மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கு தனியார் கல்லூரிகளில் அரசுக்கு 50% இடஒதுக்கீடு: ஐக்கோர்ட் ஆணை

மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கு தனியார் கல்லூரிகளில் அரசுக்கு 50% இடஒதுக்கீடு: ஐக்கோர்ட் ஆணை
May 2, 2017

தமிழகம் முழுவதும் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பட்ட மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் அரசுக்கு 50% இடஒதுக்கீடு செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ பட்டமேற்படிப்பில் இடஒதுக்கீடு தொடர்பாக மாணவர்கள் சாரோன், காமராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்து வந்தார். இந்த வழக்கின வாதவிவாதங்கள் முடிந்த நிலையில் இறுதி உத்தரவை நீதிபதி தள்ளிவைத்திருந்தார்.

இந்நிலையில் இன்று (செவாய்க்கிழமை) உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவில், “தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் பட்ட மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 50% இடங்களை அரசுக்கு ஒதுக்க வேண்டும். இவற்றை கலந்தாய்வு மூலமே ஒதுக்க வேண்டும்” என்றும் உத்தரவிட்டுள்ளது.

அதேவேளையில் சிறுபான்மை மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது எனவும் அரசு தெரிவித்துள்ளது.

மேலும், மருத்துவ மாணவர்கள் பட்ட மேற்படிப்பு மேற்கொள்ள இடஒதுக்கீடு பெற தவறியதற்காக தமிழக அரசும் இந்திய மருத்துவக் கவுன்சிலும் தலா ரூ.1 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.