Categories
சினிமா தமிழகம் தமிழ் சினிமா தலைப்புச் செய்திகள்

நடிகர் சிவாஜி கணேசனின் சிலை அகற்றப்பட்டு வெறு இடத்திற்கு மாற்றப்படும்

சென்னை கடற்கரையிலுள்ள காமராஜர் சாலையிலிருந்து நடிகர் சிவாஜி கணேசனின் சிலை அகற்றப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலினால் இந்த சிலை அகற்றப்பட்டதாகவும், விரைவில் அடையாறில் கட்டப்படும் சிவாஜி மணிமண்டபத்திற்கு மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், புதிதாக மெரினா கடற்கரையில் ஒரு சிலை நிறுவ வேண்டும் என சிவாஜி மகன்களான ராம்குமாரும் பிரபுவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து ராம்குமார் மற்றும் பிரபு கூறியதாவது:

நீதிமன்ற உத்தரவை ஏற்று, அரசு சிலையை அகற்றுகிறது. அரசுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக உள்ளோம். கோர்ட்டை மதிக்க வேண்டியது நமது கடமை. எனவே அரசு நடவடிக்கையை ஏற்கிறோம். மெரீனா கடற்கரையில் தலைவர்கள், புலவர்கள், அறிஞர்கள் சிலைகள், கண்ணகி சிலை, உழைப்பாளர் சிலைகள் உள்ளன. எனவே நடிப்புக்கு பெருமை சேர்த்த தமிழர் சிவாஜி கணேசனுக்கு கடற்கரையில் சிலை அமைக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவாஜி ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்களும் இந்த வேண்டுகோளை வைத்து இருக்கிறார்கள். பெருந்தலைவர் காமராஜரின் தொண்டராக இருந்தவர் சிவாஜி. எனவே கடற்கரையில் உள்ள தேசத் தந்தை காந்தி, பெருந்தலைவர் காமராஜர் சிலைகளுக்கு இடையே, சிவாஜிக்கு புதிய சிலை அமைக்கும் முயற்சியை சிவாஜி ரசிகர் மன்றம் மூலம் நாங்கள் செய்வோம். இதற்கான அனுமதியை சட்டப்பூர்வமாக அரசிடம் பெற வற்புறுத்துவோம். எங்கள் குடும்பத்தினரும் சேர்ந்து இதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Share
Categories
அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி சசிகலா டி.டி.வி. தினகரன் தமிழகம் தலைப்புச் செய்திகள்

பரபரப்பில் அதிமுக: தினகரனின் ஆக.5 கெடுவும் எடப்பாடி தரப்பு பதிலும்

அதிமுக (அம்மா) அணியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தனக்கு 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். முன்னதாக அவர் ஆகஸ்டு 5-ம் தேதி அதிமுக தலைமைக் கழக கட்டிடத்திற்குள் தனது ஆதரவாளர்களுடன் நுழையப் போவதாக அறிவித்திருந்த கெடு இன்னும் 2 நாட்களில் வருகிறது. இன்னிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அணியின் சார்பாக அமைச்சர் ஜெயக்குமார், “கட்சியையும், ஆட்சியையும் முதல்வர் பழனி சாமிதான் வழிநடத்தி வருகிறார். மற்றவர்களைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை” என்று கூறியுள்ளார். ஆகவே பெரும் பரபரப்பை அடுத்த சில நாட்களில் எதிர்பார்க்கலாம் என்று தெரிகிறது.

இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வி.கே. சசிகலாவை தினகரன் இன்று சிறையில் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சிறையில் சசிகலாவுக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. முன்பு சிறையில் சசிகலாவைச் சந்திக்கச் சென்றால், அரை மணி நேரத்தில் பார்க்க முடியும். இப்போது ஒன்றரை மணி நேரம் ஆகிறது. சிறையில் எல்லோருக்கும் அளிக்கப்படும் உணவே அவருக்கு அளிக்கப்படுகிறது. அவருக்கு பழங்கள் மட்டுமே வாங்கிச்சென்றேன். சசிகலா மீது புகார் கூறியது தொடர்பாக டிஐஜி ரூபா மீது நிச்சயமாக அவதூறு வழக்கு தொடரப்படும்” என்று கூறினார்.

சிறையில்  சந்தித்துப் பேசுகையில் சசிகலா, தினகரனிடம் எடப்பாடி பழனிசாமி அணியிடமும், ஓ.பி.எஸ். அணியிடமும் சமரசமாகப் பேசி முடிவு எடுக்க ஆலோசனை கூறியதாகவும், ஆக. 5-ல் தலைமைக்கழகத்தில் நுழைவதைக் குறித்து யோசித்து செயல்படவும் அறிவுரை கூறியதாக சொல்லப்படுகிறது. சசிகலா தரப்பின் நிலைமை தற்போது சரியில்லாததால், தினகரன் நிதானமாக முடிவெடுப்பார் எனத் தெரிகிறது. மேலும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தமது ஆதரவை பெருக்க முடிவெடுத்திருப்பதாகவும் தெரிகிறது.

Share
Categories
உலகம் தலைப்புச் செய்திகள் பிலிப்பைன்ஸ் வட கொரியா

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் வெறிபிடித்தவர் : ஃபிலிப்பைன்ஸ் அதிபர்

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் ஒரு வெறிபிடித்த முட்டாள் என ஃபிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடேர்டே விமர்சித்துள்ளார்.

மணிலாவில் நடைபெற்ற பிராந்திய உச்சி மாநாட்டுக்கு முன்னதாக வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பிலிப்பைன்ஸ் அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் பேசுகையில், அணு ஆயுதம் போன்ற ஆபத்தான பொம்மைகளுடன் கிம் ஜோங் உன் விளையாடுவதாகவும் அவரின் அணுஆயுத சோதனைகள் ஆசியாவை அழிக்க போகிறது என்றும்  தெரிவித்துள்ளார்.

கொழுகொழுவென அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு அந்த முட்டாள், அணு ஆயுதப் போரால் பூமியைப் பாழ்படுத்தப் போவதைத் தடுத்தாக வேண்டும். இந்த இந்த அணுசக்தி யுத்தம் முடிவுக்கு வர வேண்டும். ஏனென்றால் இந்த அழிவால் மண் வளங்கள் வீழ்ச்சியடையும். இதனால் நாம் எதையும் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்படும் என்றும் கிம் ஜோங் உன்னை குறிப்பிட்டு, ரோட்ரிகோ டுடெர்டே விமர்சித்துள்ளார்.

Share
Categories
சிந்தனைக்கு தமிழ்ப் பாடல்கள்

தேடிய செல்வம் நிலைக்காமல் நீங்கும் காரணங்கள்

தன்னை வியந்து தருக்கலும் தாழ்வின்றிக்
கொன்னே வெகுளி பெருக்கலும் – முன்னிய
பல்பொருள் வெஃகும் சிறுமையும் இம்மூன்றும்
செல்வம் உடைக்கும் படை

பாடியவர்: நல்லாதனார் : திரிகடுகம் # 38

 

 

பாடுபட்டுச் சேர்த்தச் செல்வத்தைச் பாதுகாக்கவே எவரும் நினைப்பர். ஆயினும், தம்மைத் தாமே புகழ்ந்து கொண்டிருப்பவர்கள் தக்கார் துணையைப் பெறுதல் முடியாது. அதனால் அவர்தம் செல்வம் குறையும். காரணமின்றியே பலரையும் சினந்துரைப்பவரிடத்தில் உள்ள செல்வம் பகையினால் அழியும். தன் நிலை அறியாமல் பார்க்கும் பொருளையெல்லாம் விரும்புபவரிடத்தும் செல்வம் நில்லாமல் நீங்கும்.  இவற்றையே ‘செல்வம் உடைக்கும் படை’ எனக் குறிப்பிடுகிறார் திரிகடுகத்தின் ஆசிரியர் நல்லாதனார்.

 

The man who braggs much about himself, who gets mad at others without any reason and who wants to buy whatever he sees, will lose his accumulated wealth.

-Nallathanar : Thirikadugam # 38

 

Share
Categories
அமெரிக்கா உலகம் தலைப்புச் செய்திகள் வட கொரியா

அமெரிக்கா, வட கொரியாவிற்கு எதிரியல்ல – ரெக்ஸ் டில்லர்சன்

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் அமெரிக்கா, வட கொரியாவிற்கு எதிரியல்ல என்று கூறினார்.

வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், “நாங்கள் வட கொரியாவின் எதிரிகள் அல்ல… ஆனால் எங்களால் ஒப்புக்கொள்ள முடியாத அச்சுறுத்தல் ஒன்றை எங்கள் முன் வைக்கிறீர்கள்; அதற்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டியுள்ளது.  அவர்கள் (வட கொரியா) ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் எங்களை புரிந்து கொண்டு எங்களுடன் பேசுவதற்கு முன் வருவார்கள் என்று நம்புகிறோம்” என்றார் டில்லர்சன்.

மேலும் அவர் கூறுகையில் அமெரிக்கா, வட கொரிய அரசை கவிழ்க்க நினைக்கவில்லை என்றார்.

Share
Categories
இந்தியா ஐகோர்ட் தமிழகம் தலைப்புச் செய்திகள்

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை டிசம்பர் 31-க்குள் முடிவு செய்ய கெடு

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பான பொதுநல வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, எந்த இடத்தில் மருத்துவமனை அமைப்பது என்று டிசம்பர் 31-ம் தேதிக்குள் முடிவு செய்யுமாறு மத்திய அரசுக்கு  கெடு விதித்துள்ளது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்றும், அதற்கான இடங்களை தேர்வு செய்து தெரிவிக்கவும் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக அரசை, மத்திய அரசு கேட்டுக்கொண்டது.  தமிழக அரசு சில இடங்களை தேர்வு செய்து, மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியது. ஆனால் அதன் பிறகு  எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான வேறு எந்த அறிவிப்பையும் மத்திய அரசு செய்யவில்லை. எந்த இடத்தில் மருத்துவமனை அமையும் என்றும் முடிவு செய்யவில்லை.

இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைக்கப்படும் என்பது இதுவரை மத்திய அரசால் அறிவிக்கப்படவில்லை. இது பற்றி உரிய அறிவிப்பு வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மதுரை ஐக்கோர்ட் நீதிபதிகள், “தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை டிசம்பர் 31-ம் தேதிக்குள் முடிவு செய்து தெரிவிக்க வேண்டும். இடத்தை ஆய்வு செய்து முடிவு செய்ய 2 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை ஜனவரி 1-ல் அறிவிக்கவேண்டும்” என்று  உத்தரவிட்டுள்ளனர்.

Share
Categories
உலகம் தலைப்புச் செய்திகள் பாக்கிஸ்தான்

பாகிஸ்தானில் புதிய பிரதமராக ஷாகித் ககான் அப்பாஸி தேர்வு

ஊழல் குற்றச்சாட்டு காரணமாக, பாகிஸ்தான் நாட்டு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி  பிரதமர் பதவியிலிருந்து நவாஸ் ஷெரீஃப் விலகினார். அவருக்குப் பதிலாக, பாகிஸ்தானின் புதிய இடைக்கால பிரதமராக ஷாகித் காகான் அப்பாஸி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நவாஸ் ஷெரீஃபின் தம்பியும்  பஞ்சாப் மாகாண முதல்வருமான ஷாபாஸ் ஷெரீஃப்பை பிரதமராக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு முன்னதாக இருந்தது. ஷாபாஸ் ஷெரீஃப் தற்போது பாராளுமன்ர உறுப்பினராக இல்லையென்பதால் அவர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.ஆக வேண்டும். ஆகவே, அதுவரை இடைக்கால பிரதமராக ஷாகித் ககான் அப்பாஸி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நேற்று, இதற்கென நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், மொத்தமுள்ள 341 உறுப்பினர்களில் இவர் 221 வாக்குகளைச் சேகரித்து வெற்றி பெற்றார்.  எதிர்க்கட்சியினர் 3 வேட்பாளர்களைக் களமிறக்கினர், அவர்கள் அனைவரும் சேர்ந்து 84 வாக்குகளையே பெற்றனர்.

புதிய பிரதமர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. பெட்ரோலிய அமைச்சராக இருந்த போது இயற்கை எரிவாயு இறக்குமதிக்கான ஒப்பந்தத்தில் ரூ.20,000 கோடி அளவுக்கு முறைகேட்டில் இவர் ஈடுபட்டிருப்பதாக பாகிஸ்தான் தேசிய பொறுப்புடைமைக் குழு 2015-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்துள்ளது.

ஆனால் அந்த வழக்கு விசாரணை மட்டத்திலேயே இருந்து வருகிறது. இந்நிலையில் ஷாகித் ககான் அப்பாஸி பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Share
Categories
அ.தி.மு.க. தமிழகம் தலைப்புச் செய்திகள்

அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியுள்ளது

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு  நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது, அதிமுக அம்மா அணி வேட்பாளர் டிடிவி  தினகரனுக்கு வாக்களிக்க, வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் இந்த பணப்பட்டுவாடா நடைபெற்றதாகவும் கூறப்பட்டது. இத்தொகுதில் நடைபெறும் பணப்பட்டுவாடாவை தடுக்க முடியவில்லை என்று  பகிரங்கமாக கூறி தேர்தல் ஆணையம் தோ்தலை நிறுத்தியது.

இதனையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் விஜயபாஸ்கரின் சென்னை வீடு, புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள வீடு, திருவேங்கை வாசலில் உள்ள கல் குவாரி ஆகிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது, 5 கோடி ரூபாய் பணமும், பல்வேறு ஆவணங்களும்  கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், சோதனையின் போது தோ்தல் தொடா்பாக யாா் யாருக்கு எவ்வளவு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது என்பது தொடா்பான முக்கிய ஆவணங்கள் சிக்கிதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில், இதன் தொடர் நடவடிக்கையாக வருமான வரித்துறையிடம் இருந்து புதுக்கோட்டை மாவட்ட பத்திரப் பதிவுத் துறைக்கு கடிதம் வந்துள்ளது. அதில், விஜயபாஸ்கருக்குச் சொந்தமான 100 ஏக்கர் நிலம் மற்றும் கல் குவாரியை முடக்க அறிவுறுத்தப்பட்டிருந்ததாகவும், அதன் அடிப்படையில் பத்திரப்பதிவு துறை நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Share
Categories
அ.தி.மு.க. உணவுப்பொருள்கள் தமிழகம் தலைப்புச் செய்திகள்

பொது விநியோகத் திட்ட மாற்றங்களிலிருந்து தமிழகத்திற்கு விலக்கு : அமைச்சர் காமராஜ் விளக்கம்

அரசிதழில் அறிவிக்கப்பட்ட பொது விநியோகத் திட்ட மாற்றங்களிலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்படும் என்று தமிழக அமைச்சர் காமராஜ் விளக்கமளித்தார். “நீட்” தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு என்று பேசிப்பேசியே காலத்தைத் வீணடித்தது போல இதுவும் ஆகிவிடுமோ என்று தமிழக மக்கள் அஞ்சுகின்றனர்.

பொது விநியோகத் திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குபவர்கள், 5 ஏக்கர் நிலம், வருமான வரி மற்றும் தொழில் வரி செலுத்துபவர்களின் குடும்பத்துக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நான்கு சக்கர வாகனம், குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்டவை வைத்திருக்கும் குடும்பங்களுக்கும் ரேஷன் சலுகைகள் வழங்கப்படாது என அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மத்திய அரசின் உணவு பாதுகாப்பு விதிகள் தமிழகத்துக்கு பொருந்தாது என்றும் தமிழகத்திற்கு அதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும்  கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தைப் பொறுத்தவரை பொதுவிநியோக திட்டத்தில் எள் அளவும் மாற்றம் இல்லை என தெரிவித்தார். விலையில்லா அரிசி திட்டம், பொது விநியோகத் திட்டம் ஆகியவை தமிழகத்தில் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் காமராஜ் உறுதிபட கூறினார்.

“நீட்” தேர்வை மத்திய அரசு கட்டாயம் ஆக்கிய நேரத்தில், தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப் படும் என்று தமிழக அரசு கூறிவந்தது. எனினும் தமிழக மாணவர்கள் அதனை எழுத வேண்டியிருந்தது. பின்னர் 85% தமிழக பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு உள் ஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தும் அதனை செயல் படுத்த முடியாமல் போனது. இதுபோல ரேஷன் பொருள்கள் விஷயத்திலும் நடைபெறுமோ என்று நடுத்தர மக்கள் அச்சப்படுகின்றனர்.

 

Share
Categories
இந்தியா தலைப்புச் செய்திகள்

சமையல் எரிவாயு மானியம் ரத்து செய்யப்படவில்லை: மத்திய அமைச்சர்

சமையல் எரிவாயு மானியம் ரத்து செய்யப்படவில்லை என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு மானியம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ரத்து செய்யப்படுவதாக நாடாளுமன்றத்தில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் ராஜ்யசபாவில் இந்த விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பிய எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனையடுத்து விளக்கமளித்து பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், எரிவாயு மானியம் ரத்து தொடர்பான எம்.பி-க்களின் அமளி தேவையற்றது என்றார். சமையல் எரிவாயு மானியம் ரத்து செய்யப்படாது என்ற அவர், மானியம் முறைப்படுத்தப்பட்டு வழங்கப்படும் என்றார். யார் யாருக்கு சமையல் எரிவாயு மானியம் வழங்குவது என்பது குறித்து முறைப்படுத்தப்படும் என்றார். யாருக்கு சமையல் எரிவாயு மானியம் தேவைப்படுகிறது, யாருக்கு தேவைப்படவில்லை என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றார்.

முன்னதாக வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிணடருக்கு வழங்கப்பட்டு வரும் மானியத்தை 2018 மார்ச் மாதத்துடன்   முழுவதுமாக ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக நேற்று தகவல் வெளியானது. மேலும் 2018 ஏப்ரல் முதல் மாதந்தோறும் சமையல் எரிவாயுவின் விலையை ரூ.4 கூட்டிக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த செய்திகள் நாட்டு மக்களிடம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்நிலையில் இவ்விகாரத்தை கையிலெடுத்த எதிர்கட்சிகள் இன்று மாநிலங்களைவைில் கடும் அமளியில் ஈடுபட்டது குறிப்பிடதத்க்கது.

Share