Categories
கமல்ஹாசன் சினிமா தமிழகம் தலைப்புச் செய்திகள்

முடிவெடுத்தால் யாம் முதல்வர்…விரைவில் ஒரு விளி கேட்கும் : கமல்ஹாசன்

தமிழக அரசியலில் ஊழல் நிறைந்துள்ளது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்திற்கு தமிழக அமைச்சர்கள்  பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். பல அமைச்சர்கள் கமல்ஹாசனை விமர்சித்து காரசாரமாக பேசினர். ஆயினும், நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவாகவும் பல்வேறு தரப்பில் இருந்து கருத்துக்கள் வெளியாயின.

தன் மீது வசை பாடியவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக டுவிட்டரில்  இன்று சில கருத்துக்களை கமல்ஹாசன் பதிவு செய்துள்ளார்.

அதில், ”அமையாது அலைபவர்க்கும் அமைந்த என் தோழர்க்கும், விரைவில் ஒரு விளி கேட்கும். கேட்டு அமைதி காப்பீர். உண்மை வெயிலில் காயும் நேற்றைய மழைக்காளான்” என்று முதலில் ஒரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார்.

மேலுமொரு ட்வீட்டில் ஒரு கவிதையை எழுதியுள்ளார்.

இடித்துரைப்போம் யாருமினி மன்னரில்லை
துடித்தெழுவோம் மனதளவில் உம்போல் யாம் மன்னரில்லை
தோற்றிறந்தால் போராளி
முடிவெடுத்தால் யாம் முதல்வர்
அடிபணிவோர் அடிமையரோ?
முடிதுறந்தோர் தோற்றவரோ?
போடா மூடா எனலாம் அது தவறு
தேடாப் பாதைகள் தென்படா
வாடா தோழா என்னுடன்
மூடமை தவிர்க்க முனைவரே தலைவர்

அன்புடன் நான்

என்று ஒரு கவிதையையும் அவர் பதிவிட்டுள்ளார். மேலும் கவிதை புரியாதவர்களுக்கு நாளை ஆங்கிலப் பத்திரிகையில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறியுள்ளார். இதனால், விரைவில் கமலஹாசன் அரசியல் பிரவேசம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
Categories
ஆதார் எண் இந்தியா உச்ச நீதிமன்றம் தலைப்புச் செய்திகள்

ஒருவரின் அந்தரங்கம், அவரது அடிப்படை உரிமையா ? இன்று ஆதார் வழக்கு விசாரணை

 

 

ஆதார் அட்டை தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டின் 9 நீதிபதிகள் அமர்வு இன்று விசாரிக்கிறது.  குறிப்பாக, இந்தியாவில் ஒருவரின் அந்தரங்கம், அவரது அடிப்படை உரிமையா என்பதை நீதிபதிகள் தீர்மானிப்பர்.

அரசின் சலுகைகளையும், நலத்திட்ட உதவிகளையும் பெறுவதற்கு ஆதார் அடையாள அட்டை அவசியம் என்று மத்திய அரசு நியமம் கொண்டு வந்துள்ளது. ஆனால் ஆதார் அட்டைக்காகச் சேகரிக்கப்படும் கைரேகைப் பதிவு, விழித்திரை ஸ்கேன் போன்றவை தனி நபரின் அந்தரங்கத்தில் அரசின் தலையீடாகும் என சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினரும் வழக்குகளை தொடுத்து உள்ளனர்.

அவற்றுள், வினய் விஸ்மான் மற்றும் மத்திய அரசு உள்ளிட்ட பல தரப்பினரின் வாதங்களை கேட்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோரைக் கொண்ட அமர்வு கடந்த மாதம் 9-ந் தேதி அளித்த தீர்ப்பில்,  “பான்” என்னும் வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்க வகை செய்யும் வருமான வரிச்சட்டத்தின் பிரிவு 139 ஏஏ செல்லுபடியாகும் எனக் கூறியிருந்தது.

இந்நிலையில் ஆதார் அட்டை, அரசியல் சாசனத்தின்படி செல்லுபடியாகாது என கூறி தொடுக்கப்பட்ட பல்வேறு தரப்பினரின் வழக்குகளை தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையில் நீதிபதிகள் ஜே. செல்லமேஸ்வர், எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், எஸ்.அப்துல் நசீர் ஆகியோரைக் கொண்ட அமர்வு நேற்று விசாரித்து, முடிவில்  ஒரு உத்தரவைப் பிறப்பித்தது.

அவ்வுத்தரவில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், ஒருவரின் அந்தரங்க உரிமை, அடிப்படை மனித உரிமையா; இது அரசியல் சாசன கட்டமைப்பின் ஒரு அங்கமா என்பது குறித்து விசாரித்து முடிவு எடுக்க தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையில் 9 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைத்து பதில் தருமாறு நீதிபதிகள் கேட்டுள்ளனர்.

இந்த அமர்வு, புதனன்று (இன்று) விசாரணை நடத்தும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.

இவ்விவகாரத்தில் இதன் முன்பு நடைபெற்ற கரக் சிங், எம்.பி. சர்மா ஆகியோரின் வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்புகளும் ஆராயப்படும். கரக்சிங் வழக்கில் 6 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, 1960-களிலும், எம்.பி. சர்மா வழக்கில் 8 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, 1950-ம் ஆண்டிலும் தீர்ப்பு வழங்கி உள்ளன. இவ்விரு வழக்குகளிலுமே அந்தரங்க உரிமை, அடிப்படை உரிமை அல்ல என்று தீர்ப்பு கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இதற்கு பிந்தைய பல தீர்ப்புகள், அந்தரங்க உரிமை அடிப்படை உரிமை என கூறி உள்ளன.

மத்திய அரசின் சார்பில் அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் வாதிடும்போது, “அந்தரங்க உரிமைக்கென்று பொதுவான சட்டம் உள்ளது என்பதை ஒப்புக் கொண்டார். இருப்பினும், அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்கள் அனைத்து அடிப்படை உரிமைகளையும் குடிமக்களுக்கு வழங்கி உள்ளனர். ஆனால், அந்தரங்க உரிமை, இந்திய அரசியல் சட்டத்தில் வழங்கப்படவில்லை” என குறிப்பிட்டார்.

Share
Categories
கோயம்புத்தூர் தமிழகம் தலைப்புச் செய்திகள்

துண்டு பிரசுரம் விநியோகித்த மாணவி குண்டர் சட்டத்தில் கைது – அரசியல் தலைவர்கள் கண்டனம்

கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை வெளியேற்ற வேண்டு என கூறி சேலத்தில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்த இதழியல் மாணவி வளர்மதி என்பவரை போலீசார் நக்சலைட்டுகள் இயக்கத்திற்காக ஆட்களை சேர்ப்பதாகக் குற்றம்சாட்டி கைது செய்து கடந்த 13ம் தேதி சிறையில் அடைத்தனர்.  இவர்  இயற்கை பாதுகாப்பு குழு என்ற அமைப்பை சேர்ந்தவர்.

அவர் மீது தற்போது சேலம் மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் குண்டர் சட்டம் போடப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள்‌ கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராடிய சேலம் மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து அவரை விடுவிக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்த கல்லூரி மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடடிக்கை எடுத்திருப்பதை கண்டித்துள்ளார். அரசுக்கு எதிராக குரல் எழுப்புவோரை தொடர்ந்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயல் என அவர் கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் விடுத்திருக்கும் அறிக்கையில், தமிழக அரசு மத்தி‌ய அரசின் நிர்பந்தங்களுக்காக இது போன்ற நடவடிக்கைகளை எடுக்கிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதேபோல் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், பயங்கரவாதத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு கட்டவிழ்த்து விடுவதாக விமர்சித்துள்ளார்.

குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மாணவி வளர்மதியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரியுள்ளார்.

 

Share
Categories
அதிமுக ஜெயலலிதா தமிழகம் தலைப்புச் செய்திகள்

ஜெயலலிதா மரணம் குறித்த எந்த விசாரணைக்கும் தயார்: அப்பல்லோ பிரதாப் ரெட்டி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த எந்த விசாரணையையும் சந்திக்க தான் தயார் என்று அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி.ரெட்டி கூறியுள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில்  75 நாட்கள் சிகிச்சை பெற்று, பின்னர்  டிசம்பர் 5-ம் தேதி மரணமடைந்தார். இதனையடுத்து, பல்வேறு தரப்புகளிலிருந்தும் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வந்தது.

அதிமுகவின் ஒரு கோஷ்டியான, ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான, அதிமுக புரட்சி தலைவி அம்மா  அணியும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகிறது. அதோடு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதா மரணம் பற்றி நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். இந்த விவகாரத்தில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் தங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அணி தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைத்தால், அதனை தாம் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி.ரெட்டி கூறியுள்ளார். தேனாம்பேட்டையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்  பிரதாப் சி.ரெட்டி செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தபோது இவ்வாறு கூறினார். ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்கும்போது யாருடைய தலையீடும் இல்லை என்று கூறிய அவர், சிகிச்சை அளித்ததில் எந்த தவறும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மிகவும் வெளிப்படையாகத் தான் அவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்.

Share
Categories
அமெரிக்கா தலைப்புச் செய்திகள்

அமெரிக்கா: H-2B விசா அனுமதி எண்ணிக்‍கை மேலும் 15 ஆயிரம் உயர்த்தப்பட்டது

இந்த நிதியாண்டின் எஞ்சிய காலத்திற்கான, குறைந்த ஊதியங்கள் மற்றும் குறுகிய காலப் பணிகளுக்‍கான வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்‍கு வழங்கப்படும் H-2B விசாக்‍களின் எண்ணிக்‍கையை மேலும் 15 ஆயிரமாக அதிகரித்து அமெரிக்‍க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  கடல் உணவு, சுற்றுலா மற்றும் பிற தொழில்துறைகளில் இந்த விசாவின் கீழ் பணியாற்ற முடியும். அமெரிக்‍காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இருப்பினும் இந்திய தகவல் தொழில் நுட்ப பணியாளர்கள் அதிகமாக பயன்படுத்தும் H1B விசாவைக் குறித்து புதிய அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த காலக்கட்டத்தில் வழக்‍கமாக H-2B விசாக்‍களின் எண்ணிக்‍கையைவிட 45 சதவீதம் அதிகம் என்று அமெரிக்‍க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைக்‍கான அதிகாரிகள், நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.  ஆனால் பண்ணைத் தொழிலாளர்களாக பணியாற்ற முடியாது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Share
Categories
அ.தி.மு.க. தமிழகம் தலைப்புச் செய்திகள் திமுக ஸ்டாலின்

நீட் தேர்வு குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் : மு.க.ஸ்டாலின்

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காமல் தமிழக அரசு மாணவர்களுக்கு துரோகம் இழைத்து விட்டதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நீட் தேர்வு தொடர்பாக நிறைவேற்றப்பட்ட மசோதா ஜனாதிபதியின் ஒப்புதல் பெறாமல் உள்ளதை பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் சுட்டிக்காட்டினார்.இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய கவனம் செலுத்தவில்லை என்று குறிப்பிட்ட அவர், இதற்குப் பொறுப்பேற்று தமிழக அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, நீட் தேர்வுக் குறித்து தொடர்ந்து சட்டசபையில் பேச திமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனைக் கண்டித்து அமளியில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். நீட் தேர்வு விவகாரத்தை பேச அனுமதிக்க வலியுறுத்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும், பின்னர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Share
Categories
இந்தியா கர்நாடகா தலைப்புச் செய்திகள் மாநிலங்கள்

கர்நாடக மாநிலத்திற்கு சட்டப்பூர்வமாக தனிக்கொடி அமைக்க ஆய்வுக்குழு நியமனம்

கர்நாடக மாநிலத்திற்கென சட்டப்பூர்வமாக தனிக்கொடி அமைக்க ஆய்வுக்குழு அங்கு ஆழும் காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அண்மையில் கர்நாடகாவில் இந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டத்தைத்  தொடர்ந்து  கர்நாடகாவிற்கென தனிக்கொடி அமைக்க வேண்டும் என கன்னட அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன.  இந்நிலையில் இது தொடர்பாக அம்மாநில ஆளுநரின் ஒப்புதலுடன் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சட்ட ஆலோசனைகள் கேட்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

தற்போது இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370 வின்படி  ஜம்மு காஷ்மீர் மட்டும் மாநிலத்திற்கு என தனியாக கொடியை கொண்டிருக்க அனுமதி அளிக்கப்படுகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் தனிக்கொடியை கொண்டுவர முனைப்பு காட்டி உள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

கர்நாடகம் தனிக்கொடி உருவாக்கினால், இனி அடுத்தடுத்து மற்ற மாநிலங்களும் தமக்கென தனிக்கொடிகளை உருவாக்கும் நிலையே ஏற்படும்.

 

Share
Categories
அறிவியல் தலைப்புச் செய்திகள்

11 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள நட்சத்திரத்தில் இருந்து வந்த விநோத சமிக்ஞை

சமீபத்தில் விண்வெளி ஆய்வாளர்கள் 11 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்து வந்த ஒரு சிக்னலை ஆய்வு செய்து வருகின்றனர்.


ராஸ் 128 என்று அழைக்கப்படும் சிவப்பு குள்ள நட்சத்திரத்தில் இருந்து  இந்த சிக்னல் கிடைத்து உள்ளது . இது சூரியனை விட  2,800 மடங்கு  மங்கலானது ஆகும். அதை சுற்றி வேறு  எந்த  கிரகம் உள்ளது என  தெரியவில்லை.

இந்த “விசித்திரமான” ரேடியோ சிக்னல்களை, மே மாதத்தில் புயூர்ட்டோ ரிக்கோ பல்கலைக்கழகத்தில் வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். அரிசிபோ நட்சத்திர ஆய்வகத்தினை (Arecibo Observatory) பயன்படுத்தி இந்த சிக்னல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்சர்வேட்டரி பியூர்டோ ரிக்கோவிலுள்ள  ஒரு தொட்டியின் உள்ளே கட்டப்பட்ட பெரிய வானொலி தொலைநோக்கியினால் ஆனது.

“நினைப்பதற்கு சாத்தியமற்றதாக தெரிந்தாலும், இந்த சிக்னல்கள், வேற்று கிரக வாசிகளிடமிருந்து வந்திருக்கமுடியாது என்று இவை இன்னமும் நிராகரிக்கப்பட முடியாதவை”, என்று அரிசிபாவில் போர்டோ ரிகோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆல்வெல் மென்டெஸ் எனும் வானியல் நிபுணர் ஒருவர் கூறினார்.

 

 

Share
Categories
உடல்நலம் மூலிகைகள்

நலம்தரும் மூலிகைகள் : 3 – ஜிங்கோ, ஜின்செங் & இஞ்சி

ஜிங்கோ

இது சீனாவில் வளரும் ஒரு மரத்தின் இலைகளிலிருந்து வருகிறது.
இரத்த ஓட்டம் அதிகரிக்கவும், உடலின் இரத்த சுழற்சியை மேம்படுத்தவும் இது உதவுகிறது. ஜிங்கோ பிலோபா (Ginkgo biloba) – விலிருந்து எடுக்கப்படும் சாற்றில் ஃப்ளேவனாய்டு மற்றும் டெர்பனாய்டு ஆகியன எதிர்-ஆக்ஸிடன்ட் (antioxidant) குணங்கள் கொண்டுள்ளன. இதன் காரணமாக, ஜிங்கோவினால் ஞாபகசக்தி அதிகரிக்கக்கூடும்.  இதற்கு இரத்தத்தைச் சன்னமாக்கும் (Blood thinner) பண்பும் உண்டு. ஆயினும், ஜிங்கோவினால்  எப்போதாவது மூக்கில் இரத்தப்போக்கு ஏற்படலாம்.

ஜின்செங்

ஜின்ஸெங் உலகிலேயே மிகவும் பிரபலமான மூலிகை மருந்துகளில் ஒன்றாகும். இது நூற்றாண்டுகளாக ஆசியா மற்றும் வட அமெரிக்க நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பூர்வீக அமெரிக்கர்கள் இதனை செயல் ஊக்கியாகவும்,  தலைவலி நிவாரணியாகவும் பயன்படுத்தினர். மேலும்  கருவுறாமை, காய்ச்சல் மற்றும் அஜீரணத்துக்கான சிகிச்சைகளுக்காகவும் பயன்படுத்துகின்றனர். இன்று, தோராயமாக 6 மில்லியன் அமெரிக்கர்கள் நிரூபிக்கப்பட்ட ஜின்ஸெங் நன்மைகளால் இதனை தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். மன மற்றும் உடல் சோர்வை நீக்கவும் தடுக்கவும் உதவுகிறது; ஜலதோஷத்தின் தீவிரத்தன்மையைக் குறைப்பதற்கான நிவாரணியாகவும், அடிக்கடி ஜலதோஷம் வராமலும் தவிர்க்கப் பயன்படுகிறது. ஆண்களின் விறைப்புத்தன்மை (Erectile dysfunction) குறைவைச் சரியாக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

ஜின்செங் கடைகளில் அதிக அளவில் கலப்படம் செய்யப்பட்டு விற்கப்படுவதால், வாங்கும் போது தரமான, கலப்படம் இல்லாததாக தெரிந்தெடுத்து வாங்குதல் நலம்.

இஞ்சி

இஞ்சிச் செடியின் வேர், சாறுகள் மற்றும் எண்ணெய்களை தயாரிக்க பயன்படுகிறது.
இதனை நேரடியாகவும் சாப்பிடலாம்.  இஞ்சி குமட்டலைத் தடுக்க உதவுகிறது, மேலும் வயிற்றுப்புண்களுக்கு எதிராகவும் வயிற்றைப் பாதுகாக்கிறது.

இஞ்சியில் வலி நிவாரணிக்குரிய பண்புகளும் உள்ளன. ஆயினும், பித்தக்கற்களால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை  பயன்படுத்தப்படக்கூடாது.

 

 

 

 

 

 

Share
Categories
இந்தியா குடியரசு தலைவர் தமிழகம் தலைப்புச் செய்திகள்

ஜனாதிபதி தேர்தல்: தமிழகத்தில் 234 பேர் வாக்களிப்பு

இந்திய ஜனாதிபதி தேர்தலுக்காக சென்னையில் இன்று காலை ஓட்டுப்பதிவு தொடங்கியது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதலாவதாக வாக்கைப் பதிவு செய்தார். அவரைத் தொடர்ந்து சபாநாயகர்  தனபால், எதிர்க் கட்சி  தலைவர் மு.க. ஸ்டாலின், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி தலைவர் ஓ.பன்னீர் செல்வம், கேரளா மாநில எம்.எல்.ஏ. பரக்கல் அப்துல்லா வாக்களித்தனர். பிறகு அ.தி.மு.க., தி.மு.க. எம். எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராக வந்து ஓட்டு போட்டு சென்றனர்.

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னையில் வாக்களிப்பதற்காக ஏற்கனவே தேர்தல் கமிஷனிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்றிருந்தார். 6 வது நபராக வந்து அவர் தன் வாக்கை பதிவு செய்தார்.

ஒட்டுச்சாவடி அறைக்குள் அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் ஏஜெண்டாக  துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பணியாற்றினார். அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் செம்மலை, தி.மு.க. சார்பில் கொறடா சக்கரபாணி பணியாற்றினார்கள்.

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக தி.மு.க., அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் காலையிலேயே தலைமை செயலகத்துக்கு வந்திருந்தனர். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் காலை 9 மணிக்கெல்லாம் கோட்டைக்கு வந்திருந்தனர்.

ஓட்டுப்பதிவு தொடங்கியதும் எம்.எல்.ஏ.க் கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். தமிழக சட்டசபை மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 234. இதில் ஜெயலலிதா மறைவு காரணமாக ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளது. மீதமுள்ள 233 எம்.எல்.ஏ.க்களில் தி.மு.க. தலைவர் கருணாநிதி முதுமை, உடல்   நலக்குறைவு காரணமாக வாக்களிக்க வர இயலாத நிலையில் உள்ளார்.

எனவே 232 எம்.எல். ஏ.க்கள் வாக்களித்தனர். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், கேரள மாநில எம்.எல்.ஏ. அப்துல்லா ஆகியோரும் சென்னையில் வாக்களித்தனர். இதனால் சென்னை கோட்டையில் 233 எம்.எல்.ஏ.க்களும், ஒரு எம்.பி.யும் வாக்களித்துள்ளனர்.

Share