சங்கமித்ரா திரைப்படத்திலிருந்து ஸ்ருதி ஹாசன் விலகல்

சங்கமித்ரா திரைப்படத்திலிருந்து ஸ்ருதி ஹாசன் விலகல்
May 30, 2017

இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பெரும் செலவில் வெளியாகவிருக்கும் சரித்திர பின்னனி கொண்ட படமாக அறிவிக்கப்பட்ட சங்கமித்ராவில், ஜெயம் ரவி, ஆர்யா மற்றும் ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

எட்டாம் நூற்றாண்டில் நடைபெறும் கதையாக அமையவுள்ள இப்படத்தின் முதல் பார்வை கான் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது; அதில் ஸ்ருதி ஹாசன் உட்பட ஆர்யா, சுந்தர்.சி மற்றும் ஜெயம் ரவி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இப்படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் விலகியுள்ளதாக படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. தற்போது விலகலுக்கான காரணம் குறித்து ஸ்ருதிஹாசன் தரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“துரதிர்ஷ்டவசமாக சங்கமித்ராவில் பங்காற்ற வேண்டாம் என்ற முடிவை ஸ்ருதிஹாசன் எடுக்கும் நிலையில் உள்ளார். இந்த படம் எவ்வளவு பெரியது, 2 வருடங்கள் படப்பிடிப்புக்கான தேதிகள் என அனைத்தும் தெரிந்தே ஸ்ருதிஹாசன் நடிக்க வந்தார். தனது கதாபாத்திரத்துக்கான பயிற்சி, முழு வடிவ திரைக்கதை மற்றும் முறையான படப்பிடிப்பு தேதிகள் ஆகியவை குறித்த முக்கியத்துவம் அவருக்கு தெரியும்.

படப்பிடிப்புக்கு தயாராக, ஏப்ரல் மாதத்திலிருந்து சிறந்த சண்டைப் பயிற்சியாளரிடம் பயிற்சி பெற ஆரம்பித்துவிட்டார். ஆனல், ‘சங்கமித்ரா’ படத்தின் மீது அவருக்கிருந்த ஆர்வம், அர்ப்பணிப்பு ஆகியவற்றை தாண்டி, இந்த முடிவை எடுக்கவேண்டியிருந்தது. முழுமையான ஸ்கிரிப்ட் அவருக்கு தரப்படவில்லை. படப்பிடிப்பு தேதிகளும் சரியாக முடிவு செய்யப்படவில்லை. இதுவே அவரது முடிவுக்குக் காரணம்.

ஸ்ருதி, தற்போது, அவர் நடித்துள்ள பெஹன் ஹோகி தேரி பாலிவுட் படத்தின் விளம்பர வேலைகளில் இருக்கிறார். தொடர்ந்து ‘சபாஷ் நாயுடு’ படத்துக்காக தயாராகிவருகிறார்” என்று தெரிவித்துள்ளார்கள்.