Categories
சாணக்கியர் சிந்தனைக்கு

உயர்ந்த மனிதன்

A man is great by deeds, not by birth.

– Chanakya

“ஒரு மனிதன் தன் செயல்களினாலேயே உயர்ந்தவனாவான், உயர்குடிப் பிறப்பினால் அல்ல”
– சாணக்கியர்

Share
Categories
மாரத்தான் விளையாட்டு

மாரத்தான் போட்டியில் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு

போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களின் குழந்தைகள் மற்றும் போரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள குழந்தைகளின் கல்வி உதவிக்காக தேசிய தடகள அமைப்பும், புனேவில் உள்ள ‘ஷர்ஹாத்’ என்ற தொண்டு நிறுவனமும் இணைந்து காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கிலில் நேற்று மாரத்தான் போட்டியை நடத்தின. இதில் 21.1 கி.மீ. தூரத்துக்கான பிரிவில் பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், சைதாப்பேட்டை தொகுதியின் எம்.எல்.ஏ.வுமான மா.சுப்பிரமணியன் பங்கேற்று ஓடினார். கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் இந்த மாரத்தான் போட்டியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

பல்வேறு சமுதாய பிரச்சினைகளுக்காக நடத்தப்பட்டு வரும் மாரத்தான் போட்டிகளில், இளைஞர்களிடம் உடற்பயிற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தோடு மா.சுப்பிரமணியன் பங்கேற்று ஓடி வருகிறார். நேற்றைய தினம் பங்கேற்றது, அவருடைய 54-வது மாரத்தான் போட்டி ஆகும். இதனை அறிந்த காஷ்மீர் சட்டமன்ற மேலவை தலைவர் ஹாஜி அனாயத் அலி, மா.சுப்பிரமணியனை வெகுவாக பாராட்டியதோடு, அவருக்கு வாழ்த்தும் கூறினார்.

மா.சுப்பிரமணியன் 2 ஆண்டுகளில் 50 மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று, தேசிய சாதனை புத்தகமான ‘இந்தியன் புக் ஆப் ரொக்கார்ட்ஸ்’, ஆசிய சாதனை புத்தகமான ‘ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ ஆகியவற்றில் இடம் பிடித்துள்ளார். மேலும் உலக சாதனை பல்கலைக்கழகத்தில் கவுரவ டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
Categories
இந்தியா தலைப்புச் செய்திகள்

பாஜகவின் துணை ஜனாதிபதி வேட்பாளராக வெங்கையா நாயுடு அறிவிக்கப்பட்டார்

பாஜக ஆட்சி மன்றக் குழுக் கூட்டத்தில் துணை ஜனாதிபதி வேட்பாளராக வெங்கையா நாயுடு அறிவிக்கப்பட்டார். பாஜக ஆட்சி மன்றக் குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக வெங்கையா நாயுடு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

துணை ஜனாதிபதி வேட்பாளராக வெங்கையா நாயுடு தேர்வு செய்யப்பட்டதை, கூட்டணி கட்சிகள் ஒருமித்த கருத்துடன் வரவேற்றுள்ளதாகவும் அவர் கூறினார். மாணவர் பருவத்தில் இருந்தே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வரும் வெங்கையா நாயுடு, மிகுந்த அனுபவம் கொண்டவர் என்றும் அமித்ஷா தெரிவித்தார்.

68 வயதான வெங்கையா நாயுடு, தற்போது, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள வெங்கய்யா நாயுடு, நாளை காலை 11 மணிக்கு, வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.

துணை ஜனாதிபதி தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடக்க உள்ள நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
Categories
இந்திய கிரிக்கெட் அணி கிரிக்கெட்டு விளையாட்டு

கிரிக்கெட் டெஸ்ட் தொடர்: முரளி விஜய் விலகல், ஷிகர் தவான் சேர்ப்பு

இந்திய கிரிக்கெட் அணி அடுத்து இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா–இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலேயில் வருகிற 26–ந்தேதி தொடங்குகிறது.
இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது.  இந்த நிலையில், துவக்க ஆட்டக்காரர் முரளி விஜய் காயம் காரணமாக விலகியுள்லார்.  ஆஸ்திரேலிய தொடரின் போது  மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் குணம் அடையாததால் அணியில் இருந்து அவர் விலகியுள்ளார். முரளி விஜய்க்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவான் அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளார்.
16 பேர் கொண்ட இந்திய அணி வருமாறு:– விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், புஜாரா, ரஹானே (துணை கேப்டன்), ரோகித் சர்மா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, விருத்திமான் சஹா, இஷாந்த் ‌ஷர்மா, உமேஷ் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், முகமது ‌ஷமி, குல்தீப் யாதவ், அபினவ் முகுந்த்.
Share
Categories
அ.தி.மு.க. இந்தியா கர்நாடகா சசிகலா தலைப்புச் செய்திகள்

மூத்த சிறைத்துறை அதிகாரிகளுக்கு எதிராக புகாரளித்த டி.ஐ.ஜி.ரூபா வேறு துறைக்கு மாற்றம்

திங்கள்கிழமையன்று கர்நாடக அரசு சிறைத்துறை டி.ஐ.ஜி.யான ரூபா டி மூட்கிலை வேறு துறைக்கு மாற்றியது. அண்மையில் அவர், அ.இ.அ.தி.மு.க. (அம்மா) பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா  ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததன் மூலம் பெங்களூரு மத்திய சிறைச்சாலையில் தனிச் சலுகைகள் பெற்றார் என்று கூறியிருந்தார்.

ரூபா மூட்கில் தற்போது பெங்களூருவின் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு  பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் மற்றும் கமிஷனர் பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ரூபா அளித்திருந்த அறிக்கையில்,  சிறையில் உள்ள கைதிகளிடம் லஞ்சம் பெற்று கொண்டு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் வினியோகம் செய்யப்படுவதாகவும், சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு தனி சமையல் அறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டுவது அடிப்படையற்றது என டிஜிபி சத்தியநாராயணராவ் மறுப்பு தெரிவித்திருந்தார்.

டி.ஐ.ஜி. சத்தியநாராயணராவ் மாத இறுதியில் ஓய்வு பெறப்போவதால் தற்போது நிர்வாகப் பொறுப்பு எதுவும் இல்லாத நிலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதன்முன்பு  ஊழல் தடுப்பு ஆணையராக இருந்த என்.எஸ். மேகரிக் தற்போது கூடுதல் சிறைத்துறை இயக்குனர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Share
Categories
இறுதி கட்ட போர் இலங்கை

இறுதிகட்ட போரின் போது காணாமல் போனவர்கள் விவகாரம்: கடற்படை அதிகாரிகள் 7 பேர் கைது

இலங்கையில் கடந்த 2009–ம் ஆண்டு நடந்த இறுதிகட்ட போரின் போது ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காணாமல் போயினர். இது குறித்து சர்வதேச நாடுகளின் வற்புறுத்தலின் பேரில் முன்னாள் அதிபர் ராஜபக்சே அமைத்த குழுவினரே, காணாமல் போனவர்கள் பற்றி 19 ஆயிரம் வழக்குகள் உள்ளதாக அறிக்கை அளித்து இருந்தனர்.

இதில் குறிப்பிட்ட 11 பேர் காணாமல் போனதில் தொடர்பு உடையதாக முன்னாள் கடற்படை செய்தி தொடர்பாளர் தளபதி தசநாயகே உள்பட 7 அதிகாரிகள் மீது புகார் எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்தியதில், இந்த சம்பவத்தில் அவர்களுக்கு தொடர்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. எனவே தசநாயகே உள்ளிட்ட 7 அதிகாரிகளையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த கைது விவகாரத்தில் அரசு ஒருதலைபட்சமாக செயல்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை மறுத்துள்ள போலீஸ் செய்தி தொடர்பாளர் ருவன் குணசேகரா, காணாமல் போனவர்களின் உறவினர்களிடம் பணம் கேட்டு 7 அதிகாரிகளும் பேசிய தொலைபேசி உரையாடல் பதிவு உள்ளிட்ட வலுவான ஆதாரங்களின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கை நடந்துள்ளதாக கூறினார்.

Share
Categories
டென்னிஸ் தலைப்புச் செய்திகள் விம்பிள்டன் விளையாட்டு

விம்பிள்டனை 8-வது முறையாக வென்றார் ரோஜர் பெடரர்

விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை 8-வது முறையாக கைப்பற்றி ரோஜர் பெடரர் சாதனை படைத்துள்ளார். லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றன. இறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும் குரோஷியாவின் மரின் சிலிச்சும் எதிர்கொண்டனர்.

போட்டியின் தொடக்கம் முதலே ரோஜர் ஃபெடரர் ஆதிக்கம் செலுத்தி, 6-3, 6-1, 6-4 என்ற நேர்செட்களில் வென்றார்.  ஒரு செட் கூட இழக்காமல் இந்தப் பட்டத்தை அவர் வென்றுள்ளார். இதன்மூலம் விம்பிள்டன் போட்டியில் ஒற்றையரில் 8 பட்டங்கள் வென்று, அதிக பட்டங்கள் வென்ற வீரர் என்ற சாதனையை ஃபெடரர் படைத்துள்ளார். மேலும், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஃபெடரர் வெல்லும் 19-வது சாம்பியன் பட்டம் இதுவாகும்.

 

 

Share
Categories
இந்தியா டில்லி தமிழகம் தலைப்புச் செய்திகள் விவசாயிகள் போராட்டம்

பிரதமர் மோடியின் வீட்டின் முன் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள் கைது

பிரதமர் மோடியின் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட 70க்கு மேற்பட்ட தமிழக  விவசாயிகளை டெல்லி போலீசார் கைது செய்தனர். இருப்பினும் போராட்டம் மீண்டும் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 140 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து,  தண்ணீர் கிடைக்காததால் விவசாயிகள் தங்களது  நிலத்தில் பயிரிட முடியாமலும், பயிரிட வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமலும் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு  தள்ளப்பட்டனர்.

கடந்த மார்ச் மாதம் முதல் ஏப்ரல் வரை தமிழக விவசாயிகள், தேசிய நதிகள் இணைப்பு தென் இந்திய விவசாய  சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் 41 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி, கால அவகாசம் கேட்டும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்ததை தொடர்ந்தும் போராட்டத்தை  தற்காலிகமாக கைவிடுவதாக தெரிவித்து தமிழகம் திரும்பினார்கள். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த வாக்குறுதியை செயல்படுத்தாத  காரணத்தால் தென் இந்திய விவசாய சங்கத்தினர் மீண்டும் டெல்லியில் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்தனர்.

டெல்லியில் பிரதமர் இல்லம் நோக்கி பேரணியாக புறப்பட முயன்றபோது காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் குழுவினர் இன்று மாலையில் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் பகுதியான ஜந்தர் மந்தரைத் தாண்டி வேறு எங்கும் போராட்டத்தில் ஈடுபட்டால் சட்டப்படி விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களை காவல்துறையினர் எச்சரித்தனர்.

இதுகுறித்து, தென் இந்திய விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கூறுகையில், “தமிழக முதல்வர் உறுதியளித்ததால் கடந்த ஏப்ரல் மாதம் தமிழக  விவசாயிகள் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் வாங்கி தமிழகம் திரும்பினோம். ஆனால் தமிழக அரசு தற்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்து விவசாய கடனை ரத்து செய்யாத அளவிற்கு செய்து விட்டது. இது மனித உரிமை மீறிய செயலாகும். அதனால் விவசாயிகளின்  வாழ்வாதராத்தை கருத்தில் கொண்டு மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தவுள்ளோம். மேலும் தமிழக  விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றும் வரை இந்த போராட்டம் தொடரும் என்றும், போலி வாக்குறுதிகளை இனி  நம்ப மாட்டோம்” என்று தெரிவித்தார்.

Share
Categories
அமர்நாத் இந்தியா ஜம்மு காஷ்மீர் தலைப்புச் செய்திகள்

பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 16 அமர்நாத் திருப்பயணிகள் பலி

இது குறித்து அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ரம்பன் மாவட்டத்தில் பானிஹால் பகுதியில் உள்ள நச்சிலா பகுதியில் உள்ள ஒரு இராணுவ முகாமுக்கு அருகே இச்சம்பவம் நடைபெற்றது என்றார். மேலும்,   ஸ்ரீநகரில் பதிவு செய்யப்பட்டுள்ள, பதிவு எண் JK02Y 0594 ஐ கொண்ட பேருந்து  பள்ளத்தில் விழுந்தது  என்றார்.

ஜம்முவிற்கு சிறப்பு சிகிச்சைக்காக படுகாயமடைந்த பத்தொன்பது பேர் ஹெலிகாப்டரில் கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறினார்.

 

Share
Categories
தொழில் நுட்பம் பேஸ்புக்

‘பேஸ்புக்’ சமூக வலைத்தள உபயோகத்தில் இந்தியா முதலிடம்

சமூக வலைத்தளமான ‘பேஸ்புக்’  உலகமெங்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவில் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் சேர்ந்து, செய்திகளை, தகவல்களை, படங்களை பகிர்ந்துகொள்வதில் இளைய தலைமுறையினர் அலாதியான ஆர்வம் கொண்டுள்ளனர்.

இதன் காரணமாக இந்தியா ‘பேஸ்புக்’ உபயோகத்தில் முதலிடத்துக்கு வந்துள்ளது. இந்தியாவில் இந்த சமூக வலைத்தளத்தை மொத்தம் 24 கோடியே 10 லட்சம் பேர் பயன்படுத்தி வருகிறார்கள்.

அமெரிக்காவில் 24 கோடி பேர் ‘பேஸ்புக்’கை உபயோகித்து வருகின்றனர்.

எனவே ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள பயன்பாட்டில் அமெரிக்காவை இந்தியா பின்னுக்கு தள்ளிவிட்டது. ‘தி நெக்ஸ்ட் வெப்’ என்ற சஞ்சிகையின் அறிக்கையில் இது தெரிய வந்துள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே இந்தியாவிலும், அமெரிக்காவிலும் ‘பேஸ்புக்’ குறிப்பிட்டு கூறத்தக்க வகையில் நல்லதொரு வளர்ச்சியைப் பெற்று வந்துள்ளது.

இந்தியாவில் கடந்த 6 மாதங்களில் மட்டுமே ‘பேஸ்புக்’ பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை 27 சதவீதம் உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் இது 12 சதவீதமாக அமைந்துள்ளது.

Share