Categories
எடப்பாடி பழனிசாமி சினிமா தமிழகம் தமிழ் சினிமா தலைப்புச் செய்திகள்

திரைப்படத்துறை மீதான கேளிக்கை வரி : பேச்சுவார்த்தை தோல்வி

திரைத்துறை மீதும் 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இத்துடன் கேளிக்கை வரி 30 சதவீதம் சேர்த்து வசூலிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜூலை 3ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 1000 தியேட்டர்கள் மூடப்பட்டன. அதன் பின்னர் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வேலை நிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

 

இதுதொடர்பாக, முதல்வர், அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சுமுக தீர்வு ஏற்படாதநிலையில், இன்று மூன்றாம் கட்ட இறுதிப் பேச்சு வார்த்தை சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில், தொழிற்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, நிதித்துறை செயலாளர் சண்முகம் மற்றும் திரைத்துறையினர் சார்பில் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்கத்தைச் சேர்ந்த விஷால், அபிராமி ராமநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதிலும், சுமுக உடன்பாடு எட்டப்படாததால், பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக திரைத்துறையினர் கூறியுள்ளனர்.

 

Share
Categories
டில்லி தமிழகம் தலைப்புச் செய்திகள் விவசாயிகள் போராட்டம்

எங்கள் உயிருக்கு ஏதாவது ஏற்பட்டால் அதற்கு எச். ராஜாதான் பொறுப்பு: அய்யாக்கண்ணு

டெல்லியில் போராடிவரும் தமிழக விவசாயிகள் போராட்டத்தை கைவிடாவிட்டால் இரவு தூங்கும் போது லாரியை ஏற்றி கொலை செய்து விடுவோம் என்று கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக விவசாயிகளின் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

பயிர்க்கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கடந்த 16-ந்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய-மாநில அரசுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவர்கள் ஒவ்வொரு நாளும் நூதன முறையில் போராட்டம் நடத்துகிறார்கள்.

இந்நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட மனைவியை பார்ப்பதற்காக அய்யாக்கண்ணு நேற்றிரவு திருச்சி வந்தார். இன்று காலை டெல்லி புறப்படுவதற்கு முன்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 11-ந்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எங்களது போராட்டத்திற்கு பா.ஜனதாவை தவிர மற்ற கட்சிகள், அமைப்பினர் ஆதரவு தருகின்றனர். போராட்டத்தை முறியடிக்க பா.ஜ.க.வினர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தமிழகத்தை சேர்ந்த பா.ஜ.க.வினர் செல்போன் மூலம் பேசி தமிழகத்திற்கு வருமாறு எங்களை மிரட்டுகின்றனர். தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டு முன்பு போராட்டம் நடத்துங்கள் என்கின்றனர். போராட்டத்தை கைவிடாவிட்டால் டெல்லியில் இரவு தூங்கும் போது லாரியை ஏற்றி கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுக்கின்றனர்.  திருச்சியை சேர்ந்த பா.ஜனதா பிரமுகர் ஒருவரும் மிரட்டல் விடுத்துள்ளார். மிரட்டல் விடுத்தவர்களின் செல்போன் எண்களை வைத்து டெல்லி பாராளுமன்ற போலீசில் புகார் செய்துள்ளோம். திருச்சியை சேர்ந்த பா.ஜனதா பிரமுகர் மீது திருச்சி போலீசில் புகார் செய்ய உள்ளோம்.

பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா எங்களது போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசி வருகிறார். நான் (அய்யாக்கண்ணு) ஆடி கார் முன்பு நிற்பது போன்றும், 5 ஸ்டார் ஓட்டலில் செல்போனில் பேசியவாறு சாப்பிடுவது போன்றும் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

எங்கள் உயிருக்கு ஏதாவது ஏற்பட்டால் அதற்கு எச். ராஜாவே பொறுப்பு

இவ்வாறு அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.

 

Share
Categories
இந்தியா தலைப்புச் செய்திகள் பா.ஜனதா

மந்திரத்தை ஜபித்தால் சீனாவை வீழ்த்தலாம் : ஆர்.எஸ்.எஸ். யோசனை

சிக்கிம் எல்லையில் உள்ள டோகோலாம் பகுதியை ஆக்கிரமிக்கும் சீனாவின் முயற்சியை,  ஒரு மந்திரத்தை நாள்தோறும் பூஜையின்போது ஜபிப்பதால் தடுக்க முடியும் என்று ஆர்.எஸ்.எஸ். யோசனை கூறியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., தேசிய செயற்குழு உறுப்பினரான, இந்தரேஷ் குமார்  பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், ” ‘கைலாஷ், ஹிமாலயா, திபெத் ஆகிய பகுதிகளுக்கு, சீன ராட்சசனின் பிடியில் இருந்து விடுதலை வேண்டும்’ என, தினமும் காலையில் பூஜை செய்யும்போது, ஐந்து முறை கூற வேண்டும். ஹிந்துக்கள் மட்டுமல்ல அனைத்து மதத்தினரும், இந்த மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

சீனா வன்முறையின் ஒரு வாக்காளியாக மாறிவிட்டது. சீனா ஒரு ஏகாதிபத்திய மற்றும் விரிவாக்க பாத்திரத்தை ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் குமார் கூறினார். இந்தியா, நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளின் பிராந்தியத்தை திபெத்திலிருந்து சீனா கைப்பற்றி வருகிறது என்றும் அவர் கூறினார்.

இதனிடையே இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இந்த வாரம் சீனா செல்லவுள்ளார். பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்த வாரம் சீனா செல்லும் அவர் டோக்லாம் பிரச்சனையை எழுப்புவார் என கூறப்படுகிறது.

 

Share
Categories
கன்யாகுமரி குளச்சல் கேரளா தமிழகம் தல வரலாறு பலவகைச் செய்திகள் மாவட்டம் வரலாறு ஹாலந்து

குளச்சல் போரின் வரலாற்றை தமிழக பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க கோரிக்கை

குளச்சல் போரில் திருவிதாங்கூர் படைகள் 1741-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி வெற்றி பெற்றதன் நினைவு தினம் வருகிற 31-ந் தேதி கொண்டாடப்படுகிறது.  இப்போரின் வரலாற்றை கேரளாவை போல், தமிழகத்திலும் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவிதாங்கூர் அரசின் பதிவு செய்யப்பட்ட வரலாற்றின் படி, பதினெட்டாம் நூற்றாண்டில், கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கூர் அரசின் கீழ் இருந்தது. அக்காலத்தைய தெற்கு கேரளமும் கன்னியாகுமரி மாவட்டப் பகுதிகளும், சிறு சிறு சமஸ்தானங்களாக சிற்றரசர்களின் ஆட்சியின்கீழ் இருந்தன.  வேணாட்டின் அரசரான மார்த்தாண்ட வர்மா அண்மையிலுள்ள சிறு சமஸ்தானங்களுடன் போரிட்டு தனது அரசுடன் இணைத்துக் கொண்டிருந்தார். இதன் முன்னதாக மிளகு வியாபாரத் தலங்களை டச்சுக்காரர்கள் ஏற்படுத்தியிருந்தனர்.

 

மார்த்தாண்ட வர்மாவின் ராச்சிய இணைப்பு நடவடிக்கைகளில் ஒன்றான இளைஇடத்து சொரூப (கொட்டாரக்கரை) இணைப்பு முயற்சியின் போது, கொட்டாரக்கரை ராணியார், டச்சுக்காரர்களின் உதவியை நாடினார். இருப்பினும், மார்த்தாண்ட வர்மாவின் படைகள் இளைஇடத்து சொரூபத்தை போரிட்டு கைப்பற்றினர். இது டச்சுக்காரர்களின் மிளகு வியாபாரத்திற்கு பேரிடியாக அமைந்தது. மேலும் மார்த்தாண்ட வர்மா, ஏனைய ஐரோப்பிய வணிகர்களான கிழக்கிந்திய கம்பெனி மற்றும் ஃப்ரென்சு கம்பெனிகளுடன் வியாபாரம் செய்வதற்கு முன்னுரிமை கொடுத்தார். இவற்றால், டச்சுக் காரர்களுக்குத் தேவையான வணிகப் பொருட்கள் கிடைக்காமல் போனது.

நிலைமையைச் சரியாக்கும் நோக்கில், கொழும்பிலிருந்து டச்சு கவர்னர் வான் இம்ஹாஃப் (Van Imhoff) பேச்சு வார்த்தைக்காக ராஜா மார்த்தாண்ட வெர்மாவைச் சந்திதார். இருப்பினும் பேச்சுவார்த்தையால் தேவையான பயன்கள் எதுவும் விளையவில்லை.

திருவிதாங்கூர்ப் படைகள் பின்னர் காயங்குளத்தின் அரசினைக் கைப்பற்றுவதற்காக வடக்கு நோக்கி அனுப்பப் பட்டனர். இன்னிலையில், டச்சுக் கடற்படை, தென்பகுதியில் கடியப்பட்டணம், மிடாலம், தேங்காப்பட்டணம் ஆகிய இடங்களைக் கைப்பற்றியது. குளச்சலிலிருந்து கோட்டார் வரை டச்சுப்படைகளின் பிடியில் வந்தது. திருவிதாங்கூர் படைகள் காயங்குளம் சென்ற சமயத்தில், நாட்டுக்குள் புகுந்த டச்சுப் படையைத் தடுக்க  யாரும் இல்லாத்தால், அவர்கள் குடிமக்களுக்கு பல்வேறு அட்டூழியங்களையும் செய்தவாறு பத்மனாபபுரம் கோட்டையைப் பிடிக்கச் சென்றனர்.

இதனைக் கேள்விப்பட்ட மார்த்தாண்ட வர்மா, காயங்குளத்திலிருந்த அவரது படையை திரும்பி வரத் தகவல் அனுப்பினார். மேலும் உள்ளூர் நாயர், நாடார் மற்றும் மீனவர்களின் துணையுடன் புதிய படையொன்றை உருவாக்கினார். இப்புதிய படையுடன், காயங்குளத்திலிருந்து திரும்பிய திருவிதாங்கூர்ப் படைகளும் சேர்ந்து, டச்சுப் படைகளுடன் போரிட்டனர். போரில் டச்சுப்படைகள் தோல்வியடைந்தபின் தப்பியோடியவர்கள் குளச்சல் துறைமுகத்தில் நிறுத்தி வக்கப்பட்ட தங்கள் கப்பல்களில் ஏறி கொச்சி நோக்கிச் சென்று விட்டனர். திருவிதாங்கூர்ப் படை 24 டச்சு வீரர்களை சிறைபிடித்ததுடன் குளச்சலில் இருந்த டச்சுப் படைத்தளத்திலிருந்து பீரங்கிகளையும் வாள்கள் மற்றும் சில இதர போர் ஆயுதங்களையும் கைப்பற்றினர். இப்போரில் ராமன் ஐயன் தளவாய், அனந்த பத்மனாபன் தளவாய் போன்றோர், மார்த்தாண்ட வர்மாவுக்கு பேருதவியாக இருந்தனர்.

இப்போரின் பின் டச்சுக்காரர்களின் இந்திய வணிகம் பெருமளவில் கட்டுப்படுத்தப் பட்டது. 1741-ம் ஆண்டு ஜூலை 31-ந் தேதி  நிகழ்ந்த போரின் வெற்றியின் நினைவாக குளச்சல் கடற்கரையில் “விக்டரி பில்லர்” என்ற வெற்றித்தூண் நிறுவப்பட்டது.

 

Share
Categories
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஐ.சி.சி. கிரிக்கெட்டு தலைப்புச் செய்திகள் விளையாட்டு

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியை வென்றது இங்கிலாந்து

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை  இங்கிலாந்து அணி வென்றது.

இந்திய அணியைப் பொறுத்தவரை, இறுதிப் போட்டியில் பங்கேற்றதே பெரிய சாதனைதான்.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணியினர் பேட்டிங்கை தேர்வு செய்தனர்.முதலில் நிதானத்துடன் ஆடிய இங்கிலாந்து அணி 150 ரன்களுக்கு பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

சாரா டெய்லர்  45 ரன்களும், நாட் ஸ்கைவர் 51 ரன்களையும் அடித்து இங்கிலாந்த் அணிக்கு வலுசேர்த்தனர். இந்திய அணியின் கோஸ்வாமி 3 விக்கெட்டுகளையும், பூனம் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக என்.ஆர்.ஸ்கீவர் 51 ரன்கள் எடுத்துள்ளார்.  இதையடுத்து,  50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்களை எடுத்தது இங்கிலாந்து அணி.

இதனைத் தொடர்ந்து, 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் மந்தனா, கேப்டன் மிதாலி ராஜ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிஜி.ராவட் 115 பந்துகளில் 86 ரன்கள் குவித்து அணியின் வலுவான நிலைக்கு அடித்தளமிட்டார். இந்நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்த நிலையில், இந்தியா தடுமாறத்தொடங்கியது. இறுதியாக  48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 219 ரன்களுக்கு ஆட்டமிழந்து, தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம்  4வது முறையாக இங்கிலாந்து அணி உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

Share
Categories
இந்தியா குடியரசு தலைவர் தலைப்புச் செய்திகள்

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பிரிவுபசார விழா

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் நாளையுடன் முடிவடைகிறது. அடுத்த ஜனாதிபதியாக ராம் நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று ஜனாதிபதி  பிரணாப் முகர்ஜிக்கு பிரிவுபசார விழா நாடாளுமன்றத்தில் நடந்தது.

20 நிமிடம் உரையாற்றிய  பிரணாப் முகர்ஜி, தனது உரையில் , ”நாடாளுமன்றம் என்பது ஆக்கபூர்வமான விவாதங்களுக்கானது. அதற்குத்தான் பயன்படுத்த வேண்டுமே தவிர, இடையூறுகள் மூலம் சிதைக்கக் கூடாது. என்னுடைய வாழ்க்கையில் 37 ஆண்டுகளை நாடாளுமன்றத்திற்காக அர்பணித்துள்ளேன்.” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “இந்திரா காந்தி இரும்புப் பெண்மணி. அவர்தான் என்னுடைய வழிகாட்டி, அவரை அடுத்து வாஜ்பாய், நரசிம்ம ராவ் அவர்களைக் கூறுவேன். சில சமயங்களில் அத்வானியை பின்பற்றியுள்ளேன். சோனியா அவர்களிடம் இருந்து எனக்கு தொடர்ந்து ஆதரவு கிடைத்துக் கொண்டு இருந்தது. வண்ண வண்ண நினைவுகளுடன் இந்த மாண்புமிகு நாடாளுமன்றத்தில் இருந்து விடை பெறுகிறேன். நாட்டு மக்களுக்கு அவர்களது சேவகனாக இருந்து சேவை ஆற்றி இருப்பது எனக்கு மகிழ்ச்சியையும், மன நிறைவையும் அளிக்கிறது” என்றார்.

Share
Categories
அமெரிக்கா டெக்ஸாஸ் தலைப்புச் செய்திகள் மாநிலங்கள்

சான் ஆண்டோனியோ வால்மார்ட்டில் நின்ற லாரியில் 9 பேர் இறந்த நிலையில் மீட்பு

அமெரிக்காவின் சான் ஆண்டோனியோ நகரத்திலுள்ள வால்மார்ட் சூப்பர்மார்க்கெட் வாகன நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த லாரியில் இருந்து ஞாயிறு காலை நிலவரப்படி 9 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

வால்மார்ட் வாகன நிறுத்தத்தில் இருந்த கன்டெய்னர் லாரியிலிருந்து உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. கன்டெய்னர் லாரியில் 2 பள்ளிக் குழந்தைகள் உட்பட 38 பேர் இருந்துள்ளனர். கன்டெய்னருக்குள் இருந்தவர்கள் வால்மார்ட் ஊழியரிடம் தண்ணீர் கேட்டுள்ளனர். சரக்கு ஏற்றும் கன்டெய்னரில் மனிதர்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து கன்டெய்னரில் இருந்த 38 பேரில் 8 பேர் உயிரிழப்பு, 20 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். கன்டெய்னரில் அடைத்து மனிதர்களை கடத்தி வந்திருக்கலாம் என்று காவல் துறையினர் கூறியுள்ளனர்.

இச்சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து மெக்ஸிகோ எல்லை 130 மைல் தொலைவில் உள்ளது. இதில் சம்பந்தப்பட்ட லாரியானது அயோவா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், அந்த லாரி எங்கிருந்து வால்மார்ட் வாகன நிறுத்தத்திற்கு வந்தது என்றோ, எவ்வளவு நேரமாக அங்கு நின்று கொண்டிருந்தது என்றோ இன்னும் தெளிவாகவில்லை. காவல்துறை ஆய்வாளர்கள் இன்னும் இதனைக் குறித்து விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Share
Categories
அதிமுக கமல்ஹாசன் தமிழகம் தலைப்புச் செய்திகள்

நடிகர் கமல்ஹாசனை மிரட்டுவது அரசுக்கு நல்லதல்ல: ஓ.பி.எஸ்.

அமைச்சர்களின் ஊழல் குறித்துப் பேசுவதால், நடிகர் கமல் ஹாசனை மிரட்டி, அவரை பணிய வைக்க முயற்சிப்பது தமிழக  அரசுக்கு நல்லதல்ல என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

நேற்று காஞ்சிபுரத்தில் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “ஊழல் குறித்து பேச நடிகர் கமல் ஹாசனுக்கு உரிமை உள்ளது. கமலை மிரட்டுவது, அவரை பணிய வைப்பது என்பது அரசுக்கு நல்லதல்ல. கமல் ஹாசனுக்கு எதிராக அமைச்சர்கள் கருத்துக் கூறுவது அழகல்ல.  அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறுபவர்களை மிரட்டுவது சரியான நடைமுறை ஆகாது. ஊழல் குற்றச்சாட்டு சுமத்தினால் அதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.” என்று கூறினார்.

மேலும் அவர், “நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் மருத்துவ கல்லூரிக்குள் நுழைய முடியாத சூழல் நிலவுகிறது. இந்தப் பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்படாததால் தமிழக அரசுக்கு கெட்டப் பெயர் ஏற்பட்டுள்ளது. மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக்கு தயார் என அப்போலோ தெரிவித்த பின்னும் விசாரணை நடத்த அரசு உத்தரவிடாதது ஏன்?” என கேள்வி எழுப்பினார்.

Share
Categories
கிரிக்கெட்டு விளையாட்டு

‘ஹாட்ரிக்’ சிக்சர் விளாசி ரசிகர்களை உற்சாசப்படுத்திய டோனி

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியையொட்டி நடந்த சிக்சர் அடிக்கும் போட்டியில் இந்திய வீரரும், சென்னை சூப்பர் கிங்சின் முன்னாள் கேப்டனுமான டோனி மூன்று சிக்சர் அடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.2-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்) கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு 7.15 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது. தொடக்க விழாவை முன்னிட்டு கிரிக்கெட் வீரர்கள் இடையே சிக்சர் அடிக்கும் போட்டி ரசிகர்களின் பலத்த கரகோஷத்துக்கு மத்தியில் அரங்கேறியது.

இதில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் டோனி, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் மேத்யூ ஹைடன் உள்பட 8 வீரர்கள் கலந்து கொண்டனர். கிரிக்கெட் உலகின் கதாநாயகர்களில் ஒருவரான டோனி வருகை தந்ததால், அவரை காண ரசிகர்கள் படையெடுத்தனர். பெரும்பாலான ரசிகர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மஞ்சள் நிற கொடியை கையில் பிடித்தபடி வந்து இருந்தனர். அவர்கள் டோனி சிக்சர் அடிக்கையில் பலத்த கரவொலி எழுப்பி ஆர்ப்பரித்தனர். டோனியின் சீருடையில் ‘தல’ என்ற அவரது செல்லப்பெயர் இடம் பெற்றிருந்தது.

பவுலிங் எந்திரம் மூலம் எல்லா வீரர்களுக்கும் தலா 3 முறை பந்துகள் வீசப்பட்டன. டோனி மட்டும் தான் எதிர்கொண்ட 3 பந்துகளையும் சிக்சருக்கு (ஹாட்ரிக்) தூக்கியடித்து ரசிகர்களை பரவசப்படுத்தினார். அவர் அடித்த 3 பந்துகளும் கேலரிக்கு பறந்து சென்றன.அவருக்கு அடுத்தபடியாக வேட்டி அணிந்து வந்த மேத்யூ ஹைடன், பத்ரிநாத், அனிருதா ஆகியோர் தலா 2 சிக்சர் விளாசினர். மொகித் ஷர்மா, பவான் நெகி, கணபதி ஆகியோர் சிக்சர் எதுவும் அடிக்காமல் ஏமாற்றம் அளித்தனர். முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் எல்.பாலாஜி ஒரு சிக்சர் தூக்கினார். டோனி பேட்டிங் மட்டுமின்றி, பவுலிங் எந்திரத்தை இயக்கவும் செய்தார்.

Share
Categories
இந்தியா டில்லி தமிழகம் தலைப்புச் செய்திகள் போராட்டம் விவசாயிகள் போராட்டம்

தமிழக விவசாயிகள் பாதி மொட்டை அடித்துப் போராட்டம்

டெல்லியில் கடந்த ஏழு நாட்களாக போராட்டம் நடத்திவரும் தமிழக விவசாயிகள், இன்று பாதி மொட்டை அடித்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்.

பயிர்க்கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கடந்த 16-ந்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு  வருகிறார்கள். மத்திய-மாநில அரசுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவர்கள் ஒவ்வொரு நாளும் நூதன முறையில் போராட்டம் நடத்துகிறார்கள். நேற்று முன்தினம் விவசாயிகள் தங்களை தாங்களே துடைப்பத்தால் அடித்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா விவசாயிகளை நேரில் சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

விவசாயிகளின் போராட்டம் நேற்று 7-வது நாளாக நீடித்தது. நேற்று விவசாயிகள் பாதி மொட்டை அடித்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜந்தர் மந்தர் பகுதியில் சிறிது தூரம் ஊர்வலமாக சென்ற அவர்கள், மத்திய-மாநில அரசுகளுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார்கள்.

போராட்டத்துக்கு தலைமை தாங்கிய தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு கூறுகையில், விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மத்திய-மாநில அரசுகள் முன்வரவில்லை என்றும், எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாதி மொட்டை அடித்துக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் நீடிக்கும் என்றும் அப்போது அவர் கூறினார்.

Share