நடிகை பாவனா கடத்தல் : நடிகர் திலீப்பிடம் விசாரணை; காவ்யா மாதவன் நிறுவனத்தில் சோதனை

Jul 2, 2017

நடிகை பாவனா கடத்தல் வழக்கை போலீசார் மிகவும் தீவிரமாக நடிகர் திலீப், நதிர்ஷா
ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர். இந்த கடத்தலில் முக்கிய குற்றவாளி என கைது செய்யப்பட்டிருக்கும் பல்சர் சுனிலிடம் இருந்து நடிகர் திலீப்பிற்கு கடிதம் வந்ததையடுத்து போலீசார் நடிகரிடம் 13 மணிநேரம் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் காக்கநாட்டில் நடிகர் திலீப்பின் 2வது மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவனுக்கு சொந்தமான ஆன்லைன் ஆடை நிறுவனம் இருப்பது தெரியவந்தது. அதனால் அந்த ஆடை நிறுவனத்தை போலீசார் கடந்த சில நாட்களாக ரகசியமாக கண்காணித்தனர்.
பின்னர், போலீசார் அங்கு சுமார் 3 மணி நேரம் சோதனை நடத்தினர். அப்போது சில ஆவணங்களை போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. நடிகை பாவனா விவகாரத்தில் காவ்யா மாதவன் நிறுவனத்தில் போலீசார் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
