தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி. தினகரனுக்கு ஜாமீன் கிடைத்தது

தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி. தினகரனுக்கு ஜாமீன் கிடைத்தது
Jun 2, 2017

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி. தினகரனுக்கு ஜாமீன் கிடைத்திருக்கிறது.

அ.தி.மு.க. (அம்மா) துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மற்றும் அவரது நெருங்கிய உதவியாளர் மல்லிகார்ஜுனா ஆகிய இருவருக்கும் வியாழக்கிழமை சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.  இவர்கள் இருவரும் அ.தி.மு.க.வின் முடக்கப்பட்ட சின்னமான “இரட்டை இலையை” திரும்பப் பெறுவதற்காக தேர்தல் கமிஷனின் சில அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு இதுவரை சிறையில் இருந்தனர்.

சிறப்பு நீதிபதி பூனம் சௌத்ரி  இவ்விருவரின் ஜாமீன் மனுவை விசாரித்து,  இருவரையும் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்ய  உத்தரவிட்டார்.

குற்றம் சாட்டப்பட்ட தினகரன் சொந்த ஜாமீன் தொகையாக ரூ.5 லட்சம் செலுத்த வேண்டும். மேலும் இருவர் பிணைத் தொகையாக தலா ரூ.5 லட்சம் செலுத்த வேண்டும்.

மேலும் இந்த வழக்கு தொடர்பான எந்த ஆதாரத்தையோ, சாட்சியங்களையோ அவர் கலைக்கக் கூடாது. கோர்ட்டின் அனுமதியின்றி அவர் நாட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது. அவர் தனது பாஸ்போர்ட்டை உடனடியாக கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும். அத்துடன், எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்.

இவ்வாறு அவரது தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.