ஜி - 20 மாநாடு: போலீசாருடன் ஆர்பாட்டக்காரர்கள் மோதல்

ஜி - 20 மாநாடு: போலீசாருடன் ஆர்பாட்டக்காரர்கள் மோதல்
Jul 7, 2017

ஜெர்மனியின் G20 உச்சிமாநாடு நடக்கவிருக்கும் ஹம்பர்க் நகரில் ஆர்பாட்டக்காரர்களுடன் நடந்த மோதல்களில் எழுபத்தாறு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.

மூன்று பொலிஸ் அதிகாரிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். ஆர்பாட்டக்காரர்களில் சிலருக்கும் காயங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இம்மோதல்கள் 12,000 ஆர்பாட்டக்காரர்கள் கலந்து கொண்ட ” நரகத்திற்கு வரவேற்பு”  என்ற அணிவகுப்பினை  பொலிஸார் தடுத்தபோது  தொடங்கியது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்கள், காலநிலை மாற்றம், வர்த்தகம் மற்றும் பிற முக்கிய பிரச்சினைகள் பற்றி இம்மாநாட்டில் விவாதிப்பர்.

கற்கள், தீப்பந்தங்கள் மற்றும் பாட்டில்கள் ஆகியவற்றை வீசி எறிந்த ஆர்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் தண்ணீர் மற்றும் மிளகு ஸ்ப்ரேயை பாய்ச்சினர்.

இப்போராட்ட அமைப்பாளர்கள் முதலில் மோதல்கள் நடந்த இடத்தில் அணிவகுப்பை இரத்து செய்தனர். ஆயினும், ஆர்ப்பாட்டக்காரர்கள் தெருக்களிலேயே இருந்தனர். இதன்பின்னர்  நகரத்தின் மற்ற பகுதிகளுக்கு வன்முறை பரவியது என்று பொலிசார் தெரிவித்தனர்.

ஆர்பாட்டக்காரர்கள் தற்காலிகப் தடுப்புக்களை அமைத்து, வாகனங்கள் எரித்தும், வாகனங்களை சேதப்படுத்தியும், கடைகளையும் அலுவலகங்களையும் சேதப்படுத்தியவாறும் இருந்தனர். மேலும்  பொலிஸ் ஹெலிகாப்டர் விமானியின் மீது லேசர் லைட்டை அடித்து   ஹெலிகாப்டர் நிலையிழக்குமாறு செய்ய முயன்றதாக போலீசார் தெரிவித்தனர்.

மருத்துவர்கள் பலருக்கும் சிகிச்சை அளித்தனர். குறைந்த பட்சம் ஒரு நபர் பலமான காயம் அடைந்ததாகத் தெரிகிறது.