தித்தாள் இறந்தோரின் எண்ணிக்கையை 50 என்று குறிப்பிட்டுள்ளது.

இதேவேளையில், குழந்தைகளின் இறப்புக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறையே காரணம் என்று மருத்துவமனை நிர்வாகம் கூற மறுத்துள்ளது. ஊடகங்களில் வருகின்ற செய்திகள் தவறானவை என்று உத்தரப்பிரதேச மாநில சுகாதார அமைச்சர் சித்தார்த் நாத் சிங் தெரிவித்திருக்கிறார்.
ஆக்ஸிஜன் சிலிண்டர் வழங்கி வருவதற்கு கட்டணம் செலுத்தாமல் இருப்பதை சுட்டிக்காட்டும் கடிதத்தை ஆக்ஸிஜன் விநியோக நிறுவனம் பிஆர்டி மருத்துவ கல்லூரியின் முதல்வருக்கு எழுதியுள்ளது ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தற்போதைய அரசு அறிவிப்பின்படி, பி.ஆர்.டி. அரசு மருத்துவமனையின் முதல்வர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆக்ஸிஜன் 2 மணி நேரம் நிறுத்தப்பட்டதை அரசு ஒத்துக்கொண்டாலும்,  குழந்தைகள் இறப்பிற்கு அது காரணமில்லை என்றும் உ.பி. சுகாதார அமைச்சர் சிதார்த் நாத் சிங் கூறியுள்ளார்.  இருப்பினும், உயிர்காக்கும் ஆக்ஸிஜன் 2 மணி நேர அளவில் நிறுத்தப்பட்டால் அது செலுத்தப்பட்டிருக்கும் நோயாளிகள் நிலை பாதிக்கப் படாதா என்பதற்கு அரசு தரப்பிலிருந்து விளக்கம் கொடுக்கப்படவில்லை.

இம்மருத்துவமனை, உ.பி. முதல்வரான யோகி ஆதித்யநாத்தின் சொந்த தொகுதியில் அமைந்துள்ளது. முதல்வரின் தொகுதியிலுள்ள மருத்துவ மனையிலேயே இப்படியென்றால், மற்ற இடங்கள் எப்படி இருக்கும் என பலரும் கேட்கின்றனர்.

Share
Categories
சிந்தனைக்கு சிறப்புச்செய்தி தமிழ்ப் பாடல்கள்

தம்மை விரும்பாதவர் பின் செல்வது எத்தகையது ?

தம்மை விரும்பாதவர்களைப் பின் தொடர்ந்து சென்று, எப்படியாவது அவர்களைத் தம்மை விரும்பச் செய்யுமாறு மாற்றிவிடலாம் என்று நினைப்பவர் கொள்ளும் அற்பமான உறவு, தனது ஒரு கையால் கல்லை எடுத்து இன்னொரு கையை அடித்துப் போக்கிக் கொள்வது போலாகும்.

தங்கண் மரபில்லார் பின்சென்று தாம்அவரை
எங்கண் வணக்குதும் என்பர் – புன்கேண்மை
நற்றளிர்ப் புன்னை மலருங் கடற்சேர்ப்ப!
கற்கிள்ளிக் கையிழந் தற்று.

நாலடியார் : பாடல்-336

 

உரை:

நல்ல தளிர்கள் நிறைந்த புன்னை மலர்தற்குரிய கடற்கரையையுடைய வேந்தனே! தம்மிடம் விருப்பம் இல்லாதார் பின் சென்று, ‘அவரை எம்மிடம் விருப்பம் உள்ளவராகச் செய்வோம்’ என்று நினைப்பவர் கொள்ளும் அற்பர் உறவு. கல்லைக் கிள்ளிக் கையைப் போக்கிக் கொள்வது போலாம்.

O lord of the sea-shore where the punnei tree with fair blossoms grows! The worthless friendships of those who say, We will make them our own, while they follow those who have no friendship for them,  is like losing one’s arm in striking another with a stone.

இதனை அடுத்த பாடலும் இதுபோன்ற கருத்தையே வலியுறுத்துகிறது.

ஆகா தெனினும் அகத்துநெய் யுண்டாகின்
போகா தெறும்பு புறஞ்சுற்றும்; – யாதும்
கொடாஅர் எனினும் உடையாரைப் பற்றி
விடாஅர் உலகத் தவர்.

நாலடியார் : பாடல்-337

உரை: 

எறும்புகள், தம்மால் கொள்ள முடியாது எனினும், ஒரு பாத்திரத்தில் நெய் இருக்குமானால், அப்பாத்திரத்தின் மேலே சுற்றிக்கொண்டேயிருக்கும். அதுபோல ஒன்றும் கொடாதவராயினும் பொருள் உள்ளவரைச் சார்ந்த பேதைகள் அவரை விடாமல் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.

As the ants without intermission walk round and round the outside of the pot in which there is butter, though it be impossible to get at it, so men of the world will never learn, but cleave to those rich men who never give them anything.

 

Share
Categories
இந்தியா உச்ச நீதிமன்றம் உயர் கல்வி தமிழகம் தலைப்புச் செய்திகள் நீட் மருத்துவ தேர்வு மருத்துவம்

நீட் தேர்வு: தமிழக பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களின் எதிர்காலம் சுப்ரீம் கோர்ட்டின் கையில் உள்ளது

மருத்துவ படிப்பிற்கான, நீட் தேர்வு தொடர்பான பல வழக்குகளில் தமிழக அரசு பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு தொடர்ந்து பல பின்னடைவுகள் ஏற்பட்டுள்ள நிலையில்,  85%  இட ஒதுக்கீடு குறித்தான வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் நாளை நடைபெற உள்ளது.

முன்னதாக, இந்த ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வில் ஆங்கிலம், இந்தி ஆகிய மொழி வினாக்களுக்கும் தமிழகம் உள்ளிட்ட பிற மாநில மொழி வினாக்களுக்கும் வேறுபாடு இருந்ததாக மாணவர்கள் தரப்பில் புகார் கூறப்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள்  மதுரை ஐக்கோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

மாணவர்களின் மனுவை விசாரித்த மதுரை ஐக்கோர்ட் கிளை, நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடை காலத் தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.எஸ்.இ. (CBSE) மேல்முறையீடு செய்தது. பின்னர் சுப்ரீம் கோர்ட்  விசாரணையின் போது நீட் தேர்வு முடிவுகளை வெளியிட அனுமதி அளிக்கப்பட்டு அதன் பின்னர் முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று நடைபெற்ற அடுத்த கட்ட விசாரணையின் போது,  நீட் தேர்வு முடிவுகளை தற்போது ரத்து செய்ய முடியாது; நடப்பாண்டில் நீட் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது; சுமார் 11 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதி, 6.11 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பேர் தேர்ச்சி பெற்று கவுன்சிலிங்கும் துவங்கி விட்டது; இந்நிலையில் நீட் தேர்வு முடிவிற்கு தடை விதிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் கூறிவிட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் மிகவும்  அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதைத்தவிர தமிழகத்தின் 85% ஒதுக்கீடு குறித்த வழக்கும் நாளை விசாரணைக்கு வருகிறது. தமிழக அரசு, மாநில பாடத் திட்டத்தின் கீழ் படித்தவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கிக் கடந்த ஜூன் 22ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் சிலர், சென்னை ஐக்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இதனை விசாரித்த நீதிபதி, 85 சதவீத உள்ஒதுக்கீடு என்பது மாணவர்களிடையே பாரபட்சத்தை ஏற்படுத்துவதாகக் கூறி, அந்த அரசாணையை ரத்து செய்து ஜூலை 14ம் தேதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழக அரசும், மாநில பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் சிலரும், சென்னை ஐக்கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின் பின்னர், ஐக்கோர்ட் நீதிபதிகள் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து ஜூலை 31ம் தேதி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்தத் தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்நிலையில், மருத்துவ கலந்தாய்வு தாமதம் ஆவதால் மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனத் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து, தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கினை, நாளை அவசர வழக்காக சுப்ரீம் கோர்ட் விசாரிக்க உள்ளது.

 

Share
Categories
அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் சசிகலா டி.டி.வி. தினகரன் தமிழகம் தலைப்புச் செய்திகள்

அதிமுக: தினகரன், சசிகலாவை நீக்குவதாக எடப்பாடி அறிவிப்பு; “நேற்று பெய்த மழையில் இன்று பூத்த காளானின் அறிவிப்பு” தன்னைக் கட்டுப்படுத்தாது என்கிறார் தினகரன்

அதிமுக-வின் கோஷ்டிகளிடையேயான அதிகாரப் போட்டி தீவிரமடைந்து உள்ளது. பா.ஜ.க.-வுக்கு கட்டுப் பட்டு நடக்கும் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் அணிகளை இணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, அதிமுக (அம்மா) அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மற்றும் பொதுச் செயலாளர் சசிகலாவை கட்சிப் பதவியில் இருந்து நீக்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். இதற்கு பதில் அறிவிப்பாக தினகரன், “என்னை நீக்குவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. நான் நினைத்தால் முதல்வரை நீக்கலாம். ஆட்சிக்கு ஆபத்து வரக் கூடாது என்ற அக்கறை உள்ளது” என்றார். மேலும், “மடியில் கனம் இருந்தால் தானே பயம். நேற்றைய மழையில் முளைத்த காளான்களுக்கும், 420களுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை” என்றும் கூறினார்.

முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், அவர் கொண்டுவந்துள்ள தீர்மானம் குறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், “ஜெயலலிதாவால் 19.12.2011 தேதியில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன் கடந்த 14.2.2017 தேதியில் அதிமுகவில் மீண்டும் சேர்க்கப்பட்டதாக குறிப்பிட்டு அவரை 15.2.2017 தேதியில் துணை பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளது அதிமுகவின் சட்டத்திட்ட விதி 30.(5)க்கு விரோதமானது. அவர் தொடர்ந்து 5 ஆண்டுகால அடிப்படை உறுப்பினர் பதவியை வகிக்காத காரணத்தினால் அவரால் அதிமுகவின் எப்பொறுப்பையும் சட்டத்திட்ட விதிகளின்படி வகிக்க இயலாது.” என்று கூறப்பட்டுள்ளது.

இதன் பின்னர், வேறொரு அறிவிப்பில் சசிகலாவையும் பதவி நீக்கம் செய்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இவ்வறிவிப்புகள் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் விருப்பத்திற்கிணங்கவே செயல்படுத்தப் படுவதாக அதிமுக அணியின் கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு குறித்து, தஞ்சாவூரில் டி.டி.வி. தினகரன்  கூறியதாவது:

“ஈபிஎஸ் எப்போது தேர்தல் கமிஷனர் தலைவர் ஆனார் என்று தெரியவில்லை. ஆர்கே நகர் இடைத் தேர்தலில் அதிமுக பெயரில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது.”

“என்னை நீக்கி இருப்பது தேர்தல் ஆணையத்தின் ஆணையை மீறிய செயல். தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட ஆவணத்தில் என்னை துணைப் பொதுச் செயலாளர் என்று கொடுத்துள்ளனர். அப்படி இருக்கும் நிலையில் கையெழுத்து போட்டு இருக்கும் அனைத்து தலைவர்களும் தங்களது பதவிகளில் இருந்து விலக வேண்டியது இருக்கும். தேர்தல் ஆணையத்தில் புகார் செய்தால் பழனிச்சாமியும் பதவி விலக வேண்டியது வரும்.”

“நான் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செல்ல இருப்பதை அறிவித்து இருந்த நிலையில் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். நான் அன்றே சொன்னேன். வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு கட்சியை பலப்படுத்தும் வகையில் சுற்றுப் பயணம் செல்ல உள்ளேன் என்று சொன்னேன். இவர்கள் பயத்தில் உள்ளனர். சட்ட விதிகளை தெரிந்தும் தவறாக செய்கின்றனர். சின்னம்மா அவர்களை நியமனம் செய்தது நியாயமானது என்று ஒத்துக் கொள்கின்றனர். ஆனால், என்னை ஒத்துக் கொள்ளவில்லை. திண்டுக்கல் சீனிவாசனை பொருளாளராக நியமித்து, கட்சிப் பணம் எடுக்க அனுமதித்துள்ளோம். அவருக்கும் ஒரு ஊதியம் வழங்கப்படுகிறது.”

“தீர்மானத்தில் அதிமுக என்று குறிப்பிட்டு இருப்பது தவறானது. கட்சி சின்னத்தை யாரும் பயன்படுத்தக் கூடாது என்ற தேர்தல் கமிஷனின் உத்தரவை அடுத்து அதிமுக அம்மா என்ற பெயரை பயன்பத்துகிறோம். ஆனால், அவர்கள் அதிமுக என்று பயன்படுத்தியதே தவறு.”

“அம்மா கூறியதுபோல் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இந்த இயக்கத்தை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. மடியில் கனம் இருந்தால் தானே பயம். நேற்றைய மழையில் முளைத்த காளான்களுக்கும், 420களுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. என்னை வெளியேற்ற வேறு யாரும் அழுத்தம் கொடுத்ததாக நான் நினைக்கவில்லை. அமைச்சர்களே பயந்து கொண்டுள்ளனர்.”

“தேர்தல் ஆணையத்தில் ஒன்று பேசுகின்றனர். புரட்சித் தலைவர் மறைவுக்குப் பின்னர் அம்மாவுடன் இருந்து கட்சியை வழி நடத்தி வருகிறோம். இவர்கள் ஆட்சியில் இருந்து கிடப்பதை சுருட்டி கொண்டு செல்லவுள்ளனர். அவர்களைப் போல எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செய்ய மாட்டேன். நாங்கள் செயலில்தான் காட்டுவோம். அதில் இருந்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம்” என்றார்.”

இவ்வாறு அவர் கூறினார்.

 

Share
Categories
உலகம் கத்தார் தலைப்புச் செய்திகள்

கத்தாருக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய 80 நாட்டினருக்கு அனுமதி

இந்தியா உள்ளிட்ட 80 நாட்டினருக்கு விசா இல்லாமல் நாட்டினுள் நுழையும் திட்டம் தொடர்பான அறிவிப்பை கத்தார் வெளியிட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டில் கால்பந்தாட்ட உலகக் கோப்பையை நடத்த இருக்கின்ற, எரி வாயு அதிகமாக உற்பத்தி செய்யும், கத்தார் நாட்டிற்கு  ஐரோப்பா, மற்றும் பிற நாடுகளான இந்தியா, லெபனான், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வருபவர்கள்,  இங்கு வந்து சேர்ந்ததும் சுற்றுலா விசாக்களைப் பெறுவார்கள்.

இந்த விசா விலக்கு திட்டம் கத்தார் நாட்டை அப்பிராந்தியத்தின் மிகவும் திறந்த வெளிநாடாகச்  செய்யும்  என்று கத்தார் சுற்றுலா ஆணையத்தின் தலைமை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரியான சான் அல்-இப்ராஹிம், டோஹாவில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

 

Share
Categories
உலகம் சீனா தலைப்புச் செய்திகள்

சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 19 பேர் பலி; 247 பேர் காயம்

சீனாவின் தென்மேற்கு – சிசுவான் மாகாணத்தில் ஏற்பட்ட 7.0 ரிச்டர் அளவிலான கடுமையான நிலநடுக்கத்தினால் இதுவரை வந்த தகவல்களின்படி 19 பேர் இறந்திருப்பதாகவும், 247 பேர் காயமடைந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

சீனாவின் சிசுவான் மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை இரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0-ஆக பதிவாகியதாக சீன நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால் சுமார் 106 அதிர்வுகள் உணரப்பட்டதாகவும், 1.3 லட்ச வீடுகள் சேதமடைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுகத்தில் பலியானவர்களில் சிலர் வெளிநாட்டு பயணிகளும் உள்ளனர். மேலும் 100 பயணிகள் இன்னும் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். நில நடுக்கம் ஏற்பட்டுள்ள பகுதியில் மின்சார கம்பங்கள் மற்றும் தண்ணீர் குழாய்கள் புதுப்பிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

முன்னதாக சிசுவான் மாகாணத்தில் 2008 ஆம் ஆண்டு ரிக்டர் அளவில் 8,0ஆக ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு 80 ஆயிரம்  பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
Categories
அதிபர் டிரம்ப் அமெரிக்கா உலகம் தலைப்புச் செய்திகள் வட கொரியா

அமெரிக்காவின் பகுதியான குவாமை தாக்க வட கொரியா திட்டம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் வட கொரியாவிற்கு விடுத்த கடும் எச்சரிக்கைக்குப் பிறகு, மேற்கு பசிஃபிக் பெருங்கடலிலுள்ள அமெரிக்கப் பகுதியான குவாம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்த வட கொரியா தீவிரமாகத் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யுஎஸ் விமானப்படை B-1B லான்சர் கயாம் நோக்கி செல்லும் வழியில், ஜப்பானிலுள்ள கியூஷூவில் எரிபொருள் நிரப்புகிறது.

ஏவுகணைக்குள் பொருத்தக் கூடிய அளவில் அணுவாயுதம் ஒன்றை வெற்றிகரமாக வடகொரியா தயாரித்ததாக வெளியான தகவலை அடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப், “வடகொரியாவின் அத்துமீறல்களுக்கு நெருப்புடன் கூடிய கோபத்துடன் பதில் கொடுக்கப்படும்; உலக நாடுகள் இதுவரை கண்டிராத கடும் நெருக்கடியை வடகொரியா எதிர்கொள்ள நேரிடும்; ஆகவே அமெரிக்காவுடன் மோதுவதை அந்த நாடு நிறுத்திக் கொள்ள வேண்டும்” என டிரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இது பற்றி வடகொரியா தரப்பில் வெளியான அறிக்கையில்,  “அமெரிக்காவின் பசிபிக் பகுதியில் உள்ள தீவான குவாம் பகுதியை தாக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான திட்டங்களை கவனமாக பரிசோதித்து வருகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது. மேலும் வட கொரியாவின் அரசு ஊடகத்தில், “அதிபர் கிம் உத்தரவுக்காக காத்திருக்கிறோம். அவரிடமிருந்து அனுமதி வந்தவுடன் செயல்படுத்துவோம்” என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த மிரட்டல் குறித்து குவாம் கவர்னர் கூறும்போது, ”நாங்கள் வெறும் ராணுவம் தடவாள பகுதி மட்டுமல்ல, அமெரிக்காவின் மண். குவாம் எந்த விதமான தாக்குதலையும் எதிர்கொள்ள தயராக இருக்கிறது. நாங்கள் தொடர்ந்து வெள்ளை மாளிகையுடன் தொடர்பில் இருக்கிறோம்” என்றார்.

ஜப்பானிய மற்றும் தென் கொரிய சுற்றுலாப்பயணிகளிடையே பிரபலமான குவாம், அமெரிக்காவின் தாட் (THAAD) ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு மூலம் பாதுகாக்கப்படுகிறது.

 

 

 

Share