இலங்கைக்கு மீண்டும் ஜி.எஸ்.பி. வரிச்சலுகை

இலங்கைக்கு மீண்டும் ஜி.எஸ்.பி. வரிச்சலுகை
May 17, 2017

ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டு நிறுத்தப்பட்ட ஜி.எஸ்.பி வரிச்சலுகை எதிர் வரும் 19 திகதி முதல் மீண்டும் வழங்கப்படுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. வரிச்சலுகை தொடர்பான மாலத்திவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கான பிரதிநிதி துன் லாய் மார்கு இதனை தெரிவித்தார்.

ஐரோப்பிய சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்ட வரிச்சலுகை கடந்த மகிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் நிறுத்தப்பட்டது.

கடந்த ஆட்சிக் காலத்தில் நாட்டில் நிலவிய மோசமான மனித உறிமை மீறல்கள் காரணமாகவே இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த இந்த வரிச்சலுகை நிறுத்தப்பட்டது..

ஊடக சந்திப்பில் இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த துன் லாய் மார்கு, மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளை காப்பதற்கு அரசாங்கங்களை ஊக்குவிப்பதற்காகவே ஜி.எஸ்.பி வரிச்சலுகை வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

ஆனால் இந்த வரிச் சலுகை மீண்டும் வழங்கப்படுவதன் முலம் இலங்கையில் மனித உறிமை மீறல்கள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது என்று கூற முடியாதென்று தெரிவித்த அவர் இலங்கையில் தற்போது மனித உரிமைகள் தொடர்பான நிலவரம் முன்னேறியுள்ள காரணத்தினால் இந்த சலுகை மீண்டும் வழங்க தீர்மானிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இந்த வரிச்சலுகை மீண்டும் வழங்கப்படுவதன் முலம் நாட்டில் வெளிநாட்டு முதலிடுகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.