அமெரிக்க புலனாய்வுத்துறை இயக்குனரை பதவி நீக்கினார் டிரம்ப்

அமெரிக்க புலனாய்வுத்துறை இயக்குனரை பதவி நீக்கினார் டிரம்ப்
May 11, 2017

அமெரிக்க அதிபர் டிரம்ப், உள்நாட்டு புலனாய்வுத் தலைவர் ஜேம்ஸ் கோமியை பதவி நீக்கம் செய்துள்ளார்.  ஹிலாரி கிளின்டன் இ-மெயில் தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார் எனத் தெரியவந்துள்ளது.

இதனை குறித்து குடியரசு கட்சியினர் பலரும் வரவேற்றுள்ள நிலையில், எதிர்கட்சியான ஜனநாயக கட்சியினர், “டிரம்ப் – ரஷ்யா குறித்த புலனாய்வில் கோமி எடுக்கவிருந்த சில நடவடிக்கைகளாலேயே அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்” என்று வாதிடுகின்றனர்.

2013 -ல் ஜேம்ஸ் கோமி அப்போதைய அதிபர்  பராக் ஒபாமாவினால் உள்நாட்டு புலனாய்வுத் தலைவர் பதவியில் அமர்த்தப்பட்டார். 2016 அதிபர் தேர்தலின் போது, ஜேம்ஸ் கோமியின் சில அறிவிப்புக்களினாலேயே தான் அதிபராக இயலவில்லை என்று அதிபர் வேட்பாளரான ஹிலாரி கிளின்டன் அவ்வப்போது குற்றம்சாட்டியிருந்தார்.

சில அமெரிக்க வானொலி வர்ணனையாளர்கள்,  “ஜேம்ஸ் கோமி உள்நாட்டு புலனாய்வுத் தலைவர் பதவிக்கேற்ற மனோநிலை கொண்டிருக்கவில்லை. ஆகவே அவரை பதவி நீக்கியது சரியே” என்று கூறினர்.