உலகெங்கிலும் உள்ள சதி கோட்பாட்டாளர்களில் (Conspiracy Theorists) பலர், “நிபிரு” என்ற ஒரு கிரகம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பூமியுடன் இடையில் மோதப்போவதாக கூறி வருகின்றனர். ஆகஸ்டு 21-ம் தேதி வரும் சூரிய கிரகணம், இந்த பேரழிவின் ஆரம்பத்தை அடையாளம் காணும் என்கின்றனர்.
‘பிளானட் எக்ஸ் – தி 2017 வருகை’ என்ற புத்தகத்தின் ஆசிரியரான டேவிட் மீட், 2017 செப்டம்பர் 23 அன்று நிபிரு என்ற கிரகம் (பிளானெட் எக்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது) நமது பூமியை மோதி உடைக்கும் என்று கூறுகிறார்.
நிபிரு என்று ஒரு கிரகம் இருப்பதை விஞ்ஞானிகள் மறுக்கிறார்கள். என்றாலும், மீட் தன்னுடைய கூற்றுக்களை நிரூபிக்க பைபிள் வசனங்களை மேற்கோள் காட்டுகிறார்.
அக்டோபர் மாதத்தில் நிபிரு பூமியை அழிக்கும் என்று இந்த ஆண்டு துவக்கத்தில் மீட் வலியுறுத்தியிருந்தார். இருப்பினும் தற்போது அவர் செப்டம்பரிலேயே அது நிகழும் என்கிறார்.
கிரேட் அமெரிக்கன் கிரகணம் – முழு சூரிய கிரகணம் ஆகஸ்ட் 21 அன்று முழுமையான இருட்டில் அமெரிக்காவின் பல பகுதிகளில் இருக்கும். இச்சூரிய கிரகணம், நிபிரு கிரகத்தின் வெளிப்படையான வருகையை குறிப்பதாக மீட் கூறுகிறார்.
2.7 மைல் அகலமுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ள பாரிய விண்கல் ஒன்று, இவ்வருடம், செப்டம்பர் 1 அன்று பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லப் போகிறது என்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அறிவித்துள்ளது.
ஃப்ளாரன்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த பெரிய விண்வெளிப் பாறை நமது கிரகத்திலிருந்து 4.4 மில்லியன் மைல்கள் தொலைவில் கடந்து செல்லும். இது பூமிக்கும் நிலவுக்கும் இடையிலுள்ள தூரத்தைப் போல 18 மடங்கு அதிக தூரமாகும்.
நாசாவின் கூற்றுப்படி, இதுவரை ஆய்வு செய்யப்பட்டுள்ள, இந்த அளவுள்ள விண்கற்களில், இதுதான் பூமியின் மிக அருகில் முதலாவதாக கடந்து செல்லப்போகிறது. இதன்மூலம், தொலைதூர பொருள்களை முதன்முதலாக, பூமியை அடிப்படையாகக் கொண்ட ரேடார் அவதானிப்புகள் மூலம் வெகு அருகிலிருந்து, ஆராய்வதற்கான முதல் வாய்ப்பை இவ்விண்கல் அளித்துள்ளது.
இது ஆபத்தானதாக தோன்றினாலும், புளோரன்ஸ் விண்கல் பாதுகாப்பாக பூமியை சுமார் 4.4 மில்லியன் மைல்களுக்கு (7 மில்லியன் கிலோமீட்டர்) அப்பால் பறந்து சென்று விடும் என்று நாசா கூறுகிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில், உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 23 பேர் பலியாகியும், 72 பேர் படுகாயமடைந்தும் உள்ளனர். முதல்கட்ட விசாரணையில், விபத்திற்கான காரணம் தெரியவந்துள்லது. ரெயில் தண்டவாளத்தில் பராமரிப்பு பணி நடைபெற்றதைக் குறித்து உத்கால் எக்ஸ்பிரஸ் டிரைவரிடம் தெரிவிக்கப்படாததால், இவ்விபத்து நேரிட்டது என தெரியவந்து உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பூரி ஹரித்துவார் – கலிங்கா இடையே உத்கல் விரைவு ரயில் சென்றுகொண்டிருந்தது. அப்போது மாலை 5.46 மணியளவில் முசாஃபர்நகர் அருகில் ரயில் வந்து கொண்டிருந்த நிலையில், உத்கல் ரயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. மேலும், ஒரு பெட்டி அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது விழுந்துள்ளது. விபத்தில் 23 பேர் பலியானார்கள். மேலும் 72 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். மேலும்,
இந்த விபத்தில் உயிரிழந்தவரிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.3.5 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும், இலேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 25 ஆயிரமும் நிதி உதவி அளிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின் பிரிந்த அதிமுக கோஷ்டிகளில் முக்கிய இரண்டு கோஷ்டிகளான, முதல்வர் எடப்பாடி பழனிசாமி (இ.பி.எஸ்.) மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்.) ஆகியோரின் இரு அணிகளும் 7 மாத பிரிவுக்கு பிறகு விரைவில் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இவ்விரு அணிகளும் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு கட்டுப்பட்டு நடப்பதில் எவ்வித வித்தியாசமும் காட்டுவதில்லை. ஆதலால், பா.ஜ.க. -வின் தமிழக மற்றும் மத்திய தலைவர்கள் இவ்விரு அணிகளையும் ஒன்று சேர்த்தால் தமிழகத்தில் பா.ஜ.க. வளர வாய்ப்பு அதிகம் என்று நம்புவதால், இவ்விணைப்பில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதன் எதிரொலியாக இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.ஓபிஎஸ் அணி நிபந்தனையின்படி, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். மேலும், சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து வெளியேற்றவும் முடிவு செய்தார். இதனையடுத்து, நேற்று முன்தினம் ஜெயலலிதா சமாதிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒன்றாக வந்து மலர் தூவி இணைப்பு குறித்து அறிவிப்பார்கள் என்று கூறப்பட்டது. இதனால், இருவரது வீடு, ஜெயலலிதா சமாதி, அதிமுக தலைமைக் கழகத்தில் தொண்டர்கள் குவிந்தனர்.
இந்நிலையில், இரவு 9.45 மணியையும் தாண்டி ஆலோசனையில் இழுபறி நீடித்த நிலையில், மெரினாவுக்கு வந்திருந்த அதிமுக எம்எல்ஏக்களும் தொண்டர்களும் கலையத் தொடங்கினர். சுமார், 9.50 மணியளவில் ஓபிஎஸ் அணியினரின் செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. ஓபிஎஸ் அணியில் உள்ள மூத்த நிர்வாகிகள் கட்சி மற்றும் ஆட்சியில் முக்கியப் பதவிகளை கேட்டு தொடர் நெருக்கடி கொடுத்ததால் இணைப்பு முயற்சியில் முட்டுக்கட்டை ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும், இணைப்பு குறித்த இறுதி முடிவை ஓ. பன்னீர்செல்வமே எடுப்பார் என மதுசூதனன் தெரிவித்தார்.
இதனைக் குறித்து, இன்று ஓ.பி.எஸ். கூறுகையில், விரைவிலேயே இணைப்பு குறித்த செய்தி வெளியாகும் என்று கூறினார்.
இலங்குநீர்த் தண்சேர்ப்ப! இன்னா செயினும்
கலந்து பழிகாணார் சான்றோர்; – கலந்தபின்
தீமை எடுத்துரைக்கும் திண்ணறி வில்லாதார்
தாமும் அவரின் கடை.
-நாலடியார் # 227
விளங்கும் நீர்மிக்க குளிர்ந்த கடற்கரையையுடைய நாட்டின் அரசனே! நண்பர் தீயனவற்றைச் செய்தாலும், சான்றோர், அவர் செய்த பிழையை மனத்தில் கொள்ளார். நட்புச் செய்தபின் அவர் குற்றத்தை எடுத்துரைக்கும் திடமான அறிவில்லாதவர் தீமை செய்யும் நண்பரைவிடத் தாழ்ந்தவராவர்.
Lord of the cool land where the waters brightly shine! the good will not look upon the faults of others after mixing with them (in friendship), though they act disagreeably. Persons destitute of strength of mind who take up evil things and speak of them after mixing (in friendship), are themselves inferior to those of whom they speak.
புற்றுநோய் நோயாளிகள் பல சமயங்களில் அலோபதியைத் தவிர்த்து, மாற்று சிகிச்சைகளைத் தேடுகின்றனர். குறிப்பாக மூலிகை வைத்தியத்தில் இதற்கான மருந்துகள் உள்ளனவா என்று நோக்குகின்றனர்.
எஸ்ஸியக் தேநீர் (ESSIAC Tea) என்பது கனடாவில் உருவான, புற்றுநோய் சிகிச்சைக்கான ஒரு பிரபல மூலிகை சூத்திரம். இதனை உருவாக்கியவரின் பெயர் ரெனெ கெய்ஸ் (Rene Caisse). ரெனெ கெய்ஸ் 1920-களில் நர்ஸ்-ஆக பணிபுரியும் சமயத்தில், ஒரு செவ்விந்திய பழங்குடி மருத்துவரிடமிருந்து புற்றுநோயைக் குணமாக்கும் மருந்தைப் பற்றி அறியவந்ததாக கூறியுள்ளார்.
எஸ்ஸியக் தேநீர் நான்கு தாவர பொருட்களின் கலவையை கொண்டுள்ளது:
1) ஷீப் சோறெல் (sheep sorrel) பொடி
ஷீப் சொறல்
2) பொடிசெய்யப்பட்ட வழுக்கும் எல்ம் மரப் பட்டை (slippery elm bark)
எல்ம் மரப் பட்டை
3) பர்டோக் வேர் (Burdock root)
பர்டோக் வேர்
4) வான்கோழி ரூபார்ப் (turkey rhubarb) பொடி.
டுர்கி ரூபார்ப்
இவற்றில் டுர்கி ரூபார்ப் மற்றும் வழுக்கும் எல்ம் மரப்பட்டை ஆகியன முக்கியமான பாரம்பரிய மூலிகை மருந்துகளாகும்.
இந்த பொருள்களை முழுமையாக கலந்து, இருண்ட உலர் அலமாரியில் கண்ணாடி குடுவைகளில் சேமித்து வைக்கவும்.
ஒரு அளவிடும் கப் எடுத்து, நீங்கள் செய்ய வேண்டிய அளவைப் பொறுத்து, 32 அவுன்ஸ் தண்ணீருக்கு 1 அவுன்ஸ் மூலிகை கலவை என்ற விகிதத்தில் அளந்து பயன்படுத்த வேண்டும்.
பொதுவாக 1 கப் மூலிகைக் கலவையுடன் 8 x 32 = 256 அவுன்ஸ் தண்ணீர் பயன்படுத்தலாம். 10 நிமிடங்கள் (மூடி) கடினமாக கொதிக்க வைத்து, பின் வெப்பத்தை அணைக்கவும். பின்னர் அந்த சூடான தட்டைல் அடுத்த நாள் காலை வரை அப்படியே மூடி வைத்திருக்கவும்.
காலையில் மீண்டும் ஆவி வரும்வரை சூடாக்கிய பின் ஒரு சில நிமிடங்கள் ஆறவிட்டு, பின்னர் சூடான சுத்திகரிக்கப்பட்ட பாட்டில்களில் நன்றாக வடிகட்டி ஆறவைக்கவும். இருண்ட குளிர் அலமாரியில் சேமிக்கவும். இந்த பாட்டிலை உபயோகிக்கத் திறந்தால், பின்னர் குளிரூட்டப்பட (refrigerated) வேண்டும். இறுதியாக இருப்பவற்றை ஒரு பெரிய ஜாடியில் ஊற்றி, இரவு முழுவதும் ஒரு குளிர்சாதன பெட்டியில் வைத்தபின், படிவுகள் ஏதும் இல்லாத திரவத்தை தனித்தனி பாட்டில்களில் ஊற்றவும்.
எஸ்ஸியாக் தேநீர் பல்வேறு வகையான நாள்பட்ட புற்றுநோய் மற்றும் வேறு நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும், சிறந்த இயற்கைமுறை நச்சுநீக்கத்திற்கும் பயன்படுகிறது.
ஆயினும், ரெனே கெய்ஸின் எஸ்ஸியாக் தேநீர் மருந்து இதுவரை எந்த FDA- அங்கீகாரம் பெற்ற மருத்துவ ஆய்வுகளில் இடம் பெறவில்லை. இது புற்று நோய் அல்லது நிலைமையைத் தணிக்கிறது அல்லது தடுக்கிறது என்று முழுமையாக நிருபிக்கப் படவில்லை. ஆனால் பலரும், இதனை உபயோகித்தபின்னர் குணமடைந்திருப்பதாக கூறியுள்லனர். ஆகவே இந்த மாற்று மூலிகை மருந்தை எடுப்பதற்கு முன் உங்கள் டாக்டரிடம் ஆலோசித்து செய்வது நல்லது.
ஸ்பெயின் நாட்டிலுள்ள பார்சிலோனா நகரில் சாலையின் நிழல் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த பாதசாரிகள் மீது வேனை மோதியதில் 12 பேர் பலியாகியுள்ளனர். பயங்கரவாத அமைப்பான ஐஸிஸ் ( ISIS) இத்தாக்குதலை தாம் செய்ததாக ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், போலீசார் இதனை தீவிரவாத தாக்குதலாகவே கருதுவதாக தெரிவித்துள்ளனர்.
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் உள்ள லாஸ் ராம்லாஸ் என்ற சுற்றுலா பகுதியில் மரங்களின் நிழல் சூழ்ந்த பாதசாரிகள் செல்லும் பக்கவாட்டுப் பாதையில் சென்றுகொண்டிருந்த பாதசாரிகள் மீது பயங்கரமாக வாகனத்தை ஓட்டியதில் பலர் இறந்தனர், மேலும் பலர் படுகாயமடைந்ததையொட்டி அங்கு கடும் பதற்றமான நிலை நிலவியது.
முன்னதாக 13 பேர் இறந்தாக தெரிவிக்கப் பட்டிருந்தாலும், பின்னர் 12 பேர் இறந்திருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடம் இரத்தவெள்ளமாக காட்சியளித்தது என்று போலிசார் கூறியுள்ளனர். படுகாயமடைந்த சிலர் உயிர் பிழைப்பது கடினம் என்று கூறப்படுவதால், இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
பார்சிலோனா பயங்கரவாத தாக்குதலில் கைது செய்யப்பட்டுள்ள நபர்
இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சுதந்திர தினத்தன்று, லடாக் பாங்கோங் ஏரிப் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவ முயன்றதால் இந்தியா மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கும் இடையே லேசான கை கலப்பு ஏற்பட்டது. இது குறித்து சீன அரசுக்குத் புகார் அளிக்கப் பட்டபோது, தமக்கு எதுவும் தெரியாது என சீனா தெரிவித்துள்ளது.
நேற்று காலை 6 மணிக்கு, மீண்டும் 9 மணிக்கு என இரண்டு தடவை சீன ராணுவ வீரர்கள் இந்தியாவுக்குள் வர முயன்றனர். இந்திய ராணுவ வீரர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி தக்க பதிலடி கொடுத்தனர். மனித சங்கிலி அமைத்து அரண்போல நின்று கொண்டு இந்திய வீரர்கள், சீன வீரர்களை இந்தியாவுக்குள் ஊடுருவ விடாமல் தடுத்தனர்.
இதையடுத்து இந்திய வீரர்களுக்கும், சீன ராணுவ வீரர்களுக்கும் இடையே லேசான கை கலப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் கழித்து தங்கள் பகுதிக்கு திரும்பிச் சென்ற சீன வீரர்கள், தங்கள் பகுதியில் பதுங்கி இருந்து கொண்டு சீன வீரர்கள் கல் வீச்சில் ஈடுபட்டனர். இதில் இந்திய வீரர்கள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதற்குப் பதிலடியாக, இந்திய வீரர்களும் கல் வீசியதில் சீன வீரர்களுக்கும் காயம் ஏற்பட்டது. நீண்ட நேரத்துக்கு பிறகு சீன வீரர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
சீனாவின் இந்த செயலுக்கு இந்திய அரசு தரப்பிலிருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்ட போது, தமக்கு இதுபற்றி எதுவும் தெரியாது என்றும், எல்லையில் அமைதி நிலவ வேண்டும் என்பதில் சீனா உறுதியாக இருப்பதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் பற்றி கருத்து தெரிவிக்க கேட்கப்பட்டபோது, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் (Hua Chunying) கூறுகையில், “இந்த தகவல் பற்றி எனக்குத் தெரியாது. சீன எல்லைப் படைகள் இந்திய-சீன எல்லையில் சமாதானத்தையும் அமைதியையும் தக்கவைத்துக் கொள்ள உறுதிபூண்டிருப்பதை நான் உங்களுக்கு சொல்ல முடியும். ”
“நாங்கள் எப்போதும் சீனக் கட்டுப்பாட்டின் கீழ் உண்மையான கட்டுப்பாட்டின் (LAC) வரிசையில் ரோந்து செய்கிறோம். எல்.ஏ.சி. மற்றும் இரு தரப்புக்கும் இடையே உள்ள உடன்படிக்கைகளுக்கு இணங்க இந்திய தரப்பை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம், “என அவர் கூறினார்.
அமெரிக்காவின் பகுதியான குவாம்க்கு அருகே, ஏவுகணைகளால் தாக்கும் திட்டம் தற்போது தற்காலிகமாக நிறுத்தப் பட்டுருப்பதாகத் தெரிகிறது. இத்திட்டம் பற்றி, வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னுக்கு, அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.
அமெரிக்கக் கடற்படைத் தளங்களும், ஆகாயப் படைத் தளங்களும் அமைந்திருக்கும் பகுதி, குவாம். குவாமுக்கு அருகில் 4 ஏவுகணைகளைப் பாய்ச்சுவதற்கான விரிவான திட்டம் தொடர்பான விவரங்கள் இம்மாத நடுப்பகுதிக்குள் உறுதிபடுத்தப்படும் என்று வடகொரிய ராணுவம் கடந்த வாரம் கூறியிருந்தது.
இத்திட்டம் குறித்து வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஆய்வு நடத்தியதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், அமெரிக்கா என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க அவர் முடிவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்பான, சி.ஐ.ஏ., யின் இயக்குனர் மைக் போம்பியோ, ஒரு பேட்டியில் கூறியுள்ளதாவது: தற்போதைய சூழ்நிலையில், வட கொரியா உடனடியாக தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பில்லை. இருந்தாலும், 10 ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட, போர் ஏற்படுவதற்கான வாய்ப்பு தற்போது அதிகம் உள்ளது என்றார்.
வட கொரியாவின் தற்போதைய நிதானம், பல தரப்புகளிலிருந்தும், குறிப்பாக சீனாவிலிருந்து கொடுக்கப்படும் அழுத்தம் காரணமாகவே என்பது தெளிவு. ஐ.நா.வின் தடைத் தீர்மானத்தின் பின்னர், வடகொரியாவில் இருந்து வரும் சில இறக்குமதிப் பொருட்களை சீனா, நிறுத்திக்கொண்டுள்ளது.
இதனைத் தவிர, முந்தைய அமெரிக்க அதிபர்களைப் போல கண்டும் காணாமல் இருக்காமல், தற்போதைய அதிபர் டிரம்ப், வடகொரியாவின் ஆணவப் பேச்சுகளுக்குத் தக்க பதில்களை அவ்வப்போது கூறிவருவதாலும், வட கொரியாவின் அண்டைய நாடுகள், எங்கே போர் வந்துவிடுமோ, என்ற அச்சத்தினால் எப்போதும் இல்லாத அளவுக்கு வட கொரியாவிற்கு அழுத்தம் கொடுப்பதாலேயே, இந்த தற்காலிக நிதானம் என்று கருதலாம். இருப்பினும், வட கொரியா போன்ற ரகசியமாக செயல்படும், சர்வாதிகார அரசின் செயல்பாடுகள் எவ்வாறு அமையும் என்று நாம் உறுதியாக சொல்ல முடியாது.
இந்திய நாட்டின் 71-வது சுதந்திர தின விழா டெல்லியில் சிறப்பாக நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
“1947, ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தியதி” என்பது ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும், நினைவிலும் நிற்கும் தினமாகக் கருதப்படுகிறது. அந்நாள், “நமது நாட்டின் உதய நாள்” என்றால் சொன்னால் அது மிகையாகாது.
இதனை முன்னிட்டு, தலைநகர் புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றினார். அதன் பின்னர் மோடி ஆற்றிய உரையில் கூறியதாவது :
“வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்வில் பங்கேற்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். உத்தரபிரதேச மருத்துவமனையில் குழந்தைகள் இறந்தது, எல்லைப் பகுதியில் நீடிக்கும் சிக்கல் போன்ற பல பிரச்சனைகளை கடந்து, சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம். கோரக்பூரில் குழந்தைகள் உயிரிழந்ததால் இந்த நாடே மன வேதனையில் உள்ளது.”
மேலும் அவர் கூறுகையில், 2022-க்குள் ஒரு புதிய இந்தியா படைத்திட நாம் ஒன்றிணைந்து உறுதி ஏற்போம் என அவர் கூறினார். நாட்டில் அனைவரும் சமம்; நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்று பிரதமர் மோடி உரையில் கூறியுள்ளார் புதிய இந்தியாவை உருவாக்கும் உறுதியுடன் நாம் அனைவரும் பயணிக்க வேண்டும் என்றும் பிரதமர் கூறியுள்ளார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75 வது ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுகிறோம் என மோடி உரையில் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு செயலையும் தேசபக்தியுடன் செய்தால் நினைக்கும் புதிய இந்தியா உருவாகும் என்று அவர் கூறினார். மக்கள் ஒத்துழைத்தால் அடுத்த 5 ஆண்டுகளில் புதிய இந்தியா பிறக்கும் என்று கூறினார்.
சுதந்திர தின விழாவின்போது அருண் ஜெட்லி, தேவ கவுடா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துகொண்டனர். மத்திய அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் விழாவில் கலந்துகொண்டார்கள்.