Categories
அறிவியல் உலகம் தலைப்புச் செய்திகள்

அண்டார்டிகாவில் டிரில்லியன் டன் எடையுள்ள பனிப்பாறை தனியாக பிளந்து மிதக்கிறது

அண்டார்டிகாவில் டிரில்லியன் டன் எடையுள்ள பனிப்பாறை தனியாக பிளந்து மிதக்கிறது. இதனால் கடல் மட்டம் சற்று உயரலாம் என்று கருதப்படுகிறது.

இப்பனிப்பாறையை பலகாலமாக விஞ்ஞானிகள் ஐரோப்பிய செயற்கைக்கோள்கள் மூலம் கண்காணித்து வந்தனர். பின்னர், ஜூலை 10 ஆம் தேதிலியிருந்து 12 தேதிக்குள் பிரிந்து விட்டதை விஞ்ஞானிகள் அறிந்தனர். இப்பனிப்பாறையின் சுற்றளவு 5,800 சதுர கிலோமீட்டர்களாகும். இதற்கு ஏ 68 என்று பெயரிட்டுள்ளனர்.

 

இதுவரை பிரிந்து வந்த மிகப்பெரிய பனிப்பாறைகளில் மிகப் பெரியது   இதுவாகும். இதன் போக்கு எப்படியிருக்கும் என்பதும் இதுவரை தெரியவில்லை. பனிப்பாறை  பிரிந்து விட்டதால் லார்சின் சி எனும் பனி அடுக்கில் 12 சதவீத பரப்பு குறைந்திருக்கிறது. இதன் மூலம் இதன் அளவை கணிக்க முடியும்.

 

கடந்த 1995 ஆம் ஆண்டிலும், 2002 ஆம் ஆண்டிலும் இதே போல லார்சன் ஏ மற்றும் பி பனி அடுக்குகளிலிருந்து பனிப்பாறைகள் பிரிந்து சென்றன. இதனால் கடல் மட்டம் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டது. இப்போதும் அது போலவே கடல் மட்டம் அதிகரிக்கலாம் என்று கூறுகிறார் பிரிட்டிஷ் ஆய்வாளர் ஒருவர்.இப்பனிப்பாறையால் அப்பகுதியில் செல்லும் கப்பல்களுக்கு அதிக சிக்கல்களை உருவாக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த 2009 ஆம் ஆண்டில் அண்டார்டிகா தீபகற்பத்தில் ஒரு பனிப்பாறையில் மோதி மூழ்கிய எம் டி வி எக்ஸ்ப்ளோரர் எனும் கப்பலில் பயணித்த 150 ற்கும் மேற்பட்ட பயணிகளை காப்பாற்றி அழைத்து வந்தனர்.

புவி வெப்பமடைதலின் விளைவாக இப்பிரிவு ஏற்பட்டதா என்பதை உறுதியாக கூற முடியாது எனும் விஞ்ஞானிகள் இது போன்று பனிப்பாறைகள் பிரிவது இயல்பாக நடப்பதே என்கின்றனர். மீண்டும் பனி அடுக்குகளில் பனி சேர்ந்து பனிப்பாறைகள் உருவாகலாம். ஆனாலும் விஞ்ஞானிகளிடையே இக்கருத்தில் ஒற்றுமையில்லை. ஒரு பிரிட்டிஷ் ஆய்வாளர், “எங்களது கணிப்பு மாதிரிகள் பனிப்பாறைகள் நிலையில்லாமல் இருக்கின்றன என்று கூறுகின்றன; ஆனால் மீண்டும் பனிப்பாறைகள் பிரிவது சில ஆண்டுகளிலோ, பத்தாண்டுகள் கழித்தோ நடைபெறலாம்”, என்றார்.

Share
Categories
அமெரிக்கா தலைப்புச் செய்திகள்

அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் ஆண்டுதோறும் பதிவு செய்வது பற்றி பரிசீலனை

வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் தங்கியிருந்து படிப்பதற்கு, நாட்டின் புதிய குடியேற்ற கொள்கையின் அடிப்படையில் உள்நாட்டு பாதுகாப்பு, ஒருமைப்பாடு ஆகியவற்றை உறுதி செய்யும் விதமாக புதிய நிபந்தனை ஒன்றை விதிக்க டிரம்ப் நிர்வாகம் தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது.

தற்போது அமெரிக்காவில் தங்கி படிக்கும் வெளிநாட்டு மாணவ-மாணவிகள் தாங்கள் அமெரிக்க கல்வித் திட்டத்தின் கீழ் படிப்பதற்கு பதிவு செய்தது முதல் அந்த படிப்பை முடிக்கும் காலம் வரை ஒரு முறை விண்ணப்பித்தால் மட்டும் போதுமானது. இவர்களுக்கு தங்கியிருந்து படிக்கும் காலம் வரை எப்-1 விசா வழங்கப்படுகிறது.

புதிய விதிமுறையின்படி அமெரிக்காவில் தங்கியிருந்து படிக்கும் மாணவர்கள் பல் கலைக்கழங்களில் படிப்பை மேற்கொள்ள பதிவு செய்த நாளில் இருந்து அங்கு தங்கி படிக்கும் காலம் வரை ஆண்டுதோறும் தங்களுடைய படிப்புக்கான பதிவை மறு விண்ணப்பம் செய்து புதுப்பிக்கவேண்டும். அதனால், தற்போதுள்ள ஒரு முறை மட்டுமே பதிவு செய்யும் முறை தானாக ரத்தாகிவிடும். இதற்கான கட்டுப்பாட்டு விதிகள் 18 மாதங்களில் கொண்டு வரப்பட்டு விடும் என்று பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுபற்றி, வாஷிங்டன் நகரை சேர்ந்த குடியேற்றத்துறை அட்டார்னி அபர்ணா தவே கூறுகையில், புதிய பரிந்துரையின்படி மாணவர்கள் ஆண்டுதோறும்  200 அமெரிக்க டாலர்கள் செலவு செய்ய வேண்டியிருப்பதால், இந்திய மாணவர்களுக்கு அமெரிக்காவில் படிக்கும் ஆர்வம் குறைந்துவிடும் என்றார். ராகுல்சவுதா என்பவர், சர்வதேச மாணவர்கள் மீதான ஆய்வு குறித்து தவறான தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது, என்று கவலை தெரிவித்தார்.

Share
Categories
ஜெர்மனி பலவகைச் செய்திகள்

ஜெர்மனி: மியூசியத்திலிருந்து 100 கிலோ தங்க நாணயத்தை கொள்ளையடித்தவர்கள் கைது

ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் அரிய நாணயங்களை பாதுகாத்து வரும் போட் மியூசியம் என்ற அருங்காட்சியகம் உள்ளது.  இந்த அருங்காட்சியகத்தில் 5,40,000 நாணயங்கள் உள்ளன. ஜெர்மனியின் மதிப்புமிக்க அருங்காட்சியகங்களில் ஒன்றான இதற்கு குண்டுதுளைக்காத கண்ணாடியால் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இங்கு 100 கிலோ எடையில், 53 செ.மீ. விட்டம் 3 செ.மீ. தடிமன் அளவில் சுத்த தங்கத்தால் ஆன கனடா நாட்டு நாணயம் ஒன்று பாதுகாக்கப்பட்டு வந்தது. 2-ம் எலிசெபத் ராணியின் உருவம் பொறிக்கப்பட்ட இந்த நாணயம் தூய்மையான தரத்துக்காக கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றிருந்தது. இதன் மதிப்பு 4 மில்லியன் டாலர் (சுமார் ரூ.26 கோடி) என மதிப்பிடப்பட்டு உள்ளது.

மிகவும் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருந்த இந்த நாணயத்தை கடந்த மார்ச் மாதம் மர்மநபர்கள் சிலர் கொள்ளையடித்து சென்றனர். அருங்காட்சியக ஜன்னலை உடைத்து நாணயத்தை திருடிச்சென்றதாக தெரிகிறது. இந்த சம்பவம் ஜெர்மனியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவந்த பெர்லின் நகர போலீசார், அங்குள்ள நியூகொய்லின் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் நாணய கொள்ளையில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டனர். எனினும் அந்த நாணயத்தை போலீசார் மீட்டனரா? என்பது குறித்து தெரியவில்லை. அதை கொள்ளையர்கள் உருக்கியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share
Categories
அமெரிக்கா ஆந்திர பிரதேசம் இந்தியா தலைப்புச் செய்திகள்

அமெரிக்கா: விமான விபத்தில் ஆந்திர டாக்டர் தம்பதி பலி

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள லோகன்ஸ் போர்ட் நகரில் வசித்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த மனோநல மருத்துவர்-தம்பதி உமாமகேஸ்வர் ராவ் காலாபடபு (வயது 63), சீதாகீதா (வயது 61). இவர்கள் பயணம் செய்த பைப்பர் ஆர்ச்சர் பி.ஏ.28 விமானம் விபத்துக்குள்ளானதில் இருவரும் இறந்தனர்.

இவர்கள் இருவரும் இணைந்து லோகன்ஸ்போர்ட் நகரில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ‘ராஜ் கிளினிக்’ என்ற பெயரில் மனநல மருத்துவமனை நடத்தி வந்தனர். இண்டியானா மாகாணத்தின் பல்வேறு நகரங்களில் இதன் கிளை மருத்துவமனைகள் உள்ளன. கடந்த 8-ந் தேதி இவர்கள் இருவரும் தங்களுக்கு சொந்தமான சிறிய விமானத்தில் லோகன்ஸ்போர்ட் நகரில் இருந்து புறப்பட்டனர். விமானத்தை உமாமகேஸ்வர் இயக்கினார். இந்த விமானம் ஓகியோ மாகாணத்தின் தெற்கு பகுதியில் பெவர்லி என்ற கிராமத்துக்கு அருகே பறந்து கொண்டிருந்த போது திடீரென தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த கோரவிபத்தில் உமாமகேஸ்வர், சீதாகீதா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

உமாமகேஸ்வர் சிறந்த புகைப்பட கலைஞர் ஆவார். தனது புகைப்பட கலைக்காக பல்வேறு மாநில மற்றும் தேசிய விருதுகளை பெற்று உள்ளார். அதே போல் சீதாகீதா சிறந்த இசைக்கலைஞர் ஆவார்.

Share
Categories
உலகம் தலைப்புச் செய்திகள் துருக்கி

துருக்கி: வான்தாக்குதலில் குர்திஷ் இன பயங்கரவாதிகள் 11 பேர் பலி

துருக்கியில் வான்தாக்குதலில் குர்திஷ் இன பயங்கரவாதிகள் 11 பேர் பலியாகினர்.

குர்திஷ் இன பயங்கரவாதிகளின் கொட்டத்தை ஒடுக்க துருக்கி ராணுவம் தரைவழியாகவும், வான்வழியாகவும் அதிரடி தாக்குதலை நடத்தி வருகிறது. குர்திஷ் இன பயங்கரவாதிகள் துருக்கிய ராணுவவீரர்கள் மற்றும் போலீசாரை குறிவைத்து தொடர் தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு சிரியா எல்லையையொட்டி உள்ள டார்கெசிட் மாவட்டத்தில் குர்திஷ் இன பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து துருக்கி போர் விமானம் குண்டு மழை பொழிந்தது.

இதில் குர்திஷ் இன பயங்கரவாதிகள் 8 பேர் கொல்லப்பட்டனர். மேலும் அவர்களது ஆயுதகிடங்குகள் நிர்மூலமாக்கப்பட்டன.

அதே போல் ஹக்காரி மாகாணத்தில் ஈராக் மற்றும் ஈரான் எல்லையையொட்டி அமைந்து உள்ள நகரில் குர்திஷ் இன பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகளின் மீது துருக்கி போர் விமானம் குண்டுகளை வீசியது. இதில் பயங்கரவாதிகள் 3 பேர் பலியாகினர். அவர்களுடைய பதுங்கு குழிகளும் அழிக்கப்பட்டன.

Share
Categories
தமிழகம் தலைப்புச் செய்திகள் நெல்லை

நெல்லை சரவணா செல்வரத்தினம் ஸ்டோர் உடனே மூடப்பட வேண்டும் : நீதிமன்ற ஆணை

நெல்லை சரவணா செல்வரத்தினம்  ஸ்டோர் கட்டிடம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக எழுந்த புகாரில், அது உடனே மூடப்பட வேண்டும் என நீதிமன்ற ஆணை வெளியாகியுள்ளது.

நெல்லையில் கட்டப்பட்டுள்ள சரவணா ஸ்டோர்ஸ் கட்டிடம் விதிமுறை மீறி கட்டப்பட்டதாக, நெல்லையை சேர்ந்த வழக்கறிஞர் சரத் இனிகோ என்பவர் சமீபத்தில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், நெல்லையில் செயல்பட்டு வந்த சரவணா ஸ்டோர்ஸ் இன்று மதியம் 2.30 மணிக்குள் மூடப்பட வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், அந்த கடைக்கு சீல் வைக்க வேண்டும் என நெல்லை மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிட்டது.

 

 

Share
Categories
நம்பினால் நம்புங்கள்

கர்நாடக கிராமத்தில் ஏலியன் நடமாட்டமா ?

கர்நாடகா மாகாணத்திலிருக்கும் அன்டுர் என்ற கிராமத்தில்  ஒரு விவசாயப் பண்ணைக்கு அருகே, சுமார் 20-30 பெரிய கால் தடங்கள் இருந்தன. இதைப் பார்த்த மக்கள் இது எந்த விலங்கின் கால்தடமோ என்று வியந்தனர்.  எந்த விலங்கின் கால் தடத்தோடும் இது ஒத்துப்போகவில்லை என்றும் அது வேற்றுகிரகவாசிகளின் காலதடங்களாக இருக்கலாம் என அச்சம் அடைந்து உள்ளனர்.

ஞாயிறன்று அதிகாலையில், ஏதோ ஒரு உயிரினம் மூச்சு விடுவது போன்ற மிகப் பயங்கர சத்தத்தைக் கேட்டதாகவும் சிலர் கூற, அந்த சமயத்தில் கிராமத்தில் இருந்த நாய்கள் குரைத்ததாகவும், பிறகு எல்லாமே ஒன்று போல அமைதியாக இருந்துவிட்டதாகவும் சிலர் தெரிவித்தனர்.

இது பற்றி செய்தி பரவியதால், பல சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் ஏராளமானோர் இந்த கால்தடங்களைப் பார்த்துச் செல்கின்றனர்.

கிராமத்தினரின் அச்சத்தைப் போக்க, அப்பகுதியில் வனத்துறையினர் இரவு நேரங்களில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம், இந்த கால்தடங்கள் எந்த உயிரினத்தின் கால்தடங்கள் என்பதை கணிக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்

இதுபோன்ற பீதி பரவுவது இந்த குடகு மாவட்டத்தில் இது முதல் முறையல்ல. பல ஆண்டுகளுக்கு முன்பு, கிராமத்தில் “நாளே பா” என்ற பீதி எழுந்தது. அப்போது மோகினி பேய் அச்சம் காரணமாக, ஏராளமான கிராமத்தினர் இரவு நேரங்களில் வீடுகளுக்குள் முடங்கினர். பிறகுதான், அப்பகுதியில் மாபியாக்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதும், அவர்கள்தான் மக்கள் நடமாட்டத்தைக் குறைக்க இதுபோன்ற பீதியைக் கிளப்பியதும் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.

Share
Categories
அருணாச்சல பிரதேசம் இந்தியா தலைப்புச் செய்திகள் மாநிலங்கள்

அருணாச்சல பிரதேசம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர்

அருணாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர்.


அருணாச்சல பிரதேசத்தின் பப்பும் பரே மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில், லெப்டாப் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 5 வீடுகள் மண்ணில் புதைந்தன. வெளியே முடியாமல் இடிபாடுகளுக்குள் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர். நிலச்சரிவு காரணமாக வீடுகள், உடமைகளை இழந்து மக்கள் தவித்து வருகின்றனர். தொடர் மழைக் காரணமாக, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு செல்ல முடியவில்லை. இதனையடுத்து, உள்ளூர் அரசு அதிகாரிகள் மற்றும் கிராமவாசிகள் இணைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா கந்து ஆழ்ந்த அதிர்ச்சியையும்  வருத்தத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். குப்பைகள் மற்றும் இடிபாடுகளில் சிக்கியிருப்போரை  விடுவிக்க அவசர மீட்பு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

அருணாச்சல பிரதேசம் ஒவ்வொரு வருடமும் இயற்கையின் சீற்றத்தினால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று கூறிய அவர், மக்கள் பாதிக்கப்படக்கூடிய  இடங்களைத் தவிர்ப்பதற்காகவும், சீதோஷ்ண காற்றோட்டம் மற்றும் காடழிப்புகளைத் தடுக்கவும் வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

மேலும், முதல்வர் ரூ. 4 லட்சம் நிலச்சரிவினால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு  நிவாரணமாக வழங்கினார்.

Share
Categories
இந்தியா தலைப்புச் செய்திகள்

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக கோபாலகிருஷ்ண காந்தி

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மகாத்மா காந்தியின் பேரரான கோபாலகிருஷ்ண காந்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்டு 5-ம் தேதி நடைபெறும். இத்தேர்தலில் லோக்சபா மற்றும் ராஜ்ய சபா எம்.பி.க்கள் வாக்களிப்பர். தற்போதைய குடியரசு துணைத் தலைவரான ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் ஆகஸ்டு 10-ம் தேதி நிறைவு பெறுகிறது.

காங்கிரஸ் துணைத் தலைவர் சோனியா காந்தி பிற எதிர்கட்சித் தலைவர்களுடன்  ஆலோசித்த பிறகு இதனை அறிவித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நாடாளுமன்ற வளாக கட்டிடத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகௌடா, மாநிலங்களவை எதிர்க்கட்சி துணைத்தலைவர் குலாம் நபி ஆசாத், ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் சரத் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் மகாத்மா காந்தியின் பேரனும், மேற்குவங்க முன்னாள் ஆளுநருமான கோபால கிருஷ்ணன் காந்தியை, குடியரசு துணை தலைவர் பதவிக்கு வேட்பாளராக நிறுத்த முடிவு செய்யப்பட்டது.

மேற்கு வங்க முதல்வரான மம்தா பானர்ஜி இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. எனினும் அவர் கோபால கிருஷ்ணன் காந்திக்கு வாழ்த்துதல் தெரிவித்தார்.

 

Share
Categories
இந்திய கிரிக்கெட் அணி கிரிக்கெட்டு தலைப்புச் செய்திகள் விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமனம்

பி.சி.சி.ஐ. அறிவிப்பின்படி, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரியும் பந்துவீச்சு பயிற்சியாளராக  ஜாகீர் கானும், வெளிநாடுகளில்  டெஸ்ட் போட்டிகளில் ஆடும்போது பேட்டிங் ஆலோசகராக ராகுல் திராவிட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு சேவாக், ரவி சாஸ்திரி, டாம் மூடி உள்ளிட்ட 10 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இந்நிலையில், இதில் ஆறு பேர் நேர்காணலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சச்சின் டெண்டுல்கர், கங்குலி, மற்றும் வி.வி.எஸ்.லக்ஷ்மன் ஆகியோர் அடங்கிய குழு, அந்த ஆறு பேரிடம் நேற்று நேர் காணல் நடத்தியது.

அணியின் சிறப்பான முன்னேற்றத்துக்காக, இந்த நியமனங்களைப் பரிந்துரைத்திருப்பதாக பிசிசிஐ கெளரவ செயலர் பொறுப்பு வகிக்கும் அமிதாப் செளத்ரி தெரிவித்துள்ளார். இந்த நியமனத்துக்கான காலம், 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகள் வரை நீடிக்கும்.

Share