ஐ.ஐ.டி நிர்வாகத்திடம் உயர்நீதி மன்றம் விளக்கம் கேட்கிறது

ஐ.ஐ.டி நிர்வாகத்திடம் உயர்நீதி மன்றம் விளக்கம் கேட்கிறது
Jun 15, 2017

சென்னை ஐஐடியில் மாட்டிறைச்சி போராட்டத்தின்போது மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் குறித்து அறிக்கை அளிக்க, ஐஐடி நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாட்டிறைச்சி தடையை கண்டித்து சென்னை ஐஐடியில் மாணவர்கள் சார்பில் மாட்டிறைச்சி விருந்து நடத்தப்பட்டது. அப்போது, விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்த சூரஜ் என்பவர் மீது மாணவர் அமைப்பினர் சிலர் தாக்குதல் நடத்தினர். மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலை தடுக்க ஐஐடி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் எழுந்தது.

இதுதொடர்பாக மாணவி டிட்டி மேத்யூ என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  அதில், சென்னை ஐஐடி மாணவர் சூரஜ் தாக்கப்பட்டதை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கக்கோரியும்,  ஐஐடி வளாகத்தில் சுமுக நிலை திரும்பும் வரை சூரஜை தாக்கிய மணிஷை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும்  குறிப்பிட்டிருந்தார்.  இதனை விசாரித்த நீதிமன்றம் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக ஐஐடி நிர்வாகம் அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. சுமுக நிலைக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.