முதல்வர் பதவியிலிருந்து சி.வி.விக்னேஸ்வரன் நீக்கப்படமாட்டார் : டிஎன்ஏ மூத்த தலைவர்

முதல்வர் பதவியிலிருந்து சி.வி.விக்னேஸ்வரன் நீக்கப்படமாட்டார் : டிஎன்ஏ மூத்த தலைவர்
Jun 18, 2017

முதல்வர் பதவியில் விக்னேஸ்வரன் நீடிப்பார் என்று இலங்கையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு (டி.என்.ஏ.) மூத்த தலைவர் ஒருவர் தகவல் தெரிவித்ததாக அறியப்படுகிறது.

அமைச்சர்கள் மீது ஊழல் புகார் குறித்து விசாரிப்பதற்காக முதல்வர் விக்னேஸ்வரன் அமைத்த குழு கடந்த வாரம் சமர்ப்பித்த அறிக்கையில் 2 அமைச்சர்கள் மீதான புகாருக்கு ஆதாரம் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, வேளாண் அமைச்சர் பி.ஐங்கரநேசன் மற்றும் கல்வி அமைச்சர் டி.குருகுலராஜா ஆகிய இருவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.  இதனால் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருமாறு ஆளுநரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக நேற்று முன்தினம் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. மேலும் முதல்வருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பதில் தீர்மானம் ஒன்றை  15 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு ஆளுநரிடம் வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

“முதல்வர் பதவியிலிருந்து விக்னேஸ்வரன் நீக்கப்பட மாட்டார் என ஆளுநர் தெரிவித்தார். டிஎன்ஏ கூட்டணியில் உள்ள 4 கட்சிகளும் அவருக்கு ஆதரவாக உள்ளன. எனவே, அவர் முதல்வர் பதவியில் தொடர்ந்து நீடிப்பார்” என்று டிஎன்ஏ மூத்த தலைவரும் வடக்கு மாகாண கவுன்சில் உறுப்பினருமான எம்.கே.சிவாஜி லிங்கம் தெரிவித்தார்.