Categories
கமல்ஹாசன் சினிமா தமிழகம் தலைப்புச் செய்திகள்

முடிவெடுத்தால் யாம் முதல்வர்…விரைவில் ஒரு விளி கேட்கும் : கமல்ஹாசன்

தமிழக அரசியலில் ஊழல் நிறைந்துள்ளது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்திற்கு தமிழக அமைச்சர்கள்  பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். பல அமைச்சர்கள் கமல்ஹாசனை விமர்சித்து காரசாரமாக பேசினர். ஆயினும், நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவாகவும் பல்வேறு தரப்பில் இருந்து கருத்துக்கள் வெளியாயின.

தன் மீது வசை பாடியவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக டுவிட்டரில்  இன்று சில கருத்துக்களை கமல்ஹாசன் பதிவு செய்துள்ளார்.

அதில், ”அமையாது அலைபவர்க்கும் அமைந்த என் தோழர்க்கும், விரைவில் ஒரு விளி கேட்கும். கேட்டு அமைதி காப்பீர். உண்மை வெயிலில் காயும் நேற்றைய மழைக்காளான்” என்று முதலில் ஒரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார்.

மேலுமொரு ட்வீட்டில் ஒரு கவிதையை எழுதியுள்ளார்.

இடித்துரைப்போம் யாருமினி மன்னரில்லை
துடித்தெழுவோம் மனதளவில் உம்போல் யாம் மன்னரில்லை
தோற்றிறந்தால் போராளி
முடிவெடுத்தால் யாம் முதல்வர்
அடிபணிவோர் அடிமையரோ?
முடிதுறந்தோர் தோற்றவரோ?
போடா மூடா எனலாம் அது தவறு
தேடாப் பாதைகள் தென்படா
வாடா தோழா என்னுடன்
மூடமை தவிர்க்க முனைவரே தலைவர்

அன்புடன் நான்

என்று ஒரு கவிதையையும் அவர் பதிவிட்டுள்ளார். மேலும் கவிதை புரியாதவர்களுக்கு நாளை ஆங்கிலப் பத்திரிகையில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறியுள்ளார். இதனால், விரைவில் கமலஹாசன் அரசியல் பிரவேசம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *