Categories
இந்தியா உச்ச நீதிமன்றம் குடியரசு தலைவர் கொல்கத்தா தமிழகம் தலைப்புச் செய்திகள் நீதிபதி மேற்கு வங்காளம்

நீதிபதி கர்ணன்: தண்டனையை ரத்து செய்ய, புதிய ஜனாதிபதியிடம் முறையீடு

சுப்ரீம் கோர்ட்டினால் 6 மாத தண்டனை விதிக்கப்பட்டுத் தண்டனையை அனுபவித்து வரும் நீதிபதி கர்ணன், தண்டனையை ரத்து செய்ய, புதிய ஜனாதிபதியிடம் முறையீடு செய்துள்ளார்.

தமிழகத்தைச் சார்ந்தவரும், கொல்கொத்தா உயர்நீதிமன்ற நீதிபதியுமான கர்ணன் தன்னுடன் பணியாற்றும் நீதிபதிகள் தான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் தன்னை துன்புறுத்துவதாகவும், தான் பழிவாங்கப்படுவதாகவும் கடந்த 2011-ஆம் ஆண்டு தேசிய தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கான ஆணையத்தில் புகார் அளித்தார்.

உச்சநீதிமன்ற ஆணையின்படி சென்ற ஆண்டு முதல் கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் பணியாற்றும் 20 நீதிபதிகள் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஆகியோர் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக அவர்களின் பெயர்கள் அடங்கிய கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைத்தார்.

உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிபதிகளுக்கு எதிராக கருத்து தெரிவித்த கர்ணனுக்கு பிப்ரவரி 13-ஆம் தேதி-க்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பியது. விசாரணைக்கு ஒத்துழைக்காததால், அவரை கைது செய்யும்படி தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான ஏழு நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்வு கடந்த மே 9-ம் தேதி கொல் கத்தா போலீஸாருக்கு உத்தரவிட்டது. ஜூன் 12-ஆம் தேதி நீதிபதியாக இருந்த கர்ணன் தலைமறைவாக இருந்தபடியே ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த அவர் ஜூன் 20-ஆம் தேதி கோவையில் மலுமிச்சம்பட்டியில் கைது செய்யப்பட்டார்.

ஐகோர்ட்டு நீதிபதி ஒருவருக்கு பணிக்காலத்தில், இப்படி சுப்ரீம் கோர்ட்டு சிறைத்தண்டனை விதித்தது, இதுவே முதல் முறை.

இந்நிலையில், புதிய ஜனாதிபதியாக நேற்று பதவி ஏற்றுள்ள ராம்நாத் கோவிந்திடம் சிறைவாசத்தை ரத்து செய்யக்கோரி சி.எஸ். கர்ணன் தரப்பில் நேற்று முறையிடப்பட்டது.

இது பற்றி அவரது வக்கீல் மேத்யூஸ் ஜே. நெடும்பாரா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனுக்கு விதிக்கப்பட்டுள்ள 6 மாத சிறைத்தண்டனையை ரத்து செய்யுமாறு ஜனாதிபதி அலுவலகத்தில் ஒரு முறையீடு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கூடிய விரைவில் ஜனாதிபதியிடம் நேரில் முறையிட வாய்ப்பு தேடுவோம். இந்த நடவடிக்கை, இந்திய அரசியல் சாசனம் பிரிவு 72–ன் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Share

One reply on “நீதிபதி கர்ணன்: தண்டனையை ரத்து செய்ய, புதிய ஜனாதிபதியிடம் முறையீடு”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *