அப்துல் கலாமின் மணிமண்டபத்தை நரேந்திர மோடி திறந்துவைத்தார்

Jul 27, 2017

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 2 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, ராமேஸ்வரத்தை அடுத்து தங்கச்சிமடத்திலுள்ள பேக்கரும்பில் அப்துல் கலாமின் மணிமண்டபத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
கலாம் நினைவிடத்திற்கு வந்திறங்கிய மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். எடப்பாடி பழனிச்சாமியுடன் தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிமுக எம்.பிக்கள் சிலரும் உடன் இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, வளாகத்தில் கொடி ஏற்றிவைத்துவிட்டு மணி மண்டபத்தை திறந்து வைத்த பிரதமர், அப்துல்கலாமின் குடும்பத்தாருடன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.
பின்னர், ‘அப்துல் கலாம் – 2020’ என்ற அப்துல் கலாமின் சாதனை பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
