Categories
இந்தியா தலைப்புச் செய்திகள்

மாடுகள் விற்பனைத் தடை: சென்னை உயர்நீதி மன்றத்தின் இடைநிறுத்த உத்தரவை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்தது

மாடுகள் சந்தையில் கசாப்பிற்காக விற்பனை செய்யப்படுவதைத் தடை செய்யும் மத்திய அரசின் அறிவிப்பிற்கு  சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைநிறுத்த ஆணை பிறப்பித்ததை உச்சநீதிமன்றம் இன்று அங்கீகரித்துள்ளது.

இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைநிறுத்த ஆணை நாடு முழுவதும் செல்லுபடியாகும்.

சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவை மாற்றியமைக்க விரும்பவில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ச் தடுத்து நிறுத்தும் முன்னர், கேரள உயர்நீதிமன்றம் அதனைத் தடுத்து நிறுத்த மறுத்து விட்டது.

இவ்விரு முரண்பட்ட ஆணைகளில், சென்னை  உயர்நீதிமன்றம் மத்திய அரசின் அறிவிப்பிற்கு எதிராக வழங்கிய தடுப்பு ஆணையே செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கூறுகிறது.

மிருகச் சந்தையில் கசாப்பு செய்வதற்காக விற்பனை மற்றும் கொள்முதல் ஒழுங்குமுறையின்  தற்போதைய அறிவிப்பு பரிசீலிக்கப்படுவதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இறைச்சி ஏற்றுமதியாளர்கள் சார்பாக வாதிட்ட மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் , உச்சநீதிமன்றத்தில், “கால்நடைகளின் கசாப்பு ஒழுங்குமுறை பற்றிய அறிவிப்பைப் பற்றி மக்கள் மத்தியில் பயமும் கலக்கமும் இருக்கிறது” என்று கூறினார்.

வணிகங்கள்  தடுக்கப்படவில்லை என்பதை உறுதி செய்யும் வகையில், உச்சநீதிமன்றம் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும்படி  கபில் சிபல் கேட்டுக்கொண்டார்.

 

Share
Categories
இந்தியா மகாராஷ்ட்ரா மும்பை

முகேஷ் அம்பானி வீட்டில் தீ விபத்து

பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானி மும்பை அல்டாமவுண்ட் சாலையில் உள்ள 27 மாடி அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். உலகிலேயே விலையுயர்ந்த கட்டிடங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த அடுக்குமாடி குடியிருப்பில், தியேட்டர், நீச்சல் குளம் உள்பட சகல வசதிகளும் காணப்படுகின்றன.

இதன் 6–வது மாடியில் முகேஷ் அம்பானி தோட்டம் அமைத்து பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று இரவு 9.10 மணிக்கு இந்த பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால், 6–வது மாடியில் இருந்து குபு குபுவென கரும்புகை வெளியேறியது. அப்பகுதியே தீப்பிழம்பாக காட்சியளித்தது.

தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், 6 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டவில்லை. சேத விவரம் உடனடியாக தெரியவரவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் நேற்று மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Share
Categories
கிரிக்கெட்டு விளையாட்டு

20 ஓவர் கிரிக்கெட்: வெஸ்ட்இண்டீஸ் அணியிடம் இந்தியா தோல்வி

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

இந்தியா–வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான ஒரே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கிங்ஸ்டனில் நேற்று முன்தினம் நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்த வெஸ்ட்இண்டீஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் விராட்கோலி, ஷிகர் தவான் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் அடித்து ஆடினார்கள். 4.4 ஓவர்களில் இந்திய அணி 50 ரன்னை எட்டியது. அணியின் ஸ்கோர் 64 ரன்னாக உயர்ந்த போது கேப்டன் விராட்கோலி (39 ரன்கள், 22 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) கேஸ்ரிக் வில்லியம்ஸ் பந்து வீச்சில் சுனில் நரினிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து ரிஷாப் பான்ட், ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்தார். ஷிகர் தவான் 12 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 23 ரன்கள் எடுத்த நிலையில் கேஸ்ரிக் வில்லியம்சால் ‘ரன்–அவுட்’ செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து களம் இறங்கிய தினேஷ் கார்த்திக் (48 ரன்கள், 29 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன்) சாமுவேல்ஸ் பந்து வீச்சில் போல்டு ஆனார். அடுத்து வந்த டோனி 2 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். ரிஷாப் பான்ட் 35 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 38 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். கேதர் ஜாதவ் 4 ரன்னில் ‘அவுட்’ ஆனார்.

 

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது. வெஸ்ட்இண்டீஸ் அணி தரப்பில் ஜெரோம் டெய்லர், கேஸ்ரிக் வில்லியம்ஸ் தலா 2 விக்கெட்டும், சாமுவேல்ஸ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெய்ல், எவின் லீவிஸ் ஆகியோர் களம் இறங்கினார்கள். கெய்ல் 20 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 18 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார்.

வெஸ்ட்இண்டீஸ் வெற்றி

அடுத்து சாமுவேல்ஸ், எவின் லீவிஸ்சுடன் இணைந்தார். எவின் லீவிஸ் அதிரடியாக ஆடினார். 46 மற்றும் 55 ரன்னில் இருக்கையில் கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பிய எவின் லீவிஸ் 53 பந்துகளில் சதம் கண்டார்.

18.3 ஓவர்களில் வெஸ்ட்இண்டீஸ் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. எவின் லீவிஸ் 62 பந்துகளில் 6 பவுண்டரி, 12 சிக்சருடன் 125 ரன்னும், சாமுவேல்ஸ் 29 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 36 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் நின்றனர்.

 

இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட்இண்டீஸ் அணி 1–0 என்ற கணக்கில் போட்டி தொடரை கைப்பற்றியது. வெஸ்ட்இண்டீஸ் வீரர் எவின் லீவிஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். முன்னதாக நடந்த ஒருநாள் போட்டி தொடரை இந்திய அணி 3–1 என்ற கணக்கில் வென்று இருந்தது.

 

Share
Categories
உலகம் தலைப்புச் செய்திகள்

சோமாலியா: ராணுவம்-பயங்கரவாதிகள் மோதலில் 18 பயங்கரவாதிகள் பலி

சோமாலியாவில் அல்கொய்தா ஆதரவு பெற்ற அல்-சபாப்  பயங்கரவாதிகளுக்கு எதிராக சோமாலியா ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.

அங்குள்ள பண்ட்லாந்து பிராந்தியத்தில் கல்கலா மலைப் பிரதேச பகுதிகளில் அல்-சபாப் பயங்கரவாதிகள் முகாம்களை அமைத்து உள்ளனர். இந்த முகாம்களை குறிவைத்து ராணுவம் அதிரடி தாக்குதலை அரங்கேற்றியது. இதில் இருபிரிவினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

இதில் 18 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் பயங்கரவாதிகளின் 6 முகாம்களை அழித்து, அவர்களின் ஆயுதங்களை கைப்பற்றியதாக ராணுவம் நேற்று தெரிவித்து உள்ளது. இந்த தாக்குதலை பயங்கரவாதிகளும் உறுதிப்படுத்தி உள்ளனர். ஆனால் தங்கள் தரப்பில் எந்த உயிரிழப்பும் நிகழவில்லை என அவர்கள் மறுத்துள்ளனர்.

அல்-சபாப் பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடும் பண்ட்லாந்து பிரதேச ராணுவத்தினருக்கு, அமெரிக்க படையினர் ஆதரவும், பயிற்சியும் அளித்து வருகின்றனர். எனினும் இந்த தாக்குதலில் அமெரிக்க படையினரின் பங்களிப்பு இருந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

Share
Categories
இந்திய சினிமா சினிமா தலைப்புச் செய்திகள்

நடிகை பாவனா கடத்தல் விவகாரத்தில் நடிகர் திலீப் கைது

நடிகை பாவனா கடத்தல் விவகாரத்தில்  பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.

சென்ற பிப்ரவரி மாதம் 17–ந் தேதி, நடிகை பாவனா கேரள மாநிலம் கொச்சியில் காரில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு மர்ம கும்பலால் வழிமறித்து கடத்தப்பட்டு, காரிலேயே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். கேரளாவையே உலுக்கிய இச்சம்பவம் நடந்த ஓரிரு நாளில், சம்பவம் நடந்த காரின் டிரைவர் மார்ட்டின் அந்தோணி என்பவன் கைதானான். அவன் பல்சர் சுனில் என்பவனை பற்றியும், அவனுடைய கூட்டாளிகளை பற்றியும் தெரிவித்தான். இதையடுத்து, பல்சர் சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இச்சம்பவத்தின் சதி பின்னணியை கண்டறிய ஐ.ஜி. தினேந்திர காஷ்யப் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. கூடுதல் டி.ஜி.பி. சந்தியா, வழக்கின் மேற்பார்வை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இச்சம்பவத்தில், பிரபல மலையாள நடிகர் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாக ஆரம்பத்தில் இருந்தே கூறப்பட்டு வந்தது. இருப்பினும், அவர் அதை மறுத்து,  பல்சர் சுனிலை தனக்கு தெரியாது என்றார்.

இந்நிலையில்,  நடிகர் திலீப் நேற்று காலை கைது செய்யப்பட்டார். நடிகை பாவனாவை கடத்துவதற்கும், பாலியல் பலாத்காரம் செய்வதற்கும் சதித்திட்டம் தீட்டியதற்காக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

திலீப்பின் சதித்திட்டத்துக்கு காரணம் பாவனா மீது கொண்ட தனிப்பட்ட பகையே என்று பொலிசார் கூறினர்.  பல்சர் சுனில் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக திலீப், கடந்த மாதம் போலீசில் புகார் தெரிவித்து இருந்தார். அதன் அடிப்படையில், அவரிடம் 2 வாரங்களுக்கு முன்பு போலீசார் 13 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதையடுத்து, திலீப்புக்கு எதிரான ஆதாரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகின. பல்சர் சுனில், திலீப்புக்கு எழுதிய கடிதம் மற்றும்  பல்சர் சுனிலுக்கும், திலீப்பின் மேலாளர் அப்புன்னிக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் அடங்கிய ஆடியோ ஆகியவை வெளியானது. கடந்த நவம்பர் மாதம் திலீப் நடித்த ஒரு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் பல்சர் சுனில் நிற்பது போன்ற புகைப்படமும் வெளியானது.

ரூ.50 லட்சம் கூலிக்காக, நடிகை பாவனாவை கடத்தியதாகவும்,  பாவனாவை பாலியல் பலாத்காரம் செய்தபோது எடுத்த வீடியோவை திலீப்பின் இரண்டாவது மனைவியான நடிகை காவ்யா மாதவன் நடத்தும் கடையின் ஊழியரிடம் கொடுத்து வைத்திருப்பதாகவும் பல்சர் சுனில் தெரிவித்தான். இதனால், காவ்யா மாதவன் மீதும் சந்தேகம் உருவாகி அவரது கடையில் போலீசார் சோதனை நடத்தினர்.

திலீப்பை கைது செய்யும் முடிவு, ஒரு வாரத்துக்கு முன்பே, போலீஸ் டி.ஜி.பி. லோகநாத் பெகரா தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டது. அதற்காக, சிறப்பு விசாரணை குழு தலைவர் தினேந்திர காஷ்யப்பை கொச்சியிலேயே தங்கி இருக்குமாறு டி.ஜி.பி. உத்தரவிட்டார். இதையடுத்து, நடிகர் திலீப் நேற்று கைது செய்யப்பட்டார்.

சதித்திட்டத்திற்கான பின்னணி குறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது:

நடிகர் திலீப், அவருடைய முதல் மனைவியான நடிகை மஞ்சு வாரியர், நடிகை பாவனா ஆகியோர் இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தனர். ஒருகட்டத்தில், காவ்யா மாதவன் மீது திலீப் காதல்வயப்பட்டார். இதை மஞ்சு வாரியரிடம் பாவனா தெரிவிக்கவே, பாவனா மீது திலீப் ஆத்திரம் அடைந்தார். பின்னர், மஞ்சு வாரியரை விவாகரத்து செய்த திலீப், காவ்யா மாதவனை 2–வது திருமணம் செய்து கொண்டார். முன்பு, கூட்டாக ரியல் எஸ்டேட் வர்த்தகம் செய்தபோது வாங்கிய சில நிலங்களை பெயர் மாற்றம் செய்ய கையெழுத்து போடுமாறு திலீப் கேட்டபோது, பாவனா மறுத்து விட்டதாக தெரிகிறது. இதற்கிடையே, பாவனாவுக்கு திருமணம் நிச்சயம் ஆனது. அந்த திருமணத்தை கெடுக்கும் நோக்கத்தில், பாவனாவை பாலியல் பலாத்காரம் செய்து, அந்த வீடியோவை அவருடைய வருங்கால கணவருக்கு அனுப்பி வைக்க பல்சர் சுனிலுடன் இணைந்து திலீப் சதித்திட்டம் தீட்டியிருக்கிறார். தற்போது சதித்திட்டம் அம்பலம் ஆனதால், திலீப் கைது செய்யப்பட்டார்.

Share
Categories
ஆரோக்கியம் உடல்நலம் மருத்துவ ஆய்வு

காபி குடிப்பதால் வாழ்நாள் அதிகரிக்கும்: புதிய ஆய்வு

காலையில் ஒரு கப் காபியுடன் உங்களது தினத்தைத் தொடங்குவது, உங்கள் வாழ்நாட்களை அதிகரிக்கச் செய்யும் என்று தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழக (University of Southern California) ஆராய்ச்சியாளர்கள் தங்களது புதிய ஆய்வறிக்கையில் கூறுகிறார்கள். காபி குடிப்பதால் இதய நோய், புற்று நோய், பக்க வாதம், நீரிழிவு, சுவாசம் சம்பந்தமான நோய்கள், மற்றும் சிறுநீரக நோய்கள் குறையும் வாய்ப்பு இருப்பதாக அவர்களது ஆய்வறிக்கை கூறுகிறது.

தினமும் ஒரு கப் காபி குடிப்பவர்கள் இறக்கும் வாய்ப்பு, காபியே குடிக்காதவர்களைவிட 12 % குறைவாக உள்ளதாகவும், தினமும் இரண்டு கப் காபி குடிப்பவர்களுக்கு இது 18 % குறைவென்றும் மேற்படி ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும், இவ்விகிதங்கள் சாதாரண காபி குடிப்பவர்களுக்கும், கஃபீன் நீக்கப்பட்ட காபி (decoffeinated coffee) குடிப்பவர்களுக்கும் பொருந்தும் என்கிறார் இந்த ஆய்வுக்கட்டுரையின் பிரதான ஆராய்ச்சியாளர் வெரோனிக்கா செட்டியவான் (Veronica W. Setiawan). இவர் தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்திலுள்ள (USC) கெக் மருத்துவக் கல்லூரியில் (Keck School of Medicine) பேராசிரியராக பணிபுரிகிறார். இவர்களின் ஆய்வுக்கட்டுரை அன்னல்ஸ் ஆஃப் இண்டர்ணல் மெடிசின் (Annals of Internal Medicine) என்ற மருத்துவ இதழில் ஜூலை 11 -ல் வெளியிடப்படுகிறது.

பல்வேறு மக்களினங்களைச் சார்ந்த, 45 லிருந்து 75 வயதிற்குள்ளான, ஏறத்தாழ 215,000 பேரிடம் நடத்தப் பட்ட இந்த ஆய்வில், உணவுப்பழக்கங்கள், வாழ்க்கைமுறை, குடும்பம் மற்றும் அவர்தம் மருத்துவ வரலாறு குறித்த கேள்வித்தாள்கள் கொடுக்கபட்டு அவற்றிற்கான பதில்களை அதில் குறித்தபின் ஆய்வாளர்கள் அவற்றை  திரும்பப் பெற்றனர். இதுபோல ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும்  கேள்வி-பதில் நிரப்புதல் தொடர்ந்தது. இப்படி நடத்தப்பட்ட ஆய்வில், ஒரு நபரிடமிருந்து தோராயமாக 16 வருடம்  காலம் பதில்கள் பெறப்பட்டன. இந்த ஆய்வுக் காலத்தில், ஆய்வில் பங்கேற்றவர்களில்  58,397 பேர் இறந்திருந்தனர். அவற்றுள் இதய நோயினால் 36 % -ம் , புற்றுநோயினால் 31 % இறந்தனர்.

காபி குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்

“காபியில் ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்டுகளும் (antioxidants), ஃபினோலிக் சேர்மங்களும் (phenolic compounds) இருப்பதால், புற்றுநோயைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.” என்று ஆராஅய்ச்சியாளர் செட்டியவான் கூறினார். மேலும்,  “இந்த ஆய்வில் காபியில் உள்ள எந்த இரசாயனங்கள்  “நல்ல விளைவை” உருவாக்குகின்றன என்பதைக் காட்டவில்லையென்றாலும், காபியை ஆரோக்கியமான உணவு முறையிலும், வாழ்க்கை முறையிலும் இணைக்க முடியும் என்பது தெளிவு.” என்றும் கூறினார்.

இதுபோல வேறு சில ஆய்வாளர்கள் காபியினால் பெருங்குடல் புற்றுநோய் உருவாகும் வாய்ப்பை குறைக்க முடியும் என்று கூறியிருக்கிறார்கள்.

ஆயினும் சூடான காபி அல்லது வேறு சூடான பானங்களால் உணவுக்குழாய் புற்றுநோய் உருவாகலாம் என உலக சுகாதார நிறுவனம் (World Health Organization) ஆய்வாளர்கள் முன்பு தெரிவித்திருந்தனர்.  அனால் கடந்த 25 வருடங்களாக காபி சிறுநீர்ப்பை புற்றுநோய் உருவாக்கும் காரணியாக காட்டப்பட்டிருந்தாலும்,  தற்போது உலக சுகாதார நிறுவனம், காபி  கல்லீரல் மற்றும் கருப்பை புற்றுநோய் உருவாகும் வாய்ப்பைக் குறைக்கும் என்று தெரிவித்துள்ளது.

ஆகவே காலையில் எழுந்தவுடன் காபி குடிப்பது மிகவும் நல்லதே.

 

 

Share
Categories
ஆரோக்கியம் தமிழகம் மருத்துவ ஆய்வு

தமிழகத்தில் ஒருவருக்கு ஜிக்கா வைரஸ் பாதிப்பு

தமிழகத்தில் ஒருவருக்கு ஜிக்கா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதனால் மீண்டும் ஜிக்கா வைரஸ் பீதி எழுந்துள்ளது. கடந்த 2007 மற்றும் 2013ம் ஆண்டுகளில் பசிபிக் பிராந்திய நாடுகளான, அமெரிக்க, பிரேசில், கொலம்பியா, ஆப்ரிக்கா என ஜிகா வைரஸ் தாக்கம் பரவ தொடங்கியது. ஆப்ரிக்காவிலும், ஆசியக் கண்டத்திலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக அதன் பாதிப்பு இருந்து வந்தது.

2007ம் ஆண்டு மேற்கு பசிபிக் பெருங்கடலில் அருகில் உள்ள யாப் என்ற தீவில் வசித்த 75 சதவீதம் பேரை இந்த வைரஸ் தாக்கியது. அதன்பிறகு, 2015ம் ஆண்டு மேதம் மாதம் பிரேசிலில் இந்த வைரஸ் தாக்கியதை பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். அதைத் தொடர்ந்து, 2015ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து தொடர்ந்து பல்வேறு நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பு இருந்து வருகிறது. மத்திய அமெரிக்க கண்டத்தில் உள்ள சுமார் 23 நாடுகளில் ஜிகா பாதிப்பு காரணமாக ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்தியாவில் இதன் பாதிப்பு இல்லை எனக் கூறப்பட்டு வந்த நிலையில் குஜராத்தை சேர்ந்த 3 பேருக்கு ஜிக்கா வைரஸ் பாதிப்பு இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது. இந்நிலையில் தமிழகத்திலும் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பதை சுகாதாரத் துறை உறுதி செய்துள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும் ஒருவருக்கு ஜிக்கா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பீதியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் நெட்றாபாளையத்தை சேர்ந்த ஒருவருக்கு இதன் பாதிப்பு உள்ளது தெரிய வந்துள்ளது. ஜிக்கா வைரசால் பாதிக்கப்பட்ட 27 வயது இளைஞர் சிகிச்சைக்குப்பின் உடல்நலம் தேறிவருகிறார். பாதிக்கப்பட்டவரின் சிறுநீர், ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனே ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. அதில் அவருக்கு ஜிக்கா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இவ்வாறு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

Share
Categories
இந்தியா காங்கிரஸ் தலைப்புச் செய்திகள் ராகுல் காந்தி

சீனத்தூதருடன் சந்திப்பு குறித்து ராகுல் காந்தி காட்டமான பதில்

இந்தியாவுக்கும் சீனவுக்கும் இடையிலான எல்லை தொடர்பான மோதல் நிலவிவரும் சூழலில், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி சீன தூதர் லுயோ ஜாயோஹூ சந்தித்தது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.

இதற்குப் பதிலளிக்கும் விதத்தில் ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ள ராகுல்காந்தி, எல்லையில் ஆயிரம் சீன வீரர்கள் அத்துமீறி இந்தியாவுக்குள் நுழைந்த நிலையில், அந்நாட்டு அதிபரோடு ஊஞ்சலில் அமர்ந்து பேசுபவன் நானல்ல என்று கூறியுள்ளார். அண்மையில் சீனாவில் அதிபர் ஜிங்பிங்குடன் மோடி ஊஞ்சலில் அமர்ந்து பேசிய படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார். சீனத் தூதர் தன்னை சந்தித்தது குறித்து கவலைப்படும் மத்திய அரசு, இருநாடுகள் இடையே பதற்றம் நிலவும் சூழலில் மத்திய அமைச்சர்கள் மூன்று பேர் சீனாவுக்கு பயணம் சென்றதேன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர் “பாஜகவின் பக்த ஊடகங்கள் செய்தி வெளியிடும் முன்னர் உண்மைத்தன்மையை சோதிக்க வேண்டும்” என்று காட்டமாக பதிவுசெய்திருந்தார்.

Share
Categories
அமர்நாத் இந்தியா ஜம்மு காஷ்மீர் தலைப்புச் செய்திகள்

அமர்நாத் திருப்பயணிகள் மீது பயங்கரவாத தாக்குதல்

காஷ்மீர்: ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை அருகே அமர்நாத் திருப்பயணிகள் சென்றுகொண்டிருந்த பஸ் மற்றும் அனந்த்னாக் அருகே ஒரு பொலிஸ் குழு  மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 7 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களில் ஒருவர் ஒரு உயிர் ஊசலாடும் நிலையில் உள்ளார். இது அமர்நாத் யாத்ரீகர்கள் மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதல் ஆகும்.

தாக்குதலுக்கு உள்ளான அமர்நாத் பயணிகள் மருத்துவமனையில் முதலுதவி பெறுகின்றனர்

போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் முனிர் கான் இந்தத் தாக்குதலில் 12 பேர் காயமடைந்ததாக  தெரிவித்தார். காஷ்மீரில் உள்ள இணைய சேவைகள் தாக்குதலுக்கு பின்னர் தடுக்கப்பட்டுள்ளன.

தாக்குதலுக்கு உள்ளான யாத்ரீகர்களின் பஸ் குஜராத்தில் இருந்து புறப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை தாக்குதலுக்கு பின்னர் மூடப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் இந்த சூழ்நிலையை குறித்து ஆராய்ந்து வருகின்றனர். மோடி டிவிட்டரில் “ஜம்மு மற்றும் காஷ்மீரில் சமாதானமானமாக சென்றுகொண்டிருந்த அமர்நாத் யாத்ரீகர்கள் மீதான கொடூரமான தாக்குதலால் வார்த்தைகளால் சொல்லமுடியாத அளவு வேதனை அடைந்தேன். ஆனால் இத்தகைய கோழைத்தனமான தாக்குதல்களாலும், வெறுப்புணர்ச்சியின் தீய எண்ணங்களாலும் இந்தியா ஒருபோதும் அடிபணிய வைக்க முடியாது” என்று தெரிவித்திருந்தார்.

Share
Categories
அமெரிக்கா உலகம் சீனா

வடகொரியா விவகாரம்: அமெரிக்காவுடன் இணைந்து செயல்படபோவதாக சீனா சொல்கிறது

வடகொரிய அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுடன் இணைந்து செயல்படப் போவதாக சீனா அறிவித்துள்ளது.

ஆசிய நாடான வடகொரியா தனது எதிரியான தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும் அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் ஜெர்மனியில் உள்ள ஹம்பர்க் நகரில் ஜி 20 நாடுகளின் தலைவர்கள் மாநாடு 2 நாட்கள் நடந்தது. இந்த மாநாட்டின் நிகழ்ச்சிகளுக்கு இடையே நேற்று முன்தினம் இரவு ஜனாதிபதி டிரம்ப், சீன அதிபர் ஜின்பிங் இருவரும் சந்தித்து பேசினர்.அப்போது அண்மைக்காலமாக வடகொரியா விடுத்து வரும் அணு ஆயுத சோதனை மிரட்டல் மற்றும் அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தக உறவில் காணப்படும் சீரற்ற நிலைமை குறித்து விரிவாக விவாதித்தனர்.ஏற்கனவே, அமெரிக்கா- சீனா இடையே அவ்வளவாக நட்புறவு இல்லாத நிலையில் ஹம்பர்க் நகர சந்திப்பு இரு தலைவர்களையும் அமைதிப்படுத்துவதாக இருந்தது.பின்னர், டிரம்ப் நிருபர்களிடம் பேசுகையில், “வடகொரியாவின் அணுஆயுத விவகாரத்தில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும்” என்றார்.டிரம்பை சந்தித்த பிறகு ஜின்பிங்கும், அமெரிக்காவை  பாராட்டி பேசினார்.அவர் கூறும்போது, “அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவும், சீனாவும் ஒத்துழைத்து செயல்பட முடிவு செய்துள்ளன. அதேநேரம், வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவேண்டியதன் அவசியம் குறித்தும் டிரம்பிடம் எடுத்துக் கூறினேன்” என்றார்.

Share