Categories
அமெரிக்கா அமெரிக்கா உலகம் குடியரசு கட்சி தலைப்புச் செய்திகள்

வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குநராக 11 நாட்கள் பதவி வகித்த அந்தோனி ஸ்காரமுக்கி பணிநீக்கம்

வெள்ளை மாளிகையின் மேற்குப் பகுதியில் நிகழும் உள்கட்சி மோதல்களைத் தவிர்த்து, ஒழுங்கு முறையைக் கொண்டு வருவதற்காக, புதிதாக அலுவலர்களின் மேலாளராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜான் கெல்லி, கடந்த 11 நாட்களாக தகவல் தொடர்பு இயக்குநராக  பதவி வகிக்கையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுக்கொண்டிருந்த அந்தோனி ஸ்காரமுக்கியை பணிநீக்கம் செய்துள்ளார். இது ஒழுங்கு முறையைக் கொண்டு வருவதற்கான அவரது முயற்சியின் முதல் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

வெள்ளை மாளிகையின் ஊடகவியல் செயலாளரான சாரா ஹக்கபீ சாண்டர்ஸ், கெல்லிதான் ஸ்காரமுக்கியை பணி நீக்கம் செய்யக் கோரினார் என்பதை உறுதி செய்யவில்லை. எனினும், தற்போது  ஸ்காரமுக்கி வெளியேறியபின், ஜான் கெல்லியிடம் முழுப் பொறுப்பும் கிடைத்திருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டார்.

“ஜெனரல் கெல்லி வெள்ளை மாளிகையில் முழுமையாக செயல்பட  அதிகாரம் கிடைத்துள்ளது , மேலும் அனைத்து ஊழியர்களும் அவரது அதிகாரத்தின் கீழ் வேலை செய்ய வேண்டும்”, என்று கூறிய சாரா ஹக்கபீ, மேலும் வேறு ஊழியர்கள் மாற்றப் படும் நிலை இல்லை என்று தெரிவித்தார்.

 

 

 

Share
Categories
இந்தியா உலகம் சீனா தலைப்புச் செய்திகள்

உத்தரகண்ட் – பரகோட்டில் எல்லை தாண்டி 1 கி.மீ உள்ளே புகுந்து சீன ராணுவம் அத்துமீறியது

உத்தரகண்ட் – சமோலி மாவட்டத்திலுள்ள பரகோட்டில் எல்லை தாண்டி 1 கி.மீ உள்ளே புகுந்து சீன ராணுவம் அத்துமீறியுள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால், சீன அதிபர் க்ஸி ஜின்பிங்-கை  இன்னும் 3 நாட்களில் சந்தித்துப் பேசுவதாக இருக்கும் நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

10லிருந்து 12 சீன ராணுவ வீரர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

சென்ற ஆண்டு ஜூலை மாதத்திலும், சீன ராணுவத்தினர் 200 மீட்டர்கள் பரகோட்டில் எல்லை கோட்டைத் தாண்டி வந்துள்ளனர். அச்சமயத்தில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த மனோகர் பரிக்கர் , எல்லை சரியாக குறிக்கப்படாததால் இரு தரப்பினருக்கும் தமது எல்லை எதுவரை என்று தெரியாமல் இருந்திருப்பதால் அச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்று கூறியிருந்தார்.

உத்தரகண்டில் இந்திய-சீன எல்லை 350 கி.மீ. தொலைவு வரை இருக்கிறது. இது போன்ற சம்பவங்கள் முன்பும் நிகழ்ந்திருப்பதாக தெரிய வருகிறது.

இதற்கு சில நாட்களுக்கு முன்னர், வட கிழக்கு மாநிலமான சிக்கிம் எல்லையை ஒட்டிய, டோகோலாம் பகுதியை சொந்தம் கொண்டாடிய சீனா, அப்பகுதியில், சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டது. இதை தடுத்து நிறுத்தச் சென்ற நம் வீரர்களுடன் கை கலப்பில் ஈடுபட்ட சீன வீரர்கள், நம் நாட்டு எல்லையில் அத்துமீறி நுழைந்தனர். பின், நம் வீரர்களால் விரட்டியடிக்கப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு, மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இந்தியா – சீனா – பூடான் நாடுகளுக்கு இடைப்பட்ட பொது இடத்தை, சீனா தனக்கு சொந்தம் கொண்டாடியதுடன், இந்தியா, பூடான் எல்லையையும், சீனாவுடன் சேர்த்து, சர்ச்சைக்குரிய வரைபடத்தை வெளியிட்டது.

இதன் பின்னணியில், தற்போதைய சீன ராணுவத்தின் அத்துமீறல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share
Categories
அமெரிக்கா தலைப்புச் செய்திகள் ஹவாய் ஹாணலுலு

அமெரிக்காவின் ஹாணலுலுவில் சாலையில் செல்லும் பாதசாரிகள் மொபைல் போன் பயன்படுத்த தடை

அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் உள்ள ஹாணலுலு நகரில் மொபைல் ஃபோன் குறித்த புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி சாலையில் செல்லும் பாதசாரிகள்  மொபைல் உபயோகித்தால் அபராதம் விதிக்கப்படும். பாதசாரிகள் குறுஞ்செய்தி அல்லது போனில் பேசிக்கொண்டே செல்வதால் விபத்துகள் அதிகமாக ஏற்படுவதைக் தடுக்கவே இத்தகைய முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

சாலைகளில் டிஜிட்டல் கேமரா மற்றும் மொபைல் போன்களை பயன்படுத்தினால் 15 முதல் 35 டாலர்கள் அபராதம் விதிக்கப்படும் என்றும் இந்த உத்தரவு வரும் அக்டோபர் மாதம் இறுதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது எனவும் நகர நிர்வாக தலைவர் கிர்க் கால்டுவெல் தகவல் தெரிவித்துள்ளார்.

முதலில் அபராதம் செலுத்திவிட்டு பின் தொடர்ந்து அந்த தவறை திரும்ப செய்தால் 99 டாலர்கள் வரை அபராதம் விதிக்கவும் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தனிமனித சுதந்திரத்தில் அரசு தலையிடுவதாக இந்த தடைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சாலைகளிலும், நடைபாதைகளிலும் டிஜிட்டல் கேமரா மற்றும் மொபைல் போன்கள் பயன்படுத்திக் கொண்டே சென்றதால் கடந்த 2000ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை 11,000 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் அறிக்கை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜெர்மனியில் உள்ள ஆக்ஸ்பர்க் நகரில் சாலை விபத்துகளை தவிர்க்க இந்த நடைமுறை பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
Categories
அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி டி.டி.வி. தினகரன் தமிழகம் தலைப்புச் செய்திகள்

அ.தி.மு.க. கட்சியைக் கைப்பற்ற தினகரன் திட்டம்: அமைச்சர்கள் அவசர ஆலோசனை

அ.தி.மு.க  அம்மா அணியின் துணைப்பொது செயலாளர் தினகரன் ஆக.5 முதல் மீண்டும் கட்சிப் பணியில் தீவிரமாக ஈடுபட முடிவு செய்துள்ளதாகவும்  கூறியிருந்தார். இதன்படி, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு தினகரன்  5-ந்தேதி அன்று   வர இருப்பதாக தகவல் பரவி வருகிறது. தாம் கட்சி அலுவலகத்திற்கு வரும்போது, அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் வரவேண்டும் என்று அழைப்பு அனுப்பியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.   அன்று மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்செய்தி வெளியானதை அடுத்து தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ஜெயக்குமார், சண்முகம், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும் தினகரன் தனது ஆதரவாளர்களிடம் பேசுகையில் , “கட்சித் தலைமை அலுவலகத்துக்கு நான் செல்லும்போது என்னை போலீஸார் கைதுசெய்தால், அது நான் செய்த பாக்கியம்” என்று  கூறியிருக்கிறார்.  திவாகரனும் தினகரனும் இனி இணைந்து செயல்படப் போவதாக செய்தி வெளியானதை அடுத்து, சசிகலா குடும்பத்தின் ஒவ்வொரு நடவடிக்கையையும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது, முதல்வர் எடப்பாடியின் அலுவலகம்.

Share
Categories
அதிபர் டிரம்ப் அமெரிக்கா உலகம் தலைப்புச் செய்திகள் ரஷ்யா

அமெரிக்காவின் 755 தூதரக அதிகாரிகளை ரஷ்யாவிலிருந்து வெளியேற்ற புடின் முடிவு

ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைகளை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு, அதிபர் டிரம்பின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில், இதற்கு பதிலடியாக, அமெரிக்காவின் 755 தூதரக அதிகாரிகளை ரஷ்யாவிலிருந்து வெளியேற்ற ரஷ்யாவின் அதிபர் புடின் முடிவு செய்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், ரஷியா நேரடியாக தலையிட்டதாகவும், உக்ரைன், சிரியா ஆகிய நாடுகளில் தனது ராணுவத்தின் மூலம் ஆக்கிரமிப்பு செய்ததாகவும் கூறி அந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஜனநாயகக் கட்சியினராலும், ஊடகங்களாலும், சில குடியரசு கட்சியினராலும்  எழுப்பப் பட்டிருந்தது.

மேலும், அமெரிக்காவின் நலனுக்கு எதிராக செயல்பட்டதாகவும், அபாயகரமானதாக விளங்குவதாகவும், அமெரிக்காவையும், அதன் நட்பு நாடுகளையும் பலவீனப்படுத்துவதாகவும்  ஈரான், வடகொரியா ஆகிய 3 நாடுகள் மீதும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

இதினிமித்தம், மேற்கண்ட நாடுகள் மீதான பொருளாதார தடை விதிப்பதற்கான மசோதா அமெரிக்க பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அதிபர் டிரம்ப்பின் கையெழுத்திற்காக அனுப்பப்பட்டுள்ளன. அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கையால் கோபமடைந்துள்ள ரஷ்யா, இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதன் விளைவாக, ரஷ்யாவில் இருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகளில் 755 பேர் செப்டம்பர் 1-ம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ரஷ்ய வெளியுறவுத் துறை, அங்குள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கை 455-ஐ தாண்டக்கூடாது என அமெரிக்கத் தூதரகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.

தற்போது இந்த விவகாரம் இரு நாடுகளுக்கிடையேயான பனிப்போரை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share
Categories
இந்தியா கட்சிகள் தலைப்புச் செய்திகள் பா.ஜனதா

பாஜக பல மானிலங்களில் நடத்தும் குதிரை பேர அரசியலின் விளைவாக ராஜ்யசபாவில் பெரும்பான்மை பெறுகிறது

பீகார், குஜராத், தமிழ்நாடு உள்ளிட்டப் பல்வேறு மானிலங்களில் பா.ஜ.க.வினால் நிகழ்த்தப்படும் குதிரைபேர அரசியலின் விளைவாக, பா.ஜ.க.வுக்கு ராஜ்யசபாவில் பெரும்பான்மை கிடைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

ராஜ்யசபாவில் உள்ள மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 245. இதில் பெரும்பான்மை பெற, 123 எம்.பி.,க்கள் ஆதரவு தேவை. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு தற்போது, 80 எம்.பி.,க்களின் ஆதரவு தான் உள்ளது. பீகாரில் சில நாட்களுக்கு முன் பா.ஜ.க.வின் பின்புல வேலைகளால் கூட்டணி மாற்றம் ஏற்பட்டது. நிதீஷின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ., கூட்டணி அரசு உருவாகி உள்ளது. எனவே, ஐக்கிய ஜனதா தளத்தின், ஒன்பது எம்.பி.க்களின் ஆதரவை சேர்த்தால், தே.ஜ., கூட்டணி அரசின் பலம், 89 ஆக உயரும். இதுபோலவே பாஜகவின் குதிரைபேர அரசியலினால்  குஜராத்தில் பல எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறும் ச்ச்ழல் இருக்கிறது. இங்கிருந்து  அமித்ஷா, ஸ்மிருதி இரானி மற்றும் காங்., கட்சியில் இருந்து பறிக்கப்பட உள்ள ஒரு இடம் ஆகிய மூன்றை சேர்த்தால், அரசின் பலம், 91 ஆக உயரும்.

தமிழகத்தில் பா.ஜ.க.வின் கண்ட்ரோலில் இயங்கும் அ.தி.மு.க. , ஒரிஸ்ஸாவின் பிஜு ஜனதா தளம், தெலுங்கானா ராஷட்ரீய சமிதி, ஒய்.எஸ்.ஆர்.காங்., இந்திய தேசிய லோக் தளம் ஆகிய கட்சிகளிடம், 26 எம்.பி.க்கள் உள்ளனர். இந்த கட்சிகள் பெரும்பாலும் ஆளும் அரசை தான் ஆதரித்து வருகின்றன. எனவே, இதையும் சேர்த்தால், பா.ஜ.க.வின் பலம், 117 ஆக உயரும். இத்துடன் நான்கு நியமன எம்.பி.,க்களின் ஆதரவை சேர்த்தால், பா.ஜ.க.வின் பலம், 121 ஆக உயரும். இதனால் கிட்டத்தட்ட, பெரும்பான்மையான, 123 எம்.பி.,க்களின் எண்ணிக்கையை நெருங்கிய விஷயமாகும். உ.பி.,யில் நடக்கும் தேர்தல் மூலம், 9 எம்.பி.,க்களில் எட்டு எம்.பி.க்கள் பா.ஜ.க.வுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

ஆனால், பீஹாரில் அடுத்த ஆண்டு மார்ச் – ஏப்ரல் மாதங்களில் நடக்க உள்ள ராஜ்யசபா தேர்தலில் பா.ஜ.க. அரசுக்கு சற்று பின்னடைவு ஏற்படும் என கருதப்படுகிறது. தற்போது அந்த மாநிலத்தில், பா.ஜ.க.வுக்கு இரண்டு, ஐக்கிய ஜனதா தளத்திற்கு, நான்கு எம்.பி.க்கள் உள்ளனர்.

Share
Categories
கூடைப்பந்து விளையாட்டு

மகளிர் ஆசியகோப்பை கூடைபந்தாட்டம் பி-டிவிஷனில் இந்தியா வெற்றி

மகளிர் ஆசியகோப்பை கூடைபந்தாட்டம் பி-டிவிஷனில் இந்தியா கசாகஸ்தானை  வென்று சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது.

15 நாடுகள் கலந்து கொண்ட இத்தொடரில் ஏ மற்றும் பி டிவிஷன் என இரு பிரிவுகளாக பெங்களூருவில் கடந்த 1 வாரமாக நடைபெற்று வந்தது. இதில் பி டிவிஷன் இறுதி சுற்றில் பலம் வாய்ந்த கஜகஸ்தான் அணியை இந்தியா எதிர்கொண்டது. நேற்றிரவு நடைபெற்ற பரபரப்பான இந்த போட்டியில் கஜகஸ்தானை 75 – 73 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி சாம்பியன் மகுடத்தை இந்திய அணி சூடியது. தலா 73 புள்ளிகளை சேர்த்திருந்த இரு அணிகளும், ஆட்டம் முடிய 21 வினாடிகள் இருந்த நிலையில் இந்திய வீராங்கனைகள் இரண்டு புள்ளிகளை சேர்த்து ஆட்டத்தை வெற்றி பாதைக்கு திருப்பினர். இதனையடுத்து இந்திய அணிக்கு கூடைப்பந்து சம்மேளனம் ரூ.15 லட்சம் வெகுமதி அறிவித்துள்ளது.

இந்த வெற்றியை அடுத்து அடுத் வருடம் நடைபெறும் போட்டியில் முன்னணி அணிகளுடன் ஏ டிவிஷனில் விளையாடும் தகுதியை பெற்றுள்ளது. தற்போது ஏ-டிவிஷன் போட்டியில் ஜப்பான் வெற்றி பெற்றது.

Share
Categories
இந்தியா ஜி.எஸ்.டி. தலைப்புச் செய்திகள் பிரதமர் மோடி

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பினால் இந்தியாவில் பெரும் மாற்றமாம்: மோடி சொல்கிறார்

ஜிஎஸ்டி வரி விதிப்பினால் நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டுள்ளது என்றும், சகல பெருட்களின் விலைகளும் வெகுவாக  குறைந்துவிட்டது என்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மான் கி பாத் நிகழ்ச்சியில் இன்று வானொலியில் உரையாற்றிய நரேந்திர மோடி, சிறந்த முன்மாதிரியான திட்டத்துக்கு இது ஒரு உதாரணம் என்றார்.

மேலும் அவர் கூறியதாவது:

நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை கண்காணித்து வருகிறோம். அங்கு மத்திய மாநில அரசுகள் மீட்பு பணிகள் ஈடுபட்டுள்ளன. மீட்பு படையினர் தன்னலமில்லாமல் உழைத்து வருகின்றனர். நிவாரண பணிகளில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. உலக வெப்பமயமாதலால் எதிர்மறை பாதிப்பு ஏற்படுகிறது.

ஜிஎஸ்டி குறித்து நல்ல செய்தி வந்த வண்ணம் உள்ளது. ஜிஎஸ்டி பலன்கள் தெளிவாக உள்ளன. நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியுள்ளது. தொழில் செய்வது எளிதாகியுள்ளது. நாட்டின் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது. தினசரி உபயோகபடுத்தப்படும் பொருட்கள் விலை வெகுவாக குறைந்துள்ளது. அனைவருக்கும் முன்மாதிரியான திட்டத்தை அமல்படுத்தியுள்ளாம். இந்தியாவின் பலத்திற்கு ஜிஎஸ்டி உதாரணம்.

நமது வரலாற்றில் ஆகஸ்ட் மாதத்திற்கு சிறப்பான இடம் உள்ளது. ஆகஸ்ட்டில் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகஸ்ட் மாதம் துவங்கியது. இந்த போராட்டத்தை மகாத்மா காந்தி ஆரம்பித்த போது முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அதற்கு அடுத்த கட்டத்தில் இருந்த தலைவர்கள் இந்த போராட்டத்தை வெற்றிகரமாக செய்து காட்டினர். போராட்டத்தில் மக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கலந்து கொண்டனர்.

நாடு சுதந்திரம் பெற்று 70 வருடங்களாகி விட்டன. நாட்டு மக்கள் அனைவரும் நாட்டின் பிரச்னையை தீர்க்க முயற்சி செய்கின்றனர். வேலைவாய்ப்பை உருவாக்கவும், வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாம் பல சாதனைகள் படைத்துள்ளேம். அதேநேரத்தில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Share
Categories
இந்தியா தமிழகம் தலைப்புச் செய்திகள்

அப்துல்கலாம் சிலை அருகே பைபிள், குரான் அகற்றப்பட்டன

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மணிமண்டபத்தை ராமேஸ்வரம் பேக்கரும்பில் பிரதமர் மோடி கடந்த 27ல் திறந்துவைத்தார். அப்துல் கலாமின் மணிமண்டபத்தில் அவர் வீணை வாசிப்பது போன்ற சிலை அமைக்கப்பட்டதுடன், அதனருகில் இந்துக்களின் புனித நூலான பகவத் கீதை மட்டும் வைக்கப்பட்டது.  சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரங்களினால்,  அப்துல்கலாமின் அண்ணன் பேரன் சலீம், பகவத் கீதைக்கு அருகில் குரான் மற்றும் பைபிள் ஆகிய புனித நூல்களையும் வைத்தார். இதற்கு இந்து மக்கள் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவற்றை கலாமின் அண்ணன் பேரன் சலீம் அகற்றி அங்கிருந்த கண்ணாடிபேழைக்குள் வைத்தார்.

மக்கள் ஜனாதிபதியான அப்துல் கலாம் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி மாணவர்கள் மத்தியில் உரையாற்றி கொண்டிருந்த போது திடீரென காலமானார். இதைத் தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊரான ராமேஸ்வரம் பேக்கரும்பில் அடக்கம் செய்யப்பட்டது.

 

Share
Categories
அ.தி.மு.க. உணவுப்பொருள்கள் தமிழகம் தலைப்புச் செய்திகள்

பால்முகவர்கள் சங்கம் எச்சரிக்கை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது அவதூறு வழக்கு தொடரப்படும்

பால்முகவர்கள் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்று கூறியுள்ளார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடர்ந்து குற்றம்சாட்டும் வகையில், பணத்தை பெற்றுக்கொண்டு தனியார் பால் நிறுவனங்களுக்கு ஆதரவாக பால்முகவர்கள் சங்கம் செயல்படுவதாக கூறிவருகிறார்.

அமைச்சரின் தூண்டுதலின் பேரில் தமக்கு சிலவாரங்களாக பால் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் பொன்னுசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

தவறுகளை சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்ள வேண்டுமே தவிர தனி மனித தாக்குதல்களை நடத்தக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது அடுத்தவாரம் அவதூறு வழக்கு தொடரப்படும் என்றார் அவர்.

Share