Categories
அமெரிக்கா உலகம் தலைப்புச் செய்திகள் வட கொரியா

வட கொரியாவிற்கு எதிரான கடுமையான புதிய தடைகள் ஐ.நா. சபையில் நிறைவேற்றம்

வட கொரியாவிற்கு எதிரான கடுமையான புதிய தடைகள் ஐ.நா. சபையில் ஒருமனதாக நிறைவேற்றப் பட்டன. இத்தடைகள், வடகொரியா சமீபத்தில் மேற்கொண்ட கண்டம் விட்டுக் கண்டம் தாவும் ஏவுகணைச் சோதனைகளின் நிமித்தம் அந்நாட்டின் மீது விதிக்கப்படுகின்றன. இத்தடைகள் கடந்த 2006 ஆம் ஆண்டிலிருந்து அந்நாட்டின் மீது ஏழாவது முறையாக விதிக்கப்படுவன ஆகும்.

வட கொரியாவின் மீதான இத்தீர்மானம், 1 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள அதன் ஏற்றுமதி பொருள்களான நிலக்கரி, இரும்பு, இரும்புத்தாது, காரீயம், கடலுணவு பொன்றவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வட கொரியாவின் மூன்றில் ஒருபங்கு ஏற்றுமதி வருவாய் பாதிக்கப்படும். அதிபர் டிரம்ப் பதவிக்கு வந்த பின் முதல் முறையாக சீனாவும் தனது கூட்டாளி நாடான வட கொரியாவை விட்டுக் கொடுக்க வைத்து, தீர்மானத்தை நிறைவேற்ற வழி செய்துள்ளார்.

 

ஐ.நா.-விற்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹேலி, இத்தடைத் தீர்மானத்தை நிறைவேற்றியமைக்காக ஐ.நா. உறுப்பு நாடுகளை பாராட்டினார். “இதுவரை வட கொரியாவிற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தடைத் தீர்மானங்களைக் காட்டிலும் இது பெரிதாகும். எனினும், இப்பிரச்சனைக்கு முடிவு கட்டி விட்டதாக நினைப்பதானால், அது நம்மை நாமே எமாற்றிக் கொள்வதாகும்.  வடகொரியாவின்  சர்வாதிகார அணு ஆயுத அச்சுறுத்தல் இருக்கவே செய்கிறது, அது மேலும் வேகமாக, அபாயகரமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது” என்று நிக்கி ஹேலி கூறினார்.

 

மேலும் இத்தீர்மானம் வட கொரிய தொழிலாளர்களுக்கு பிறநாடுகளில் வேலைக்கான அனுமதி வழங்குவதையும் தடை செய்கிறது. வட கொரிய நிறுவனங்களுடன் மற்றநாட்டு நிறுவனங்கள் இணைந்து பணியாற்றுவதையும், புதிய முதலீடுகளையும் தடுக்கிறது.

 

வட கொரியாவின் 90 சதவீத வர்த்தகம் சீனாவுடனே நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தீர்மானத்தின் போது பேசிய சீனா பிரதிநிதி வட கொரிய மக்கள் மீது இத்தடைகள் எதிர்மறையான பாதிப்புகள் எதையும் ஏற்படுத்தப் போவதில்லை என்றார். எனினும் அணு ஆயுதங்கள் அற்ற கொரிய தீபகற்பத்தினை உருவாக்க பேச்சுக்கள் நடத்துவதைத் தூண்டும் என்றார். ரஷ்யாவின் தூதரும் இது முடிவல்ல. அந்நாட்டை பயனுள்ள முறையில் பேச்சு நடத்த வைக்க ஒரு கருவியாக பயன்படும் என்றார்.

 

இதனிடையே வருகின்ற ஆசியன் அமைப்பின் கூட்டம் ஒன்றில் வட கொரியாவின் வெளியுறவு அமைச்சருடன் தென் கொரியாவின் அமைச்சர் பேச்சு நடத்தவுள்ளதாக கூறியுள்ளார். கடந்த 2015 ஆண்டில் வட-தென்கொரிய நாடுகளுக்கு இடையிலான அமைதிப் பேச்சு வார்த்தை நின்று போனதிலிருந்து முதல் முறையாக இரு நாடுகளும் பேசவுள்ளன.

Share
Categories
இந்தியா குடியரசு துணைத்தலைவர் தலைப்புச் செய்திகள் பா.ஜனதா வெங்கையா நாயுடு

உதவி ஜனாதிபதி தேர்தல் : வெங்கையா நாயுடு வெற்றி

இந்தியாவின் தற்போதைய உதவி ஜனாதிபதி ஹமீத் அன்சாரியின் பதவி காலம் வரும் 10-ந் தேதியுடன் முடிகிறது. புதிய உதவி ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது.  பாஜக கூட்டணி சார்பில் வெங்கையா நாயுடுவும், காங்கிரஸ் மற்றும் எதிர்க் கட்சிகளின் சார்பில், மகாத்மா காந்தியின் பேரரான, கோபாலகிருஷ்ண காந்தியும் போட்டியிட்டனர். ஓட்டு எண்ணப்பட்டபின் பாஜக வேட்பாளர் 68 வயதான முப்பவரப்பு வெங்கையா நாயுடு வெற்றி பெற்று இந்தியாவின் 12-வது உதவி ஜனாதிபதியாகும் தகுதி பெற்றுள்ளார்.

 

வெங்கையா நாயுடு, ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கையா, கடந்த 1949-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி பிறந்தார். ஆந்திரா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார். ஜெய் ஆந்திரா இயக்கம் என்றதன் மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.

பாஜகவின் இளைஞரணி தலைவராக கடந்த 1977-இல் இருந்தார். இவர் முதல் முறையாக 1978-இல் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் பாஜக கட்சியில் படிப்படியாக உயர்ந்து உதவி ஜனாதிபதி நிலையை எட்டியுள்ளார்.

முந்தைய 12 துணை ஜனாதிபதிகளும் சுதந்திரம் பெறுவதற்கு முன்பு பிறந்தவர்களாகையால், வெங்கையா நாயுடு சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் துணை ஜனாதிபதி என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Share
Categories
அ.தி.மு.க. சசிகலா டி.டி.வி. தினகரன் தமிழகம் தலைப்புச் செய்திகள்

டி.டி.வி.தினகரன்: புதிய நிர்வாகிகள் நியமனத்திற்கு எதிர்ப்பு

ஆகஸ்டு 5-ம் தேதி தலைமைக் கழக கட்டிடத்தினுள் நுழையப்போவதாக கெடு விதித்திருந்த டி.டி.வி. தினகரன், அதனை செய்யப் போவதில்லை என்று கூறிய பின்னர், மீண்டும் பரபரப்பு உண்டாக்கும் நோக்கத்தில், அதிமுக அம்மா அணியில் 60 புதிய நிர்வாகிகளை நேற்று அறிவித்தார். அவருடைய செயல்பாடு கேலிக்கூத்தாக இருக்கிறது என்று அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தினகரன் வழங்கிய பதவியை ஏற்க மாட்டோம் என்று 3 எம்எல்ஏக்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

அதிமுக (அம்மா) அணியின் துணை பொதுச்செயலாளராக சசிகலாவினால் நியமிக்கப்பட்ட டி.டி.வி. தினகரன், கட்சியின் இரு அணிகளும் இணைவதற்கு 60 நாள் கெடு விதித்திருந்தார். இந்த கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று அவர் கட்சி அலுவலகத்துக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் கட்சி அலுவலகத்திற்கு வராமல்,  அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் பேட்டியளித்தார். அப்போது அதிமுகவின் , 60 புதிய நிர்வாகிகளை அறிவித்தார். இவர்களில் இருபது பேர் எம்எல்ஏக்கள். 12 பேர் முன்னாள் அமைச்சர்கள். ஏற்கனவே உள்ள 53 நிர்வாகிகளுடன் மேலும் 60 பேர் நியமிக்கப்பட்டுள்ளது கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, அமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை அளித்த பேட்டியில் பொதுச்செயலாளர் பதவி விவகாரத்திலேயே இன்னும் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கவில்லை. அவரால் நியமிக்கப்பட்ட துணை பொதுச் செயலாளரும் கேள்விக்குரியவர். இந்த நிலையில் அவரால் கட்சிக்கு எப்படி புதிய நிர்வாகிகளை நியமிக்க முடியும் என்று கேள்வியெழுப்பினார்.

தினகரன் வழங்கிய பதவிகளை ஏற்க மாட்டோம் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் சத்யா பன்னீர்செல்வம் (பண்ருட்டி), பழனி (ஸ்ரீபெரும்புதூர்), போஸ் (திருப்பரங்குன்றம்) ஆகியோர் ஏற்க மறுத்துவிட்டனர். எங்களை கேட்காமல் கட்சி பதவிகளை வழங்குவதா, நாங்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்பட்டு வருகிறோம் என்று இந்த மூன்று எம்எல்ஏக்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

Share
Categories
இந்தியா கட்சிகள் காங்கிரஸ் தலைப்புச் செய்திகள் பா.ஜனதா ராகுல் காந்தி

ராகுல் காந்தி காரின் மீது தாக்குதல்: பாஜகவைச் சேர்ந்த ஜெயேஷ் தார்ஜி கைது

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி சென்ற காரின் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தையொட்டி, பாஜகவைச் சேர்ந்த ஜெயேஷ் தார்ஜி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்ட பாஜக இளைஞரணி செயலாளர் ஆவார்.

இதுகுறித்து குஜராத் போலிசார் கூறுகையில், “ராகுல் காந்தி கார் மீது கல் வீசிய சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ஜெயேஷ் தார்ஜி கைது செய்யப்பட்டுள்ளார்” என்றனர்.

முன்னதாக, இந்தச் சம்பவத்துக்கு பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களுமே காரணம் என்று ராகுல் காந்தி குற்றச்சாட்டியிருந்தார்.

எனினும், தன்னைத் தாக்கியவர்களைக் கண்டித்து போராட வேண்டாம் என்றும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, காங்கிரஸ் கட்சியினர் சண்டிகர், டெல்லி, மும்பை, குஜராத் உள்ளிட்ட பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்சியினரின் உணர்வை புரிந்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். கற்கள் வீசி தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்ய வலியுறுத்தியதை ஏற்பதாக கூறினார். ஆனால் கட்சியினர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி புரிய தங்கள் ஆற்றலை செலவிடுமாறு ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

மக்களாட்சி மீது மோடி அரசிற்கு நம்பிக்கை இல்லை என்றும், எதிர்க்கட்சிகளே இல்லாத இந்தியாவை பாஜக விரும்புவதாகவும் காங்கிரஸ் தலைவர் கபில் சிபில் குற்றம்சாட்டியுள்ளார். இது ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

Share
Categories
இந்தியா குடியரசு துணைத்தலைவர் தலைப்புச் செய்திகள்

உதவி ஜனாதிபதி தேர்தல் : ஓட்டுப்பதிவு முடிந்தது, வெங்கையா ஜெயிப்பார் என எதிர்பார்க்கலாம்

இந்தியாவின் தற்போதைய உதவி ஜனாதிபதி ஹமீத் அன்சாரியின் பதவி காலம் வரும் 10-ந் தேதியுடன் முடிகிறது.  புதிய உதவி ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது.

இத்தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் வெங்கையா நாயுடுவும், காங்கிரஸ் மற்றும் எதிர்க் கட்சிகளின் சார்பில், மகாத்மா காந்தியின் பேரரான, கோபாலகிருஷ்ண காந்தியும் போட்டியிடுகின்றனர்.

இன்று மாலை 5 மணியளவில் இத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு நிறைவுற்றது. பின்னர் வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்படும்.

மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் மட்டுமே இத்தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். இவர்கள் சார்ந்துள்ள கட்சிகளின் அடிப்படையில்,   பாஜக வின் வேட்பாளரான வெங்கையா நாயுடு வெற்றிபெற அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கருதலாம்.

Share
Categories
இந்தியா காங்கிரஸ் குஜராத் தலைப்புச் செய்திகள் ராகுல் காந்தி

குஜராத்: ராகுல்காந்தி கார் மீது பா.ஜ.க.வினர் கல்வீசி தாக்குதல்

பா.ஜ.க. ஆளும் மாநிலமான குஜராத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி பயணம் செய்த கார் மீது பா.ஜ.க. -வினர் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் பனஸ்கந்தாவில் நடந்த இத்தாக்குதலினால்,  ராகுல் காந்தியின் கார் கண்ணாடிகள் உடைந்து கல் உள்ளே சென்றுள்ளது. அதிருஷ்டவசமாக ராகுல் காந்தி காயமின்றி தப்பினார்.  குஜராத் ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் வென்றுவிடும் என்ற பாஜகவின்  வெறுப்புணர்வால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

மேலும்,  உச்சபட்ச பாதுகாப்பில் உள்ள ராகுல் காந்தி மீதான இந்த தாக்குதல், குஜராத் மாநில அரசின் பாதுகாப்பு குளறுபடியை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளதுடன் தேசிய அளவில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

 

Share
Categories
அ.தி.மு.க. சசிகலா டி.டி.வி. தினகரன் தமிழகம் தலைப்புச் செய்திகள்

அதிமுகவின் பொதுச்செயலாளர் யார் என்று தெரியாது: தேர்தல் ஆணையம்

அதிமுகவின் தற்போதைய பொதுச்செயலாளர் யார் என்பது குறித்து எதுவும் தீர்மானிக்கப் படவில்லை  என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சுவாமிநாதன் கல்யாண சுந்தரம் என்பவர் அதிமுக உட்கட்சி பிரச்சினை தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில பதில்களை அளிக்கக் கோரியிருந்தார்.

இதற்குப் பதிலளித்துள்ள தேர்தல் ஆணையம், அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை நிகழ்கிறது என்று குறிப்பிட்டுள்ளது. இதனால், அதிமுகவின் பொதுச்செயலாளர் யார் என்பது குறித்து, இதுவரை முடிவெடுக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.

துணை பொதுச்செயலாளர் யார் என்ற கேள்விக்கும் இதுவரை தீர்மானிக்கப் படவில்லை என்றும் அந்த அறிக்கையில் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. சசிகலா எப்போது பதவியேற்றார் என்ற கேள்விக்கு தேர்தல் ஆணையம் தெளிவான பதில் அளிக்கவில்லை.

Share
Categories
உலகம் தலைப்புச் செய்திகள் துபாய் மத்திய கிழக்கு நாடுகள் யூ.ஏ.இ.

86 மாடிகளை கொண்ட துபாய் டார்ச் டவரில் தீ விபத்து

துபாய் நகரிலுள்ள 86 மாடிகளை கொண்ட  பிரபல டார்ச் டவரில் தீ விபத்து ஏற்பட்டு சேதப்படுத்தியுள்ளது.

இது கடந்த இரண்டு ஆண்டுகளில் இக்கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள இரண்டாவது தீ விபத்து ஆகும்.  சிவில் பாதுகாப்புப் பணியாளர்கள் கட்டடத்திலுள்ள 676 அபார்ட்மெண்ட்களில் வசித்திருந்தவர்களை  பத்திரமாக அப்புறப்படுத்தியதாகவும், தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் பின்னர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீ விபத்து நிகழ்ந்ததற்கான காரணம் என்னவென்று இன்னும் தெளிவாக தெரியவில்லை.

உலகின் மிக உயரமான கட்டிடங்களில் ஒன்றான துபாய் டார்ச் டவர், 337 மீட்டர் (1105 அடி) உயரமானது.

Share
Categories
இந்தியா கர்நாடகா தகவல் தொழில்நுட்பம் தலைப்புச் செய்திகள் தொழில் நுட்பம் பெங்களூரு

ஆதார் தகவல்கள் திருட்டு : பெங்களூரு மென்பொருள் பொறியாளர் கைது

40 ஆயிரம் பேரின் ஆதார் தகவல்களை திருடியதாக ஓலா நிறுவனத்தின் பணியாற்றிய, காரக்பூர் ஐஐடி – யில் படித்த, 31 வயது பெங்களூரு மென்பொருள் பொறியாளர் அபினவ் ஸ்ரீவத்சவை (Abhinav Srivastav) பெங்களூரு போலீசார் கைது செய்தனர்.

இவர் ஆதார் தகவல்களை சட்ட விரோதமாக கையாடல் செய்வதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, அவரை பெங்களூரு போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மத்திய அரசின் தனிநபர் அடையாள ஆணைய சர்வரை முடக்கி தகவல்களை திருடியதை ஒப்புக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவர் கடந்த ஜனவரி மாதம் ‘Aadhaar e-KYC’ என்ற ஆப் மூலம் ஆதார் தகவல்கள் பலவற்றை திரட்டியுள்ளார். இந்த ஆப் சமீபத்தில் கூட கூகுள் பிளே ஸ்டோரில் இருந்தது. இதுபோன்ற 5 ஆப்களை உருவாக்கி, அதில் வரும் விளம்பரங்கள் மூலமாக ரூ.40,000 வருவாய் ஈட்டியுள்ளார். ‘Aadhaar e-KYC’ ஆப் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து சுமார் 50,000 முறை டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

e-Hospital என்ற ஆப்-பிற்காக தகவல் சரிபார்ப்பு செல்போன் செயலியை அபினவ் உருவாக்கியதுடன், அதை கூகுள் பிளே ஸ்டோரில் இடம்பெறச் செய்து ஆதார் தகவல்களை திருடியிருப்பதும் தெரிய வந்துள்ளது. இது அதிகாரபூர்வ பயனாளர் முகமையைச் சேர்ந்த ஆப் ஆகும். தனது ‘Aadhaar e-KYC’ ஆப்-பிற்கு அதிகாரபூர்வ தன்மை வேண்டும் என்பதற்காக தேசிய தரவுப்பாதுகாப்பு சர்வரை அபினவ் ஹேக் செய்துள்ளார். அதில்தான் இ-ஹாஸ்பிடல் சிஸ்டம் உள்ளது. இந்த சர்வரில்தான் அரசு மருத்துவமனைகளின் மருத்துவப் பதிவு மேலாண்மை விவரங்கள் அடங்கியுள்ளன என்று கூறியுள்ளது போலீஸ்.

 

Share
Categories
அமெரிக்கா அமெரிக்கா உலகம் உள்நாட்டு புலனாய்வுத் துறை தலைப்புச் செய்திகள்

எஃப்.பி.ஐ.யின் புதிய இயக்குநராக கிறிஸ்டோபர் வ்ரே : செனட் அங்கீகரித்தது

அமெரிக்காவின் உள்நாட்டு புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. -யின் புதிய இயக்குநராக கிறிஸ்டோபர் வ்ரே நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு  செனட் சபை  ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பு எஃப்.பி.ஐ.யின் இயக்குநராக இருந்த ஜேம்ஸ் கோமி பதவி வகித்தார். கடந்த 2016-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், ரஷ்யாவுக்கும் தேர்தலில் போட்டியிட்ட டொனால்டு ட்ரம்ப் பிரச்சாரக் குழுவுக்கும் இடையில் ரகசிய தொடர்பு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக ஜேம்ஸ் கோமி தீவிர விசாரணையில் இறங்கினார்.

இந்நிலையில், கடந்த மாதம் 10-ம் தேதி ஜேம்ஸ் கோமியை அதிபர் டொனால்டு ட்ரம்ப் திடீரென பதவியிலிருந்து நீக்கினார். இதையடுத்து எஃப்.பி.ஐ.யின் புதிய இயக்குநராக கிறிஸ்டோபர் வ்ரே நியமிக்கப்பட்டார்.

வ்ரே நியமனம் குறித்து நாடாளுமன்ற செனட் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டபின் வாக்களிப்பில் அவருக்கு ஆதரவு அதிகமாக இருந்தது. இதையடுத்து எஃப்.பி.ஐ. இயக்குநராக கிறிஸ்டோபர் வ்ரேவின் நியமனம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share