Categories
தமிழகம் தலைப்புச் செய்திகள்

தமிழக பொறியியல் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம்: ‘அரியர்’ முறை ஒழிப்பு

தமிழக பொறியியல் கல்லூரிகளில் இந்த கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. மாணவர்கள் எடுத்த துறை தவிர, வேறு துறைகளிலிருந்து  2 விருப்ப பாடங்களை தேர்வு செய்து படிக்க வேண்டும். மேலும் ‘அரியர்’ எனப்படும், தோற்ற பாடத்தை பின்வரும் பருவத் தேர்வுகளுடன் சேர்த்து எழுதும் முறை ஒழிக்கப்பட்டு, புதிய தேர்வு முறை கொண்டு வரப்படுகிறது.

இதுகுறித்து கல்விக்குழு டீன் டி.வி.கீதா  கூறியதாவது:

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 3 கல்லூரிகளிலும், குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரியிலும் பாடத்திட்டம் மாற்றப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. அதேபோல் ஒரு துறையை தேர்ந்து எடுத்து படிக்கும் போது அவர் வேறு ஒரு துறையில் கண்டிப்பாக அவரது விருப்பப்படி 2 பாடங்களை தேர்ந்து எடுத்து படிக்க வேண்டும். இந்த முறை ஏற்கனவே இந்த 4 கல்லூரிகளிலும் அமலில் உள்ளது. இந்த கல்வி ஆண்டில் தமிழகத்தில் உள்ள 518 பொறியியல் கல்லூரிகளிலும் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
தற்போதைய கிரேடு முறையில் பின்வரும் மாற்றம் கொண்டு வரப்படுகிறது:

‘0’ = மிகச்சிறப்பு = 10 கிரேடு புள்ளிகள் = மதிப்பெண்கள் 91 முதல் 100 வரை.
‘ஏ+’ = சிறப்பு = 9 கிரேடு புள்ளிகள் = மதிப்பெண்கள் 81 முதல் 90 வரை.
‘ஏ’ = மிகவும் நல்லது = 8 கிரேடு புள்ளிகள் = மதிப்பெண்கள் 71 முதல் 80 வரை.
‘பி+’ = நல்லது = 7 கிரேடு புள்ளிகள் = மதிப்பெண்கள் 61 முதல் 70 வரை.
‘பி’ = சராசரி நிலை = 6 கிரேடு புள்ளிகள் = மதிப்பெண்கள் 50 முதல் 60 வரை.
50 மதிப்பெண்களுக்கு கீழே உள்ளவர்கள் மீண்டும் தேர்வு எழுத வேண்டும்.
புதிய பாடத்திட்டத்தின்படி ஒரு துறையை தேர்ந்து எடுத்து படிக்கும் மாணவர்கள் மற்றொரு துறையில் குறைந்தது 2 விருப்ப பாடங்களையாவது படிக்க வேண்டும். உதாரணமாக மெக்கானிக்கல் பிரிவை எடுத்து படிக்கும் மாணவர், மெக்கானிக்கல் பிரிவில் உள்ள 2 பாடங்களுக்கு பதிலாக கணினி அறிவியல் பாடத்தில் ஏதாவது இரு பாடங்களை எடுத்து படிக்க வேண்டும். பி.இ. படிக்கும் போது 3-வது ஆண்டு கடைசியில் மாணவர்கள் 8.5 கிரேடு மதிப்பெண்கள் எடுத்திருந்து, அவர்கள் கடைசி ஆண்டு படிக்க முடியாவிட்டால் 5-வது ஆண்டு கல்லூரிக்கு வந்து 4-வது வருட படிப்பை தொடரலாம்.
இனி ‘அரியர்ஸ்’ என்ற பேச்சுக்கே இடம் இல்லை. ஒரு மாணவர் பி.இ. முதல் பருவ தேர்வில் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அவருடைய ‘இன்டர்னல்’ மதிப்பெண் ரத்து ஆகிவிடும். அவர் மீண்டும் 3-வது பருவ தேர்வில் தேர்ச்சி பெறாத முதல் பருவத்திற்கான ‘இன்டர்னல்’ தேர்வை எழுத வேண்டும். பிறகு அவர் பருவ தேர்வை எழுத வேண்டும். அவர் விரும்பினால் தேர்ச்சி பெறாத பாடத்திற்கு உரிய வகுப்பில் உட்கார்ந்து கேட்கலாம். தேர்ச்சி பெறாத பாடத்திற்கு உரிய ‘இன்டர்னல்’, பருவ தேர்வை 7 ஆண்டுக்குள் எழுதலாம். இதனால் ‘அரியர்ஸ்’ என்ற வார்த்தை ஒழிக்கப்படுகிறது.
இவ்வாறு கல்விக்குழு டீன் டி.வி.கீதா கூறினார்.

 

Share
Categories
இந்தியா தலைப்புச் செய்திகள் பீகார்

பீகார் டிராமா: முதல்வர் நிதீஷ் குமார் பதவி விலகினார், மீண்டும் பதவி ஏற்கிறார்; சுஷில் மோடி துணை முதல்வராகிறார்

நிதீஷ் குமார் மற்றும் சுஷில் மோடி

பீகார் நேற்று பதவி விலகிய முதல்வர் நிதீஷ் குமார், இன்று மீண்டும் பதவி பா.ஜ.க. ஆதரவுடன் பதவி ஏற்பார். அவருடன் பா.ஜ.க. தலைவர் சுஷில் மோடி துணை முதல்வராக பதவி ஏற்பார்.

2015ம் ஆண்டு நடைபெற்ற பிகார் தேர்தலில் மகா கூட்டணி அமைத்து ராஷ்டிரிய ஜனதா தளமும், ஐக்கிய ஜனதா தளமும் வெற்றி பெற்றது. நிதீஷ் குமார் முதல்வராகவும், லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஷ்வி யாதவ் துணை முதல்வராகவும் பதவி வகித்தனர்.  இந்நிலையில், தேஜஸ்வி மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததால் அவர் பதவி விலக வேண்டும் என்று நிதிஷ் குமார் அறிவித்தார். இதற்கு லாலு மற்றும் அவரது மகன் மறுப்பு தெரிவிக்கவே நேற்று மாலை தனது ராஜினாமா கடிதத்தை கவர்னருக்கு நிதிஷ் குமார் அளித்தார்.

தற்போது பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வராகிறார். மோடி துணை முதல்வராகிறார். நிதீஷின் ஜ.த. (யூ) – 71 எம்.எல்.ஏ.க்களையும் , பாஜக 53 எம்.எல்.ஏ.க்களையும், இதர ஆதரவு கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களுமாக மொத்தம் 132 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு, நிதீஷின் புதிய கூட்டணிக்கு இருப்பதாகத் தெரிகிறது.

அடுத்த 24 மணி நேரத்தில் மீண்டும் நிதிஷ்குமார் பிகார் முதல்வராக இன்று மாலை 5 மணிக்கு பதவி ஏற்க உள்ளார்.

 

Share
Categories
உலகம் தலைப்புச் செய்திகள் வட கொரியா

வட கொரியா: நாளை மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை

நாளை மீண்டும் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை பரிசோதிக்க உள்ளதாக அமெரிக்க மற்றும் தென் கொரிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

தென்கொரியாவுடன் சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டதை ராணுவ தினமாக வடகொரியா நாளை கொண்டாடுகிறது. அச்சமயத்தில்,  வடகொரியாவின் பியோங்கன் மாகாணத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ஏவுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன என செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே வடகொரியாவின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக தென் கொரியா பாதுகாப்புத் துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Share
Categories
இந்தியா உத்தர பிரதேசம் தலைப்புச் செய்திகள்

ரயிலில் வழங்கப்பட்ட வெஜிடபிள் பிரியாணியில் பல்லி

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சென்றுகொண்டிருந்த பூர்வா விரைவு ரெயிலில்  பரிமாறப்பட்ட உணவில் பல்லி கிடந்தது பயணிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரயில்வே உணவுகள் தரமற்றவையாக இருப்பதாக, சென்ற வாரம் கணக்குத் தணிக்கைத் துறை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் – சந்தவ்லியில், பூர்வா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் ரயிலில் வாங்கிய பிரிஞ்சியில் பல்லி விழுந்து கிடந்தது கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்தப் பயணி ரயில்வே அமைச்சருக்கு டிவிட்டர் மூலம் புகார் அனுப்பினார். அதில் அவர் அந்த உணவை கவனிக்காமல் உண்டுவிட்டதால் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். உடனடியாக இது பற்றி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ரெயில்வேத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு உத்தரவிட்டதையடுத்து ரயில்வே அதிகாரிகள் அந்தப் பெட்டிக்கு அனுப்பப்பட்டு தொடர்புடைய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

 

 

Share
Categories
இந்தியா உச்ச நீதிமன்றம் குடியரசு தலைவர் கொல்கத்தா தமிழகம் தலைப்புச் செய்திகள் நீதிபதி மேற்கு வங்காளம்

நீதிபதி கர்ணன்: தண்டனையை ரத்து செய்ய, புதிய ஜனாதிபதியிடம் முறையீடு

சுப்ரீம் கோர்ட்டினால் 6 மாத தண்டனை விதிக்கப்பட்டுத் தண்டனையை அனுபவித்து வரும் நீதிபதி கர்ணன், தண்டனையை ரத்து செய்ய, புதிய ஜனாதிபதியிடம் முறையீடு செய்துள்ளார்.

தமிழகத்தைச் சார்ந்தவரும், கொல்கொத்தா உயர்நீதிமன்ற நீதிபதியுமான கர்ணன் தன்னுடன் பணியாற்றும் நீதிபதிகள் தான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் தன்னை துன்புறுத்துவதாகவும், தான் பழிவாங்கப்படுவதாகவும் கடந்த 2011-ஆம் ஆண்டு தேசிய தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கான ஆணையத்தில் புகார் அளித்தார்.

உச்சநீதிமன்ற ஆணையின்படி சென்ற ஆண்டு முதல் கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் பணியாற்றும் 20 நீதிபதிகள் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஆகியோர் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக அவர்களின் பெயர்கள் அடங்கிய கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைத்தார்.

உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிபதிகளுக்கு எதிராக கருத்து தெரிவித்த கர்ணனுக்கு பிப்ரவரி 13-ஆம் தேதி-க்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பியது. விசாரணைக்கு ஒத்துழைக்காததால், அவரை கைது செய்யும்படி தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான ஏழு நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்வு கடந்த மே 9-ம் தேதி கொல் கத்தா போலீஸாருக்கு உத்தரவிட்டது. ஜூன் 12-ஆம் தேதி நீதிபதியாக இருந்த கர்ணன் தலைமறைவாக இருந்தபடியே ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த அவர் ஜூன் 20-ஆம் தேதி கோவையில் மலுமிச்சம்பட்டியில் கைது செய்யப்பட்டார்.

ஐகோர்ட்டு நீதிபதி ஒருவருக்கு பணிக்காலத்தில், இப்படி சுப்ரீம் கோர்ட்டு சிறைத்தண்டனை விதித்தது, இதுவே முதல் முறை.

இந்நிலையில், புதிய ஜனாதிபதியாக நேற்று பதவி ஏற்றுள்ள ராம்நாத் கோவிந்திடம் சிறைவாசத்தை ரத்து செய்யக்கோரி சி.எஸ். கர்ணன் தரப்பில் நேற்று முறையிடப்பட்டது.

இது பற்றி அவரது வக்கீல் மேத்யூஸ் ஜே. நெடும்பாரா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனுக்கு விதிக்கப்பட்டுள்ள 6 மாத சிறைத்தண்டனையை ரத்து செய்யுமாறு ஜனாதிபதி அலுவலகத்தில் ஒரு முறையீடு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கூடிய விரைவில் ஜனாதிபதியிடம் நேரில் முறையிட வாய்ப்பு தேடுவோம். இந்த நடவடிக்கை, இந்திய அரசியல் சாசனம் பிரிவு 72–ன் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Share
Categories
இந்தியா குடியரசு தலைவர் தலைப்புச் செய்திகள்

இந்தியாவின் 14-ஆவது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார்

இந்தியாவின் 13-வது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவுற்றதை அடுத்து,  இந்தியாவின் 14-ஆவது ஜனாதிபதியாக திரு. ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்றார்.

சரியாக நண்பகல் 12 மணி 7 நிமிடங்களுக்கு தேசிய கீதத்துடன் பதவியேற்பு விழா தொடங்கியது. தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நாட்டின் 14ஆவது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்துக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

புதிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவியேற்றதைத் தொடர்ந்து, அவரும், பிரணாப் முகர்ஜியும் மேடையில் இருக்கை மாறி அமர்ந்தனர். பிரதமர் மோடி, முன்னாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், முன்னாள் பிரதமர்கள் தேவகவுடா, மன்மோகன் சிங் உள்ளிட்டோர் முன்வரிசையில் அமர்ந்திருக்க, மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் என நாடாளுமன்ற மைய மண்டபத்தில் குழுமியிருந்தனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பதவி ஏற்பு முடிந்ததும் உரையாற்றிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், “பெருமை மிகு இந்த தேசத்தின் 125 கோடி மக்களுக்கும் தலைவணங்குகிறேன்” என்றார்.

தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தான் மிகவும் எளிய பின்னணியில் பிறந்து வளர்ந்த தமது பயணம் நெடியது என்று குறிப்பிட்டார். தமக்கு முன்பிருந்த ஜனாதிபதிகளான ராதாகிருஷ்ணன், அப்துல் கலாம், பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோர் வழியில் செவ்வனே பணியாற்றப்போவதாகவும்  கூறினார்.

தொலைதூர கிராமத்தின் மண் குடிசை வீட்டில் இருந்து வந்த தாம், ஜனாதிபதி என்ற உயரிய பொறுப்பை பணிவுடன் ஏற்றுக் கொள்வதாகவும் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.

நமது நாட்டின் பன்முகத்தன்மை குறித்து பெருமிதம் தெரிவித்த ஜனாதிபதி ஒற்றுமையில் வேற்றுமையே நமது வலிமை என்றார். நாட்டை கட்டமைப்பதில் இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் பங்கிருப்பதாகவும் ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டார்.

 

Share
Categories
சிந்தனைக்கு தமிழ்ப் பாடல்கள்

யானை புக்க புலம்

காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே,
மா நிறைவு இல்லதும், பல் நாட்கு ஆகும்;
நூறு செறு ஆயினும், தமித்துப் புக்கு உணினே,
வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே,
கோடி யாத்து, நாடு பெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,
பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம் போல,
தானும் உண்ணான், உலகமும் கெடுமே.

பாடியவர்: பிசிராந்தையார் – புறநானூறு # 184

உரை :

மிகச் சிறிய பரப்பளவு கொண்ட நிலத்தில் விளைந்த நெல்லை அறுத்து உணவுக் கவளங்களாக்கி யானைக்குக் கொடுத்தால், அதனை யானை  பல நாட்களாக  உண்ணும். ஆனால், நூறு வயல்கள் இருந்தாலும், யானை தானே புகுந்து உண்ண ஆரம்பித்தால் , யானை தின்பதைவிட யானையின் கால்களால் மிதிபட்டு அழிந்த நெல்லின் அளவு அதிகமாகும்.  அதுபோல, ஒரு நாட்டின் தலைவன் வரி திரட்டும் முறை தெரிந்து மக்களிடமிருந்து வரி திரட்டினால் நாடு கோடிக் கணக்கில் பொருள்களைப் பெற்றுத் தழைக்கும். ஆனால், நாட்டை ஆள்பவன் அறிவில் குறைந்தவனாகி, முறை அறியாத பரிவாரங்களின் தூண்டுதலோடு, ஆரவாரமாக, ஈவு இரக்கமில்லாமல், அநியாயமாக வரியைத் திரட்ட விரும்பினால், யானை புகுந்த நிலம் போலத் தானும் கெட்டு, தன் நாட்டையும் கெடுப்பான்.

If you harvest  the rice from a small area of ​​land, make it into small bundles, and feed the elephant, it will last for  several days as the elephant’s food. But, even if there are a hundred paddy fields, if the elephant enters into the field and starts eating on its own, the paddy field will be trampled with the elephant’s legs and the rice will be destroyed. Similarly, if a country’s leader collects taxes with the appropriate knowledge of economics,  the country will flourish. However, if he becomes weak and on the advice of fawning kith and kin, he starts collecting taxes without any mercy on the populace, his country will become like an elephant that entered into the field. He won’t get what he wishes for, but his country too will be ruined.

Share
Categories
எடப்பாடி பழனிசாமி தமிழகம் தலைப்புச் செய்திகள் திமுக ஸ்டாலின்

நீட் தேர்வில் தமிழகத்திற்கு நிரந்தரத் தீர்வே தேவை : மு.க.ஸ்டாலின்

நீட் தேர்விலிருந்து இந்த ஓராண்டிற்கு மட்டும் விலக்கு அளிக்க, மத்திய அரசிடம் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையிலான அதிமுக அரசு மண்டியிட்டுக் கொண்டிருக்கிறது; ஆனால் நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கே தமிழகத்திற்குத் தேவை  என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியுள்ளதாவது:

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னெடுப்பில் தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கங்கள் மற்றும் மாணவர் சமூகம் ‘நீட்’ எனும் அநீதிக்கு எதிராகத் தொடர்ந்து தங்களது கொந்தளிப்பை வெளிப்படுத்தி வருவதை தாமதமாக உணர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தற்போது கடைசிநேரத்தில் விழித்துக்கொண்டு, எதையாவது செய்து நெருக்கடியில் இருந்து மீள்வற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறது.

இந்த ஓராண்டுக்கு மட்டுமாவது நீட் தேர்வில் இருந்து விலக்குபெறுவதற்காக, தங்கள் எஜமானர்களிடம் தமிழக அமைச்சர்கள் மண்டியிட்டு ஒரு தற்காலிக தீர்வை காணுவதற்கு முயற்சி மேற்கொண்டிருக்கிறார்கள். இது தமிழக சட்டப்பேரவையில் நிரந்தர தீர்வு காண நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவு வெளிப்படுத்தும் உணர்வுக்கு எதிரானது ஆகும். தமிழ்நாடு கோருவது, மாநில உரிமை. நமது மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களை, நமது மாநிலத்தின் நிதி ஆதாரத்தில் நடத்தும் மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க மத்திய அரசு ஏன் தேர்வு நடத்த வேண்டும்? இதுதான் நாம் எழுப்பும் அடிப்படை கேள்வி. மாநில உரிமை பறிப்புக்கு எதிராகக் கொந்தளித்து எழ வேண்டிய அரசு, டெல்லி ஆட்சியாளர்களிடம் கை கட்டி, வாய் பொத்தி, கெஞ்சிக் கொண்டு இருக்கிறது. நெருக்கடியில் இருந்து தப்பித்துக் கொள்ளும் இதுபோன்ற தந்திரங்களை கைவிட்டு, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்க உரத்துக் குரல் கொடுக்க வேண்டும்.

“இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு வேண்டுமானால், நீ்ட்டில் இருந்து விதிவிலக்கு பெறலாம், நிரந்தரமான விலக்கு கேட்கக்கூடாது” என்று தமிழக பாஜக தலைவர் சகோதரி டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருக்கிறார். “நீட் தேர்வால் பாதிப்பு வராது, தரம் உயரும். நீட் தமிழகத்திற்கு தேவை”, என்றெல்லாம் மனம்போன போக்கில் பேசிவந்த பாஜகவினர், தமிழ்நாட்டில் கிராமப்புற மற்றும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த, முதல் தலைமுறையாக கல்லூரிகளில் அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்களுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை இப்போதேனும் உணரத் தொடங்கியுள்ளனர் என்பது சற்றே ஆறுதல் அளிக்கிறது. இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கலாம் என்ற பா.ஜ.க.வின் கருத்து ஏற்கத்தக்கது அல்ல. நீட் தேர்வே கூடாது என்பதுதான் எங்கள் உறுதியான நிலைப்பாடு.

‘தவணை கேட்பதற்கும்’, ‘தள்ளிப்போடுங்கள் என்று கெஞ்சுவதற்கும்’, இது ஒன்றும் மத்திய அரசு தனது விருப்பம்போல் தரும் மானியம் அல்ல. நீட்டைத் திணிக்காதீர்கள் என்று நாம் கேட்பது நம் மாநில உரிமை. அடிப்படையில், நுழைவுத் தேர்வுகள் கிராமப்புற, ஏழை, ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்குப் பாதகமானவை என்ற கோணத்தில், சமூக நீதி மற்றும் மாநில உரிமை என்ற இரு ஜீவாதார அடிப்படையில்தான் திராவிட முன்னேற்றக் கழகம் நீட் தேர்வை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. எனவே, தற்காலிக தீர்வு காண்பதற்கு மட்டுமே அடி பணிந்து மாநில உரிமைகளை முழுவதுமாக அடகு வைக்க எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நிச்சயம் முயற்சிக்கக்கூடாது. அப்படிச் செய்வது, தமிழ்நாடு மாணவர்களுக்குச் செய்கிற நிரந்தர துரோகமாக அமைந்துவிடும். சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றிய சட்ட மசோதாக்களை நீர்த்துப் போகச் செய்து, சமூகநீதிக்கு சவக்குழி தோண்டுவதாக ஆகிவிடும்.

“நீட் தேர்வில் குளறுபடிகளே நடைபெறவில்லை”, என்று மத்திய அரசும் அதன் விசுவாசிகளும் வாதாடி வந்தார்கள். இப்போது, நாடு முழுவதும் ஒரே கேள்வித்தாள் தரப்படவில்லை என்பதை மத்திய மனிதவளத்துறை அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் வெளிப்படையாக ஒப்புக் கொண்டு, அடுத்த ஆண்டு முதல் இந்த குறைபாடுகள் இருக்காது என்று உறுதி அளித்துள்ளார். கடந்த ஆண்டில், ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு விதமான கேள்வித்தாள் தந்ததால் மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு யார் பொறுப்பேற்கப் போகிறார்கள்? பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு என்னவிதமான இழப்பீட்டை தரப் போகிறார்கள்? ‘நாடு முழுவதும் ஒரே தேர்வு’, என்று அறிவித்துவிட்டு, ஒரே மாதிரியான கேள்வித்தாளை வழங்காத நிலையில் தேர்வை ஒட்டுமொத்தமாக ரத்து செய்வதுதானே நியாயம்?

ஜிப்மருக்கு ஏன் விதிவிலக்கு?

‘நாடு முழுவதும் ஒரே தேர்வு’, என்று கிளிப்பிள்ளை போல சொல்லிக் கொண்டிருப்பவர்கள், டெல்லி மற்றும் பல்வேறு மாநிலங்களில் மத்திய அரசின் நிதியில் நடத்தப்படுகின்ற, எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகள், புதுச்சேரி ஜிப்மர், பிஜிஐ (சண்டிகர்) உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு ‘நீட்’ தேர்வில் இருந்து விதிவிலக்குத் தந்துள்ளது ஏன்? அந்த மருத்துவக் கல்லூரிகளை விட, சென்னை ராஜீவ் காந்தி பொதுமருத்துவமனை மற்றும் சென்னை மருத்துக் கல்லூரி எந்த வகையில் தரம் குறைந்தது?

மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, ஒற்றைச் சிந்தனையைத் திணிக்கிற கொடுங்கோன்மைக்கு எதிராகத் தமிழ்நாட்டின் எல்லா கட்சிகளும் இயக்கங்களும் குரல் கொடுத்து வருகின்றன. அரசியல் மாறுபாடுகளைக் கடந்து, சட்டமன்றத்தில் மாநில உரிமை காப்புக்காக ஒன்றுபட்டு நிற்கிறோம். ஆனால், அதிமுக அரசோ குறுகிய மனப்பான்மையோடு, அற்பமான அரசியல் செய்து வருகிறது. தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சோதனையை எதிர்கொள்ள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறாமல் மத்திய அரசுக்கு அடி பணிந்து கிடக்கிறது. மத்தியில் உள்ள ஆட்சியாளர்களிடம் வலியுறுத்தி மாநில உரிமையை நிலை நாட்டத் தவறி வருகிறது. நீட் விஷயத்தில் எடப்பாடி அரசின் இந்த அற்பமான போக்கு தமிழ்நாட்டின் நலனுக்கு ஊறு விளைப்பது ஆகும்.

“தமிழ்நாட்டின் கல்வித்தரம் சரியல்ல”, என்ற சாரமற்ற வாதத்தை, பாஜகவினரும் அதன் அடிவருடிகளும் கூசாமல் சொல்லி வருகின்றனர். கல்வித்தரம் பற்றி பேசுவது, மாநில உரிமை பறிப்பை மறைப்பதற்குச் செய்கிற தந்திரமே தவிர வேறல்ல. இதே பாடத்திட்டத்தில் பயில்கிற மாணவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற போட்டித் தேர்வுகளில் அகில இந்திய அளவில் நூற்றுக்கணக்கில் வெற்றி பெறுகிறார்கள். உலகம் முழுவதும் மருத்துவர்களாகவும், மென்பொருள் வல்லுநர்களாகவும் பல்லாயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். தரமில்லாத கல்வியாக இருந்திருந்தால், இந்த வாய்ப்புகள் அவர்களுக்கு வசப்பட்டிருக்குமா? எந்தவிதமான ஆதாரமும் இன்றி, ‘வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ’, என்று தமிழ்நாட்டின் கல்வித் தரம் குறைபாடு கொண்டது என்று சொத்தை வாதத்தை முன்வைத்து தமிழக மாணவர்களின் அறிவுத்திறனை கொச்சைப்படுத்தும் போக்கை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் அரசின் சார்பில் பல்கலைக்கழகங்கள், மருத்துவ, பொறியியல் கல்லூரிகள் நிறுவப்பட்ட அளவுக்கு வேறெந்த மாநிலத்திலாவது ஏற்படுத்தப்பட்டுள்ளனவா என்பதை, எங்களை விமர்சிப்போர் மனசாட்சியோடு சிந்திக்க வேண்டும். கல்வி வாய்ப்புகளை உருவாக்குவதிலும், மேம்படுத்துவதிலும் தமிழ்நாடு காட்டிய முனைப்பை வேறெந்த மாநிலம் செய்திருக்கிறது என்பதை அவர்கள் பட்டியல் இட்டு சொல்லட்டும். நீட் தேர்வு என்பது, கல்வித் தரத்தை ஒருபோதும் மேம்படுத்தப் போவது இல்லை. மாறாக, மாணவர் சேர்க்கையில் குளறுபடியையும் சமூக நீதிக்கு அநீதியையும்தான் ஏற்படுத்தப்போகிறது.

புற்றீசல் போல நீட் பயற்சி மையங்கள் இப்போதே உருவாகத் தொடங்கிவிட்டன. ஆயிரக்கணக்கில் பணம் செலுத்தும் வசதி படைத்தவர்கள்தான் அதில் பயில முடியும். ஏழ்மையில் வாடும் கிராமப்புற, ஒடுக்கப்பட்ட மாணவர்கள் இதுபோன்ற சிறப்புப் பயிற்சியைப் பெற முடியாத நிலையில் பாதிப்புக்கு ஆளாவார்கள். மேலும், நீட் தேர்வை ஒரு மாணவர் 3 முறை எழுதலாம். ஓராண்டில் போதிய மதிப்பெண் பெறாவிடில், அடுத்த ஆண்டு சிறப்புப் பயிற்சி பெற்று மீண்டும் எழுதலாம். இது, மறைமுகமாக – சமமற்ற தன்மையை ஏற்படுத்தும். அரசு பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பைப் படித்துவிட்டு முதல் முறையாக நீட் தேர்வு எழுதுவோரும், நீட் தேர்வுக்காகவே இரண்டு, மூன்று ஆண்டுகள் படித்து தேர்வு எழுதுவோரும் – தேர்வுகளை எழுதும்போது அது சமனற்ற நிலையை ஏற்படுத்தும். வசதியானவர்களுக்கு சாதகமான சூழல், ஏழைகள் மற்றும் கிராமப்புற மாணவர்களின் வாய்ப்புகளைப் பறிப்பதாக அமைந்துவிடும்.

தமிழ்நாட்டின் மருத்துவக் கல்வி முறையைப் பாதுகாக்கவும், சமூக நீதி பறிபோகும் ஆபத்தை முறியடிக்கவும், ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் எதிர்காலக் கனவு சிதைந்துபோகாமல் தடுக்கப்படவும் எல்லோரும் ஓர் அணியில் திரள வேண்டும். ஜனநாயகம், சமூக நீதியில் நம்பிக்கை கொண்டோர், மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் எண்ணம் கொண்டோர் என யாவரையும் கட்சி பேதமின்றி, நீட் எதிர்ப்பு முழக்கமிட அழைக்கிறேன். திமுகழகம் அறைகூவல் விடுத்து, எதிர்வரும் வியாழக்கிழமை நடக்க இருக்கின்ற மனித சங்கிலிப் போராட்டத்தில் கரம் கோர்த்து, ‘உரிமை முழக்கம் இட வாருங்கள்! வாருங்கள்!’, என அழைக்கிறேன். தமிழ்நாட்டில் நாம் கோர்க்கும் கரங்களும், விண்ணதிர ஒலிக்கும் முழக்கங்களும் ‘நீட்’ என்னும் வல்லாதிக்கத்தை முறியடிக்கும்.

இவ்வாறு மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

Share
Categories
அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி தமிழகம் தலைப்புச் செய்திகள்

ஆவணப்பட இயக்குநர் திவ்ய பாரதி கைது : மாணவர்களைப் பழிவாங்க அரசு தீவிரம்

அரசுக்கு எதிராக போராடிய மாணவர்களான திருமுருகன் காந்தி மற்றும் வளர்மதி ஆகியாரைக் குண்டர் சட்டத்தில் சிறையில் தள்ளியதைத் தொடர்ந்து, தற்போது ஆவணப்பட இயக்குநர் திவ்ய பாரதியைக் கைது செய்துள்ளது.  8 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக இப்போது எந்த முன்னறிவிப்பும் இன்றி கைதுசெய்யப்பட்ட  திவ்ய பாரதி தற்போது நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக திவ்ய பாரதி  அளித்த பேட்டியில்,  “தலித் மாணவர்களின் விடுதியில் சரியாக வசதிகள் செய்து தரபடவில்லை என்று நான் போராடி இருந்தேன் . மன்னர் கல்லூரியை சேர்ந்த சுரேஸ் என்ற மாணவர் பாம்பு கடித்து தனது அறையில் இறந்தார் . இந்த நிலையில்தான் தலித் விடுதிகளின் நிலைமை இருக்கிறது. இந்த மாணவர் குடும்பத்திற்கு நிவாரணத்தொகை தர வேண்டும் என்று போராடி இருந்தேன் . இவ்வாறு பல போரட்டங்களில் பங்கேற்று உள்ளேன்” என்றார்.

துப்புரவு தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிரான போரட்டங்களில் தொடர்ந்து திவ்ய பாரதி ஈடுபட்டுவருபவர். மேலும் தலித்துகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும் இவர் போராடி வருகிறார்.

மாணவர் போராட்டங்களை ஒடுக்க நினைக்கும் மத்திய – மாநில அரசுகள்

மெரினாவில் நடைபெற்ற மாணவர்ப் புரட்சிக்குப் பின்னர் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டங்களைக் கண்டு குலைநடுங்கிப் போயுள்ளன அரசுகள். இதனால்தான் மக்கள் பிரச்சனைகளுக்காகப் போராடும் மாணவர்களைத் தேடிப் பிடித்து குண்டர் சட்டத்தில் சிறையில் தள்ளுகின்றன. முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த ஈழத் தமிழர்களுக்காக நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்திய திருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது தமிழக மக்களை அதிர்ச்சியடைய வைத்தது. இதேபோல் நெடுவாசல் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து துண்டறிக்கை கொடுத்ததற்காக வளர்மதி என்ற மாணவி கைது செய்யப்பட்டார்.  பெரியார் பல்கலைக் கழகத்தில் இருந்தே மாணவி வளர்மதி நீக்கப்பட்டிருக்கிறார். இதேபோல் மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து முகநூலில் பதிவு போட்டதற்காக தமிழ் தேசியப் பேரியக்கத்தின் குபேரனை கைது செய்து சிறையிலடைத்தது போலீஸ்.

இந்த நடவடிக்கைகள் முற்றிலும் சரி என்று தமிழக பா.ஜ.க. தலைவர்கள் கூறிக்கொள்கின்றனர். குறிப்பாக, ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவி வளர்மதி நக்சல் அமைப்புடன் தொடர்புடையவர் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பதவியிலிருக்க வேண்டுமானால், பாஜக சொல்வதைக் கேட்பதை தவிர வேறு வழியில்லாததால் இப்படி தலையாட்டிப் பொம்மையாய் ஆடிக்கொண்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இத்தகைய நடவடிக்கைகளால், தமிழக அரசு, மத்திய பாஜக அரசினால் “ரிமோட் கண்ட்ரோல்” செய்யப்படுகிறதோ என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு எழுகிறது.

Share
Categories
இந்தியா ஈராக் உலகம் ஐ.எஸ். தீவிரவாதிகள் தலைப்புச் செய்திகள் பா.ஜனதா

ஈராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் நிலைமை உறுதிபடத் தெரியவில்லை: ஈராக் அமைச்சர்

ஈராக்கில் மூன்று ஆண்டுகளுக்கு முன் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் நிலைமை என்னவென்று உறுதிபடத் தெரியவில்லை என்றும் இன்னமும் அவர்களைத் தேடிக்கொண்டிருப்பதாகவும் ஈராக் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

இந்தியப் பாராளுமன்றத்தில்  அகாலிதளம் உள்ளிட்ட கட்சியினர் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க கோரிக்கை விடுத்தனர். தற்போது இந்தியா வந்துள்ள, ஈராக் வெளியுறவுத் துறை அமைச்சர் அல் ஜபாரி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை இன்று டெல்லியில் சந்தித்தார். அப்போது கடத்தப்பட்ட இந்தியர்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

கடத்தப்பட்டவர்களின் குடும்பங்களை இன்று சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அவர்களிடையே பேசும் போது, “கடத்தப்பட்ட 39 பேரும் கடைசியாக பதூஷ் நகரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அரசுப்படைகள் அந்த நகரை மீட்க உள்ளது. அதன் பின்னர் நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம்” என்று அவர்களிடம் தெரிவித்தார்.

 

 

 

Share